திருச்சி பாரதிதாசன் பல்கலை. துணைவேந்தர் திடீர் ராஜிநாமா
திருச்சி, மே 18: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி. தங்கமுத்து, புதன்கிழமை திடீரென ராஜிநாமா செய்தார்.
இவருடைய பதவிக்காலம் முடிய இன்னும் 22 நாள்களே இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
தனது ராஜிநாமா கடிதத்தை புதன்கிழமை இரவு ஆளுநருக்கு “பேக்ஸ்’ மூலம் அனுப்பி வைத்திருக்கிறார் தங்கமுத்து.
மேலும், ஒரு கடித உறையையும் அலுவல்பூர்வமாக பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட செல்போனையும் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு, பல்கலைக்கழக வளாகத்திலுள்ள துணைவேந்தர் இல்லத்தைக் காலி செய்துவிட்டுச் சென்னைக்குச் சென்றுவிட்டார்.
இந்தக் கடித உறையைத் தந்தவரிடம் வியாழக்கிழமை காலை பிரித்துப் பார்க்கும்படி அவர் தெரிவித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
“என்னுடைய பணிக்காலத்தில் மிகச் சிறப்பாகப் பணி செய்திருக்கிறேன் என்ற மனநிறைவுடன் அனைவரையும் பிரிந்து செல்கிறேன்’ என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதே பல்கலைக்கழகப் பொருளியல் துறையில் பணியாற்றியவரான தங்கமுத்து, இந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் இருந்துள்ளார்.
மிகவும் நேர்மையானவர். இவருடைய பணிக்காலத்தில் குறிப்பிடும்படியான எந்தக் குற்றச்சாட்டும் கூறப்பட்டதில்லை.
பல்கலைப் படிப்புகளிலும் பல்வேறு சீரமைப்புகளைக் கொண்டுவரக் காரணமாக இருந்த இவர், “கிரெடிட் சிஸ்டம்’, ஒரே நேரத்தில் இரு பட்டங்கள் பெறும் முறை போன்றவற்றை அறிமுகப்படுத்தினார்.
பல்கலையில் 5 ஆண்டுகளாக முடங்கிப்போயிருந்த பெரியார் உயராய்வு மையத்தை மீண்டும் செயல்படச் செய்தார்.
பல்கலைக்கழகத்திலுள்ள ஆசிரியர், ஊழியர் சங்கங்களுடன் சுமுக உறவைப் பராமரித்துவந்தார்.
ஜூன் 8 ஆம் தேதியுடன் இவரின் பதவிக்காலம் முடிவடையவிருந்தது. அதற்குள் துணைவேந்தர் பதவியை அவர் ராஜிநாமா செய்திருப்பது பல்கலைக்கழக வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
திருச்சியில் புதன்கிழமை ஒரு தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழா அழைப்பிதழில் துணைவேந்தர் பெயரும் இடம்பெறவில்லை.
இதனிடையே, இவ்விழாவுக்கு வந்த மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் தங்கமுத்துவை அழைத்துக் கடிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனவருத்தமுற்றே திடீரென தங்கமுத்து ராஜிநாமா செய்திருக்கலாம் எனக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக ஆட்சிக்காலத்தில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர் என்பதாலேயே, ஆட்சி மாறி திமுக ஆட்சி வந்ததும் அரசியல் வட்டாரங்களிலிருந்து பல்வேறு சங்கடங்களை இவர் சந்திக்க வேண்டியிருந்தது.
இதனிடையில், சென்னையில் ஆளுநரை வியாழக்கிழமை சந்தித்த தங்கமுத்து தனது ராஜிநாமாவுக்கான காரணங்களை அவரிடம் விளக்கியதாகவும் கூறப்படுகிறது.
அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை கண்டுகொள்ளாதவர்: ஒவ்வொரு தேர்வுக் காலத்திலும் அரசியல் பிரமுகர்களின் பரிந்துரைகளைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உயர் கல்வித் துறை அமைச்சரிடம் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.