Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Bargaining’ Category

KV Ramaraj – Requirement for Association of Asian Nations

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 6, 2007

தேவை ஆசிய ஒன்றியம்

கே.வீ. ராமராஜ்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) உச்சி மாநாடு புதுதில்லியில் வரும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இத் தருணத்தில் ஆசிய ஒருமைப்பாடு குறித்தும் பிராந்திய ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்வது அவசியமாகும்.

இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 1967-ல் “ஆசியான்’ அமைப்பை உருவாக்கின. பின்னர் புருனை, கம்போடியா, வியத்நாம், மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகள் உறுப்பினராயின. தற்போது இவ்வமைப்புடன் சீனா தடையில்லா வணிக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 2007 ஜூலை மாதத்துக்குள் ஆசியான் நாடுகளுடன் இத்தகைய ஒப்பந்தத்தை செய்து கொள்ள இந்தியா முயற்சி செய்து வருகிறது.

இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்கக் கடல் நாடுகள் அமைப்பில் தடையில்லா வணிக ஒப்பந்தத்தை அடுத்த உச்சி மாநாட்டில் இறுதி செய்வதென ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள் ஆகியவை இணைந்து 1985-ல் தொடங்கிய “சார்க்’ அமைப்பிலும் இந் நாடுகளிடையே தடையற்ற வணிகம் குறித்த திட்டம், நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு நடந்த கொரிய போர் (1950 – 53), வியத்நாம் பிரச்சினை, இந்தியா – சீனா போர், இந்தியா – பாகிஸ்தான் போர்கள் போன்ற கசப்பான அனுபவங்களை மறந்து நட்புறவை மேற்கொள்ளவே தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகள் விரும்புகின்றன.

இருப்பினும் காஷ்மீர்ப் பிரச்சினை, வடகொரிய அணு ஆயுதத் திட்டம், இலங்கை உள்நாட்டுப் போர் போன்றவை இப் பிராந்தியத்தில் அமைதியின் தடைக்கற்களாக உள்ளன. மேற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பெரும்பாலானவை அரேபிய கூட்டமைப்பு, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு போன்றவற்றில் இடம் பெற்றுள்ளன.

பாலஸ்தீன விவகாரம், இராக் பிரச்சினை, ஈரானின் அணு ஆயுத விவகாரம், ஆப்கான் பிரச்சினை போன்றவை இப் பிராந்தியத்தில் பதற்றத்தை தொடர்ந்து நிலவச் செய்கின்றன.

சர்வதேச அரசியலில் பிராந்திய உணர்வு மற்றும் பிராந்திய அமைப்புகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை பிராந்திய அமைப்புகள் உருவானதை அதன் சாசனத்தின் வாயிலாகவே வரவேற்கிறது. ஐ.நா. சாசனத்தின் 33, 52, 53, 57 ஆகிய கோட்பாடுகள் பிராந்திய அமைப்புகள் பற்றி தெரிவித்துள்ளது.

“ஆசியான்’, “சார்க்’ அமைப்புகள் ஒரே பிராந்தியத்தில் தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளிடையே கூட்டுறவுக்காக ஏற்பட்ட உடன்பாடாகும். ஆனால் 1954-ல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட தென்கிழக்காசிய உடன்படிக்கை அமைப்பும் (சீட்டோ) 1956-ல் பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட மத்திய கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பும் (சென்டோ) மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து செய்த ராணுவக் கூட்டுகளாகும்.

1949-ல் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) அமெரிக்காவின் தலைமையில் உருவானதன் தொடர்ச்சியாக ஆசியாவில் மேலை நாடுகள் தமது செல்வாக்கை அதிகரிக்க “சென்டோ’, “சீட்டோ’ அமைப்புகளை உருவாக்கின. “சீட்டோ’ ராணுவக் கூட்டில் சேர அழைப்பு வந்தபோது இந்தியா மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப் போரில் ஒன்றுக்கொன்று எதிராகப் போரிட்ட நாடுகள் கூட ஐரோப்பாவில் போரில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவை அகற்ற ஒருங்கிணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கின.

பிராந்திய ஒற்றுமைக்காக, தற்போது இவ்வமைப்பு தடைற்ற வர்த்தகம், ஒரே நாணயம் போன்ற பல அம்சங்களுடன் வளர்ச்சி பெற்றுள்ளது.

ஆசிய நாடுகளில் நிலவிய அன்னிய ஆட்சிகள் காரணமாக ஆசியக் கண்டம் சீரழிவுக்குள்ளாகி இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசிய நாடுகளான இந்தியா, மியான்மர், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் ஆங்கில ஆதிக்கமும் வியத்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் பிரெஞ்சு ஆதிக்கமும் இந்தோனேசியா, சுமத்ரா, ஜாவா, போர்னியா மற்றும் கிழக்கத்திய தீவுகளில் டச்சு ஆதிக்கமும் இருந்தது.

இந்நாடுகள் சுதந்திரம் அடைந்து பின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஆதிக்க சக்திகளாக விளங்கிய மேலைநாடுகளுடன் பொருளாதார, ராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டன. இதன் காரணமாக ஆசிய நாடுகளின் விவகாரங்களில் மீண்டும் மேலைநாடுகளின் தலையீடு நீடித்தது.

1991-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு துருவநிலை மாறியது. உலகில் பன்முகத் துருவநிலை ஏற்பட ஆசிய நாடுகள் அனைத்தும் ஒரு கூட்டுப் பிராந்திய அமைப்பை ஏற்படுத்துவது அவசியமாகிவிட்டது. இதன் மூலம் ஆசியாவில் ஒற்றுமையை உருவாக்க இயலும். மேலும் சர்வதேச அமைதிக்கான சிறந்த பங்களிப்பையும் ஏற்படுத்த இயலும்.

பயங்கரவாத ஒழிப்பு, எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுமூலம் தீர்வு, போக்குவரத்து மேம்பாடு ஆகியவற்றுக்கு இவ்வமைப்பு பெரிதும் உதவும்.

உலகில் சக்திச் சமநிலை தழைக்கவும் ஐ.நா. சபை ஆக்கபூர்வமாகச் செயல்படவும் ஆசிய ஒருமைப்பாடு பயனுள்ளதாக இருக்கும். சார்க் மாநாட்டுக்கு அழைக்க பாகிஸ்தான் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஐரோப்பிய நாடுகள் பகைமைகளை மறந்து ஒருங்கிணைந்தது குறித்து பேசியதையும் ஆசியான் மாநாட்டில் வான் பயணம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதையும் இவ்விடத்தில் நினைவுகூறலாம்.

ஆசிய நாடுகளின் உறவுகள் பற்றி விவாதிக்க ஆசிய மாநாடு 1947-ல் தில்லியில் கூட்டப்பட்டது. இந்தோனேசியாவில் டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தை அகற்ற 1948-ல் ஆசிய மாநாட்டை இந்தியா கூட்டியது.

1954-ல் ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளின் “பாண்டுங்’ மாநாட்டில் இந்தியா காலனியாதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து 1961-ல் அணிசாரா இயக்கம் தொடங்க இந்தியா முக்கியப் பங்காற்றியது.

சர்வதேச அமைதி, அணிசாரா கொள்கை, பிற நாட்டு விவகாரங்களில் தலையிடாமை ஆகிய முக்கிய அம்சங்களை வெளியுறவுக் கொள்கையாக இந்தியா பின்பற்றி வருகிறது. எனவே ஆசிய அமைப்பை உருவாக்க வேண்டிய தருணம் இந்தியாவுக்கு வந்துவிட்டது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இதற்கான செயல்வடிவம் பற்றி சிந்தனையாளர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும், அதன் அடிப்படையில் ஆசிய மாநாட்டைக் கூட்டி ஆசிய அமைப்பு ஒன்றைத் தொடங்க இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இக் கருத்தை “சார்க்’, “ஆசியான்’ ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள நாடுகளிடம் இந்தியா எடுத்துரைக்க வேண்டும்.

உலக ஒற்றுமைக்காக ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியா கோரிவருகிறது. இதே ரீதியில் ஆசியாவிலும் அமைதியை நிலைநாட்ட ஆசிய ஒன்றியத்தை உருவாக்க பாடுபட வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.

(கட்டுரையாளர்: ஓசூர் நகர வழக்கறிஞர்).

Dinamani Editorial (Feb 12, 2006)

“சார்க்’ கூட்டமைப்பு

“சார்க்’ பிராந்திய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் இந்தியாவுக்குக் கிடையாது; பரஸ்பர வளர்ச்சிக்கான ஒத்துழைப்பையே இந்தியா விரும்புகிறது என்று வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜி தெளிவுபடுத்தியுள்ளார்.

தில்லியில் “சார்க்’ நாடுகளின் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் பேசுகையில் அவர் இவ்விதம் கூறினார்.

இந்தியா இதற்கு முன்னர் பல தடவை இவ்விதம் கூறியுள்ளது. இப்போது மீண்டும் அதைக் கூறுவதற்குக் காரணம் உள்ளது. “சார்க்’ அமைப்பின் புதிய உறுப்பினராக 2005-ம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால் இந்த அமைப்பில் 8 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இவற்றில் இந்தியா ஒன்றுதான் மக்கள்தொகையிலும் பரப்பளவிலும் பெரியதாகும். மாலத்தீவு, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய இதர நாடுகள் சிறியவையே. ஆகவே அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்த முற்படலாம் என்ற அச்சம் இயல்பாக எழக்கூடியதே.

இந்த அச்சத்தைப் போக்க இந்தியா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உறுதி அளிக்க வேண்டியுள்ளது. நடைமுறையில் “சார்க்’ அமைப்பின் இதர நாடுகளுக்கு இந்தியா பல விஷயங்களில் விட்டுக்கொடுத்துள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

“சார்க்’ அமைப்புடன் ஒப்பிட்டால் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய “ஏசியான்’ கூட்டமைப்பில் இப்படிப்பட்ட அவநம்பிக்கை அம்சம் கிடையாது. இக் கூட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவில், பெரிய நாடு என எதுவும் இல்லை. அக் கூட்டமைப்பானது பிற நாடுகள் மெச்சத்தக்க அளவில் ஒத்துழைத்து முன்னேற்றம் கண்டுள்ளது.

25-க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவை பொருளாதாரத் துறையில் மட்டுமன்றி அரசியல்ரீதியிலும் ஒரே அமைப்பாக இணைவதில் ஈடுபட்டுள்ளன. ரஷியா தலைமையிலான பல மத்திய ஆசிய நாடுகள் இதேபோல கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஒத்துழைத்து வருகின்றன.

ஆனால் 1985-ல் தொடங்கப்பட்ட “சார்க்’ அமைப்பு 21 ஆண்டுகள் ஆகியும் மிக மெதுவான முன்னேற்றமே கண்டுள்ளது. இதற்கு இந்தியா – பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் விவகாரம் முக்கியக் காரணம் என்று சொல்ல முடியும். ஆனால் இது ஒன்றுதான் காரணம் என்று கூற இயலாது.

பாகிஸ்தானிலும் சரி, வங்கதேசத்திலும் சரி; தங்களது பிரச்சினைகளுக்கெல்லாம் இந்தியாவே காரணம் என்று கூறி பூச்சாண்டி காட்டும் அரசியல் சக்திகள் உள்ளன. அண்மைக்காலம்வரை பாகிஸ்தானின் கல்வி அமைப்புகளில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரம் இடம்பெற்றிருந்தது. தவிர, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் இன்னமும் இயங்கி வருகின்றன.

“சார்க்’ அமைப்பின் முக்கிய நோக்கம் இந்த நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்துக்கு வழி செய்வதாகும். படிப்படியாக காப்பு வரிகளைக் குறைப்பது என்று டாக்காவில் 1993-ல் நடந்த “சார்க்’ மாநாட்டில் திட்டமிடப்பட்டபோதிலும் அதற்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதற்கான வழியில் உருப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“சார்க்’ அமைப்பின் 14-வது உச்சி மாநாடு இந்த ஆண்டு ஏப்ரலில் தில்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிலாவது பொருளாதார ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படுமா என்பது தெரியவில்லை.

காஷ்மீர் விவகாரத்தில் ஒருவகை உடன்பாடு ஏற்படாதவரையில் “சார்க்’ கூட்டமைப்பு முன்னேற பாகிஸ்தான் இடம்கொடுக்காது என்பது நிச்சயம்.

இதற்கிடையே இந்த அமைப்பில் சீனாவை முழு உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதில் பாகிஸ்தானும் வங்கதேசமும் முனைப்புக் காட்டி வருகின்றன. ஆனால் “சார்க்’ கூட்டமைப்பில் இன்னும் முழு அளவில் ஒத்துழைப்பு ஏற்படாத நிலையில் சீனாவைச் சேர்த்துக் கொள்வதை இந்தியா விரும்பவில்லை.

2010-க்குள் ரூ.92 ஆயிரம் கோடி வர்த்தகம்: சார்க் நாடுகள் திட்டம்

மும்பை, பிப். 20: சார்க் நாடுகளுக்கிடையே 2010-ம் ஆண்டுக்குள் 92 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்ய மும்பையில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த சார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான 13 அம்ச கொள்கை சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்தனர்.

சார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரண்டு நாள் மாநாடு மும்பையில் சனிக்கிழமை தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 சார்க் நாடுகள், உலக வங்கி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். வர்த்தகம் செய்வதற்கான செலவைக் குறைப்பதன் மூலம் 92 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை எட்ட முடியும் என இம் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. சார்க் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், தடையில்லா வான்வெளிப் பகுதியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது.

இது தவிர, எரிசக்தி, மின்னணு ஊடகங்கள், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தவேண்டும் என இம்மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.

==============================================================
பேசிப் பயனில்லை

தெற்காசிய பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தபின்னும் குறிப்பிடத்தக்க எந்தப் பெரிய சாதனைகளையும் நிகழ்த்த முடியாமல் போனதற்கு முதல் காரணம், இதில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் பல விஷயங்களில் முரண்படுவதுதான்.

அந்த நிலைமை 14-வது மாநாட்டிலும் தொடர்கிறது.

“”கருத்து வேறுபாடுகளைச் சமாளிப்பதிலேயே நமது ஆற்றல் செலவாகிவிடுகிறது. “சார்க்’ அமைப்பின் லட்சியத்தைப் பின்தங்கச் செய்கிறது” என்று சொல்லும் பாகிஸ்தான் பிரதமர் செüகத் அஜீஸ், “காஷ்மீர்’ என்ற வார்த்தையைக் குறிப்பிடாமல், “இப் பிராந்தியத்தில் ஒத்துழைப்புக்குத் தடையாக இருக்கும் நம்பிக்கை வறட்சித் தடைகள் நீக்கப்பட வேண்டும், கருத்துவேறுபாடுகளைப் பேசித் தீர்க்க வேண்டும்’ என்கிறார்.

கடந்த மாநாட்டில் (2005-ல்) உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான், இம் மாநாட்டில் முதல்முறையாகப் பங்கேற்பதால், ஒருவேளை, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே நிலவும் எல்லைப் பிரச்சினையையும் சூசகமாகச் சேர்த்தே பேசியிருப்பாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

இந்த எல்லைப் பிரச்சினை காரணமாக, “சார்க்’ நாடுகள் அமைப்பில் ஆப்கானிஸ்தான் இடம்பெறுவதை பாகிஸ்தான் எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை.

இந்த மாநாட்டின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜியை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கசூரி சந்தித்துப் பேசினாலும், காஷ்மீர் பற்றி பேசவில்லை. வழக்கம்போல சுமுகமான, சங்கடம் தராத விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள்.

மாநாட்டில்கூட, நிறைய விஷயங்கள் குறித்து பேசப்படுகிறதே தவிர, நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாக அவை இல்லை. “முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களின் நெருக்கடியில் “சார்க்’ நாடுகள் உள்ளன. முதல் நடவடிக்கையாக “சார்க்’ நாடுகளின் தலைநகரங்களை நேரடி விமானப் போக்குவரத்தால் இணைப்போம். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், நோயாளிகளுக்கான விசா வழங்குவதில் “சார்க்’ நாடுகள் ஒன்றுபோல நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியிருப்பது இந்த அமைப்பு எவ்வளவு நிதானமாகச் செயல்படுகிறது என்பதற்குச் சான்று.

ஐரோப்பிய ஒன்றியம்போல “சார்க்’ நாடுகளை ஓர் ஒன்றியமாக்கி, பொதுநாணயம் (காமன் கரன்சி) உருவாக்க வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலையும் தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பயங்கரவாதத்தையும் குறிப்பிட்டுள்ள இலங்கை, இது குறித்து “சார்க்’ நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று கூறியபோதிலும், யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை.

“சார்க்’ அமைப்பு ஏற்பட்டதன் அடிப்படை நோக்கமே தடையற்ற வர்த்தகத்தை இந்நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொள்வதுதான். ஆனால் அந்த நோக்கம்கூட இன்றளவிலும் முழுமையடையவில்லை.

“சார்க்’ நாடுகள் தங்களுக்குள் பொருள்களின் வரி, விலையைக் குறைக்க “தெற்காசிய தடையற்ற வர்த்தக உடன்படிக்கை’யில் கையெழுத்திட்டன. தடையற்ற வர்த்தக மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன. 2006 ஜூலையில் நடைமுறைக்கு வந்திருக்கவேண்டிய இந்த உடன்படிக்கையின்படி 2007-ம் ஆண்டில் இந்நாடுகளுக்கு இடையே அனைத்து ஏற்றுமதி, இறக்குமதி சுங்க வரியில் 20 சதவீதம் குறைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் மறுப்புத் தெரிவித்ததால் இது நடைமுறைக்கு வரவில்லை. இதற்கு அரசியல் சூழ்நிலைகளே காரணம்.

வர்த்தகத்தைவிட முக்கியமாக தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் ஒத்துழைப்புக்கான தேவை இந்நாடுகளுக்கு இருக்கிறது.

உறுதியான எந்த முடிவும் காணப்படாமல், இந்த மாநாடும் வழக்கம்போல கூடி, பேசிக் கலைவதாகவே அமைந்துள்ளது.
==============================================================

Posted in Afghanistan, Afghanisthan, Asean, Asia, Asian Union, Association, AU, Bangaladesh, Bargaining, Bhutan, Burma, China, Cooperation, Country, Defense, Economy, EU, Expenditure, External Affairs, Finance, Govt, India, Indonesia, Kashmir, Madives, Malaysia, Myanmar, Nations, NATO, Nepal, Pakistan, Phillipines, Power, Region, Rhetoric, SAARC, Singapore, South Asia, Sri lanka, Super power, Superpower, Talks, Terrorism, Thailand, Tibet, UN, Waste | 2 Comments »