5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்க மறுத்த போலீஸ் அதிகாரிக்கு பாராட்டு
மும்பை, ஜன. 24: ஆவணங்களை அழித்தால் 5 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்ற நிலையிலும் நேர்மையாக நடந்துகொண்ட மும்பை போலீஸ் இன்ஸ்பெக்டரை மகாராஷ்டிர துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டீல் பாராட்டி அவருக்கு ரூ.10,000 பணமுடிப்பும் வழங்கினார்.
ஆஸôத் மைதான் போலீஸ் நிலையத்தில் துணை இன்ஸ்பெக்டராக இருப்பவர் மகேந்திர ஜன்ராவ். இவர் குட்கா நிறுவனம் ஒன்றின் மீதான வழக்கை விசாரித்து வந்தார்.
இந்த நிலையில் ரயில்வேயில் போலீஸôக பணிபுரியும் சைரஸ் தாவியர்வாலா என்பவர் குட்கா தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து கிஷோர் வத்வானி, அனில் சர்மா ஆகிய இருவரை ஜன்ராவிடம் அழைத்து வந்தார்.
அவர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை அழித்தால் ரூ.5 லட்சம் லஞ்சமாகத் தருவதாக ஆசை காட்டினர்.
ஆனால், ஜன்ராவ் அதை ஏற்க மறுத்தார். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
“குட்கா நிறுவனம் தொடர்பான ஆவணங்களை எடுத்துக் கொண்டு ரயிலில் இந்தூருக்கு சென்று கொண்டு இருக்கும்போது, போரிவிலி ரயில் நிலையம் அருகே அவை தொலைந்து விட்டதாக போலீஸில் புகார் தெரிவிக்கும்படியும், அந்த ஆவணங்களை அழித்துவிடும்படியும் ஜன்ராவுக்கு ஆலோசனை வழங்கினோம்’ என்று கைது செய்யப்பட்ட ரயில்வே போலீஸ் தாவியர்வாலா கூறினார்.