சார்க்: போகுமிடம் வெகு தூரமுண்டு!
மு. இராமனாதன்
“சார்க்’ (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) வெறும் “பேச்சு மடம்’ என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
“சார்க்’ கூட்டமைப்பு 1985 முதல் இயங்கி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை ஆகிய ஏழு நாடுகள் அணி சேர்ந்தன.
“சார்க்’ ஒரு பொருளாதார ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பாகத்தான் உருவாக்கப்பட்டது. பரஸ்பர அரசியல் கருத்து வேற்றுமைகள் “சார்க்’ அமைப்பிற்குள் வரலாகாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் அமைப்பின் செயல்பாட்டை பரஸ்பர பேதங்கள் பாதிக்கவே செய்தன.
கடந்த ஏப்ரல் மாதம் புதுதில்லியில் நடந்த “சார்க்’ மாநாடு, தெற்காசிய ஒத்துழைப்பிற்கான சில அடித்தளங்களை அமைத்துக் கொடுத்தது. அதேவேளையில் அவை போதுமானதாக இல்லை என்கிற விமர்சனங்களும் வலம் வருகின்றன.
இந்த மாநாடு 22-வது ஆண்டுக் கூட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது 14-வது கூட்டம்தான். உறுப்பு நாடுகளிடையே, குறிப்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பகைமை காரணமாக பல ஆண்டுக்கூட்டங்கள் நடைபெறவே இல்லை.
தெற்காசிய நாடுகள், 60 ஆண்டுகளுக்கு முன்வரை காலனி ஆதிக்கத்தில் இருந்தவை. இப்போதும் வறுமையும் கல்லாமையும் உள்நாட்டுப் பிரச்னைகளும் தெற்காசியாவின் மீது சூழ்ந்திருக்கின்றன. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் தெற்காசியர்கள்தாம்.
ஆனால் அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உழல்கின்றனர். எல்லா “சார்க்’ மாநாடுகளிலும் குடிமக்களுக்குக் கல்வியும் சுகாதாரமும் வேலைவாய்ப்பும் தடையின்றிக் கிடைக்க வேண்டுமெனத் தலைவர்கள் பேசுவதோடு சரி. செயலாக்கம்தான் இன்றுவரை இல்லை.
இம்முறை “சார்க்’ அமைப்பின் எட்டாவது உறுப்பினராக ஆப்கானிஸ்தான் இணைந்தது. ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்ஸôயின் உரையில் உறுதியும் துணிவும் இருந்தது.
தமது நாடு மத்திய ஆசியாவுக்கும் தெற்காசியாவுக்கும் இடையே ஓர் இணைப்பாக விளங்கும் என்றார் அவர்.
மேலும், கிழக்காசியாவின் பிரதான சக்திகளான சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் முதல்முறையாக “”பார்வையாளர்”களாகப் பங்கேற்றன. சார்க் நாடுகளில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களை தனது அரசு ஊக்குவிக்கும் என்றார் சீன வெளியுறவு அமைச்சர்.
27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் அடுத்த ஆண்டு முதல் ஈரானும் “சார்க்’ அமைப்பின் பார்வையாளர்களாகப் பங்கேற்க உள்ளன.
உறுப்பு நாடுகளுக்கிடையில் வணிகத்தை மேம்படுத்துவதிலும் இம்மாநாடு கவனம் செலுத்தியது.
சார்க் பிராந்தியத்திற்குள் இறக்குமதித் தீர்வைகளைக் குறைக்க வேண்டும் என்பதை சார்க் நாடுகள் 1993 ஆம் ஆண்டிலேயே ஒப்புக்கொண்டன.
ஆனால் உள்நாட்டுச் சநதையில் பாதிப்பு ஏற்படுத்தாமல், எந்தெந்தப் பொருள்களுக்கு தீர்வைகளை விலக்கிக் கொள்வது அல்லது படிப்படியாகக் குறைப்பது என்பதில் உறுப்பினர்களுக்கிடையில் இணக்கம் ஏற்படவில்லை.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தடையற்ற வணிகம் சில ஆண்டுகளாகவே அமலில் இருந்து வருகிறது. மற்ற “சார்க்’ நாடுகளுக்கும் தீர்வைகளிலிருந்து விலக்களிக்க இந்தியா தயாராகவே இருந்தது.
ஆனால் மற்ற நாடுகளும், எதிர்வினையாக, தமது பொருள்களுக்குத் தீர்வைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தி வந்தது. இது நிறைவேறவில்லை.
வளர்ச்சி குன்றிய வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் இறக்குமதிகளுக்கு இனி இந்தியா தீர்வைகள் விதிக்காது என்று அறிவித்தார் பிரதமர் மன்மோகன் சிங். இது பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். பலன் பெறும் நாடுகள் சலுகையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்போவதாக “சார்க்’ மாநாட்டிலேயே அறிவித்தன.
இதனால் அந்நாடுகளின் இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும். தவிர, இந்திய இறக்குமதிகளுக்கு அவை தீர்வைகளைப் படிப்படியாகக் குறைக்கும் சாத்தியங்களும் அதிகரிக்கும்.
வணிகம் வளரும்போது சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, துறைமுக வளர்ச்சி ஆகியவை மேம்படும். மேலும், பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவின் இந்த நடவடிக்கை பிராந்தியத்திற்குள் நல்லெண்ணத்தை வளர்க்கவும் உதவும்.
மற்ற உறுப்பு நாடுகளைவிட பலமடங்கு பெரிய நாடான இந்தியா “சார்க்’ அமைப்பிற்குள் “பெரியண்ணனை’ போல் செயல்படுவதாக நிலவி வரும் நீண்டநாள் குற்றச்சாட்டை மட்டுப்படுத்தவும் உதவும்.
காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை இந்தியாவுடன் வணிகத்தை மேம்படுத்த இயலாது என்று கூறிவருகிறது பாகிஸ்தான்.
அமைதிப் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றமும் விவேகமும் தென்படும் இப்போதும்கூட பாகிஸ்தான் தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி வரவில்லை. காலத்திற்கு ஒவ்வாத இந்த நிலைப்பாடு தேவையா என்பதை பாகிஸ்தான் எண்ணிப்பார்க்க வேண்டும்.
தெற்காசியப் பல்கலைக்கழகம், சார்க் உணவு வங்கி போன்ற திட்டங்களும் “சார்க்’ மாநாட்டின் கூட்டறிக்கையில் இடம்பெற்றன. நீராதாரங்கள் பங்கீடு, மின்சக்தி, உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றிலும் கூட்டு முயற்சிகள் வலியுறுத்தப்பட்டன. இவை புதியவை அல்ல. எனினும் முதல் முறையாக இவற்றை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
“சார்க்’ மாநாட்டின் அறிக்கைகளிலும் தீர்மானங்களிலும் உள்ள பல்வேறு அம்சங்களை வெளிக்கொணர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் அண்டை நாடுகளிடையே நட்புறவும் வணிகமும் கல்வியும் வேலைவாய்ப்பும் வளரும். “சார்க்’ அமைப்பு உலக அரங்கில் ஒரு சக்தியாக உருவெடுக்க இயலும்.
(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்)