தீண்டாமைக்கு எதிரான முதல் புரட்சி: தலித்துகள் நுழைய அனுமதிக்கப்பட்ட லட்சுமி நாராயணன் கோயிலுக்கு வயது 100
நாகபுரி, ஜன. 25: இந்தியாவில் முதன்முதலாக தலித்துகள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்ட கோயில் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன.
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இருந்து 80 கி.மீ தொலைவில் வார்தாவுக்கு அருகே உள்ளது லட்சுமி நாராயணன் கோயில். 1907 ஜனவரி 23 அன்று இக்கோயிலின் முதல் கும்பாபிஷேகம் நடந்தது. 1928ல் சுமார் 2000 தலித் சமூக மக்கள் இக்கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்தனர். இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமை அதிகமாக நடந்த அந்தக் காலகட்டத்தில் இந் நிகழ்வு ஒரு புரட்சியாகவே கருதப்பட்டது.
மிகப் பெரும் தொழிலதிபரும், சமூக சீர்திருத்தவாதியுமான பஜ்ராஜ் பஜாஜ் இக்கோயிலைக் கட்டினார். இவரது வளர்ப்பு மகனான ஜம்னாலால் பஜாஜ் காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டவர். இவரும் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதியாவார். இவரது முயற்சியாலேயே தலித்துகள் கோயிலுக்குள் செல்ல முடிந்தது.
ஜம்னாலாலின் சமூக சேவைகளை தனது “யங் இந்தியா’ பத்திரிகையில் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் காந்திஜி. சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் வார்தா பகுதிக்கு வந்த காந்திஜி இக் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
ஜம்னாலாலின் பேரன்கள்தான் தற்போது பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களாக இருக்கும் ராகுல் பஜாஜ் மற்றும் சேகர் பஜாஜ் ஆகியோர் ஆவர்.