காவல்துறையினரின் கடமை
இரா. செழியன்
ஒரு நாட்டில் மக்களுக்குத் தேவையான வசதிகள் பல முனைகளில் வேகமாகப் பரவியும் வளர்ந்தும் வரும் நிலையில், அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களும் பொறுப்புகளும் அதிகமாகின்றன. அவற்றை ஒட்டி நாட்டின் சட்டங்களும் வேலைத் திட்டங்களும் எண்ணற்ற அளவில் விரிவடைந்து வருகின்றன.
மக்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் செய்யப்பட வேண்டிய பணிகளை அரசாங்கம் பல துறைகளில் உள்ள அதிகாரிகள் மூலம், நிறைவேற்ற வேண்டிய நிலைமை இருக்கிறது. நிர்வாகம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை ஒவ்வொரு நிலைமைக்கும் ஏற்றவாறு, நுணுக்கமாகச் சட்டத்தில் எழுதி வைக்க முடியாது. அதற்காக பணிகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு செய்யப்படுகிறது. நடைமுறையில் உண்டாகும் நிலைமைகளுக்கு ஏற்றவாறு உசிதப்படி அதிகாரிகள் செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
உசிதப்படி செயல்பட வேண்டும் என்பதால், மனம் போன போக்கில் ஒவ்வோர் அதிகாரியும் தமக்குத் தரப்பட்ட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. சட்டத்தை மீறி, சட்டத்தின் நோக்கத்தை மீறி, தேவையற்ற நியாயமற்ற முறையில் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை ஓர் அதிகாரி பயன்படுத்தினால், அது கொடுங்கோன்மை மிக்க எதேச்சாதிகாரமாக ஆகிவிடும்.
கலவரத்திலும் வன்முறையிலும் ஒரு கும்பல் ஈடுபட்டால், சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸôர் எடுக்க வேண்டும் என்பதற்குச் சட்டம் விதிமுறைகளை வகுத்திருக்கிறது. எச்சரிக்கை, கண்ணீர்ப்புகை, தடியடி, துப்பாக்கிப் பிரயோகம் என்பவற்றில் ஒன்றை உசிதப்படி அதிகாரிகள் கையாள வேண்டும். அப்படி இல்லாமல், எடுத்ததெற்கெல்லாம் துப்பாக்கிப் பிரயோகத்தை போலீஸ் பயன்படுத்தக் கூடாது.
அக்டோபர் 24, 2006ஆம் நாளன்று ராஜாஜி பொதுவிவகார மையத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம், சென்னைப் போலீஸ் கமிஷனரிடமிருந்து அனுமதி வழங்கப்படாத காரணத்தால், ரத்து செய்யப்பட்டது.
பொதுவான அமைதி – ஒழுங்கு பாதிக்கப்படக்கூடிய நிலைமைகளில், இபிகோ 144 பிரிவின் கீழ் கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதிக்கிறது. கூட்டங்கள் – ஊர்வலங்கள் நடத்துவதை அனுமதிக்கவும் தடுப்பதற்குமான அதிகாரம் சென்னைப் போலீஸ் சட்டம் 1888-ன்கீழ் சென்னைப் போலீஸ் கமிஷனருக்குத் தரப்பட்டிருக்கிறது. அதன்படி கூட்டத்தை நடத்த முற்படுபவர் தருகிற மனுவை ஆராய்ந்து, கூட்டத்தை நடத்துவதற்கு சில கட்டுப்பாடுகளுடன் போலீஸ் ஆணையர் அனுமதி வழங்கலாம் அல்லது அனுமதி வழங்காமற் போகலாம்.
அனுமதி வழங்காத நிலைமையில் போலீஸ் கமிஷனர் கையாள வேண்டிய முறைகளை சட்டம் தெளிவுபடுத்தி இருக்கிறது. கூட்டம் நடத்துபவருக்கு வாய்ப்பு அளித்து, நேரிடையாக அவரோ, அவருடைய வழக்குரைஞரோ கூட்டம் நடத்துவதற்கு உள்ள தமது வாதங்களை முன்வைக்கலாம்.
அதன்பிறகும் அனுமதி வழங்க முடியாது என்று போலீஸ் கமிஷனர் முடிவு எடுத்தால் அனுமதி வழங்காததற்கான காரணங்களை எழுத்து மூலம் காட்டி, அனுமதி வழங்க மறுக்கும் உத்தரவைத் தரலாம்.
அக்டோபர் 24 கூட்டத்திற்கான மனுவின் மீது, தமது வாதங்களை முன்வைக்க ராஜாஜி மையத்தைச் சேர்ந்தவருக்கோ, அவரது வழக்குரைஞருக்கோ, வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதன்பிறகு, சட்டப்படி அனுமதி வழங்கப்படாததற்கான காரணத்தை எழுத்து மூலம் உத்தரவில் தந்திட, சென்னைப் போலீஸ் கமிஷனர் தவறிவிட்டார்.
ஒருவேளை எழுத்து மூலம் காரணங்களை எழுதி போலீஸ் கமிஷனர் தமது அலுவலகக் கோப்பில் வைத்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால், முடிவில் அனுமதி கேட்டவருக்கு கூட்டம் நடத்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று ஏற்பட்டுவிட்டது. சட்டத்தை மீறி கூட்டத்தை நடத்த விரும்பாமல், கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்பதற்கான அறிவிப்பை பொதுமக்களின் பார்வைக்கு கூட்ட அமைப்பாளர்கள் வைத்தார்கள்.
கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வரவில்லை என்றால், கூட்டம் நடத்துவதற்குத் தடை போடப்படவில்லை என்று எடுத்துக்கொண்டு கூட்டத்தை நடத்தியிருக்கலாமே என்று சிலர் நினைக்கலாம்; மௌனம் சம்மதம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று கூறலாம்.
ஆனால் போலீஸ் சட்டத்தில் 6-வது விதிமுறையில் ஒரு கடும் எச்சரிக்கை இருக்கிறது. போலீஸ் அனுமதியைப் பெற வேண்டிய கட்டாயம் அமலில் இருக்கும்பொழுது, அனுமதி பெறாமல் யாராவது கூட்டம் நடத்தினால், ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது ஒரு மாதத்துக்கு உட்பட்ட சிறைவாசம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனைக்கான குற்றத்துக்கு அவர் ஆளாக நேரிடும் என்பதுதான்.
நிர்வாகத்தின் உள் அமைப்பில் எத்தகைய ஏற்பாடுகளைச் செய்து கொண்டாலும், சட்டத்தின்படி பொறுப்பை வகிப்பவர் சட்டத்தில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அனுமதி வழங்குவதைக் கவனித்திருக்க வேண்டும். வெளிப்படையாக நமக்குத் தெரிவது, கூட்டம் நடத்துவதற்கான அனுமதி அன்று வரவில்லை, கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்பவைதாம்.
பொதுக்கூட்டம், தனிப்பட்ட ஓர் அமைப்புக்காகவோ, ஒரு சிலருக்காகவோ ஏற்பாடு செய்யப்பட்டதல்ல, பொதுமக்கள்பட்ட இன்னல்களை வைத்து, பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள பொதுமக்களுக்கு உரிமை இருக்கிறது. எத்தகைய காரணங்களுக்காக அந்தக் கூட்டத்துக்கு அனுமதி தரப்படவில்லை என்பது தெரிந்தால், வருங்காலத்தில் கூட்டம் நடத்துபவர்களுக்கு, அது உதவியாக இருக்கும்.
மேலும், ஓர் அதிகாரிக்கு ஒரு செயல்பாட்டுக்கான அதிகாரம் தரப்பட்டிருக்கிறது என்றால், அதனை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு அவரைச் சார்ந்ததாக ஆகும். எந்த அளவு அதிகாரி பொறுப்பை நிறைவேற்றினார் என்பதுடன் நிறைவேற்றுவதில் குறைபாடு ஏற்பட்டால், அதனை ஆராய்ந்து தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் மக்களாட்சி முறையில் ஏற்படுகிறது.
கூட்டம் நடைபெறுவதற்கான அனுமதியை வழங்குவதற்கும் வழங்காமற் போவதற்கும் காவல்துறை ஆணையருக்கு சில வழிமுறைகளை சட்டம் வகுத்திருக்கிறது. ஆனால் அந்த வழிமுறைகளின்படி சென்னை காவல்துறை நடந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணங்கள் எவை என்பதை பொதுமக்களுக்கு அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.