Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘betelnut’ Category

Defer move to put skull symbols on beedis?

Posted by Snapjudge மேல் மே 9, 2007

புகை நடுவிலே…

புகைபிடிக்கும் பழக்கம் உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பது என்பதில் மாறுபட்ட கருத்தே இல்லை.

புகைபிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் இறக்கின்றனர். மேலும், புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்க்குச் சிகிச்சை மற்றும் நோயுற்ற காலத்தில் உற்பத்தி இழப்பு என மொத்தப் பொருள் இழப்பு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி என மதிப்பிடப்படுகிறது.

புகைத்தல் தீங்கானது என்றாலும், பீடி, சிகரெட் தயாரிப்பது அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு தொழிலாக இருக்கிறது. இந்தத் தொழிலில் இந்தியாவில் 1 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். 60 லட்சம் பேர் நேரடியாக இத்தொழிலில் பீடி சுற்றுபவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள். மீதமுள்ளவர்கள் இதற்கான இலை மற்றும் புகையிலை உற்பத்தியாளர்களாக இருக்கிறார்கள்.

பீடியை சிகரெட் தொழிலோடு சேர்க்கக்கூடாது என்பதும் “சிகரெட்டைவிட பீடி நல்லது. நிகோடின் குறைவு’ என்ற வாதங்களும் ஏற்கக்கூடியவை அல்ல. புகைபிடித்தல் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரமும் அவசியம்தான்.

ஆனால் அந்தப் பிரசாரத்தை மண்டையோடு எச்சரிக்கை மூலம் நடத்த அரசு விரும்புவதும், மண்டையோடு படத்தைப் போட்டால் பீடி விற்பனை சரிந்துவிடும் என்று பீடித் தொழிலாளர்கள் நம்புவதும் – இரு தரப்பினருமே நடைமுறையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றன.

சிகரெட் பாக்கெட்டுகளில் புகை பழக்கம் உடல்நலத்துக்குக் கேடானது என்று அச்சிட்டுத்தான் விற்கிறார்கள். விற்பனை குறைந்துவிடவில்லை. பீடி பிடிப்போர் அனைவரும் எழுத்தறிவில்லாத சாதாரண ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. அதனால் பீடி பாக்கெட்டுகளின் மீது எழுத்தால் எழுதுவதைக் காட்டிலும் குறியீடுகளால் மிரட்ட நினைக்கிறது அரசு.

அச்சுறுத்தும் வாசகங்கள், பயங்கர அடையாளங்களால் இத்தகைய பழக்கங்களைத் தடுத்துவிட முடியும் என்பது சரியல்ல. ஏனென்றால் இந்தத் “தப்பு என்பது தெரிந்து செய்வது’.

தகாத உறவினால் எய்ட்ஸ் வரும் என்றால், அரசு பாதுகாப்பான உறவை மட்டுமே பரிந்துரைக்க முடிகிறது. மதுவினால் உடல்நலம் கெடும் என்பது அனைவருக்கும் தெரியும். “மதுப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்று எழுதப்பட்டுள்ளதால் விற்பனை சரிந்துவிடவில்லை. மண்டையோடு போட்டால் மட்டும் பீடி விற்பனை சரிந்துவிடும் என்பது சரியான வாதமாக இல்லை.

பீடித் தொழிலாளர்களின் மிகப்பெரும் பிரச்சினை பன்னாட்டு சிகரெட் நிறுவனங்கள்தான். பீடியின் விலைக்கும் சாதாரண சிகரெட்டின் விலைக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து பீடித் தொழிலை அடியோடு ஒழிப்பதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம்.

நூறு சதவீத அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு சிகரெட் தொழிலில் அனுமதித்துள்ளது. குறிப்பாக அசாம், திரிபுரா மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் மலிவான, நீளம் குறைவான சிகரெட்டுகளை உற்பத்தி செய்து பீடிச் சந்தையை சிதைக்கப் போகின்றன.

இன்றைய முக்கியமான பீடித் தொழிற்சங்கங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவை. மத்திய அரசு இக் கட்சிகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. இச்சூழலில் சிகரெட் தொழிலில் அந்நிய நேரடி முதலீட்டை தடுத்து நிறுத்துதல், பீடி சுற்றுவதற்கான கூலியை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயித்தல் என சாதித்துக் கொள்ள வேண்டுமே தவிர, மண்டையோட்டுப் பிரச்சினையில் முக்கியமானவற்றை மறந்துவிடக்கூடாது.

பீடிக் கட்டில் மண்டையோட்டை எவ்வளவு பெரியதாக அச்சிட்டாலும், சிகரெட் விலையைவிட பீடி மலிவாக இருக்கும்வரை பீடி விற்பனை குறையாது.

According to the medical journal Lancet, 13 per cent of all deaths in India by 2020 will be because of tobacco.

Posted in AIDS, Anbumani, Ban, Beedi, betelnut, Chew, Cigar, Cigarette, Commerce, Consumer, Cost, Customer, deaths, Economy, Employment, Filter, Finance, Govt, Habits, Health, Healthcare, Income, ITC, Jobs, manufacturers, Manufacturing, MNC, Nicotine, Pan Parag, Passive, Protest, Ramadas, Ramadoss, sales, skull, Smoke, smoking, Symbols, Tax, Tirunelveli, Tobacco, warning, workers, wrappers | Leave a Comment »

Kavitha Deepan :: Vetrilai, Paakku, Thaamboolam

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

பாரம்பரியம்: கும்பகோணம் சீவலே… சீவல்!

இ. கவிதாதீபன்

“கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்’ என்று நாட்டாமை திரைப்படத்தில் குஷ்பு சிவக்கச் சிவக்க வெற்றிலை- சீவல் போட்டு சரத்குமாருடன் ஆடும் காட்சியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

வெற்றிலையும் சீவலும் போட்டு குஷியாக இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. முதல் மணக்க மணக்க தாம்பூலம் போட்டு வாய் சிவக்க பாட்டு எழுதிவரும் கவிஞர் வாலி வரை எல்லோருமே வெற்றிலை சீவலின் ரசிகர்கள்தாம்.

அர்ச்சனைத் தட்டில் இறைவழிபாட்டுப் பொருளாகவும், ஆலய விழாக்களில் “விடையமாய்’ கொடுக்கப்படுவதாகவும், நம் வீட்டு விழாக்களுக்கு நட்பை, உறவை, ஊர் மக்களை அழைப்பதற்கு முன்வைப்பதாகவும், தடபுடலான விருந்துக்குப் பின் தாம்பூலம் தரிப்பதாகவும் இந்தத் தொன்மைக் கலாசாரம் இன்றும் தொடர்கிறது.

இன்றைய நாட்களில் இந்தப் பாக்குகள் “போதைப் பாக்குகளாக’ மாறி ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு கடைகளில் தொங்கி, நம் இளைஞர்களின் வாய்களில் தங்கி, மெல்ல மெல்ல அவர்களின் உயிரை வாங்கிவிடுவதும் உண்டு.

ஆனால் உண்மையில் மருத்துவக் குணங்கள் நிரம்பியதும், செரிமான சக்தியைத் தூண்டுவதும், சந்தோஷத்தைத் தருவதுமான கொட்டைப்பாக்கு சீவல் நம் தஞ்சை விவசாயிகளின் இடுப்பில் நீங்காத உடுப்பு. ஒவ்வொரு விவசாயி வீட்டிலும் இந்தத் தாம்பூலம் நிறையவே இருக்கும்.

உழைக்கும் விவசாயி முதல் உயர்ந்த கலைஞர்கள் வரை உற்சாகமாய்ப் பணிபுரியத் தூண்டும் “தாம்பூலத்தின் தாயான’ கொட்டைப் பாக்கு சீவலைப் பற்றி அறிய, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள “சங்கு சீவல்‘ நிறுவனத்தின் உரிமையாளர் கே. குணசேகரனிடம் கேட்டோம்…

“”எங்களுக்குச் சொந்த ஊர் புதுக்கோட்டை அருகே உள்ள கீரனூர். என்னுடைய அப்பா கிருஷ்ணமாச்சாரி சின்ன வயசிலேயே பிழைப்புக்காக கும்பகோணம் வந்துட்டாங்க. அந்தக் காலத்துல, அதாவது 1943ல அப்பா கைச் சீவலைப் பாக்கு வெட்டி மூலமா தயாரிச்சு அக்கம்பக்கம் விற்க ஆரம்பிச்சாங்க. இந்தச் சீவலுக்கு முக்கியமான மூலப்பொருள் கொட்டைப் பாக்குதாங்க!

கொட்டைப் பாக்கு மரம் பனை மர வகையைச் சேர்ந்தது. ஒல்லியாக, நல்ல உயரமாக வளர்ந்து, தலைப்பாகம் மட்டும் பச்சை நிறமாக இருக்கும். காய் பச்சையா, பழங்கள் மஞ்சளா குண்டு குண்டா அழகாயிருக்கும்.

இது வருடாந்திரப் பயிர் ரகம். விளையிற பாக்கை ரெண்டு மூணுவாட்டி பறிப்பாங்க. முதல் பறிப்பும் கடைசிப் பறிப்பும் அவ்வளவு தரமா இருக்காது. நடுப் பறிப்பை மட்டும் அறுவடை முடிச்சு காய வைச்சு காய் மேல இருக்கிற மட்டையோட பத்திரப்படுத்தி ஒரு வருசத்துக்கு மேல விவசாயிங்க இருப்பு வைப்பாங்க.

பாக்கோட அளவைப் பொறுத்து

  • மோட்டி,
  • மோரா,
  • விச்சாரஸ்,
  • சேவர்தன்,
  • ஜாம்,
  • ஜீனி,
  • ரெண்டி,
  • பூஜா

இப்படின்னு பல ரகம் இருக்கு. இதில நடுத்தரமா சின்னதா இருக்கிற பாக்குதான் இந்தச் சீவல் தொழிலுக்குப் பயன்படுது.
இந்தப் பாக்கு நம்ம தமிழ்நாட்டுல ஊட்டி, மேட்டுப்பாளையம் பக்கம் நிறைய விளையுது. கேரளம், கர்நாடகத்துல முக்கிய பணப் பயிர் இதுதான். குறிப்பா கர்நாடகத்தோட தென் பகுதியும் கேரளத்தோட கடல் பகுதியும் இணைகிற இடத்தில் வளரும் பாக்கு மரத்தில் கிடைக்கும் பாக்கு மிகத் தரமாக இருக்கும். கர்நாடகத்தில் உள்ள புத்தூள், விட்டாலா பக்கம் நல்ல தரமான பாக்கு கிடைக்குது. ஆனா விலை அதிகம். இந்தப் பக்கம் விளைகிற பாக்குக்கு இந்தியா முழுக்க நல்ல சந்தை வாய்ப்பு இருக்கு.

வெளிநாட்டுல மலேசியா, இந்தோனேசியா இங்கெல்லாம் பாக்கு விளைஞ்சாலும் நம்மூரு பாக்கைப் போல தரமா இருக்காது. அந்தமான் தீவுல வெளையுற பாக்கு பெரிசா, லேசா வாசனையோட இருக்கும். இது பெரும்பாலும் கொல்கத்தா சந்தைக்குத்தான் போகும்.

பாக்குல கொட்டைப் பாக்கு, களிப்பாக்கு, பீட்டன் பாக்கு, ஷிமோகா பாக்கு இப்படி நிறைய வகை இருக்கு. அந்தக் காலத்தில எல்லாம் பாக்கைக் கடிச்சு வெத்தலை போடுற அளவுக்கு பல்லு உறுதியா இருந்துச்சு. காலம் மாற மாற பாக்கை சீவலா கொடுக்க வேண்டியதாப் போய்டுச்சு.

எங்க அப்பாதான் முதல் முதல்ல பாக்கிலிருந்து சீவலைத் தயாரிக்கிற மிஷினைக் கண்டுபிடித்தார். இன்னிக்கு பல பேர் சீவல் தொழிற்சாலை வைக்கக் காரணமே அப்பாதான். அப்பாகிட்ட தொழில் கத்துக்கிட்ட பல பேர் இன்னிக்கு பெரிய நிறுவனமா வளர்ந்திருக்காங்க. நாங்களும் அப்பாவை பக்கத்துல வைச்சுக்கிட்டு சிறப்பா தொழில் செஞ்சுக்கிட்டு இருக்கோம். நான் வக்கீலுக்கு படிச்சிருந்தாலும் இந்தத் தொழிலை விடாம செஞ்சுக்கிட்டு வர்றேன்.

பொதுவாக வெத்தலை சீவல் போடுற பழக்கம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலா இருக்கு. நாம எல்லோரும் சாப்பிட்டுட்டு வெத்தலை சீவல் போடுவோம். ஆனா நம்ம விவசாயிகளுக்கு சாப்பாட்டை விட முக்கியமானது இந்த வெத்தலை சீவல்.

இதே சீவலை இன்றைக்குக் கொஞ்சம் நவீனமா சுத்தமான நெய் விட்டு பொன்னிறமாய் வறுத்து நெய்சீவல் என்றும், தேங்காய்ப் பூவுடன், ஏலக்காய், ஜாதிக்காய், கற்பூரம் சேர்த்து புதிய மணத்துடனும் விற்பனை செய்து வருகிறோம். இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் இவற்றுக்கு நல்ல வரவேற்பு உள்ளது சந்தோஷம் அளிக்குது” என்றார் குணசேகரன்.

தஞ்சை காவிரிக் கரையில் பயிராகும் இளந்தளிர் வெற்றிலையில் சிறிது சுண்ணாம்பு தடவி, குடந்தை சீவலை வைத்து மடித்து வாயிலிட்டு மென்று, நாவும் உதடும் சிவக்க ஊறும் நறுமண எச்சிலை விழுங்கினால் வருகின்ற ஏப்பம் நல்ல ஜீரணத்தின் அடையாளம்.

என்ன இருந்தாலும் வெற்றிலை சீவல் போடுவோரை பார்க்கும்போது ஒரு வசீகரம் இருக்கத்தானே செய்கிறது.

வெத்தலை பாக்கு சுண்ணாம்பு

பத்திரி ஏலம் கிராம்பு

ரெத்தம் போல சிவந்து போச்சுதே

என் ராஜாத்தி

ஒம் மேலே ஆசையாச்சுதே!

என்று கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் அந்தக் காலத்திலேயே சும்மாவா பாட்டெழுதியிருக்கார்!

Posted in Addiction, Ban, betelnut, Chew, Habit, Kumbakonam, Paakku, Seeval, Thamboolam, Thanjai Ramiah Daas, Vaali, Vethilai, Vetrilai | Leave a Comment »

Mangalore: Centre should review ban on Gutka: KPRS

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

பாக்கு பொட்டலத்துக்குத் தடை: அமைச்சர் அன்புமணி

பெங்களூர், அக். 26: மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் தன்னிச்சையான அறிவிப்பால், பாக்கு வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

பெங்களூரில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பாக்குப் பொட்டலங்களுக்கு (குத்கா, பான்பராக்) தடை விதிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அன்புமணி வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அவர் தனிப்பட்ட முறையில் வெளியிட்ட அறிக்கையாகும். இது மத்திய அரசின் முடிவு அல்ல.

மத்திய அமைச்சரின் இந்த அறிக்கையால் பாக்கு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கர்நாடக விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். அன்புமணியின் இந்த அறிவிப்பால் பாக்கு விலை பெருமளவில் சரிந்துவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அவரின் இந்த அறிவிப்பு ஏற்கத்தக்கதல்ல.

இதுபோன்று அறிக்கைகளை வெளியிடும்போது அன்புமணி சம்பந்தப்பட்ட வியாபாரிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை கலந்து பேசி வெளியிட வேண்டும். அவர் தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டு விவசாயிகளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டார்.

போதை தரும் பொருள்களை கலந்து விற்பனை செய்யும் பாக்குப் பொட்டலங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அதை யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

ஆனால் அன்புமணி ஒட்டுமொத்தமாகத் தெரிவித்ததால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் எழுதப்படும். அதில் பாக்குப் பொட்டலங்களுக்குத் தடை விதிக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படும்.

கர்நாடகத்தில்

  • மங்களூர்,
  • உடுப்பி,
  • சிக்மகளூர்,
  • ஷிமோகா, மற்றும்
  • வட கர்நாடகப் பகுதிகளில் அதிக அளவில் பாக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

இப்பகுதி விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளையும், வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு விரைவில் தில்லி செல்ல இருக்கிறோம்.

தில்லியில் மத்திய அமைச்சர் அன்புமணியை சந்தித்து பாக்குப் பொட்டலங்களுக்கு தடை விதிக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்வோம். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

Posted in Anbumani, Anbumani Ramadoss, betelnut, Congress (I), Gutka, Gutkha, Karnataka, Karnataka Prantha Raitha Sangha, Pan Parag, Seeval, Vethalai | Leave a Comment »