அவுட்சோர்சிங், தனியார்மயமாக்கலை எதிர்த்து அக். 27ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்
புதுதில்லி, அக். 23: வெளிப் பணி ஒப்படைப்பு(அவுட் சோர்சிங்), தனியார்மயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்து அக்.27ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்களின் தலைமை அமைப்பான வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்.18ல் தலைமை தொழிலாளர் ஆணையாளருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பணியாளர்களை நியமித்தல், பென்ஷன் சலுகைகள் போன்ற தங்களது கோரிக்கைகளில் அரசு அலட்சியம் காட்டியதே இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடையக் காரணம் என வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து இந்த கூட்டமைப்பின் பொதுச் செயலர் வெங்கடாச்சலம் விடுத்துள்ள அறிக்கை:
மத்திய அரசு இந்தக் கொள்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், இந்த வேலை நிறுத்தம் மேலும் தீவிரமாகும். இதனைத் தவிர்க்க, அரசு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும்.
அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்வார்கள் என்றார் வெங்கடாச்சலம்