ராஜஸ்தானில் 3.85 கோடி டன் அளவுக்கு மாபெரும் தங்கப் படிவம் கண்டுபிடிப்பு
ஜெய்பூர், பிப். 22: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில், 3.85 கோடி டன் அளவுக்கு மாபெரும் தங்கப் படிவங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தங்கப் படிவ ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள, இன்டோ கோல்டு மைன்ஸ் (ஐஜிஎல்) லிமிடெட் என்ற ஆஸ்திரேலிய தனியார் நிறுவனம் இதைக் கண்டுபிடித்துள்ளது.
அந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மைக் ஹிக்கின்ஸ் ஜெய்பூரில் நிருபர்களிடம் புதன்கிழமை இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
பன்ஸ்வாரா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கம் உலகத் தரம் வாய்ந்தது. அங்கு ரூ.2,000 கோடியில், நவீன தொழில்நுட்பத்துடன் தங்கச் சுரங்கம் அமைக்கப்படும். இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் அங்கு ஆண்டுக்கு 8 டன் வீதம் தங்கம் வெட்டி எடுக்கும் பணி துவக்கப்படும்.
தங்கச் சுரங்கம் அமைக்கும் பணியில், மெட்டல் மைனிங் இந்தியா (எம்எம்ஐ) பிரைவேட் லிமிடெட் என்ற இந்திய நிறுவனத்துடன் இணைந்து எங்கள் நிறுவனம் கூட்டாகச் செயல்படும்.
தங்கச் சுரங்கம் அமைப்பதற்காக மொத்தம் 2,135 சதுர கி.மீ. நிலப் பரப்பு எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமும் அனுமதி அளித்துவிட்டது.
நேரடியாகவும் மறைமுகமாகவும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ராயல்டி தொகையால் ராஜஸ்தான் மாநில அரசுக்கு பயன் கிடைக்கும் என்றார் மைக் ஹிக்கின்ஸ்.
தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு உற்பத்திச் செலவு அதிகரித்ததன் காரணமாக கோலார் தங்கச் சுரங்கம் கடந்த 2003-ல் மூடப்பட்டது. அதற்குப் பிறகு இந்தியாவில் தங்க உற்பத்தி வெகுவாகக் குறைந்துவிட்டது.