பர்மா போராட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர்
பர்மாவின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிராக இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்கள், புத்த துறவிகளின் தலைமையில் ரங்கூன் நகரின் தெருக்களிலும் வீதிகளிலும் பேரணியாகச் சென்றனர்.
அரசாங்கத்து எதிரான பதாகைகளைச் சுமந்து சென்ற அவர்கள், அரச எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினார்கள்.
தற்போது இந்தப் பேரணிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் வீதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.
மேலும் குறைந்தது 10 நகரங்களில் இப்படியான பேரணிகளைக் காணக்கூடியதாக் இருந்தது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஒலிபெருக்கிகள் மூலம் இராணுவத்தினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.
தாம் இப்படியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பலத்தைப் பிரயோகிப்போம் என்று இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர்.
யார் இந்த பர்மா ஜெனரல்கள்?
![]() |
![]() |
ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும் |
பர்மாவின் 5 கோடி மக்களும், மிகவும் நெருக்கமாக இறுக்கப்பட்ட, 12 உயர் ஜெனரல்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவால் ஆட்சி செய்யப்படுகிறார்கள்.
அரச சமாதான மற்றும் அபிவிருத்திக் குழு என்ற பெயரில் செயற்படுகின்ற இந்தக் குழுவே பர்மாவில் முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடுக்கிறது.
இந்தக் குழுவின் தலைவராகச் செயற்படுபவர் மூத்த தளபதி ஜெனரல் தான்-சுவே. இவரே அரசாங்கத்தின் தலைவரும் இராணுவத்தின் நேரடி தளபதியுமாவார்.
![]() |
![]() |
பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே |
பர்மா மீது தாக்கம் செலுத்தக் கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, ஜோதிடர்களை ஆலோசிக்கின்ற ஒருவராகவும், ஒரு ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவராகவும் இவர் இருகின்ற போதிலும், ஒரு கடும் போக்காளராகவே இவர் பார்க்கப்படுகிறார்.
பொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே பிரசன்னமாகும் ஒருவரான தான்-சுவே அவர்கள், மிகவும் சுகயீனமுற்று இருக்கிறார் என்று வதந்திகள் வருகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில், இறுதி முடிவு இவர் வசம் இருப்பது போல்தான் தென்படுகின்றன.
எப்படியிருந்த போதிலும், எவ்வாறு நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது தொடர்பில், இராணுவத் தலைமைப்பீடத்தின் மத்தியில் கருத்து முரண்பாடு காணப்படுவதாக வதந்திகள் வருகின்றன.
![]() |
![]() |
தனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே |
தான்-சுவா அவர்களுக்கு, அவரது இரண்டாம் நிலைத் தலைவரான , மாவுங் ஆயி அவர்களுடன் ஒரு பதற்றமான உறவே காணப்படுகிறது.
ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்களை, பர்மாவின் அரசியல் பொது வாழ்வில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதில், இவர்கள் இருவரும் உடன்படுகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களின் அளவும், ஆட்சிக்கு எதிராக அதிகரித்து வருகின்ற அச்சுறுத்தலும், இவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை அதிகரிக்கலாம்.
இந்த ஜெனரல்களின் அனைத்து முடிவுகளும், மூடிய கதவுகளுக்கு பின்னாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது குறித்து, சமிக்ஞைகள் கிடைப்பது முடியாத காரியமாகும்.
1988இல் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தாம் பயன்படுத்திய யுக்திகளையே- அதாவது ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வன்செயலைப் பயன்படுத்தும் யுக்தியையே – இராணுவ அரசாங்கம் கைக்கொள்ளும் என்று, பர்மாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலர் அஞ்சுகிறார்கள்.
பர்மாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு அதிபர் புஷ் பரிந்துரை
![]() |
![]() |
அதிபர் புஷ் |
பர்மாவின் இராணுவ ஆட்சியின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்துள்ளார்.
இந்த ஆண்டிற்கான ஐ நா வின் பொதுச் சபையின், துவக்க மாநாட்டின் போது உரையாற்றிய புஷ் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
பர்மியத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அப்போது அவர் கூறினார்.
பத்தொன்பது ஆண்டுகளாக ஒரு பயங்கர ஆட்சியை மக்கள் மீது திணித்து வருவதாக பர்மிய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ள புஷ் அவர்கள், அந்த அரசாங்கத்தின் மீது மற்ற நாடுகளும் தமது வழியில் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறித்தியுள்ளார்.
முன்னதாக இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பர்மிய அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.
புத்தம் சரணம் கச்சாமி!
மியான்மரில் கடந்த ஒரு வாரமாக வெடித்திருக்கும் போராட்டத்தின் விளைவுகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா இல்லையா என்று உலகமே உற்றுநோக்கும் அளவுக்கு மக்கள் புரட்சி வலுவடைந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.
இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பர்மா, இப்போது மியான்மர், 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்த பர்மாவால் ஒரு குடியரசாக சுமார் 14 ஆண்டுகள்தான் தொடர முடிந்தது. அன்றைய பர்மா அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தளபதி நீ வின்னின் தலைமையில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது என்பது மட்டுமல்ல, ராணுவத்தின் அசுரப்பிடியில் இப்போதும் பர்மா, மியான்மர் என்கிற பெயர் மாற்றத்துடன் தொடர்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.
1988-ல் வெடித்த மக்கள் போராட்டம், ராணுவ ஆட்சியைக் கலகலக்க வைத்தது. போராட்டத்தின் விளைவாக நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மகத்தான வெற்றி பெற்றதே தவிர, ராணுவத் தளபதிகளால் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சூகி கைது செய்யப்பட்டு இன்றுவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
அடங்கி இருந்த மக்களின் எழுச்சி மறுபடியும் எழுந்திருக்கிறது. இந்த முறை, மக்களின் போராட்டத்துக்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது அரசியல்வாதிகளோ, சுதந்திரப் போராளிகளோ அல்ல, புத்த பிக்குகள்! அதுதான், ராணுவ ஆட்சியாளர்களை நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கும் பிரச்னை. ராணுவத்தினரிடமிருந்து “பிச்சை’ வாங்க மாட்டோம் என்று புத்தபிக்குகள் அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டிருக்கும் சம்மட்டி அடி.
புத்தமத வழக்கப்படி, ஒவ்வொரு பௌத்தரும் புத்த பிக்குவுக்குத் தினசரி அருந்த உணவு வழங்குவது என்பது மதக்கடமைகளில் ஒன்று. இதை புத்தபிக்கு ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, எந்தவொரு பௌத்தருக்கும் அவமானகரமான விஷயம். அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த நிலையில், தங்களது ராணுவ வீரர்களே எதிராக எழுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள். உங்களிடமிருந்து பிச்சை வாங்குவதாக இல்லை என்பதைத் தெரிவிக்கும்வகையில் தங்களது பிச்சைப் பாத்திரத்தைத் தலைகீழாகப் பிடித்தபடி ஊர்வலமாக புத்தபிக்குகள் சென்றிருக்கிறார்கள் என்பது தகவல்.
யாங்கூனில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் புத்தபிக்குகளின் தலைமையில் ஊர்வலத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இதேபோன்ற போராட்டங்கள், மாண்டாலே உள்ளிட்ட சுமார் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன. சுமார் ஐந்தரைக் கோடி மக்கள்தொகையுள்ள மியான்மரில் ஏறத்தாழ நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தபிக்குகள் உள்ளனர் என்பது மட்டுமல்ல, மதம் இந்த நாட்டு மக்களின் உணர்வுடன் கலந்த விஷயமாகவும் இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் மக்களில் பலர் காயமடைந்திருப்பதும் சிலர் இறந்திருப்பதும் போராட்டத்தை வலுப்படுத்துமா பலவீனப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆனால், புத்தபிக்குகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது நிச்சயமாக ராணுவத் தலைமையைப் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
சீனாவின் துணையோடு, பாகிஸ்தானின் ரகசிய உதவியுடன் மியான்மர் ராணுவ ஆட்சி அணுகுண்டு தயாரிப்பில் இறங்கி, எந்த நிமிடத்திலும் குண்டை வெடித்துப் பரிசோதனை நடத்தும் நிலையில் இருக்கிறது என்று தெரிகிறது. ராணுவ ஆட்சியின் கையில் அணுகுண்டு என்பது போன்ற ஆபத்து எதுவுமில்லை. இந்தியாவில் ஒருபுறம் பாகிஸ்தான், மறுபுறம் மியான்மர். அதைப் பற்றி நமது அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மியான்மரில் மக்களாட்சி மலராவிட்டால் ஆபத்து நமக்கும்தான்.
எதற்கெடுத்தாலும் ராணுவம் வர வேண்டும், ராணுவ ஆட்சிதான்மேல் என்று விவரம் புரியாமல் சொல்பவர்களுக்கு நமது பதில் – ராணுவ ஆட்சியின் லட்சணத்தை மியான்மரில் பாருங்கள்!