ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. கால்பந்து மைதானத்தில் சுட்டுக்கொலை
ஜாம்ஷெட்பூர், மார்ச் 5: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்தவரும், ஜாம்ஷெட்பூரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சுநீல் மாதோ (38) மாவோயிஸ்ட் நக்சல்களால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் பகூரியா என்ற இடத்தில், ஹோலிப் பண்டிகையையொட்டி நடந்த கால்பந்து போட்டியில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட அவரை, துப்பாக்கிகளுடன் வந்த 15 நக்சலைட்டுகள் பலரும் பார்த்துக் கொண்டிருக்க சுட்டுக்கொன்றனர். மாதோவுடன் அவருடைய மெய்க்காவலர்கள் இருவரும், மற்றொருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். வேறு 2 மெய்க்காவலர்களை அவர்கள் துப்பாக்கி முனையில் பிணையாள்களாக பிடித்துச் சென்றுவிட்டனர்.
சுநீல் மாதோவின் உடலில் 7 குண்டுகள் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
சோம்நாத் இரங்கல்: இச் செய்தியைக் கேட்ட மக்களவைத் தலைவர் சோம்நாத், அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்தார்.
எம்.பி. படுகொலை
மக்களவை உறுப்பினர் சுநீல் மாதோ, ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைவர் முன்னிலையிலும் நக்சலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலராக இருந்தவர் சுநீல் மாதோ. ஒருசமயம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு அவரது பெயரும் அடிபட்டது.
கடந்த பல ஆண்டுகளில் நாட்டில் நக்சலைட் தாக்குதல்களில் பல நூறு போலீஸôரும் மற்றும் கிராம அதிகாரிகளும் உயிர் இழந்துள்ளனர். எனினும் எம்.பி. ஒருவர் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்படுவது இதுவே முதல் தடவையாக இருக்கலாம்.
சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்னும் கிராமத்தில் விவசாயிகள் தொடங்கிய இயக்கம் உருமாறி, வெவ்வேறு போர்வைகளில் பல மாநிலங்களுக்கும் பரவி அரசுகளுக்குச் சவால் விடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. நக்சலைட்டுகள் பிரச்சினை மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய முன்னேறிய மாநிலங்களிலும் உள்ளது. பிகார், ஜார்க்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலங்களிலும் காணப்படுகிறது. ஆந்திரத்தில் தொடங்கி மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் என மேற்கு வங்கம் வரை 9 மாநிலங்களில் 156 மாவட்டங்கள் நக்சலைட் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஒருபாணி தென்படுகிறது. வறுமை அதிகம் நிலவும் பகுதிகளுக்கு அருகே காடுகளும், மலைகளும் இருக்குமானால் அவை நக்சலைட்டுகளின் புகலிடமாக விளங்குகின்றன.
அரசுக்கு எதிரான புரட்சி தங்களது நோக்கம் என்று நக்சலைட்டுகள் கூறிக் கொள்கின்றனர். ஆனால் மிரட்டிப் பணம் பறித்தல், ஆள் கடத்தல், வழி மறித்து அல்லது கண்ணிவெடி வைத்து போலீஸôரையும் மற்றவர்களையும் கொலை செய்தல் போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். 2005-ல் பிகாரில் ஜகானாபாதில் நக்சலைட்டுகள் சிறையை உடைத்து பல நூறு கைதிகளை விடுவித்துச் சென்றபோது நாடே அதிர்ச்சி அடைந்தது.
ஜார்க்கண்டில் உள்ள 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்கள் நக்சலைட் பிரச்சினை உள்ளவை என்று அறிவிக்கப்பட்டவை. 2000-ஆவது ஆண்டில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாகப் பிரிந்த பின்னர் அங்கு நக்சலைட் பிரச்சினை தணிய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நிகழவில்லை. நக்சலைட்டு தாக்குதல்களால் அம் மாநிலத்தில் 2001-ல் 200 பேர் இறந்தனர் என்றால் 2004-ல் 150 பேர் இறந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், ஜார்க்கண்ட் மாநிலம் இந்தியாவிலேயே இரும்புத்தாது கிடைப்பதில் முதலிடம். நிலக்கரி கிடைப்பதில் இரண்டாவது இடம். தாமிரம் கிடைப்பதில் முதலிடம் என பெருமை பெற்றதாகும். இப்படிப்பட்ட வளங்கள் பல இருந்தும் முன்னேறாத மாநிலங்களில் ஒன்றாக அது உள்ளது. ஜார்க்கண்ட் தோன்றியதிலிருந்து அந்த மாநிலம் கடந்த 6 ஆண்டுகளில் 5 முதல்வர்களைக் கண்டுள்ளது. எனினும் இது ஒன்றை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. நிலையான ஆட்சி உள்ள ஆந்திரத்திலும் நக்சலைட் பிரச்சினையை ஒழிக்க முடியவில்லை.
நக்சலைட் பிரச்சினை உள்ள பகுதிகளில் மிகவும் வறுமை நிலையில் உள்ள மக்கள் பல்வேறு காரணங்களால் நக்சலைட்டுகளின் பிடியில் உள்ளனர். காட்டுப் பகுதியில் காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் நக்சலைட்டுகளுக்கு வலுக்கட்டாயமாகக் கப்பம் கட்டுகின்றனர். ஜார்க்கண்டில் ஒருசமயம் ஒரு சுரங்க நிறுவனத்தை மிரட்டி நக்சலைட்டுகள் ரூ. 7 கோடி கேட்டனர். சில இடங்களில் நக்சலைட்டுகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
நக்சலைட் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால் அதற்கு பல முனைகளிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. “இரும்புக்கரத்துடன் ஒடுக்குவோம்’ என்று அவ்வப்போது அறிக்கை விடுவது போதாது. ஆனால் ஒன்று. பேச்சுவார்த்தை முலம் இப் பிரச்சினையைத் தீர்க்க இயலாது. ஆந்திர அனுபவம் இதைக் காட்டிவிட்டது.
எம்.பி. கொலைக்கு மாவோயிஸ்ட் பொறுப்பேற்பு
ஜாம்ஷெட்பூர், மார்ச் 7: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி எம்.பி. சுநீல் மகதோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
ஹாதியா மற்றும் லாங்கோ பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களில் மாவோயிஸ்ட் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பங்கஜ் தரத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
லாங்கோ பகுதியில் மாவோயிஸ்டுகள் 11 பேரைக் கொலை செய்ய கிராமவாசிகளைத் தூண்டிவிட்டவர் சுநீல் மகதோ என்றும், அதற்குப் பழிவாங்கவே அவரைக் கொன்றதாகவும் அந்த போஸ்டர் வாசகம் தெரிவிக்கிறது.
ஜார்க்கண்டில் மீண்டும் சம்பவம் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரின் மகன் சுட்டுக் கொலை
ஜாம்ஷெட்பூர், மார்ச் 9: கடந்த 4 நாள்களுக்கு முன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அங்கு மற்றொரு சம்பவமாக முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரின் மகன், வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்தத் தலைவர் சுகதேவ் ஹெம்ப்ராம். இவரது மகன் லஷ்மண் (25).
லஷ்மணை அவரது தந்தை சக்ரதர்பூரில் உள்ள பஸ் நிலையத்துக்கு பஸ் ஏற்ற அழைத்து வந்தார்.
பஸ்ஸில் ஏறிய லஷ்மனை, அந்த பஸ்ஸில் இருந்த ரத்தன் தியூ என்பவர் துப்பாக்கியால் சுட்டார். இதைக்கண்ட சுகதேவ், தனது பாதுகாவலர்கள் மூலம் அவரை பிடிக்க முயன்றார். இருப்பினும் அவர் தப்பினார்.
உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லஷ்மண் இறந்தார்.
தகவலறிந்த போலீஸôர் விரைந்து சென்று குற்றவாளி தியூவை பிடித்தனர்.
லஷ்மண் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை முன்பாக, முக்தி மோர்ச்சா தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப் பகுதியில் இருந்த பல்வேறு கடைகள் மூடப்பட்டன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜாம்ஷெட்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி, இச் சம்பவம் அரசியல் பிரச்சினைகளால் நடைபெறவில்லை என்றார்.