ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்ப்பு
திருவனந்தபுரம், அக். 13: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் “பொங்கல்’ வழிபாடு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவார்கள். உலகத்திலேயே மிக அதிக அளவில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் மதச் சடங்குகளில் ஒன்று என்பதற்காக இந் நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் “பெண்களின் சபரிமலை’ என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் இருக்கும் பகவதி அம்மன் கண்ணகியின் தெய்வீக வடிவமாகக் கருதப்படுகிறது. தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி.
மதுரையை எரித்துவிட்டு கொடுங்கலூருக்குச் சென்றுகொண்டிருந்த கண்ணகியை ஆற்றுக்கால் பெண்கள் வரவேற்று உபசரித்து உணவளித்ததாக இக்கோயிலில் பாடப்படும் பாரம்பரியப் பாடலில் குறிப்புகள் உள்ளன.
ஆண்டுதோறும் மலையாள மாதமான கும்பத்தில் வரும் பூரம் தினத்தில், இக்கோயிலில் பெண்கள் கூடி பொங்கல் சமைத்து வழிபடுவது வழக்கம். இந்த வழிபாட்டில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பொங்கலிடுகின்றனர். 1997-ல் அதிக அளவாக 15 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்.