Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007
தமிழுக்கு அநீதி!
ச. செந்தில்நாதன்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைத்து தமிழக அரசு ஓர் ஆணையை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருக்கிறது. மாணவர்களுக்குச் “சுமை’ அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். இயல்பான வளர்ச்சிக்கு அது குறுக்கே நிற்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் எந்தப் பாடத்தில் அளவைக் குறைக்க வேண்டும், எதை எடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.
அரசாணையில் திருக்குறளின் அளவைக் குறைத்திருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளுக்காக மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவரான நாகநாதனைத் தலைவராகக் கொண்ட குழு சென்ற ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைப்பது குறித்து அரசுக்கு அறிக்கைதர பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ராஜராஜேஸ்வரி தலைமையில் இன்னொரு குழு அமைக்கப்பட்டது. இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் அறிக்கை தந்திருக்கிறது.
அரசு அந்தக் குழுக்களின் பரிந்துரைகளைப் பரிசீலித்து அதனை ஏற்க, பள்ளி கல்வித்துறைச் செயலர் 26-7-2007-ல் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த அரசாணைப்படி குறைக்கப்பட்ட பாடத்தில் திருக்குறளும் அடங்கும்.
10-ம் வகுப்பு பாடத்தில் திருக்குறளிலிருந்து
- “புகழ்’,
- “வெகுளாமை’,
- “இடனறிதல்’,
- “ஊக்கமுடைமை’
என நான்கு அதிகாரங்கள் இடம் பெற்றன. இவற்றுள் “இடனறிதல்’, “ஊக்கமுடைமை’ ஆகிய இரு அதிகாரங்களிலும் பத்து பத்து வரிகள் – அதாவது, இருபது வரிகள் நீக்கப்பட்டுள்ளன. நம்முடைய கேள்வி, இந்த இருபது வரிகள், மாணவர்களுக்கு ஒரு சுமையா? திருக்குறளைக் கூடுதலாகப் படிப்பது நல்லதுதானே? குறைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே அளவில் குறைந்த குறளின்மேல் ஏன் கைவைக்க வேண்டும்? இந்த இருபது வரிகள் மாணவர்களுக்கு ஒரு சுமையா?
நீக்கப்பட்டவைகளில் ஐந்து வரிகளைக் கொண்ட குறுந்தொகைப் பாடலும் உண்டு. இந்தப் பாடல் நீக்கத்திற்கு வேண்டுமானால் ஒரு சமாதானம் சொல்ல முடியும். அதாவது, அது அகப்பாடல், காதல் சம்பந்தமான பாடல் என்று சொல்லலாம். 16 வயதிலே குறுந்தொகைக் காட்சியைக் காட்ட வேண்டாம் என்று குழு நினைத்திருக்கலாம். ஆனால் குழு ஒன்றைக் கவனிக்க மறந்துவிட்டது. மாணவர்கள் ஏற்கெனவே காதல் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். திரைப்படத்திலும் தொலைக்காட்சியிலும் காணாத காட்சியா குறுந்தொகைக் காட்சி? திரைக்காதலுக்குப் பதிலாக ஓர் ஆரோக்கியமான காதலை அவர்கள் குறுந்தொகையில் தரிசித்து விட்டுப் போகட்டுமே!
கவிஞர் தமிழ் ஒளியின் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற பாடல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. பாரதி, பாரதிதாசனுக்குப்பின் தமிழுலகம் அறியப்பட வேண்டிய கவிஞர் தமிழ் ஒளி. எனவே அவர் பாடல்கள் பாடத்தில் வருவதுதான் சரியாக இருக்கும். மேலும் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற கவிதை அறிவியல் வளர்ச்சியையும், மனித ஆற்றலையும் வெளிப்படுத்துவது. இதை ஏன் நீக்க வேண்டும்? இளைய தலைமுறை தமிழ் ஒளியை அறிய வேண்டாம் என்று நினைக்கிறார்களா? நீர்த்துப்போன கவிதைகளை எல்லாம் பாடப்புத்தகத்தில் நிறுத்திக்கொண்டு, அடர்த்தியான கவிதைகளை அவசர அவசரமாக நீக்குவதேன்?
உரைநடைப் பகுதியில் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் எழுதிய மனையியல் என்ற கட்டுரை எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து துணைப்பாடத்தில் இரண்டு கதைகள் நீக்கப்பட்டுள்ளன.
நீக்கப்பட்ட ஒரு கதை அசோகமித்திரனின் “விடிவதற்குள்’ என்ற சிறு கதையாகும். சென்னை நகரில் தண்ணீர் பஞ்சத்தால், விடிவதற்குள் தண்ணீர் பிடித்து வைப்பதற்காக அலையும் ஒரு குடும்பத்தலைவியின் கதை இது. தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும்போது, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைச் சித்திரிக்கும் கதை இது.
தண்ணீர்த் தட்டுப்பாட்டை இப்படி படம்பிடித்துக் காட்டினால், அரசு மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்ற எண்ணமோ தெரியவில்லை; நீக்கிவிட்டார்கள். இது ஒரு யதார்த்தமான கதை. ஒரு வாழ்க்கைப் பதிவு. அப்படித்தான் குழு பார்த்திருக்க வேண்டும். ஆனால் குழு அரசியல் நோக்கில் கணக்குப்போட்டு கழித்தல் வேலையைச் செய்திருக்கிறது. இப்படிப் பார்த்தால் வாழ்க்கையின் சிரமங்களைச் சித்திரிக்கும் எந்தக் கதையும் பாடப் புத்தகத்தில் இடம் பெற முடியாமல் போய்விடும்.
முற்போக்கு எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாளின் “மண்ணாசை’ நீக்கப்பட்ட, இன்னொரு கதை. இந்தக் கதையின் நீக்கத்திலும் அரசியல் இருக்கிறது.
பட்டாளத்தில் வேலைபார்த்து சொந்த மண்ணுக்குத் திரும்பும் பட்டாளத்தார் தாம் கொண்டுவந்த பணத்தை எல்லாம் நிலத்தில்கொட்டி மா, பலா, கொய்யா என்று மரங்களை வளர்த்து, தன் வாழ்க்கையையே அவற்றோடு பிணைத்துக்கொள்கிறார்.
அவருடைய மகன் கொஞ்சம் தோட்டத்தை வைத்துக்கொண்டு, மீதித் தோட்டத்தை எல்லாம் மனைகளாகப் பிரித்து, புதிய நகரை உருவாக்கப்போகும் நபர்களுக்கு விற்க ஏற்பாடு செய்து, கடைசியில் தோட்டம் விற்கப்படுகிறது. பத்திரத்தைப் பதிவு செய்துவிட்டு வரும் பட்டாளத்தார், அதற்குள் மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்து, மரத்தோடு மரமாய் சரிந்து விழுகிறார். மரணப் படுக்கையில் நாள்கள் ஓடுகின்றன. மண்ணாசைதான் உயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் அவருடைய மைத்துனர், தோட்டத்திற்குப்போய் மண் எடுத்து வந்து, தண்ணீரில் கரைத்து பட்டாளத்தார் வாயில் ஊற்றுகிறார். சிறிது நேரத்தில் ஒரே விக்கலோடு உயிர்போய்விடுகிறது.
இந்தக் கதையைப் பாடத்திலிருந்து விலக்குவதில் ஓர் உள்ளார்ந்த அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. நிலங்களைக் கையகப்படுத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், பெரும் தனியார் நிறுவனங்களுக்கும் மக்கள் மத்தியில் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்தச் சூழலில் “மண்ணாசை’ கதையைப் படித்தால் மண்ணாசை அதிகமாகுமே என்ற எண்ணமும் இக்கதையை நீக்க ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
தமிழ் ஒளி, சோலை சுந்தரபெருமாள் போன்றவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்கள். முற்போக்கு வாசத்தை மாணவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்பதும் குழுவின் குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். திருக்குறளின் அளவைக் குறைப்பது என்பது குழுவின் நோக்கமாக இருந்திருக்காது. தாங்கள் அரசியல்நோக்கில் எடுத்த முடிவை அமலாக்க “திருக்குறளிலேயே சில குறள்களை எடுத்துவிட்டோம்’ என்று காரணம் காட்டுவதற்குத்தான் திருக்குறளிலும் கைவைத்திருக்கிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது.
மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கைதான். அதற்காக மாணவர்கள் சிரமப்படும் பாடங்களில் சுமையைக் குறைக்க வேண்டுமே தவிர, சிந்திக்க வைக்கும் பாடங்களை நீக்கக்கூடாது.
தமிழக அரசு தாமதம் செய்யாமல் தன்னுடைய அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும்.
(கட்டுரையாளர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர்)
Posted in 10th, Ami, Answers, Asokamithiran, Asokamithran, Asokamitran, Avoid, Books, Conservative, Couplets, Decrease, Delete, Education, Exams, Fiction, Kural, Kurunthogai, Kurunthokai, Language, Learn, Lessons, Liberal, Life, Lighten, Literature, Load, Main, Non-detail, Obsolete, PAK, papers, Planning, Poems, Poet, Questions, Read, Reduce, Sample, Sangam, Schools, Second, Songs, standard, State, Students, Tamil, Tamil Nadu, TamilNadu, Teach, Teachers, Tenth, Textbook, Textbooks, Thirukkural, Thirukural, Thiruvalluvar, TV, Valluvar | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007
தகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க பல துறைகள் கோரிக்கை
‘அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான போக்கு இருக்க வேண்டும், ஊழல் குறைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தகவல் பெறும் உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், பல அரசு துறைகள் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன’ என்று மத்திய தகவல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய தகவல் கமிஷனின் ஆண்டு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கோரி வருகிறது.
தகவல் கொடுப்பதால், நீதித்துறையின் தனித்தன்மை, நீதித்துறையின் நிர்வாகம் பாதிக்கப்படும் என்பது உச்சநீதிமன்றத்தின் வாதமாக உள்ளது.
இதே போல சி.பி.ஐ., மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.,) ஆகியவையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கிறது. ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தவிர பிற தகவல்களை இரண்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள துறைகள் அளிக்க வேண்டாம். இந்த இரண்டாவது அட்டவணையில் தங்கள் துறையையும் சேர்க்க வேண்டும் என்பது சி.பி.ஐ.,யின் கோரிக்கையாக உள்ளது.
தேர்வு மற்றும் பணி நியமன தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கோரி வருகிறது. டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருவதால், எவ்வித தகவலும் அளிக்க டி.எம்.ஆர்.சி., முன்வர மறுக்கிறது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் செயல்பட்டால், கூடுதல் சுமை ஏற்படும் என்பது அந்த அமைப்பின் கருத்தாக உள்ளது.
கட்டணம் உயர்வு?
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நுகர்வோர் விவகாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், சுரங்கம் ஆகிய அமைச்சகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளன. கேட்கப்படும் தகவல் நீண்ட காலத்துக்கு உரியதாக இருந்தால், முறையான அமைப்பில் இடம் பெறாத தகவல்களாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அந்த அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அதை பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்., தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் தகவலை அளிக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லை என சில துறைகள் தெரிவித்துள்ளன.
மத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமான கார்ப்பரேஷன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் துறையையும் கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
அரசு துறைகளை சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகின்றனர். குறைந்த கட்டணத்துக்கு அதிக தகவல்களை தெரிவிப்பதா என்ற எண்ணம் அவர்களிடம் காணப்படுகிறது. இது போன்ற எண்ணம் கொண்ட அதிகாரிகளின் கருத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Posted in Affairs, Afraid, Architecture, authority, Avoid, BHEL, Buildings, CBI, Central Information Commission, CIC, Construction, Consumer, Corruption, Courts, CPSC, Customer, Delays, Delhi, Disclosure, DMRC, Economy, Exempt, Express, family, Fast, Government, Govt, HC, Health, Hide, HR, immunity, Info, Information, Intelligence, Judges, Judiciary, Jury, Justice, kickbacks, Law, Metro, mines, NBCC, Order, OSA, parliament, Protect, Protection, PSU, PSUs, Rails, Railways, Recommendation, rights, RTI, SC, Scared, Secrets, Security, Trains, Transparency, Transport, Violation, Welfare | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 19, 2007
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்!: உப்பைக் குறைக்கும் வழி!
பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன்
சர்க்கரை வியாதி பதினெட்டு ஆண்டுகளாக உள்ளது. கால்கள் வீங்கி இருக்கிறது. டாக்டர் உப்பு அதிகமாக உள்ளது என மாத்திரை கொடுத்தார். சரியாகவில்லை. வலியினால் வலது கையை சரியாகத் தூக்கக்கூட முடியவில்லை. உப்பைக் குறைக்க வழி என்ன?
நீரில் உப்புள்ளவர்கள் உப்பைக் குறைப்பதால் அல்லது உப்பை அறவே நீக்குவதால் சிலருக்குக் குணமாகிறது. சிலருக்கு எத்தனை உப்பில்லாப் பத்தியமிருந்தாலும் குறைவதில்லை. நோய்க்கும் பத்திய உணவிற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்வது அவசியம். உடலில் உள்ள கப தாதுவான லஸீகை (albumin)சிறுநீர் வழியே வெளியேறுவதே இந்நோய். கப தாதுவை நீர் வழியே வெளியேறாமல் தடுக்கும் சக்திபெற்ற சீறு நீரகங்கள் இதைத் தடுப்பதில்லை. அதற்குக் காரணம் அவை முழுவதிலுமோ சில பகுதிகளிலோ புண்ணாகி அந்தப் பலவீனத்தால் இது வெளியேறக்கூடும். ரத்தத்திலுள்ள இந்த லஸீகை அதன் இயற்கைத் தடிப்பு குறைந்து சிறுநீரகங்களின் சல்லடைகளில் தங்காமல் வெளியேறியிருக்கலாம். சிறுநீரகங்களில் ரத்த ஓட்ட அழுத்தம் அதிகமாகி அழுத்தத்தால் அது வெளியேற்றப்படலாம். இப்படிப் பல காரணங்களால் கபாம்சமான ஆல்புமின் எனும் லஸீகை சிறுநீரில் காணக்கூடும். எல்லா நிலைகளிலும் உப்பை நீக்குவதும் அல்லது அளவைக் குறைப்பதும் உதவலாம். ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுற்றிவரும் இந்த லஸீகை கேடுற்றால் ஆங்காங்கு தங்கி ரத்த ஓட்டத்தைத் தடை செய்து வீக்கத்திற்குக் காரணமாகும். கேடடைந்த லஸீகையினால் சிறுநீரகங்களும் கெடக்கூடும். இத்தகைய நிலைகளில் உப்பைக் குறைப்பது உதவுகிறது.
பொதுவாகவே இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையுள்ளவை கபத்தை அதிகப்படுத்தும். கபம் கெட்டுள்ள நிலையில் இவற்றைச் சேர்க்க கெட்ட கபத்தின் அளவும் செயலும் அதிகமாகும். இவற்றைக் குறைக்க கபம் குறையும். இம்மூன்று சுவைகளிலும் குறிப்பாக உப்பு கபத்தின் பிசுபிசுப்பைக் குறைத்து நீர்க்கச் செய்து அளவில் அதிகமாக்கும். சிறுநீரின் வழியே வெளியாகும். லஸீகை நீர்த்து அதிக அளவில் வெளியாவதால் கபத்தின் அந்த வளர்ச்சியை அதிகப்படுத்தும் உப்பைக் குறைப்பதால் ரத்தத்தில் கபம் வளரத் தக்க சூழ்நிலை அகற்றப்படுவதால் உடல் வீக்கம் குறைகிறது. ரத்த ஓட்டத் தடை குறையக் குறைய ரத்தக்குழாய்களின் உட்புறப்பூச்சு தடிப்பும் குறைய குழாய்கள் பூர்ண அளவில் விரிந்து சுருங்குகின்றன. ரத்த ஓட்டம் அதிகமாக அதிகமாக உடலில் ஆரோக்கியம் ஏற்படுகிறது.
நீங்கள் உணவில் உப்பை நீக்க வேண்டும் என நினைத்து இட்லி, தோசையில் அதைச் சேர்க்காமல் சாப்பிட்டாலும் உங்கள் உபாதை குறைய வாய்ப்பில்லை. காரணம் இட்லி, தோசையிலுள்ள உளுந்து நுண்ணிய ரத்தக் குழாய்களின் உட்பூச்சை அதிகப்படுத்தி குழாய்களைத் தடிக்கச் செய்யும். உப்பு சேர்க்காததால் வரும் வினையிது. உப்பு சேர்த்தால் இட்லி, தோசை போன்றவை எளிதில் செரித்துவிடும். உப்பில்லாத பண்டம் எளிதில் செரிக்காததால் அதன் சத்து பிரிக்கப்படாமலேயே உடலில் குப்பை கழிவுப் பொருள் தேங்கும் பெருங்குடலில் போய்ச் சேரும். அப்படியே வெளியாகும். செரிக்காத உணவே மறுபடியும் கபதோஷ வளர்ச்சிக்குக் காரணமாகி வளர்ந்து நோய் மாறுவதில்லை.
பாகற்காய், சுண்டைக்காய், வாழைக்கச்சல், கொள்ளு, பாசிப்பருப்பு, வாழைப்பூ, மணத்தக்காளி, கறிவேப்பிலை, நெல்லிமுள்ளி, நன்கு கடைந்து ஆடை எடுத்த மோர், ஆடை புடைக்க இளந்தீயில் காய்ச்சி ஆடை நீக்கிய பசுவின் பால், வல்லாரைக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை முதலியவை உணவில் சேரச்சேர கபம்தானே குறைந்து சிறுநீர் தெளிவாக வெளியேறுவதை உணரலாம். தயிர், பச்சரிசி, அதிக இனிப்பு, வெல்லம், பகல் தூக்கம், உளுந்து முதலியவற்றைத் தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற கபம் சம்பந்தப்பட்ட நீர் நோய்களில் கசப்பும் துவர்ப்பும் மிக்க மருந்து சரக்குகளைக் கொண்ட கஷாயங்கள் நல்ல பலனைத் தருகின்றன.
Posted in Advice, Alternate, Avoid, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, cure, diabetes, Diet, Doc, Doctor, Health, Healthcare, Herbs, medical, Medicines, Natural, Patient, Salt, Sugar, Swaminathan, Tablet, Tips, Treatment | 1 Comment »