சிவசேனை -பாஜக கூட்டணியிடம் மீண்டும் மும்பை மாநகராட்சி
மும்பை, பிப். 3: மகாராஷ்டிர மாநிலத்தில் 10 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில், மும்பை மாநகராட்சியையும் பெரும்பாலான நகராட்சிகளையும் சிவசேனை -பாஜக கூட்டணி மீண்டும் கைப்பற்றும் நிலையில் உள்ளது.
சிவசேனைக் கட்சியில் இருந்து முன்னாள் துணை முதல்வர் நாராயண் ராணே கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரஸில் சேர்ந்ததாலும், பால் தாக்கரேயின் அண்ணன் மகன் ராஜ் தாக்கரே விலகியதாலும், கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்து வந்த சிவசேனை -பாஜக கூட்டணிக்கு இது வியப்பூட்டும் வெற்றியாகும்.
மும்பை மாநகராட்சியில் மொத்தமுள்ள 227 வார்டுகளில், முன்னணியில் உள்ள வார்டுகள் உள்பட மொத்தம் 112 வார்டுகள் சிவசேனை -பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் நிலையில் உள்ளது.
காங்கிரஸ் கட்சி 65 இடங்களிலும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளன.
மும்பையின் புறநகர்ப் பகுதியான பந்த்ராவில் அமைந்துள்ள சிவசேனைக் கட்சி நிறுவனர் பால் தாக்கரேயின் இல்லத்துக்கு வெளியே கூடிய ஏராளமான கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
நாசிக்: நாசிக் நகராட்சியில், மொத்தமுள்ள 108 இடங்களில், சிவசேனை -பாஜக கூட்டணிக்கு 40 இடங்கள் கிடைத்துள்ள போதிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
நாக்பூர்: நாக்பூர் நகராட்சியில், மொத்தமுள்ள 136 இடங்களில், 57 இடங்களைப் பெற்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அங்கு காங்கிரஸýக்கு 32 இடங்கள் கிடைத்துள்ளன.
புணே: புணே நகராட்சியில், மொத்தமுள்ள 144 இடங்களில், 42 இடங்களை வென்று தேசியவாத காங்கிரஸ் தனிப்பெரும் கட்சி ஆகியுள்ளது. காங்கிரஸýக்கு 35 இடங்கள் கிடைத்துள்ளன.
பிம்ப்ரி -சிஞ்ச்வாடு: பிம்ப்ரி -சிஞ்ச்வாடு நகராட்சியில் மொத்தமுள்ள 105 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் 60 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. காங்கிரஸ் 20 இடங்களில் வென்றுள்ளது.
சோலாபூர்: சோலாபூர் நகராட்சியில் மொத்தமுள்ள 98 இடங்களில், 40 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் தனிப் பெரும் கட்சி என்ற நிலையை அடைந்துள்ளது. அங்கு தேசியவாத காங்கிரஸýக்கு 14 இடங்கள் கிடைத்துள்ளன.
தாணே, உல்லாஸ்நகர், அகோலா, அமராவதி ஆகியவை தேர்தல் நடைபெற்ற மற்ற நகராட்சிகள் ஆகும்.
சரத் பவார் கட்சியுடன் கூட்டணி அமைக்காதது தவறு -காங்கிரஸ்: சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்காதது காங்கிரஸ் கட்சி செய்த தவறு என முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் கூறினார்.
கூட்டணிக்கு முயற்சி எடுத்தோம். ஆனால் அது கைகூடவில்லை என்றார் அவர்.
நகர்ப் பகுதிகளில் கட்சியின் தளத்தை விரிவாக்க தமது கட்சியினர் முயற்சி எடுத்ததாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.
மும்பை தேர்தல்
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் தப்புக்கணக்கு போட்டுவிட்டது என்பதை மும்பை பெருநகர மாநகராட்சிக்கும் மற்றும் 9 மாநகராட்சிகளுக்கும் நடந்துள்ள தேர்தல்கள் காட்டியுள்ளன.
சிவசேனைக் கட்சி பலவீனமடைந்துவிட்டதாக காங்கிரஸ் கருதியது. அது தவறு என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் பலம் பெற்று வருவதாகவும் ஆகவே மத்திய அமைச்சர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இனி ஒதுக்கி வைக்கலாம் என்றும் காங்கிரஸ் நினைத்தது. அதுவும் தவறாகிவிட்டது.
சிவசேனை பலவீனமடைந்துவிட்டதாக காங்கிரஸ் கணக்குப் போட்டதற்குக் காரணங்கள் உண்டு. சிவசேனைக் கட்சியானது 40 ஆண்டுகளாக பால்தாக்கரே தலைமையில் இயங்கி வருவதாகும். 2005-ல் அக் கட்சியின் முக்கியப் பிரமுகர் என்று கருதப்பட்ட நாராயண் ரானே அக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். அது போதாது என சிவசேனைக் கட்சியில் பிளவு ஏற்பட்டு பால்தாக்கரேயின் அண்ணன் மகன் ராஜ்தாக்கரே தனிக் கட்சி அமைத்தார். நாராயண் ரானேயுடன் சேர்ந்து காங்கிரஸýக்குத் தாவிய எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சியின் சார்பில் துணைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றனர்.
இத் துணைத் தேர்தல்களில் சிவசேனைக் கட்சி தோல்வி அடைந்தது. அதுமட்டுமல்லாமல், மகாராஷ்டிர சட்டமன்றத்தில் ரானேயின் வருகையால் காங்கிரஸ் கட்சியின் பலம் 77-ஆக அதிகரித்தது. இதன் பலனாக பவாரின் கட்சியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாகியது. இப் பின்னணியில்தான் மும்பை மாநகராட்சித் தேர்தலில் பவார் கட்சியுடன் கூட்டுசேராமல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முற்பட்டது.
தேர்தல் முடிவுகள் குறித்த கணிப்புகளும் மும்பை மாநகராட்சித் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே கூறின. இதைப் பொய்ப்பித்து சிவசேனை-பாஜக கூட்டணி இந்த மாநகராட்சியை மீண்டும் கைப்பற்றி உள்ளது.
பால்தாக்கரேயின் வெற்றிக்குக் காரணங்கள் உண்டு. முதலாவதாக, எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு நின்றன. தவிர முந்தைய மாநகராட்சியில் உறுப்பினர்களாக இருந்த 58 பேரை சிவசேனைக் கட்சி மீண்டும் நிறுத்தாமல் துணிந்து உரிய வேட்பாளர்களை நிறுத்தியது. அத்துடன் பால்தாக்கரே தமது ஆவேசப் பேச்சு மூலம் மக்களைக் கவர்பவர். தேர்தல் முடிவுகள் இவ்விதம் அமைந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. சுமார் 46 சதவீத வாக்காளர்களே வாக்களித்து உள்ளனர். பாதிக்கும் மேற்பட்டவர்கள் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.
இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். 2002-ல் நடந்த தேர்தலுடன் ஒப்பிட்டால் சிவசேனை – பாஜக கூட்டணியின் பலம் இத்தடவை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், அக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிட்ட வேண்டுமானால், அது சுயேச்சைகளின் உதவியை நாடியாக வேண்டும் என்ற நிலைதான் உள்ளது.
ஆனால் சிவசேனை – பாஜக கூட்டணியின் வெற்றி பெரிதாகத் தெரிவதற்கு முக்கியக் காரணம் அண்மையில் சிவசேனைக் கட்சிக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட பின்னடைவுகளே.
மகாராஷ்டிரத்தில் பிற மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலின் முடிவுகள் காங்கிரஸýக்கு ஆறுதல் அளிப்பவையாக இல்லை. பவார் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப்பட்ட அகோலா நகரில்தான் அக் கூட்டணி பதவியைப் பிடித்துள்ளது. நாகபுரியில் காங்கிரஸ் பதவி இழந்தது. இதற்கு உள்கட்சி சண்டையே காரணம். புணேயில் காங்கிரஸýக்கு பலத்த சரிவு. அமராவதியிலும் சோலாப்பூரிலும் பவார் கட்சியின் தயவில் காங்கிரஸ் பதவியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் கட்சியானது தனது கூட்டணிக் கட்சிகளை அவ்வப்போது உதாசீனம் செய்வது தவறு என்பதையே இத் தேர்தல்கள் காட்டியுள்ளதாகச் சொல்லலாம்.
மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தல் புகட்டும் பாடம்
நீரஜா செüத்ரி – தமிழில்: சாரி.
மகாராஷ்டிரத்தில் நடந்த உள்ளாட்சிமன்றத் தேர்தல் முடிவால் அங்கு ஆட்சி கவிழப் போவதும் இல்லை, தலைமையில் மாற்றம் வரப்போவதும் இல்லை; ஆனால் அரசியல் தலைவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அது புகட்டும் பாடம் ஒன்று உண்டு.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது அவசியம் என்று முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உள்ளிட்ட தலைவர்கள் பலர் ஆரம்பம் முதலே வற்புறுத்தினர்.
கட்சியின் மாநிலத் தலைவர் பிரபா ராவ், மும்பை தலைவர் குருதாஸ் காமத், மகாராஷ்டிர காங்கிரஸ் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அகில இந்திய பொதுச்செயலர் மார்கரெட் ஆல்வா ஆகியோர்தான் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டு தனது வலிமையை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். இனி கட்சிக் கூட்டத்தில் தோல்வியை ஆராயும்போது இவர்களின் தலைகள் உருளக்கூடும்.
மும்பை மாநகர காங்கிரஸ் கட்சித் தலைவர் குருதாஸ் காமத்தும் மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீலும் பகிரங்கமாக தேர்தல் சமயத்தில், குழாயடிச்சண்டைபோல சவால்விட்டுப் பேசிக்கொண்டதன் மூலம் கூட்டணிக்குள் பூசல் இருப்பது உறுதியானது.
இந்தத் தேர்தல் முடிவு பல உண்மைகளை உணர்த்துகிறது. கூட்டணிதான் நல்ல வெற்றிகளைப் பெற்றுத் தருகிறது என்பது முதலாவது உண்மை. இதை காங்கிரஸ் மறக்காமல் இருக்கும்போதெல்லாம் அதற்கு வெற்றி கிட்டுகிறது. அந்த கால செல்வாக்கு இன்னமும் தொடருவதாக பிரமையில் ஆழ்ந்து, தனித்துப் போட்டியிடும்போதெல்லாம் தோல்வியே கிட்டுகிறது.
கூட்டணியால் வெற்றிக்கனியைப் பறிக்க முடியும் என்பதை அனுபவத்தில் முதலில் உணர்ந்தவர் ஜெயலலிதாதான். 1998 தேர்தலில் மதிமுக, பாமக போன்ற சிறிய கட்சிகளைக்கூட ஒன்றுவிடாமல் தனது அணியில் சேர்த்து அதிகாரத்தைக் கைப்பற்றினார். கடந்த சட்டப் பேரவை பொதுத்தேர்தலின்போது கூட மதிமுகவை தன் பக்கம் ஈர்த்து, தனக்கு படுதோல்வி ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்.
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளாமல் விட்டதுடன், சமூகங்களுடனான சுமுக உறவையும் இழந்து நின்றது. முதல் முறையாக, எந்த ஒரு தலித் கட்சியுடனும் கூட்டு சேராமல் தனித்துப் போட்டியிட்டது. கைர்லாஞ்சி சம்பவத்தால் கொதித்துப் போய் இருக்கும் தலித்துகள், காங்கிரஸ் கட்சி அதைக் கையாண்ட விதத்தால் மனம் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மும்பை, மாலேகாம் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு விசாரணை என்ற பெயரில் ஏராளமான முஸ்லிம்களை மாநிலப் போலீஸôர் துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதனால் முஸ்லிம்களின் ஆதரவு காங்கிரஸýக்குக் குறைந்துவிட்டது. குருதாஸ் காமத்தின் தொகுதியிலேயே ஆறு வார்டுகளில் 4 வார்டுகளில் முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
ஒரு மாநிலத்துக்கு இணையான பட்ஜெட் போடும் அளவுக்கு மும்பை மாநகரம் மிகப் பெரியது. அப்படிப்பட்ட மாநகராட்சியைக் கைப்பற்றுவதற்கு சரியான கூட்டணியை ஏற்படுத்த காங்கிரஸýம் தேசியவாத காங்கிரஸýம் தவறவிட்டதுதான் விந்தையானது.
மொத்தம் உள்ள 227 வார்டுகளில் 225 வார்டுகள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. 2 வார்டுகள் தொடர்பாகத்தான் இழுபறி ஏற்பட்டது. அந்த இரண்டில்கூட தோழமை உணர்வோடு தனித்தனியாக போட்டியிட்டிருக்கலாம். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை முதலில் எடுத்தது.
இதற்கு உள்நோக்கமும் இருக்கலாம். மகாராஷ்டிர அரசியலில் பழம்தின்று கொட்டை போட்ட அரசியல்வாதியான சரத் பவார், காங்கிரஸ் கட்சி பலம் பெறுவதை விரும்பவில்லை என்று தெரிகிறது. பிம்ப்ரி-சின்ச்வாட் நகரை தேசியவாத காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டுவிட்டது. புணேயில் காங்கிரûஸவிட பவார் கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி.
2009-ல் மூன்றாவது அணி அமைக்க பவார் முயற்சி செய்கிறார். அப்படி அது வலுவாக அமைந்தால் காங்கிரúஸô, பாரதீய ஜனதாவோ அதை ஆதரித்துத்தான் தீர வேண்டும். சரத்பவார் அளவுக்கு அரசியல் சாதுர்யம் உள்ள தலைவர் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்பதே அதன் மிகப்பெரிய பலவீனமாகும். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே பாரதீய ஜனதாவுடன் கூட்டு வைத்துக் கொண்டார். மராத்திய இனத்தின் சுயமரியாதை குறித்துப்பேசி மக்களின் இன உணர்வைத் தூண்டினார்.
பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சாடி, நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவிகள் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அப்சல் குருவுக்கு இன்னமும் மரண தண்டனையை நிறைவேற்றாமல் இருப்பதற்காக குடியரசுத் தலைவர் கலாமையே தாக்கிப் பேசினார்.
பஞ்சாப், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன் வெளியாகியிருக்கும் இத் தேர்தல் முடிவுகள் சிவசேனை, பாரதீய ஜனதா கட்சிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
தமிழில்: சாரி.