Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ayurvedic’ Category

Mooligai Corner: Herbs & Naturotherapy – How to avoid Diarrhoea & Dysentery with Naval

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

மூலிகை மூலை: ‘நாவல்’ இருக்க பயமேன்?

நாவல் மர இலைகள், பட்டைகள் எல்லாம் துவர்ப்புத்தன்மை கொண்டது. உண்ணக் கூடிய கருஞ்சிவப்புக் கனிகளை உடையது. இதுதானாகவே வளரும் பெரு மரவகையைச் சேர்ந்ததாகும். இலை, பட்டை, பழம், விதை மருத்துவக் குணம் உடையது. தமிழகம் எங்கும் பரவலாக எல்லா மண்

வகையிலும் தானாகவே வளர்கின்றது. இதன் பட்டை, சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும், பழம் சிறுநீர் பெருக்கும், பசியைத் தூண்டும் குணம் உடையது.

வேறுபெயர்கள் :
தூறவம், நம்புலி, நேராடம், ராசசம்பு, மகாபலா, சம்பூகம்.

ட்
Syzygium Jambolanum DC

இனி மருத்துவக் குணங்களைப் பார்க்கலாம்.

நாவல் இலைக் கொழுந்துச் சாறு 1 தேக்கரண்டி, ஏலரிசி 2, இலவங்கப்பட்டைத்தூள் மிளகு அளவு எடுத்துக் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர செரியாமை, பேதி, சூட்டு பேதி உடனே நிற்கும்.

நாவல் மரத்தின் பிஞ்சு, மாதுளம்பழத்தின் பிஞ்சு இரண்டையும் ஒரே அளவாக எடுத்து அரைத்து சாறுபிழிந்து ஒரு சங்களவு எடுத்து 1 டம்ளர் பசுவின் மோரில் கலந்து 2 வேளை குடித்துவர சீதபேதி நிற்பதோடு நீரிழிவு நோய் இருந்தாலும் குணமடையும்.

நாவல் இலை, கொழுந்து, மாங்கொழுந்து ஆகியவற்றைச் சமஅளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் தயிரில் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர சீதபேதி, இரத்த பேதி, கடுப்புடன் போகும் நீர்த்த பேதி உடனே நிற்கும்.

நாவல் மரத்தின் பட்டையோடு, மகாவில்வ மரத்தின் பட்டை இவற்றைச் சமஅளவாக எடுத்து நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, காலையில் வெறும் வயிற்றில் அரை தேக்கரண்டி பொடியைப் பசுவின் பால் 1 டம்ளரில் கலந்து குடித்து வர நீரிழிவு நோய் குணமாகும்.

நாவல் கொட்டையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 2 கிராம் எடுத்து நீருடன் 2 வேளை குடித்து வர மதுமேகம், அதி மூத்திரம் குணமாகும்.

வெண்மர நாவல் மரப் பட்டையின் உள்பாகம் எடுத்து கழுநீர் விட்டு இடித்த சாறு 100 மில்லியளவு எடுத்து, தென்னை மரப்பூவின் சாறு 50 மில்லி எடுத்து, உரசிய சந்தனம் 5 கிராம் எடுத்துக் கலந்து காலையில் குடித்துவர பெரும்பாடு குணமாகும். அத்துடன் ஆடாதொடைச் சாறை 50 மில்லியளவு சிறிது தேன் கலந்து குடிப்பது இன்னமும் நலமாக இருக்கும். இதனால் பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் தீட்டு அதிகமாக இருக்கும். நாட்களும் அதிகமாகும். வயிற்றுவலி, இடுப்பு வலி, எரிச்சல், இரத்தப்போக்கு, உடல் பலவீனம், நெஞ்சு படபடப்பு, இருதயம் பலவீனம், பசியின்மை, ருசியின்மை, களைப்பு போன்றவை அனைத்தும் தீரூம்.

நாவல் வித்தைக் கைப்பிடியளவு எடுத்து பாலில் அரைத்து நெல்லிக்காயளவு 2 வேளை சாப்பிட்டு வர கிராணி, நீரிழிவு, மூலச்சூடு நீங்கும்.

நாவல் பட்டையைப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து 1 டம்ளர் எருமைத் தயிருடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர கிராணி குணமாகும்.

Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Diarrhoea, doowet, Dysentery, faux pistachier, Health, Herbs, Indian blackberry, jambol, Jambolan, Jambolan Plum, Jamun, java plum, Medicines, Mooligai, Myrtaceae, Naaval, Natural, Naturotherapy, Naval, Noval, Syzygium cumini | Leave a Comment »

Herbs & Naturotherapy: Mooligai Corner – Thaanrikkai

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 3, 2008

மூலிகை மூலை: அம்மை நோய் தீர்க்கும் தான்றிக்காய்!

தான்றிக்காய் மர இன வகுப்பாகும். இதன் காய், இலை, பழம், விதை மருத்துவக் குணம் உடையது. துவர்ப்புச் சுவை உடையது. வெப்பத்தை அதிகரிக்கும்.

வேறு பெயர்கள்:

அகசம், அக்கம், அக்கந்தம், அக்கத்தான், அம்பலத்தி, ஆராமம், அக்காத்தான் அமுதம், எரிகட்பலம், கந்தகிட்பலம், கந்துகன், கலித்துருமம், களத்தூன்றி, சதகம், தாபமாரி, தான்றிக்காய், வாத்தியம், வித்தியம், விபீதகம், திறிலிங்கம், பூதவாசகம்.

ஆங்கிலத்தில் :

Terminalia bellirica (Gaertner), Roxb; Combreteceae

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

தான்றிக் காயை கொட்டை நீக்கிக் கருகாமல் வறுத்துப் பொடியாக்கி 1 கிராம் எடுத்து சிறிது சர்க்கரை கலந்து 2 வேளை சாப்பிட்டு வர, மலச்சிக்கல், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்தத் தலைவலி, இரத்த மூலம், சீதபேதி குணமாகும்.

தான்றிக் காய்ப் பொடி 3 கிராமுடன் அதே அளவு சர்க்கரை கலந்து வெந்நீரில் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர பித்த நோய்கள், வாய் நீர் ஒழுகல், கண் பார்வை குணமாகும். தான்றிக்காயை நீர் விட்டு அரைத்துப் புண், அக்கியின் மேல் பூச்சாகப் பூசி வர எரிச்சல் தணிந்து குணமாகும். தான்றிக் காயைச் சுட்டுப் பொடியாக்கி சமஅளவு சர்க்கரை சேர்த்து 1 தேக்கரண்டி வெந்நீரில் 2 வேளை சாப்பிட்டு வர நீர் ஒழுகுவது, பல் வலி குணமாகும்.

தான்றிக் காயைப் பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட அம்மை நோய் நீங்கும். தான்றிக்காய் பொடி 10 கிராம் எடுத்து 300 மில்லி நீரில் போட்டு 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி தேன் 10 கிராம் கலந்து சாப்பிட இரைப்பு தணியும்.

தான்றிக்காய்த் தளிரை இடித்துச் சாறு பிழிந்து 20 மில்லியளவு 3 வேளை குடித்து வர தொண்டைக் கட்டு, கோழை கட்டல், மேல் மூச்சு வாங்கல் குணமாகும்.

தான்றிப் பருப்பை அரைத்து புண்பட்ட இடங்களில் பூசக் குணமாகும். தான்றிப் பொடி, பாறையுப்பு, திப்பிலிப் பொடி சம அளவாக 30 கிராம் எடுத்துப் பொடியாக்கிச் சாப்பிட தொண்டைக் கமறல் நீங்கும்.

தான்றிக் காய், கடுக்காய், நெல்லிக்காய் சம அளவாகக் கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 300 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி ஆறிய பிறகு புண்களைக் கழுவி வர புண்கள் விரைவில் ஆறும்.

Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, bellirica, Combreteceae, Gaertner, Herbs, Measles, Mooligai, Moolikai, Naturotherapy, Thaanrikkai | Leave a Comment »

Herbs & Naturotherapy: Nerunjil – How to overcome ‘Excessive leanness’: emaciation

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

மூலிகை மூலை: எலும்புருக்கியைப் போக்கும் நெருஞ்சில்!

எதிர் அடுக்குகளில் முருங்கையிலைப் போன்று சிறுசிறு இலைகள் கொண்ட தரையோடு படர்ந்து வளரக்கூடிய சிறு கொடி நெருஞ்சில். இதன் மலர்கள் சூரியத்திசையோடு திரும்பும் தன்மை உடையது. முள் உள்ள காய்களை உடையது. செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. சிறுநீர், தாதுபலம், காமம் ஆகியவற்றைப் பெருக்கவும், தாது அழுகி, இரத்தக் கசிவை நிறுத்தும் குணம் உடையது. தமிழகம் எங்கும் சாலை ஓரங்களில் தரிசு மண்ணில் தானாகவே வளர்கின்றது.

வேறு பெயர்கள் : அசுவத்தம், உச்சிகம், உசரிதம், திரிகண்டம், கோகண்டம், அசுவசட்டிரம், காமரதி, சாம்பம், செப்பு.

வகைகள் : 1.பெரு நெருஞ்சில் 2. சிறு நெருஞ்சில் 3. செப்பு நெருஞ்சில்(யானை நெருஞ்சில்)

பெருநெருஞ்சில் : இது ஒன்றரை அடிவரை வளரக்கூடியது. இதன் காய்கள் ஏறக்குறைய மூக்கு கடலையைப் போல இருக்கும். அதன் மேல் ஏழு, எட்டு, முட்கள் நீண்டு இருக்கும். இதன் காயளவு அரை நெல்லிக்காய் அளவில் இருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருக்கும்.

சிறு நெருஞ்சில் : இது தரையோடு படர்ந்து வளரக்கூடியது. இதன் காய்கள் சுண்டைக்காய் அளவில் மூக்கு கடலையைப் போல இருக்கும். அதன் மேல் ஏழு எட்டு முட்கள் நீண்டிருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருக்கும்.

செப்பு நெருஞ்சில் : இது தரையோடு படர்வதோடு தரையில் ஒட்டிக் கொண்டிருப்பதுபோல இருக்கும். இதில் முட்கள் இருக்காது. சிவப்பு நிறப்பூக்கள் பூக்கும்.

ஆங்கிலப் பெயர் : Tribulus terretris; linn; zygophyllaceae

மருத்துவக் குணங்கள் : நெருஞ்சில் சமூலம் 2, அருகு ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக வற்றக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லியளவாக 3 வேளை 3 நாள்கள் குடித்து வர கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், நீர்ச்சுருக்கு குணமாகும்.

பெரு நெருஞ்சில் சமூலத்தை எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டால் ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் பாகு போன்று ஒரு திரவம் நீரில் கலந்து இருப்பதைப் பார்க்கலாம். அதைத் தனியாக எடுத்து சிறிது கற்கண்டு சேர்த்து குடித்து வர உடல்சூடு, தாது இழப்பு குணமாகும்.

நெருஞ்சில் சமூலச்சாறு 50 மில்லியளவு எடுத்து ஒரு டம்ளர் பால் அல்லது மோருடன் குடித்து வர சிறுநீருடன் இரத்தம் போவது நிற்கும்.

சிறு நெருஞ்சில் அல்லது செப்பு நெருஞ்சில் சமூலம் ஒன்றுடன், அருகம்புல் சமூலம் ஒன்றையும் சேர்த்து ஒன்றரை லிட்டர் நீரில் போட்டு முக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, அதில் திப்பிலி குங்குமப்பூ, ஒரு சிட்டிகை சேர்த்து மறுபடியும், கால் லிட்டர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி 3 நாள்களுக்கு 2 வேளை குடித்து வர உடல் சூடு, நீர் வடிதல், கண் எரிச்சல், சொறுக்கு மூத்திரம், நீரிழிவு, வேகமின்றி அடைப்பட்டதுபோல சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.

நெருஞ்சில் சமூலத்தை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, அதேயளவு அருகம்புல் சமூலத்தை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி இரண்டையும் கலக்க வேண்டும். இந்தப் பொடியை அரை தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்து வர வெட்டை, இரத்தப்போக்கு குணமாகும்.

நெருஞ்சில் வித்தினைப் பாலில் அவித்து நிழலில் உலர்த்திப் பொடி செய்து ஒரு சிட்டிகையளவு வெந்நீரில் சாப்பிட்டு வர தாது விருத்தியாகும். இதையே இளநீரில் சாப்பிட்டு வர சிறுநீர்க் கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு குணமாகும்.

நெருஞ்சில், வாகை, முல்லை, பாதிரி, சிற்றாமுட்டி, பேராமுட்டி, பூவிளம், சிறுவழுதணை, கண்டங்கத்திரி, குமிழ் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி ஒரு சிட்டிகைப் பொடியை 3 வேளையாக வெந்நீரில் தொடர்ந்து சாப்பிட்டு வர உடலின் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தி நோய்களிலிருந்து குணமாக்கும்.

நெருஞ்சில் காயைப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர நீரடைப்பு சதையடைப்பு, வெட்டை, எலும்புருக்கி குணமாகும்.

நெருஞ்சில் முள்ளை வெந்நீரில் ஊற வைத்து வடிகட்டி நீரை மட்டும் குடிக்க சிறுநீரைப் பெருக்கும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Consumption, Disease, emaciate, emaciation, Herbs, lean, medical, Medicine, Naturotherapy, Nerunchil, Nerunjil, starvation, Thin | 3 Comments »

Ayurvedha Corner – S Swaminathan: Murungai keerai helps in increasing breast milk

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தாய்ப்பாலுக்கு முருங்கைக்கீரை!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என்னுடைய இரண்டு மாதக் குழந்தை சளி பிடித்து மிகவும் கஷ்டப்படுகிறான். தொண்டையில் கபம் கட்டிக்கொள்வதால் பால் குடிக்க முடியாமல் கஷ்டப்படுகிறான். பாலைச் சங்கில் எடுத்துக் கொடுத்தேன். குடிக்க மறுக்கிறான். என் சாப்பாட்டின் அளவைக் குறைத்தேன். பாலின் அளவு கம்மியாகிவிட்டது. என்ன சாப்பிட்டால் பாலின் அளவு கூடும்? அவனுக்கு ராகி, கோதுமை ஊற வைத்து கூழாகக் கொடுக்கலாமா?

குழந்தையைப் பொதுவாக மூன்று வகையில் பிரிக்கலாம். முதலாவது “க்ஷீராசீ’ என்பது. அதாவது இந்த வயதில் குழந்தை தாய்ப்பாலை மட்டுமே குடித்து வளரும். குழந்தைக்கு எந்த நோயும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள அம்மா பத்திய உணவாகச் சாப்பிட வேண்டும். இந்த வயதில் குழந்தைக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் தாயாருக்கு மருந்து கொடுத்து, தாய்ப்பாலின் வழியாக குழந்தைக்கு மருந்து சேர குழந்தையின் நோய் தீருவதும் முறையாகும்.

உங்களுக்குத் தாய்ப்பால் குறைந்துவிட்டது. குழந்தைக்கு தொண்டையில் கபம் கட்டி பால் குடிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுக்குத் தாய்ப்பால் அதிகரிக்கவும் அதன் வழியாக குழந்தைக்குத் தொண்டை சளி குறையவும் உணவில் அடிக்கடி முருங்கைக்கீரையும் பச்சைப் பயறு சுண்டலும் சேர்க்கவும். இதனால் தாய்ப்பால் வேண்டிய மட்டும் குழந்தைக்குக் குறைவில்லாமல் கிடைக்கும். மேலும் ஒரு பல் பூண்டைக் கொஞ்சம் தண்ணீர் கலந்த பாலில் சேர்த்துக் காய்ச்சி பூண்டை எடுத்து விட்டு பாலை வெதுவெதுப்பாக நீங்கள் காலை இரவு உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாகக் குடிக்க வேண்டும். வாரத்தில் இருமுறை இதுபோல குடித்தால் போதும். நீங்கள் பூண்டுப்பாலைக் குடித்த மறுநாள், தாய்ப்பாலைப் பருகிய குழந்தையின் வாயில் பூண்டின் மணம் வீசும். பூண்டினால் சுத்திகரிக்கப்பட்ட தாய்ப்பால் குழந்தைக்கு எளிதில் சீரணமாகக் கூடியதாகும். தொண்டை கபக்கட்டை நீக்கவும் செய்யும். இதற்குக் காரணம் பாலில் கொழுப்பின் அம்சம் குறைந்து எளிதில் செரிக்க உதவும். குழந்தைக்கு வயிற்றில் மப்பு, உப்புசம், புளிப்பு எதுவும் தட்டாது. மலச்சிக்கல் இருக்காது. நல்ல பசியும் ஜீரணமும் ஏற்படும்.

மேலும் வசம்பின் மேல் தோலைச் சீவி, சட்டியிலிட்டுச் சுட்டு சாம்பலாக்கிப் பொடி செய்யவும். ஓர் அரிசி அளவு இந்தப் பொடியை எடுத்து, சிறிது தேனிலோ, தாய்ப்பாலிலோ தினந்தோறும் அல்லது இரண்டு அல்லது மூன்று தினத்திற்கு ஒரு முறையோ குழந்தைக்குக் கொடுக்கவும். சளி ஜலதோஷம் போன்ற நுரையீரல் நோயோ -வயிறு மப்பு, மந்தம், புளிப்பு, ஜீரணக்கோளாறு, உப்புசம், வாந்தி போன்றவையோ வராமல் தடுக்கும். மலச்சிக்கல் இல்லாமலும் இருக்கும்.

நீங்கள் குறிப்பிடும் ராகி, கோதுமைக் கூழ் போன்றவை குழந்தைக்கு ஆறு அல்லது ஏழு மாதம் ஆகும்போதுதான் கொடுப்பது நல்லது. கொஞ்சம் உணவைச் சாப்பிட்டு, தாய்ப்பாலையும் நம்பி இருக்கும் இந்நிலையில் அதை “க்ஷீரான்னாசி’ என்பர். இந்த ராகி, கோதுமையைக் காட்டிலும் அரிசியைச் சமைத்துக் கொடுப்பது நலம். சுத்தமான அரிசியை ஓர் ஆவி கொதிக்க விட்டுச் சிறிது வெந்ததும் எடுத்து வெய்யிலில் உலர்த்தி அந்த அரிசியை ரவை கணக்கில் ஒரே சீராகப் பொடித்து, ஒரு சிட்டிகை ஜீரகமோ அல்லது ஓமமோ கூட்டிப் பொடி செய்ய வேண்டும். ஒரே ஒரு மிளகையும் சேர்க்கலாம். தண்ணீர் கொதிக்கும்போது சுமார் 2 டீஸ்பூன் இந்த அரிசி நொய்யை இட்டு வேகவிட்டு கஞ்சியாக்கி, துளி உப்பு சேர்த்து ஒருவேளை குழந்தைக்கு ஊட்டி விடவும். 8 மாதம் 9 மாதம் என்று ஆகும்பொழுது இந்தக் கஞ்சியைக் கூழ்போல கெட்டியாகக் கிண்டிக் கொண்டு, அதில் ஒரு சொட்டு நெய்கூட்டி குழந்தைக்கு ஊட்ட, வயிற்றுக்குள் எளிதாக நழுவிச் செல்லும். அதன் பிறகு சிறிது வெந்நீர் புகட்ட எளிதில் கூழ் செரித்து விடும்.

குழந்தை வளர வளர தாயாரை நம்ப வேண்டிய நிலையும் மாறி உணவை மட்டுமே சாப்பிடும் போது அதை “அன்னாசீ’ என்று அழைப்பார்கள்.

ஆயுர்வேத மருந்துகளில் குழந்தைக்குச் சளி குறையும், நன்றாகப் பசி எடுக்கவும் ரஜன்யாதி சூர்ணம் ஒரு சிட்டிகை எடுத்து, சிறிது தேன் நெய் குழைத்து நாக்கில் தடவி விடவும். காலை மாலை, தாய்ப்பால் பருகும் முன்னர் (சுமார் ஒரு மணி நேரம்) கொடுக்கவும். தாய்ப்பால் வளர ஸ்தன்ய ஜனன ரஸôயனம் எனும் லேஹ்யத்தை காலை மாலை வெறும் வயிற்றில் 5-10 கிராம் வரை நக்கிச் சாப்பிடவும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Babies, breast, breastfeeding, Child, Children, Garlic, Herbs, Infants, Keerai, Kids, Medicine, milk, Mom, Mother, Murungai, Natural, Parent, Parenting, Toddlers | 1 Comment »

Ayurvedha Corner: S Swaminadhan – How to improve eyesight: Better vision with Naturotherapy

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கண்ணிலே குறையிருந்தால்…

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

என் மனைவிக்கு வயது 39. ஒன்றரை வருடத்திற்கு முன்பு வலது கண்ணில் மையப் பகுதியில் பார்வைக் குறைவு ஏற்பட்டது. கண் மருத்துவர், “”இது கண்ணில் உட்பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதற்கு எந்த மருத்துவ வசதியும் உலகத்திலேயே இதுவரை இல்லை” என்று சொல்லிவிட்டார். ஆயுர்வேதத்தில் இதற்கு ஏதேனும் மருந்து உள்ளதா?

நம் உடலில் ஐந்து வகையான பித்த தோஷங்கள் உள்ளன. அவற்றில் ஆலோசகம் எனும் பித்தம் கண்ணிலிருந்து செயல்படுகிறது. பித்தத்தின் குணங்களாகிய சிறிது நெய்ப்பு, ஊடுருவும்தன்மை, சூடு, லேசானது, கடும் நாற்றம், பரவுதல், நீர்த்தன்மை ஆகியவற்றைச் சீரான உணவு முறைகளால் நாம் பெறுவதாகயிருந்தால் இந்த ஆலோசகப் பித்தத்தின் முக்கிய செயல்பாடான பொருட்களைச் சரியான நிலையில் காணுதல் என்ற வேலை திறம்பட நடைபெறும். பஞ்ச மஹா பூதங்களில், நெருப்பை தன் அகத்தே அதிகம் கொண்ட புளிப்பு, உப்பு, காரச் சுவையையும், பட்டை, சோம்பு, ஜீரகம், பெருங்காயம், கடுகு, மிளகு, நல்லெண்ணெய், பூண்டு போன்ற உணவுப் பண்டங்களை உணவில் அதிகம் சேர்ப்பதாலும் சீற்றமடையும் பித்தத்தின் குணங்களும், செயல்களும் ஆலோசகப் பித்தத்தின் வேலைத் திறனில் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. இந்தக் குறைபாடுதான் பார்வைக் குறைவுக்கும் காரணமாகிறது.

இந்த நிலை வராதிருக்க ஆயுர்வேதம் “நித்யம் ஷட்ரúஸô அப்யாஸ:’ என்று கூறுகிறது. அதாவது அறுசுவைகளையும் என்றும் புசித்துப் பழகு என்று அதற்கு அர்த்தம். கார உணவால் ஏற்பட்ட கோளாறுக்கு இனிப்புச் சுவையும், புளிப்புச் சுவையால் ஏற்படும் உபாதைக்கு கசப்பும், உப்புச் சுவையின் சேர்க்கையால் உண்டாகும் நோய்களுக்கு துவர்ப்புச் சுவையும் நேர் எதிரான குணம் மற்றும் செயல்களால் நம்மால் இழந்த ஆரோக்கியத்தைப் பெற இயலும் என்பதால், உங்கள் மனைவிக்கு உணவில் காரம்-புளிப்பு-உப்பு அறவே குறைத்து இனிப்பு-கசப்பு-துவர்ப்புச் சுவையை அதிகரித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. உணவில் இந்த மாற்றத்தின் வாயிலாக ஆலோசகப் பித்தத்தின் சீற்றத்தைத் தணித்து அதன் சமச்சீரான செயல்பாட்டினை மறுபடியும் பெற இயலும்.

உணவில் செய்யப்படும் இந்த மாற்றம் மட்டுமே என் மனைவியின் உபாதையைப் போக்கிவிடுமா? என்று நீங்கள் கேட்கக் கூடும். போக்காததுதான். ஆனால் இந்த மாற்றத்துடன், மருந்தும் சாப்பிட வேண்டும். சூறாவளியால் ஏற்படும் சேதம் சிறுகச் சிறுக செப்பனிடப்படுவதுபோல், உடலில் தோஷத்தினால் ஏற்பட்ட சேதத்தை சிறிது சிறிதாகத்தான் சரி செய்ய இயலும். அவ்வகையில் குடலில் தேவையற்ற மல ரூபமான பித்தத்தை நீர்த்து வெளியேற்றும் அவிபத்தி எனும் சூரணத்தை 10 கிராம் முதல் 15 கிராம் வரை எடுத்துச் சிறிது தேனுடன் குழைத்து மதிய உணவிற்கு 1 மணி நேரம் முன்பாக முதல் மூன்று நாட்கள் சாப்பிட, நீர்ப்பேதியாகும். குடல் சுத்தமாகும். அதன் பிறகு இரவில் திரிபலா சூரணம் 5 கிராம், ஜீவந்த்யாதிகிருதம் எனும் நெய்மருந்தை 7.5 மி.லி. உருக்கிக் குழைத்து 1/2 ஸ்பூன் தேனும் கலந்து படுக்கும் முன் நக்கிச் சாப்பிடவும்.

தலைக்கு திரிபலாதி தைலம் ஊற வைத்துக் குளிக்கவும். குளித்த பிறகு அணுதைலம் 2 சொட்டு மூக்கில் விட்டு உறிஞ்சித் துப்பவும். கண்களில் நயனாமிருதம் எனும் சொட்டு மருந்தை விட்டுக் கொள்ளவும்.

கண்களைச் சுற்றி உளுந்து மாவினால் வரம்பு கட்டி, கண்ணில் ஊற்றி சுமார் 1 மணி நேரம் வரை நிறுத்தப்படும் மஹாத்பலகிருதம் எனும் நெய் மருந்து சிகிச்சை, கண்நோய்களை அகற்றும் சிறப்புச் சிகிச்சையாகும். அதை உங்கள் மனைவி செய்து கொள்ளலாம்.

கண்நரம்புகளுக்கு வலுவூட்டும் சிறுகீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை போன்றவற்றை பகல் உணவில் அடிக்கடி சாப்பிடுதல் நல்லது. இருவித கையாந்தரைக் கீரைகளும் உணவிலும், தலைக்கு எண்ணெய்யில் காய்ச்சித் தேய்த்துக் குளித்தலும் நலம் தரும். ஊசிப்பாலை எனும் பாலைக் கீரை நல்ல இனிப்புச் சுவை உள்ளது. கண்ணுக்கு மிக உயர்ந்த ரஸôயன உணவு. சாப்பாட்டில் சாதா உப்புக்குப் பதிலாக நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படும் இந்துப்பு சாப்பிட நல்லது. இரவில் படுக்கும் முன் உள்ளங்கால் நடுப்பகுதியில் பசு நெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணை) தேய்த்துவிடுவதும் நல்லதே.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, bile, bladder, Diet, Disorders, Eyes, Eyesight, Food, Gall, Herbs, Issues, medical, Natural, Naturotherapy, Problems, Retina, Swaminadhan, Swaminathan, Symptoms, Taste, Vision | 2 Comments »

Vijayarajan: Mooligai Corner – Herbs & Naturotherapy: Maavilingam

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

மூலிகை மூலை: வாதக் காய்ச்சலைப் போக்கும் மாவிலிங்கம்!

விஜயராஜன்

மூன்று கூட்டு இலைகளையும் விரல்களைப் போன்ற வடிவம் உள்ளதும், மலர்ந்ததும் மஞ்சள் நிறமாக மாறும் வெள்ளைப் பூக்களையும், சிவப்பு நிற உருண்டையான சதைக் கனிகளையும் உடைய வெண்மை நிற மர இனமாகும் மாவிலிங்கம். இலை, வேர், பட்டை ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. இலை பசியைத் தூண்டும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும். பட்டை மலச்சிக்கலைப் போக்கும். வேர் நோயை நீக்கி உடலுக்கு வலுவைக் கொடுக்கும். தமிழகம் எங்கும் தானாகவே வளர்கின்றது.

வேறு பெயர்கள்: குமார கன சுவேத புசுப்பி, சாருகாவிகம், எழும்பலதிச்சுடரும், வன்னி, தீபனி, மாவிலங்கு.

ஆங்கிலத்தில் : Crataeva religiosa; Forst; Eapparida

இனி மருத்துவ குணங்களைப் பார்ப்போம்:

மாவிலிங்க இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு, அத்துடன் சுக்கு 1 துண்டு, சீரகம் ஒரு சிட்டிகையளவு பொடியாக்கிச் சேர்த்துப் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 150 மில்லியளவு வீதம் 3 வேளை குடித்து வர மந்தம், செரியாமை, வாதக் காய்ச்சல் குணமாகும்.

மாவிலிங்க இலையை அரைத்துப் பற்றுப் போட அனைத்து வீக்கங்களும் கரையும்.

மாவிலிங்க இலையை 2 கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 150 மில்லியளவு வீதம் 3 வேளை குடித்து வர மந்தம், செரியாமை, வாதக் காய்ச்சல் குணமாகும்.

மாவிலிங்க இலையை 2 கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாகக் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் 100 மில்லியளவு தேங்காய்ப் பால் கலந்து 4 வேளை குடித்துவர முடக்கு வாதம் குணமாகும்.

மாவிலிங்கப்பட்டை ஒரு பங்கும் அதில் பாதியளவிற்குப் பூண்டும், மிளகு கால் பங்கும் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர முடக்கு வாதம் குணமாகும்.

மாவிலிங்கப் பட்டை 40 கிராம், சுக்கு, திப்பிலி, சதகுப்பை வகைக்கு 20 கிராம், சித்திர மூலவேர், மூங்கிலிலை வகைக்கு 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை 150 மில்லியளவு குடித்து அத்துடன் கால் பாகம் அன்னாசிப் பழத்தை தோல் சீவி சர்க்கரை கலந்து சாப்பிட்டு சூடான அரிசிக் கஞ்சியும் இஞ்சித் துவையலும் சேர்த்துச் சாப்பிட இளம் சூடு கரையும்.

மாவிலிங்கப் பட்டையை 40 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லியாக 2 வேளை குடித்து வரக் கால் வீக்கம், நீர்க்கட்டு, கல்லடைப்பு, வெட்டை, சூலை, மாதவிலக்குப் பிரச்சினைகள், வயிற்றுப் புண், கண்டமாலை, புண்கள், விஷக்கடி குணமாகும்.

மாவிலிங்கப்பட்டை, உள்ளி, மிளகு சம அளவாக எடுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு 3 நாள் காலையில் கொடுக்க மாதவிலக்கு உண்டாகும்.

மாவிலிங்கம் சமூலத்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர காய்ச்சல், வெட்டை, சூலை, கல்லடைப்பு, நீரடைப்பு நீங்கும்.

மாவிலிங்க இலையைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க காய்ச்சல், செரியாமை குணமாகும்.

மாவிலிங்க இலையை அரைத்து உள்ளங்காலில் பற்றிட வலி, வீக்கம், எரிச்சல் நீங்கும்.

மாவிலிங்கப் பட்டையைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை தொடர்ந்து குடித்துவர கல்லடைப்பு குணமாகும்.

மாவிலிங்கப் பட்டையை வெட்டி உட்புறமாக வைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.

மாவிலிங்கப் பட்டையை வட்டமாக வெட்டி அரையாப்புக் கட்டி மீது வைத்து அதன் மீது ஓர் ஈயத் தகட்டை வைத்துக் கட்ட கட்டி அமுங்கிவிடும்.

மாவிலிங்கப் பட்டையை நன்றாக நசுக்கி, எருக்கம் இலையை தொன்னை தைத்து அதில் முப்பிணி கண்டவர்களுக்குத் தலையில் வைத்துக் கட்ட குணமாகும்.

Posted in Advice, Alternate, appetite, appetizers, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Crataeva religiosa, Eapparida, Fever, Forst, Herbs, Hunger, Hungry, Maavilingam, Maavilinkam, Mavilingam, Mavilinkam, medical, Mooligai, Naturotherapy, Pain, paralysis, rheumatism, Vijaiyarajan, Vijayarajan | 1 Comment »

Ayurvedha Corner: How to overcome hiccups & Sore Throat: Asthma, Infections

Posted by Snapjudge மேல் திசெம்பர் 28, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆஸ்துமாவுக்கு ஆவிச் சிகிச்சை!

எனக்கு வயது 75. தொடர்ச்சியாக விக்கல் வந்து கொண்டேயிருக்கிறது. தொண்டையில் எரிச்சல் உள்ளது. இதற்கு ஆயுர்வேத மருந்து கூறவும்.

விக்கலும் மூச்சிரைப்பும் (ஆஸ்துமா) ஒரே வகையைச் சார்ந்தவை என்று சரக ஸம்ஹிம்தை எனும் ஆயுர்வேத நூலில் காணப்படுகிறது. இவ்விரு உபாதைகளும் வருவதற்கான 21 காரணங்களை சரகர் கீழ்காணும் வகையில் குறிப்பிடுகிறார்.

1. தூசி, புகை, குளிர்காற்று ஆகியவற்றை அடிக்கடி சுவாசிக்க நேரிடுதல்.

2. வீட்டில் தரை மற்றும் சுற்றுப்புறம் குளிர்ச்சியாக இருத்தல், குளிர்ந்த நீரை குடிக்கவும் குளிக்கவும் பயன்படுத்துதல்.

3. உடற்பயிற்சி, உடலுறவு, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தன் உடல் வலிமைக்கு மீறி செய்தல்.

4. வறட்சி தரும் உணவுப் பண்டங்களை அதிகம் உட் கொள்ளுதல்.

5. முன் உண்ட உணவு செரிக்கும் முன்னரே அடுத்த உணவை சிறிய அளவிலோ அல்லது அதிகமாகவோ சாப்பிடுதல்.

6. வயிற்றில் மப்பு நிலை- அஜீரண நிலையை உதாசீனப்படுத்துதல்.

7. மலச்சிக்கலும் குடலில் காற்றும் அதிகரித்த நிலை.

8. உடல் வறட்சி;

9. அதிக பட்டினி.

10. உடல் பலஹீனம், மர்ம உறுப்புகளில் அடிபடுதல்.

11. ஒவ்வாமை உணவுகளைச் சேர்த்துச் சாப்பிடுதல். உதாரணமாக இட்லியுடன் பால், தயிர்வடை சாப்பிட்ட பிறகு காப்பி குடித்தல்.

12. பேதி மருந்து சாப்பிட்டு குடலை சுத்தம் செய்து கொள்கிறேன் என்று எண்ணி அதிக அளவில் மலக்கழிவை ஏற்படுத்தி உடலை பலஹீனமாக்கிக் கொள்ளுதல்.

13. முன்பு ஏற்பட்ட பேதி, காய்ச்சல், வாந்தி, இருமல், காசநோய், ரத்தக் கசிவு நோய், காலரா, ரத்த சோகை, விஷ உபாதை போன்றவற்றின் பின் விளைவால்.

14. உணவில் அடிக்கடி அவரைக்காய், உளுந்து, நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளுதல். மாடு சாப்பிடும் புண்ணாக்கைச் சாப்பிடுதல்.

15. மாவுப் பண்டம், குடலில் வாயுவை அதிகப்படுத்தும் கடலை, மொச்சை, கிழங்குகள், குடல் எரிச்சலைத் தூண்டும் கரம் மசாலா, ஊறுகாய், எளிதில் செரிக்காத உணவு வகைகளை அதிகம் சாப்பிடுதல்.

16. நீர் மற்றும் குளிர்ச்சியான நிலத்தைச் சார்ந்த மாமிச உணவுகளை அதிகம் சாப்பிடுதல்.

17. தயிர், பாலைக் கொதிக்க வைக்காமல் சாப்பிடுவது.

18. வெல்லம், கரும்புச்சாறு போன்ற குடலில் பிசுப்பிசுப்பைத் தோற்றுவிக்கும் வகையறாக்களை விரும்பிச் சாப்பிடுதல்.

19. கபத்தின் சீற்றத்தை அதிகப்படுத்தும் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை ஆகியவற்றை எந்நேரமும் சாப்பிடுதல்.

20. தொண்டை மற்றும் நெஞ்சுக்கூட்டில் அடிபடுதல்.

21. உடல் உட்புற குழாய்களில் ஏற்படும் பல வகையான அடைப்புகள்.

மேற்குறிப்பிட்ட காரணங்களின் விளைவாக நெஞ்சுப் பகுதியிலுள்ள வாயுவின் சீற்றம் மூச்சுக் குழாய்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி கபத்தைச் சீற்றமடையச் செய்கிறது. இந்த வாயு- கபத்தின் சீற்றமே விக்கல் மற்றும் ஆஸ்துமா நோய்களுக்கு மிக நெருங்கிய காரணமாக இருக்கின்றன.

பிராண- உதக- அன்னவஹ ஸ்ரோதஸ் எனப்படும் மூச்சு, நீர், உணவை ஏந்திச் செல்லும் குழாய்களில் ஏற்படும் பாதிப்பை விக்கலாக உருவாக்கி பெரும் உபாதையைத் தோற்றுவிக்கிறது.

தேகராத தைலம் எனும் மூலிகைத் தைலத்தை முன் கழுத்து, நெஞ்சுக்கூடு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள எலும்புகளுக்கு நடுவே வெதுவெதுப்பாகத் தடவி, பிரஷர் குக்கரின் உள்ளே ஆமணக்கு, நொச்சி, புங்கை, யூகாலிப்டஸ்,கல்யாண முருங்கை போன்ற இலைகளைப் போட்டு தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். குக்கரின் மேலே உள்ள குழாய் வழியாக வரும் நீராவியை ஒரு ரப்பர் குழாயின் வழியாக, நெஞ்சில் எண்ணெய் தேய்த்துள்ள பகுதிகளில் இதமாகப் படுமாறு செய்ய, நன்கு வியர்வையை உண்டாக்கும். இதன் மூலம் நெஞ்சினுள்ளே கபம் உருகி, வாயுவின் தடை நீங்க உதவிடும். வாயுவின் சீரான செயல்பாடு தங்கு தடையின்றி நடைபெற இந்தச் சிகிச்சை தங்களுக்கு உதவக்கூடும்.

அதன் பிறகு பார்லி அரிசியில் சிறிது நெய் பிசறி தணலில் போட, அதிலிருந்து வரும் புகையை வாய் வழியாக உள்ளே இழுத்து வெளிவிட, மூச்சுக் குழாயின் உட்புறச் சுவர்களில் படிந்துள்ள கபம் வரண்டு விடுவதால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிராணவாயுவின் தடை நீங்கி விக்கல் குணமடைய வாய்ப்புள்ளது.

காலை உணவாக முருங்கை இலையை தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கவிட்டு, வடிகட்டி, கஞ்சிபதத்தில் சிட்டிகை இந்துப்பு கலந்து சாப்பிட நல்லது.

பழைய அரிசி, கோதுமை, பார்லி போன்றவை சாப்பிட நல்லது.

காலையில் வெறும் வயிற்றில் தசமூலசட்யாதி எனும் கஷாயம் சாப்பிட உகந்தது. தங்களுக்கு தொண்டை எரிச்சல் மாற நெல்லிக்காய் சூரணம் 5 கிராம் எடுத்து ஒண்ணரை ஸ்பூன் (7.5 மிலி) தாடி மாதி கிருதம் எனும் நெய் மருந்தைக் குழைத்து அதில் 1/2 ஸ்பூன் தேனும் கலந்து காலை இரவு உணவுக்குப் பிறகு நக்கிச் சாப்பிடவும். ஒரு வாரம் முதல் 21 நாட்கள் வரை சாப்பிடலாம்.

இரவில் படுக்கும் முன் சிட்டிகை வெல்லம் கலந்த சுக்குப் பொடி சாப்பிடவும்.

Posted in Alternate, Asthma, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, hiccups, Infections, medical, Throat | Leave a Comment »

Red pepper, chillies, bell-pepper, capsicum grossum – Mooligai Corner: Herbs & Naturotherapy

Posted by Snapjudge மேல் திசெம்பர் 28, 2007

மூலிகை மூலை: குடிவெறி நீக்கும் மிளகாய்!

சிறிய இலைகளையுடைய சிறுசெடி வகையைச் சேர்ந்தது மிளகாய்ச் செடி. காயும் பழமும் மிகவும் காரம் உள்ளவை. பச்சையான காய்கள், காய்கறி கடைகளிலும், உலர்ந்த பழம் மளிகைக் கடைகளிலும் கிடைக்கும். உணவில் காரத்துக்காகப் பயன்படுத்துவர். மூலநோய் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. வற்றலே மருத்துவக் குணம் உடையது. பசியைத் தூண்டவும் குடல்வாயுவை அகற்றவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகிறது.

வேறு பெயர்கள்: மொளகாய், முளகாய்.

லத்தின் பெயர்: Capsium Firutesceans, Linn; Solonacea

மருத்துவக் குணங்கள்: மிளகாய் வற்றலை பழகிய மண்சட்டியில் 2 சொட்டு நெய்விட்டுக் கருக்கிய புளியங் கொட்டை அளவு கட்டிக் கற்பூரத்தைப் போட்டு அரை லிட்டர் நீரில் ஒரு கை நெற் பொரியும் சேர்த்துக் காய்ச்சி, இறக்கி வடிகட்டி 100 மில்லியளவு குடித்துவர, வாந்தி- பேதி நிற்கும்.

மிளகாய் வற்றல் 200 கிராம், மிளகு 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை தலைமுழுகிவர எந்த வகையான தலைவலியும் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை குடிக்க மார்பு நோய், வயிற்று நோய், செரியாமை, கழிச்சல், காய்ச்சலினால் காணும் வாந்தி நீங்கும்.

மிளகாயை அரைத்துத் துணியில் தடவி தோலின் மேல் போட்டு வைக்க, கொப்பளித்து வீக்கம் குறையும். தொண்டைக்கு வெளியில் பூச, தொண்டைக்குள் இருக்கும் கட்டிகள் உடையும்.

மிளகாயை பூண்டு மிளகோடு சம அளவாக எடுத்து சேர்த்து அரைத்து எண்ணெயுடன் குழைத்து மேல் பூச்சாக முதுகு, பிடரி முதலிய இடங்களில் உண்டாகும் நாள்பட்ட வலி, வீக்கங்களுக்குப் பூச குணமாகும்.

மிளகாய்ப் பொடியுடன் சர்க்கரை, பிசின் தூள் சேர்த்து உருண்டை செய்து வாயில் போட்டு மென்று சாப்பிட, தொண்டைக் கம்மல் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது இஞ்சிச் சாறு கலந்து குடிக்க வயிற்று உப்புசம் வயிற்றுவலி நீங்கும்.

மிளகாய், பெருங்காயம், கற்பூரம் சம அளவாக எடுத்து எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து சுண்டைக் காயளவு மாத்திரை செய்து 3 வேளை கொடுக்க ஊழி நோய் குணமாகும்.

மிளகாய் செடி சமூலத்தை 200 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது இலவங்கப் பட்டைப் பொடியும், சர்க்கரை கலந்து குடிக்கக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, bell-pepper, capsicum, Capsium Firutesceans, chillies, chilly, Herbs, Linn, medical, Mooligai, Moolikai, Naturotherapy, Pepper, Red pepper, Solonacea | Leave a Comment »

Ayurvedha Corner: Alternate Therapy – Hip hip hooray

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இடுப்புத் தண்டுவடத்தை வலுப்படுத்த…

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

எனது மகளுக்கு 41 வயது ஆகிறது. 5 ஆண்டுகளுக்கு முன் வயலில் நெல் நாற்று கத்தைகளைக் கலைத்துப் போடும்போது பின்புறம் இடுப்பில் தண்டுவடத்திற்கு அருகில் ஒரு நரம்புப் பகுதியில் “கட்’ ஆகிவிட்டது. அலோபதி வைத்தியம் பார்த்து சரியாகவில்லை. ஆழியார் வேதாத்திரி மகரிஷி வைத்தியப் பிரிவில் சில மூலிகைத் தைலம் கொடுத்து தேய்க்கச் சொன்னார்கள். தைலப்பசை இடுப்பில் இருக்கும்போது வலி இல்லை. தைலம் தடவாமல் விட்டுவிட்டால் வலி வந்து விடுகிறது. இதற்கு ஆயுர்வேதத்தில் என்ன மருந்து இருக்கிறது?

முதுகுத் தண்டுவட எலும்புப் பகுதியில் ஓர் எலும்பு அடுத்த எலும்புடன் உராயாமலிருக்கவும், வேகமான நடை, வண்டிப் பயணம், குதித்தல் போன்ற செய்கைகளில் ஏற்படும் அதிர்வலைகளைச் சமாளித்து ஒரு குஷன் போல செயல்படும் வில்லைகள் இருக்கின்றன. உங்கள் மகள் அதிக நேரம் குனிந்து கொண்டு வேலை செய்யும்போது, இந்த வில்லைகளில் அழுத்தம் அதிகரித்திருக்கக் கூடும். அது மாதிரியான நிலையில் பதட்டத்துடன் திடீரென்று திரும்புவது, இடுப்பில் ஏற்படும் வலியால் தடாலென்று தரையில் அமர்வது, குளிர்ந்த தண்ணீரை அதிக அளவில் குடிப்பது; “சில்’ என்று இருக்கும் தண்ணீரில் நிற்பது போன்ற செய்கைகளினால் நீங்கள் கூறும் நரம்பு பிய்த்துக் கொண்ட நிலை ஏற்படலாம். “பதறாத காரியம் சிதறாது’ என்பார்கள். வீட்டில் காலிங்பெல் அடித்தவுடன், விருட்டென்று தலையைத் திரும்பிப் பார்ப்பதன் விளைவாக கழுத்து எலும்பின் வில்லை இடம் பிசகி, கடும் வலியை ஏற்படுத்துவதைப் போல தங்கள் மகளுக்கும் வில்லைப் பகுதி இடுப்பில் பிசகி இருப்பதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளன.

மூலிகைத் தைலத்தின் தேய்ப்பால் வலி குறைவதாகக் கூறியுள்ளீர்கள். தேய்க்கவில்லையென்றால் வலி கூடுகிறது. எலும்புகளின் உராய்வைத் தைலப்பசை தடுப்பதை இது காட்டுகிறது. வில்லை செய்ய வேண்டிய வேலையைத் தைலப்பசை செய்கிறது. வில்லை நிரந்தரமாகச் செய்ய வேண்டிய வேலையைத் தைலப்பசை தற்காலிகமாகச் செய்கிறது. வில்லை தன் இருப்பிடத்திற்குத் திரும்பி, தான் இழந்த ஊட்டத்தைப் பெற்று மறுபடியும் எலும்புகளைத் தாங்கி நிறுத்தும் சக்தியைப் பெற பசும்பாலில் வேக வைத்த பூண்டு உதவும். 50 கிராம் தோல் உரித்த சுத்தமான பூண்டு எடுத்து லேசாக நசுக்கி 400 மிலி பசும்பாலுடன் சேர்க்கவும். ஒரு லிட்டர் 600 மில்லி லிட்டர் தண்ணீர் கலந்து அடுப்பில் ஏற்றி, 400 மிலி அதாவது பால் மீதம் ஆகும்வரை கொதிக்கவிட்டு வடிகட்டவும். இந்தப் பாலை, வெதுவெதுப்பாக காலை மாலை வெறும் வயிற்றில் 200 மில்லி லிட்டர் சாப்பிடவும். இதில் தான்வந்திரம் 101 எனும், நெய் மருந்தை 10 சொட்டு கலந்து சாப்பிட மிகவும் நல்லது.

வில்லைகளுக்கு ஏற்படும் ஊட்டத் தடையை மாற்றி போஷாக்கை ஏற்படுத்தும் இம்மருந்தைத் தொடர்ந்து 21 நாள்கள் முதல் 48 நாள்கள் வரை சாப்பிடலாம்.

பாதிக்கப்பட்டுள்ள இடுப்பு தண்டுவடப் பகுதியில் மூலிகைத் தைலத்தைத் தேய்ப்பதைவிட ஊற வைப்பதே நல்லது. ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய முறிவெண்ணெய்யுடன் சிறிது தான்வந்திரம் தைலத்தைக் கலந்து இரும்புக் கரண்டியில் சூடாக்கி, சிட்டிகை உப்பு, எண்ணெய்யில் கரைத்த பிறகு பஞ்சில் முக்கி வலி உள்ள இடத்தில் போடவும், சுமார் ஒரு மணிநேரம் ஊறிய பிறகு வேறு ஒரு துணியால் துடைக்கவும். காலை இரவு இருவேளை உணவிற்கு முன்பாக இதுபோலச் செய்யவும்.

ஆஸனவாய் வழியாகச் செலுத்தப்படும் மூலிகைத் தைலமும், கஷாயமும் குடல்காற்றை அடக்கி இடுப்பு எலும்பு மற்றும் வில்லைகளுக்கு வலிவூட்டும் சிகிச்சை முறைகளாகும். இப்படி வாய்வழியாகவும், ஆஸனவாய் வழியாகவும், தோல் வழியாகவும் முதுகு தண்டுவடத்தை பலமாக்கி, வில்லைகளை நேராக்கி, வலியிலிருந்து விடுபடலாம்.

ஆயுர்வேத மருந்துகளில் சஹசராதி கஷாயம், மஹாராஸ்னாதி கஷாயம், க்ஷீரபலா 101 போன்ற மருந்துகள் சாப்பிட நல்லதாகும்.

மூலிகை இலைகளால் ஒத்தடம் கொடுத்தல், பாலில் வேகவைத்த நவர அரிசியினால் தேய்த்து விடுதல், உணவில் பருப்புப் பண்டங்களைக் குறைத்தல், பளுவான பொருட்களைத் தூக்காதிருத்தல், குனிந்த நிலையில் வேலை செய்யாதிருத்தல் போன்றவற்றின் மூலமாகவும் இடுப்புத் தண்டுவடத்தை வலுபடுத்தலாம்.

Posted in Aches, Alternate, Aspirin, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Bones, Herbs, Hip, Muscles, Natural, Pain, Sprain, Strain, Therapy, Tylenol | Leave a Comment »

Milakaranai – Mooligai Corner: Herbs & Naturotherapy

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

மூலிகை மூலை: வீக்கம் போக்கும் மிளகரணை!

சின்னதாக நீளமான வட்ட வடிவம் உள்ள காம்பற்ற முக்கூட்டு இலைகளை மாற்று அடுக்குகளில் கொண்ட வளைந்த வடிவமுள்ள முட்களை அதிகமாகக் கொண்ட ஏறு கொடி இனம் மிளகரணை. இதன் இலைகள் மிகவும் கசப்பாக இருக்கும். இலை, காய் வேர்ப்பட்டை மருத்துவக் குணம் உடையவை. பசியைத் தூண்டவும், முறைநோயை அகற்றவும், கோழையை அகற்றவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் சிறு காடுகளில் மலைப்பகுதிகளில் தானாகவே வளர்கின்றன.

ஆங்கிலப் பெயர்: Toddalia asiatica; camk; Rutaceae.

மருத்துவக் குணங்கள் :

மிளகரணைக்காய், வேர்ப்பட்டை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து இடித்து அரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி தேய்த்து வர பிடிப்பு, வீக்கம், வலி குணமாகும்.

மிளகரணை வேர்ப்பட்டை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி இரண்டு வேளை 250 மில்லியாகக் குடித்து வர உடல் பலம், பசி உண்டாக்கும். கபம், குளிர் காய்ச்சல் குணமாகும்.

மிளகரணையைக் கையளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து, இரண்டு வேளை குடித்துவர தொண்டைக் கரகரப்பு இருமல் குணமாகும்.

மிளகரணையைப் பொடியாக்கி நூறு கிராம் எடுத்து அத்துடன் சுக்கு, திப்பிலி, கடுக்காய்ப் பொடி வகைக்கு 15 கிராம் சேர்த்து ஒரு தேக்கரண்டியளவு 3 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், பித்தம் குணமாகும்.

மிளகரணை இலையைப் பச்சையாக மென்று தின்ன வயிற்று நோய் குணமாகும். மிளகரணை இலையைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க காய்ச்சல் குணமாகும்.

மிளகரணை வேர்ப்பட்டையை 100 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க முறைக் காய்ச்சல் குணமாகும். (வியர்வை உண்டாகும்) மிளகரணை வேர்ப்பட்டை 50 இடித்து சாராயத்தில் 7 நாள் ஊறவைத்து வடிகட்டி 10 கிராம் அளவு 2 வேளை சாப்பிட்டு வர காய்ச்சல், கழிச்சல் குணமாகும்.

மிளகரணை வேர்ப்பட்டையையும், கமுகு ரோகிணியையும் சமஅளவாக நூறு கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 2 வேளையாகத் தொடர்ந்து குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா) குணமாகும்.

மிளகரணை வேரை கைப்பிடியளவு எடுத்து 200 மில்லியாக விளக்கெண்ணெயுடன் கலந்து பதமாகக் காய்ச்சி வடிகட்டி வீக்கங்களுக்கு மேல் பூச்சாகத் தடவி வர விரைவில் குணமாகும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Herbs, medical, Medicine, Milagaranai, Milakaranai, Mooligai, Moolikai, Naturotherapy, Rutaceae, Toddalia asiatica | 2 Comments »

Recipe for ‘Uraimarundhu’: Ayurvedha Corner – Traditions & Herbs

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அறிவாற்றலுக்கு – உரைமருந்து!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என் மகனுக்கு ஏழு வயதாகிறது. படிப்பதிலும், வாசிப்பதிலும், எழுதுவதிலும் போதிய வேகம் இல்லை. டி.வி. கார்ட்டூன் பார்க்க அதிக ஆர்வம் காட்டுகிறான். பள்ளிக்குச் செல்வதற்கு, சிணுக்கம், பயம் கொள்கிறான். மற்றபடி பொதுவாக துறுதுறுப்பும் அறிவும் உள்ளவனாகவும் இருக்கிறான். அவனது மெலிந்த உடல் தேறவும், எழுத்து மற்றும் படிப்பில் திறம் பெறவும் வழி கூறவும்.

தனக்குப் பிறந்த குழந்தை நல்ல அறிவாற்றலோடு நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று ஒரு தாய் நினைப்பது இயற்கையே. இவை அனைத்தையும் பெற அந்தக் காலங்களில் உரை மருந்து ஒன்றைத் தயாரித்து சிசுக்களுக்கும் கொடுப்பார்கள். இந்த உரை மருந்து இன்று மறந்துபோய்விட்டது. அதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குப் பிறந்த 10-15 நாட்களிலிருந்து 5-7 வயது வரை தொடர்ந்து கொடுத்து வந்திருந்தால் நீங்கள் கூறும் உபாதைகள் அனைத்தையும் தவிர்த்திருக்கலாம். காலதாமதமானாலும் பரவாயில்லை, இப்போதும் அந்த உரை மருந்து தங்கள் மகனுக்கு உதவக்கூடும்.

கடுக்காய், சித்தரத்தை, சுக்கு, ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு என்ற ஆறு கடைச்சரக்குகள். நெல்லைப் புழுக்குவதற்கு வேக வைக்கும்போது நெல்லுடன் இவற்றை அப்படியே வெள்ளைத்துணியில் முடித்து வைத்துவிடவும். அரை வேக்காடு ஏற்பட்டதும் (காய்களை அழுத்தினால் அழுந்தும் பதம் வந்தவுடன்) எடுத்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். உரை மருந்து தயார்.

கை அகலத்திலுள்ள உரைகல் ஒன்று தேவை. அதில் வெந்நீர், வெற்றிலைச் சாறு, துளசிச் சாறு, ஓமகஷாயம், இஞ்சிச் சாறு இவற்றில் ஒன்றைவிட்டு ஒவ்வொன்றையும் வயதிற்கேற்றபடி 2-15 தடவை உரைத்து வந்த விழுதைத் தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுக்கவும். வாயு, சளி -வெந்நீர்; சளி, மப்பு -வெற்றிலைச்சாறு, துளசிச் சாறு, தேன்; வயிறு மந்தம், வயிற்றுப்போக்கு-ஓமகஷாயம், தேன். மப்பு, ஜ்வரம், வாந்தி -இஞ்சிச்சாறு, தேன் என்று மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

கடுக்காய் :

நல்ல ஜீரண சக்தி, பசி தரும். மலத்தை இளக்கும். புளிப்பு(வயிற்றில்) அதிகமாவதைத் தடுக்கும். அஜீரண பேதியைத் தடுக்கும். குடல், இரைப்பை, கல்லீரல் சரியே இயங்கச் செய்யும்.

சுக்கு :

வயிற்றில் வாயு சேர விடாது. வயிறு உப்புசம், மலஜலம் சரியாக வெளியேறாதிருத்தல், மப்பால் வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி இவற்றைப் போக்கும். ஆனால் வயிற்றில் அழற்சி, கடுப்புடன் சீதத்துடன் மலம் வெளியாதல் ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் சுக்கை உரைத்துக் கொடுக்கக்கூடாது.

சித்தரத்தை :

தொண்டை மார்பு இவற்றில் கபக்கட்டு, உடலில் கடுப்பு வலி இவற்றில் நல்லது. எண்ணெய் தேய்த்தால் ஜ்வரம் சளி பிடிக்கும் என்ற நிலையில் இதனைத் தொடர்ந்து கொடுக்கலாம். தொண்டை-வாய்ப்புண், வறட்டிருமல், வயிற்று வேக்காளம் உள்ள நிலையில் சித்திரத்தையைக் கொடுக்கக்கூடாது. கபக்கட்டுள்ள நிலையில் இதனையும், சுக்கையும் அதிகம் உபயோகிக்கலாம்.

ஜாதிக்காய் :

இரைப்பையை நன்கு தூண்டி, ருசி சுவை கூட்டி பசி ஜீரண சக்தி தரும். சிடுசிடுப்பு, பரபரப்பு, காரணம் புரியாத அழுகை முதலியதைக் குறைத்து அமைதியாகத் தூக்கம் வரச் செய்யும். இளகிச் சூட்டுடன் அடிக்கடி மலம் போவதை இது தடுக்கும்.

மாசிக்காய் :

வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத ரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.

வசம்பு :

இதுவும் கடுக்காயும், பிள்ளை வளர்ப்பான் என்ற பெயர் பெற்றவை. பசியின்மை, சுறுசுறுப்பின்மை, ருசியின்மை இவற்றைப் போக்கும். பரபரப்பு, சிடுசிடுப்பு, அமைதியின்மை இதனைச் சீராக்கும். பால் ஜீரணமாகாமல் வெளுத்து மலம் போவது, கீரிப்பூச்சி, உப்புசம், வயிற்றுவலி, மார்பில் கபச்சேர்வை இவற்றைப் போக்கும். உடல் சீராக வளர உதவும்.

கார மருந்து என இதற்குப் பெயர். அதனால் உரைத்த மருந்தை சிறுகச்சிறுகச் புகட்ட வேண்டும். தேன் சர்க்கரை சேர்த்து இனியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். சிறு சிசுவிற்கு 10-15 உரைப்பு வரை தேவைப்படும். மூளைக்கும் குடலுக்கும் நல்ல செயல் திறனைத் தரும் இம்மருந்தை நீங்கள், உங்கள் மகனுக்கு ஏழு அல்லது எட்டு வயது முடியும் வரை தொடர்ந்து கொடுத்து வரலாம். எழுத்து மற்றும் படிப்பில் திறமை வளரும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Child, Children, doctors, Herbs, Kids, medical, Newborn, Pregnancy, Pregnant, Therapy, Traditions, Urai marundhu, Urai marunthu, Uraimarundhu, Uraimarunthu | 1 Comment »

Mooligai Corner – Vijayarajan: Maasikkai – Herbs & Naturotherapy

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

மூலிகை மூலை: மாசிக்காய் மகிமை!

விஜயராஜன்

நீண்டு வளரும் மர வகையைச் சேர்ந்ததாகும் மாசிக்காய். இதன் காயே மருத்துவக் குணமுடையது. இதன் சுவை துவர்ப்புத்தன்மை உடையது. இம்மரத்தின் கிளைகளில் ஒருவித பூச்சிகள் துளையிட அதிலிருந்து வடிகின்ற பால் திரண்டு கட்டிப்படுவதே மாசிக் காயாகும். இது கருமை நீலம் வெண்மை என மூன்று வேறுபாடுகளை உடையது. இதற்குள் இருக்கும் பூச்சிகள் வெளி வருவதற்கு முன்னே எடுப்பது நல்லது. அதிலுள்ள பூச்சிகள் வெளிப்பட்ட பின் கிடைப்பது அவ்வாறு நல்லது கிடையாது? இது நீங்காத உடல் சூடு, குழந்தைகளின் கணச்சூடு, பல வகையான மேகம் போன்றவற்றைப் போக்கும்.

ஆங்கிலத்தில்: Quercus incana, Roxp, Cupaliferac

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

மாசிக்காயைக் கருகாமல் வறுத்துப் பொடியாக 1 கிராம் எடுத்து சிறிது தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட பெரும்பாடு, நீர்த்த கழிச்சல், இரத்த கழிச்சல், மிகு வியர்வை குணமாகும்.

மாசிக்காயை நீர் விட்டு இழைத்து ஆசன வாயில் தடவி வர அதிலுள்ள வெடிப்பு, புண் குணமாகும். தேமல், படைகளுக்குத் தடவி வர அவை குணமாகும்.

மாசிக்காயைப் பொடி செய்து நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளிக்கப் பல் நோய் குணமாகும். பல் ஈறு பலப்படும்.

மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 கரண்டி பொடியை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வயிற்றுக் கடுப்பு, மந்தப் பெருங்கழிச்சல், நாள்பட்ட இருமல், கறும்புள்ளி, வெட்டை, காய்ச்சல் குணமாகும்.

மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகையளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிட வயிற்றுப் போக்கு நிற்கும்.

மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 2 சிட்டிகை அளவு எடுத்து சிறிது வெண்ணெயுடன் அல்லது 1 டம்ளர் பாலுடன் 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப் போக்கு குணமாகும்.

மாசிக்காய்களைச் சுட்டு அதன் சாம்பலை வெட்டுக் காயத்தின் மேல் வைத்து அழுத்த இரத்தம் உடனே நின்று விடும்.

மாசிக்காய்த் தூள் 20 கிராம், சாம்பிராணித் தூள் 25 கிராம், பன்றி நெய் 150 கிராம் சேர்த்துக் களிம்பு செய்து, 10 கிராம் அளவு எடுத்து சிறிது அபினுடன் கலந்து வெளிமூல (பவுத்திர) முளைக்குப் பூச குணமாகும்.

மாசிக்காய்த் தூள் 5 கிராம் 3 வேளை கொடுக்க மயில்துத்தம், மர உப்பு, பூ நீர் உப்பு, சுண்ணாம்புத் தண்ணீர், அபின், வாந்தி உப்பு இவற்றின் நஞ்சு முறியும்.

Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Herbs, Maasikai, Maasikkai, Masikai, Masikkai, Medicinal, Medicine, Medicnal, Mooligai, Moolikai, Natural, Naturotherapy | Leave a Comment »

Ayurvedha Corner – S Swaminadhan: How to use ‘Simla Athi’

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கழிவுகளை அகற்றும் அத்தி!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771

சத்தியமங்கலத்துக்கு அருகிலுள்ள கடம்பூர். அங்குள்ள மலைத் தொடரில் உள்ள எங்கள் தோட்டத்தில் “சிம்லா அத்தி’ என்னும் பெரிய அத்தி மரம் உள்ளது. அது வருடம் முழுவதும் பழங்களைக் கொடுத்துக் கொண்டுள்ளது. இந்தப் பழங்களை எவ்வாறு சத்துக் குறையாமல் பதப்படுத்துவது, அத்திப் பழத்தின் மருத்துவக் குணங்கள் என்ன? என்பதைப் பற்றிக் கூறவும்.

உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப் பழமும் ஒன்று. நம்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுபவை அத்தியும் பேயத்தியுமாகும். நீங்கள் குறிப்பிடும் சிம்லா அத்தி சீமை அத்தி வகையைச் சார்ந்ததாக இருக்கலாம்.

இந்தியாவில் சீமை அத்தி, பூனா, பல்லாரி, அனந்தபூர் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. எனவே வெளிநாடு, இந்திய காடுகள், தோட்டங்கள், மலைகள் என உற்பத்தியாகும் இடங்களைக் கொண்டும், வெண்மை, சிவப்பு, கறுப்பு என நிறங்களைக் கொண்டும் சீமை அத்தி பல ரகமாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றுள் வெண்மை, சிவப்பு ஆகிய இனத்தவை பெரும்பாலும் பழமாக உண்பதற்கும், கறுப்பு நிறத்தது மருந்துகளுக்கும், போதைதரும் பானங்கள் செய்வதற்கும் உபயோகிக்கப்படுகிறது. உற்பத்தியாகும் இடத்தில் பச்சையாக உபயோகப்படினும் கடைகளில் உலர்ந்த பழங்களே நமக்குக் கிடைக்கின்றன.

இவற்றை விசேஷ முறைப்படி இறக்கியோ அல்லது தானாகப் பழுத்து உதிரும் வரை காத்திருந்து சேமித்தோ பதம் செய்கின்றனர். தானாகப் பழுத்து உதிரும் நிலையில் இவை முக்கால் பங்கு உலர்ந்தே இருக்கும். இவ்விதம் சேமித்த பழங்களைத் தட்டுகளில் நெருக்கமில்லாமல் பரப்பி சிறிது கந்தகப் புகை காட்டிப் பின்னர் வெய்யிலில் சில நாட்கள் உலர்த்தி, அழுத்தி சப்பையாகச் செய்து நடுவே துளையிட்டு நாரில் கோர்த்து வெளியிடங்களுக்கு அனுப்புவதால் நீண்ட நாட்கள் கெடாமலிருக்கும். அவற்றின் மிருதுத் தன்மையையும் சுவையையும் பரிமளிக்கச் செய்ய உப்புக் கலவையில் நனைத்துப் பதப்படுத்திக் கட்டி வெளியிடங்களுக்கு அனுப்பலாம். இக் கனிகளுள் சிறிய வண்டுகள் இருக்க வாய்ப்புள்ளதால் கவனத்துடன் உபயோகிக்க வேண்டும். இவை அனைத்தும் சற்றேறக் குறைய ஒரே குணங்கள் கொண்டவையெனினும் பேயத்தியைக் காட்டிலும் அத்தியும், அத்தியைக் காட்டிலும் சீமையத்தியும் தரத்திலும் குணத்திலும் சிறந்தவை.

இவற்றின் இனிப்புச் சுவையும் குளிர்ச்சி தரும் தன்மையும் துவர்ப்புச் சுவையும் காரணமாக உடலிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் திரவங்களை ஓரளவு தடுத்து நிறுத்துகிறது. அதிகமான வயிற்றுப்போக்கு, பெண்களுக்குத் தோன்றும் அளவுக்கு மீறிய மாதவிடாய் போக்கு, வாய், மூக்கு மற்றும் வியர்வை நாளங்கள் வழியே ரத்தமாக வெளியேறும் ரத்தபித்த நோய் , ரத்த மூலம் ஆகியவை குணமடைகின்றன. மேலும் புண் சுத்தமாவதற்கும் விரைவில் ஆறுவதற்கும் இதன் துவர்ப்புச் சுவை உதவுகிறது.

இனிப்புச் சுவை, குளிர்ச்சித்தன்மை, நெய்ப்புத்தன்மை ஆகியவை செயல்படுவதால் மனதிற்கு ஒரு தெளிவையும் உடலுக்குப் புஷ்டியையும் ஏற்படுத்துவதுடன் மலச்சிக்கலையும் அகற்றுகிறது. பித்தத்தின் சகஜ நிலை மாற்றத்தால் தோன்றும் மயக்கம், உடல் எரிச்சல் , தண்ணீர் தாகம், சோர்வு முதலியவையும் குணமடைகின்றன. உதடு, நாக்கு, வாய் இவற்றில் உண்டாகும் புண்ணும் வெடிப்பும் குணமடைகின்றன.

கபம் மூச்சுக் குழாய்களின் உள்ளே படிந்து இருமல், மூச்சுத் திணறல் முதலியவற்றை உண்டாக்குகின்றது. அந்த நிலைகளில் அத்திப் பழங்களை உபயோகிப்பதால் கபத்தின் அடைப்பு விடுவதுடன் இருமலும் குறைகிறது. கபமும் எளிதில் கோழையாக வெளியேறுகிறது.

இக்கனிகளில் பல உலோகச் சத்துகளுடன் இரும்புச் சத்தும் இருப்பதால் இவை ரத்தத்தை அதிகரிக்கவும், ரத்தத்தின் தரக் குறைவால் உண்டாகும் பாண்டு, காமாலை, வீக்கம் ஆகிய நிலைகளிலும் ரத்தத்தின் மற்ற கோளாறுகளால் உண்டாகும் அரிப்பு, சொரி, குஷ்டம் போன்ற தோலைப் பற்றிய வியாதிகளிலும் உபயோகிக்கச் சிறந்தது.

அத்திப் பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறு சுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. ஆகையால் ஈரல், குலைக்கட்டி கண்ட குழந்தைகளும் இக்கனிகளை உட்கொள்ளலாம். சிறுநீர்க் கல்லடைப்பு தடங்கலை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது.

ஆங்காங்கு இறுகிய கழிவுப் பொருள்களைப் பக்குவப்படுத்தி இளக்கி வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது. சிறுநீரில் சர்க்கரை உள்ளவர்கள் கூட இக்கனியை உபயோகித்துக் குணம் பெறலாம். இக்கனிகளை அரைத்துக் கட்டிகளின் மேல் பழுப்பதற்காகப் பூசுவதுமுண்டு.

உபயோகிக்கும்விதம்:

1.பழங்களைப் பிரித்துத் தேனிலும் பொடித்த கற்கண்டிலும் துவைத்து உட்கொள்ளலாம்.

2.பிரித்த பழத்தினுள் பொடித்த கற்கண்டுத் தூளைச் செலுத்தி இரவு பனியில் வைத்திருந்து காலையில் உண்டுவர உடல் சூடு தணியும்.

3.அத்திப் பழம், பாதாம்பரும்பு, அக்ரோட் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரப் பருப்பு, பூனைக்காலி விதைப் பருப்பு, ஆப்பிள் விதை, ஏலக்காய், கல்கண்டு இவற்றைச் சம எடையாகப் பொடித்து, பசுவின் நெய்யில் கலந்து அத்துடன் சிறிது குங்குமப் பூ சேர்த்து, ஒரு வாரம் ஊறிய பின்னர் தினம் 10 – 15 மி.லி. வீதம் காலையில் உட்கொள்வதால் பலம், புஷ்டி ஏற்படும். ஆண்மை பெருகும்.

Posted in Alternate, Athi, Aththi, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Doctor, Herbs, Medicine, Natural | Leave a Comment »

Mooligai Corner – Herbs & Naturotherapy – Karuvelam (Arabica; Wild Mimosocea)

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007

மூலிகை மூலை: கருத்தரிக்க கருவேலம்!

விஜயராஜன்

இரட்டைச் சிறகமைப்பு கூட்டு இலைகளை உடைய வெள்ளை நிறத்தில் முள்ளுள்ள உறுதியான மர இனமாகும் கருவேலம். மலர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் வெள்ளை நிறத்தில் பட்டை வடிவாக இருக்கும். விதைகள் வட்ட வடிவமாக இருக்கும். கொழுந்து, இலை, வேர்ப்பட்டை, மரப்பட்டை, பிசின், மருத்துவக் குணம் உடையது. இதனுடைய எல்லா பாகங்களும் துவர்ப்பு குணம் உடையவை. பிசின் சளியை அகற்றி தாதுக்களின் எரிச்சலைப் போக்கும். காமத்தை அதிகரிக்கும். கொழுந்து தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும். சளியை அகற்றி சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் குணம் உடையது.

வேறு பெயர்கள்: மேதோரி, மேதச்சம், கிருட்டிணப் பரம்சோதி, தீமுறுவப்பூ, கருவிலம், வேல், புன்னாகக்க நீதம், சிலேத்தும பித்த ரசமணி.

ஆங்கிலத்தில்: Arabica; Wild; Mimosocea

இனி மருத்துவக் குணங்கள்.

கருவேல இலையை அரைத்துப் புண்கள் மீது வைத்துக்கட்ட விரைவில் குணமாகும்.

கருவேலம் துளிர் இலைகளை 5 கிராம் எடுத்து அரைத்து 1 டம்ளர் மோரில் கலந்து 2 வேளையாகக் குடித்துவர சீதக் கழிச்சல், வெப்புக் கழிச்சல், பாசரண மருந்து வீறு குணமாகும்.

கருவேலம் இலையை அரைத்து இரவில் ஆசனவாயில் வைத்துக் கட்டிவர மூலம் குணமாகும். புண் மீது போட விரைவில் ஆறும். கருவேலம் பட்டையை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 25 மில்லியாக 2 வேளை குடித்து வர இரத்தக் கழிச்சல், வெப்புக் கழிச்சல், பசியின்மை குணமாகும்.

கருவேலம் பட்டையை கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு 1/2 லிட்டராக வற்றக் காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளிக்க வாய்ப்புண், பல்லீறு அழுகல், பல் ஆட்டம் குணமாகும்.

கருவேலம் பட்டை, வாதுமைக் கொட்டைத் தோலும் சம அளவாக எடுத்து பொடி செய்து பல்லில் தேய்த்து வரப் பல்லீறுகளில் உள்ள புண், பல் கூச்சம், பல் ஆட்டம் குணமாகும்.

கருவேலம் பிசினை நெய்யில் வறுத்துப் பொடியாக்கி 2 கிராம் 2 வேளை சாப்பிட்டு வர தாதுப் பலப்படும். இருமல் நீங்கும். வயிற்றுப் போக்கு நிற்கும்.

கருவேலம் பிசினுடன் அதேயளவு பாதாம் பருப்பு சேர்த்து பகலில் நீரில் ஊறவைத்து இரவில் படுக்கப் போகும் முன்னர் 1 டம்ளர் அளவு குடித்து வர, குழந்தை பெற வாய்ப்பாகும்.

கருவேலங்கொழுந்து 5 கிராம் எடுத்து அரைத்து 1 டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வெள்ளை மாறும்.

கருவேலம் பட்டையை கைப்பிடியளவு எடுத்து குடித்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளிக்க பல், ஈறுகளில் இருந்து வரும் இரத்தம் நிற்கும். பல் உறுதிப்படும்.

Posted in Alternate, Arabica, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Herbs, Karuvela, Karuvelam, Leaf, Leaves, Medicine, Mimosocea, Mooligai, Natural, Naturotherapy | 1 Comment »

Ven Kushtam? Disorder Awareness – Melanin deficiency

Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007

விழிப்புணர்வு: வெண்குஷ்டம் அல்ல… வெண்புள்ளிகள்

ரவிக்குமார்


“”எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்தோடு எப்படி நடத்தவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் தற்போது அதிகரித்துள்ளது. ஆனால் நீண்ட காலமாக சருமத்தில் வெண்புள்ளிகளுடன் இருப்பவர்களை, இன்னமும் இந்தச் சமூகம் “வெண்குஷ்டம்’ வந்தவர்கள் என்ற தவறான கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறது. இதை வெண்புள்ளிகள் என்று அழைப்பதுதான் சரி. நோயே இல்லாத இதை தொழுநோய் என்று அழைப்பது தவறு.” என்று தன்னுடைய ஆதங்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தினார், கே.உமாபதி. இவர், “வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்- இந்தியா’ என்னும் அமைப்பின் பொதுச் செயலாளர். இவரும் இந்தப் பாதிப்போடு இருப்பவர்தான். வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் ஏற்படுத்துவதுடன், வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தகுந்த சிகிச்சை முறைகளை அறிவுறுத்தி வருகிறார் கே.உமாபதி. வெண்புள்ளிகள் இயக்கத்தின் செயல்பாடுகளைக் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

“”நம் உடலின் மிகப் பெரிய உறுப்பே தோல்தான். தோலில் உள்ள “மெலனின்’ என்ற நிறமி இழப்பினால் சருமத்தில் உண்டாவதுதான் இந்த வெண்புள்ளிகள். இந்த மெலனினை நம் உடலில் உற்பத்தி செய்வது தோலில் உள்ள “மெலனோûஸட்’ என்ற பெயருடைய அணுக்களின் வேலை.

நம் உடலில் கிருமிகளின் பாதிப்பு வரும்போது, அதை எதிர்ப்பது ரத்த வெள்ளை அணுக்களின் வேலை. இதனால் இந்தச் செல்களை “மிலிட்டரி செல்கள்’ என்று அழைப்பர். இந்த மிலிட்டரி செல்கள், கிருமி என நினைத்து “மெலானோûஸட்டை’ அழிக்கின்றன. அவ்வாறு மெலனோûஸட் செல்கள் அழிக்கப்படும் இடங்களில் வெண்புள்ளிகள் தோன்றி அது அப்படியே பரவத் தொடங்கும்.

இந்த வெண்புள்ளிகள் பாதிப்பு எந்த வயதிலும், யாருக்கும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் வெண்புள்ளிகள் பாதிப்புக்கு உள்ளானோர்கள் 18 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பார்கள். இந்தியா முழுவதும் சுமார் 4 கோடி பேருக்கு இருக்கும். உலக மக்கள் தொகையில் இரண்டு சதவிகிதம் பேருக்கு வெண்புள்ளிகள் பாதிப்பு இருக்கின்றது.

வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்களே வித்தியாசமாக நடத்தும் நிலை மாறவேண்டும். குறிப்பாக இந்தப் பாதிப்புடன் இருக்கும் பெண்களை குடும்பத்தின் விசேஷங்களில் பங்கேற்காமல் ஒதுக்கி வைப்பது, தொற்றிக் கொள்ளுமோ என்ற பயத்தால் அவர்களிடமிருந்து விலகி இருப்பது போன்ற செயல்களால், உளவியல்ரீதியாகப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வெண்புள்ளிகள் தொற்றக்கூடியதோ, பரம்பரையாகத் தொடரும் பிரச்சினையோ இல்லை என்பதை மக்கள் கூடும் பொதுஇடங்களிலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் விழிப்புணர்வுப் பிரசாரங்களைச் செய்துவருகிறோம். வெண்புள்ளிகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துகளை விளக்கும் வகையில், சமீபத்தில் கூட, பள்ளி மாணவர்களைக் கொண்டு 9 கி.மீ. தூரத்துக்கு மனிதச் சங்கிலி அமைத்தோம்.

ஓர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அதிகாரிக்கு இந்த வெண்புள்ளிகள் பாதிப்பு இருந்தது. ஆனால் அவரது மனைவிக்கோ, அவரின் இரண்டு பெண்களுக்கோ இந்தப் பாதிப்பு இல்லை. ஒரு பெண் எம்.பி.ஏ.வும், இன்னொரு பெண் எம்.சி.ஏ.வும் படித்திருந்தனர். அப்பாவுக்கு வெண்புள்ளிகள் பாதிப்பு இருப்பதால் அவரின் பெண்களுக்கு பல வருடங்களாகத் திருமணம் ஆகாமலேயே இருந்தது. மனம் வெறுத்துப் போன அந்தப் பெண்களின் தந்தை, “”உங்கள் திருமணம் தடைபடுவதற்குக் காரணமாக நானே இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்பா இறந்துவிட்டார் என்று சொல்லி திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். இப்படி வெண்புள்ளிகளின் பாதிப்பால் விளைந்த வேதனையான நிஜச் சம்பவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆண்களுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால் பெண்கள் அவர்களை அனுசரித்துப் போவதைப் பரவலாகப் பார்க்கமுடிகிறது. அதுவே பெண்ணுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால், அந்தப் பெண்ணின் வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடுகிறது. வேலை வாய்ப்பில் தொடங்கி, திருமணம் ஆவதற்கே கூட தடையாக இருக்கிறது. இதனால் நாங்கள் வெண்புள்ளிகள் பாதிப்பு இருப்பவர்களுக்குள்ளாகவே பேசி, இதுவரை எட்டு திருமணங்களை நடத்தியிருக்கிறோம். வெண்புள்ளி பாதிப்பு இருந்தாலும் இந்த சாதியில்தான் பெண் வேண்டும், பையன் வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பவர்களுக்கு நாங்கள் உதவமுடியாதுதான். வெண்புள்ளிகளை விடவும் சமூகத்தில் புரையோடிப் போயிருப்பது சாதிதானே!

வெண்புள்ளி பாதிப்பிற்கு என்னைப் பொறுத்தவரையில் அலோபதி மருத்துவம் சரிப்படாது. சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை வைத்தியம் போன்ற வைத்திய முறைகளில் இதை பரவாமல் தடுப்பதற்கு வழியிருக்கிறது. அதிலும் பஸ்பம் (மெட்டல்) கலக்காத மருந்தைப் பயன்படுத்த வேண்டியது முக்கியம். சித்தா மற்றும் பரம்பரையாக மருத்துவம் பார்க்கும் நிபுணர்களை ஒன்றிணைத்து உருவாக்கியிருக்கும் மருத்துவக் குழுவினரின் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளை எங்களிடம் ஆலோசனைக்கு வருபவர்களுக்குப் (தொலைபேசி எண்: 044-65381157) பரிந்துரைக்கிறோம்.

பல நிறுவனங்களோடு பேசி வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருகிறோம். வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் யாரிடமும் நன்கொடை பெறக்கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. எங்களுக்கு எந்த வகையிலாவது உதவவேண்டும் என்று நினைப்பவர்கள், வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்துகளை, இந்த பாதிப்பு இருப்பவர்களிடமும், இல்லாதவர்களிடமும் கூட கூறுங்கள். விழிப்புணர்வு- பாதிப்பு இருப்பவர்களுக்கும் தேவை. இல்லாதவர்களுக்கும் தேவைதானே!” என்றார் உமாபதி.

Posted in Advice, AIDS, albinism, Awareness, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Bias, Blood, cancer, Cells, Color, Colour, cure, Deficiency, disadvantage, Discoloration, Disease, Disorder, Dots, genes, Genetic, Hereditary, HIV, hypomelanism, hypomelanosis, inferiority, Kushtam, Leper, Leprosy, medical, Melanin, melanocytes, Oppression, pigment, privilege, Race, racialism, racism, Racist, RBC, Skin, Society, Status, superiority, unaani, Unani, Venkushtam, Vennkushtam, WBC, White, Yunaani, Yunani | 20 Comments »