சிவ்நாடார், வ.அய்.சுப்ரமணியம் உள்ளிட்ட 10 பேருக்கு டாக்டர் பட்டம்
“சென்னைப் பல்கலைக் கழகம் சார்பில்
- பிரதமர் மன்மோகன் சிங்,
- காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும்
- முதல்வர் கருணாநிதிக்கு
கவுரவ டாக்டர் பட்டம் வழங்க திட்டமிடப்பட்டது. சில காரணங்களுக்காக அந்நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது’ என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் 150வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமையில் நடந்த விழாவில்
- எச்.சி.எல்., நிறுவனர் சிவ்நாடார்,
- புள்ளியியல் பேராசிரியர் சி.ஆர்.ராவ்,
- சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன்,
- நரம்பியல் வல்லுனர் சி.யு.வேல் முருகேந்திரன்,
- கல்வியாளர் உமையாள் ராமநாதன்,
- தினத்தந்தி குழுமத்தின் இயக்குனர் சிவந்தி ஆதித்தன்,
- சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சாந்தப்பா,
- சினிமா இயக்குனர் பாலச்சந்தர்,
- சாந்தலிங்கர் மடத்தின் தலைவர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார்,
- தமிழறிஞர் வ.அய்.சுப்ரமணியம்
ஆகிய 10 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பொருளாதாரத் துறை ஆய்விற்காக
- மாநில திட்டக் குழு துணைத் தலைவர் நாகநாதனுக்கும்,
பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை ஆய்விற்காக
- ஏகாம்பரநாதனுக்கும் டி.லிட்., பட்டங்கள் வழங்கப்பட்டன.
கடல்சார் கல்வித் துறை ஆய்விற்காக
- சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன்,
- விலங்கியல் துறை ஆய்விற்காக முனுசாமி,
- பயோகெமிஸ்டரி ஆய்விற்காக தேவராஜ்
ஆகியோருக்கு டி.எஸ்சி., பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் தன்னாட்சி கல்லுõரிகள், தொலைதுõரக் கல்வித் திட்டத்தில் பயின்றவர்கள் என மொத்தம் 59 ஆயிரத்து 23 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பட்டங்களை வழங்கினார்.
விழாவில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “சென்னைப் பல்கலைக் கழகம் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. சில காரணங்களுக்காக அந்நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப பல்கலைக் கழகங்களும், கல்லுõரிகளும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்கள் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு முதல்வர் கருணாநிதியை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.
பட்டமளிப்பு விழா உரையாற்றிய கவர்னர் சுர்ஜித்சிங் பார்னாலா, “ஆரம்பத்தில் இரண்டு பேருக்கு பட்டம் வழங்கிய சென்னை பல்கலைக் கழகம், தற்போது ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வருகிறது. பல்கலைக் கழகம் பட்டம் வழங்குவதுடன், மாணவர்களை முழு மனிதனாக உருவாக்க வேண்டும். வாழ்க்கையில் நிகழும் சவால்களை சந்திக்க அவர்களை தயார்படுத்த வேண்டும். பட்டம் பெறுவதுடன் கல்வி முடிவடைவதில்லை. அது ஒரு தொடர் நிகழ்வு. கற்பதற்கு உள்ள பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நாடு இளைஞர்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறது. இளைஞர்களின் கடின உழைப்பு தேசத்தை முன்னேற்றும்’ என்றார்.
சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் வரவேற்றார்.