மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை: டி.வி.கோபாலகிருஷ்ணன் நெகிழ்ச்சி
“மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை’ என்று இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணனின் 70 ஆண்டு இசை வாழ்க்கையை பாராட்டும் வகையில் அவரது சிஷ்யர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில், “குரு சேவா 70′ நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் “ஸ்கார்ப்’ அமைப்பிற்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். “யுவர் வாய்ஸ்’ நுõலினை டி.வி.கோபாலகிருஷ்ணன் வெளியிட இசையமைப்பாளர் இளையராஜா பெற்றுக் கொண்டார். “தி கிங் ஆப் பெர்கூசன்மிருதங்கம்’ புத்தகத்தை மியூசிக் அகடமி தலைவர் என்.முரளி வெளியிட கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா பெற்றுக் கொண்டார். “மகிமா’ இசை “சிடி’யை இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா வெளியிட கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன் பெற்றுக் கொண்டார்.
கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா பேசுகையில், “இசையின் அடிப்படையை தெரிந்து கொண்டால் எல்லா இசையும் ஒன்று தான். தென்னிந்திய இசையிலிருந்தே எல்லா இசைகளும் வருகின்றன. டி.வி.கோபாலகிருஷ்ணன் பல இளம் இசைக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறார்’ என்றார். இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா பேசுகையில், “தனது திறமையால் முன்னேறி, பல்வேறு திறமையான இசைக் கலைஞர்களை உருவாக்கி வருகிறார். அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம்’ என்றார்.
சென்னை சபாக்கள் கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், “நாரதகான சபா ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் பல வித்வான்களை அறிமுகப்படுத்தி, அவர்களுடன் உட்கார்ந்து வாசித்து, அவர்களையும், எங்கள் சபாவையும் வளர்த்த பெருமை டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு உண்டு. அவர் இசை உலகிற்கு செய்த பணி மகத்தானது’ என்றார்.
இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், “கம்ப்யூட்டர், கிரிக்கெட் உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டு, இசையை மட்டும் எடுத்து விட்டால் உலகில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். நான் சினிமாவில் பிரபலமாக இருந்தபோது, இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரையும், மீண்டும் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எனக்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் சங்கீதம் கற்றுத் தந்திருக்கிறார். சங்கீத உலகிற்கு அவர் போல ஒருவர் கிடைப்பது அபூர்வம்’ என்றார்.
கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன், கர்நாடக கலாசார அமைச்சர் பேபி, மியூசிக் அகடமியின் தலைவர் என்.முரளி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். ஏற்புரையாற்றிய இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன், “மனிதனுக்கு புத்தி தான் வழிகாட்டி. மனது நல்லபடியாக இருக்க வேண்டும். அதற்கு இசை அவசியம். மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை. ஒரு பாடலை கேட்கும் போது, அதோடு உங்கள் குரலில் பாடி வருகிறீர்கள். உங்கள் உள்ளத்தில் என்றும் இசை பாடிக் கொண்டிருக்க வேண்டும்’ என்றார்.