உள்ளாட்சி அதிகாரத்தில் பெண்களா, பினாமிகளா?
வீர. ஜீவா பிரபாகரன்
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்…’ என்று பெண்கள் விடுதலை குறித்துப் பாடினார் பாரதி. நாட்டின் குடியரசுத் தலைவராக, பிரதமராக, முதல்வராக, அரசியல் கட்சிகளின் தலைவர்களாக உயரிய பொறுப்புகளுக்குப் பெண்கள் வந்துள்ளனர்.
எனினும், அரசியல், பொதுத் தொண்டில் பெண்கள் ஈடுபடுவதில் தயக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பெண் பிரதிநிதிகளின் பினாமிகளாக கணவர் மற்றும் குடும்பத்தினர் செயல்படுவது தொடர்கதையாகிறது.
1993-ம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 4700 பேரிடம் இருந்த அரசியல் அதிகாரம், 73, 74-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்துக்குப் பின்னர் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குப் பரவலாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக – உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பு, பணிகளைத் தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தேசிய அளவில் 10 லட்சம் பெண்களும், தமிழகத்தில் மட்டும் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாக உள்ளனர்.
பெரும்பாலான மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரப் பகிர்வு என்பது, வெறும் காகிதப் பூவாகவே உள்ளது.
உள்ளாட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்பட்ட 29 துறைகளைச் சார்ந்த பணிகள், பணியாளர், நிதி ஆகிய மூன்று நிலைகளிலும் முழுமையாகச் செயல்படுத்தும் அதிகாரம், கர்நாடகம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இத்தகைய அதிகாரப் பகிர்வு முழுமை அடையவில்லை.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள பெண் பிரதிநிதிகளின் நிலையோ மிகவும் பரிதாபமாக இருந்து வருகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர், மாவட்ட, ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என, பல பதவிகளை பெண்கள் அடைந்துள்ளது சிறந்த சமூக மாற்றத்துக்கான அடிப்படையாக விளங்குகிறது.
ஆனால், பெண் பிரதிநிதிகளின் அதிகாரத்தைச் செலுத்தும் பினாமிகளாக கணவர், உறவினர்கள் நீடிப்பது பெரும்பாலான இடங்களில் தொடர்கிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்குப் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்க, பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவர்களுடைய கணவர்களே செல்கின்றனர்.
இந்நிலைக்கு, பெண்களின் கூச்ச சுபாவம், போதிய கல்வி அறிவின்மை, பதவிக்குரிய பணி பற்றிய தெளிவின்மை, ஆண் ஆதிக்கத் தலையீடுக்கு உட்படல், பொதுப் பிரச்னையைக் கையாளுவதில் பயம், தாழ்வு மனப்பான்மை, வன்முறையை உள்ளடக்கிய அரசியல் தலையீடு, குடும்பம், சமூகம், பொருளாதாரச் சூழல் சார்ந்த இடர்ப்பாடுகள் ஆகியவை முக்கியக் காரணங்கள் என பல்வேறு அமைப்பினர் நடத்திய அனுபவ ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இக் குறைபாட்டைப் போக்கும் வகையில், தற்போது தமிழக அரசு தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக உள்ள ஏ.எம். காசிவிஸ்வநாதன், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவர்களுடைய கணவர்களோ, உறவினர்களோ நிர்வாகப் பணிக்கு வரக்கூடாது என்பதைக் கட்டாயமாக்கினார்.
இது, மாவட்ட அளவில், பெண் பிரதிநிதிகளின் சுயச்சார்பையும் தன்னம்பிக்கையையும் அரசு அதிகாரிகளிடம் கூச்சமின்றி கருத்துகளை வெளிப்படுத்தும் திறனையும் உருவாக்கியது.
எனினும், பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது பணிகளில் தலையீடு ஒருபுறம் உள்ளது; உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள் அரசு முத்திரையுடன் அளிக்கும் கடிதம், விளம்பரங்களில்கூட அவர்களுடைய கணவர்களின் படங்களும் இடம்பெறுகின்றன. அரசு அதிகாரிகள் எவரும் அதைக் கண்டுகொள்வதில்லை.
இதுபோன்று பல்வேறு சமூகத் தடைகளையும் தாண்டி சுதந்திரமாகச் செயல்பட்டு, சாதனை படைக்கும் பெண் பிரதிநிதிகள் விதிவிலக்காக ஓரிரு இடங்களில் மட்டுமே உள்ளனர். அவர்களும் மகளிர் சுய உதவிக் குழுவின் அடிப்படையில் தேர்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான இடங்களில் சட்டம் வழங்கிய பொறுப்பும் கடமையையும் பெண்களின் பெயரில் இருந்தாலும் அதிகாரத்துக்குப் பினாமிகளாக ஆண்களே நீடிக்கின்றனர்.
இந்நிலையை மாற்றுவதே பெண்களுக்கான உண்மையான அதிகாரப் பகிர்வாக இருக்கும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் பிரதிநிதிகளுக்கு முழுமையான நிர்வாகப் பயிற்சி, சுயச்சார்ப்புப் பயிற்சியைத் தொடர்ந்து அளிக்க வேண்டும்.
அதுவே, நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் போது அவர்களின் சிறந்த செயல்பாட்டுக்கும் பாலியல் சமத்துவத்துக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும்.