முகங்கள்: “”மாறாமல் இருப்பது மைல்கல்லும் மதியீனனும்தான்!”
மோதிலால் நேரு, காந்தி, நேரு, ராஜாஜி, பெரியார் போன்ற பெருந்தலைவர்களின் பேரன்புக்குப் பாத்திரமான இந்திய அளவில் காங்கிரஸ் இயக்கத்துக்காகப் பாடுபட்ட தலைவர் ஜோசப் ஜார்ஜ். வரலாற்று மாணவர்களின் பார்வைக்கும் சிக்காமல் காணாமல் போய்விட்ட இவரைப் பற்றி சமீபத்தில் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். எழுதியிருப்பவர் அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சி (திருப்பதி) அமைப்பாளர் பழ. அதியமான். எழுத்தாளர் வ.ரா. வின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றதும் எழுத்தாளர் தி.ஜ.ர. பற்றி இவர் எழுதிய நூல் சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டிருப்பதும் இவருடைய சிறப்புகள். அவரைச் சந்தித்தோம்.
இந்திய விடுதலை வரலாற்றில் ஜோசப் ஜார்ஜின் இடம்?
மைய நீரோட்ட அரசியலில் கிறித்துவர்களின் பங்கேற்பு அவ்வளவாக இல்லை. இந்தக் குறையைத் தீர்த்து வைப்பதாக இருக்கிறது ஜார்ஜ் ஜோசப்பின் இந்திய விடுதலைப் போராட்டப் பங்களிப்பு. மகாத்மா காந்தி, “”ஜார்ஜ் ஜோசப் என்னுடைய நெருக்கமான தோழர்களுள் ஒருவர். நான் எரவாடா சிறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது யங் இந்தியாவின் ஆசிரியர். அதற்கு முன்னால் என் விருப்பப்படி (மோதிலால் நேருவின்) “தி இண்டிபென்டன்ட்’ பத்திரிகையின் ஆசிரியர். நாட்டுக்காக வருமானமுள்ள வழக்கறிஞர் தொழிலைத் துறந்தவர். சிறை சென்றவர். உற்சாகமுள்ள நாணயமான தேசியத் தொண்டர்.” இது ஜார்ஜ் ஜோசப் வாழும் காலத்திலேயே காந்தி (1929)யிடமிருந்து அவருக்குக் கிடைத்த பாராட்டு.
காந்தி பாராட்டிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஜோசப், தீவிர அரசியல்வாதியாக, தொழிற்சங்கவாதியாக, வழக்கறிஞராக தமிழக தேசிய அரசியலில் 25 ஆண்டு காலம் செயல்பட்டார். ஆலைத் தொழிலாளர், குற்றப் பரம்பரையினர், வரதராஜுலு நாயுடு மீதான வழக்கு போன்றவற்றில் ஜார்ஜ் ஜோசப்பின் பணி மிகுதி. வ.ரா. சொன்னது போல ஜோசப்பும் ராஜாஜியும்தான் 1910-லிருந்து 1938 வரை ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் தமிழக காங்கிரசின் வேலைத் திட்டங்களை யோசித்துத் தீர்மானித்தனர். 100 ஆண்டுகால காங்கிரஸ் வாழ்க்கையில் நான்கில் ஒரு பகுதி. ஆனால் ஜார்ஜ் ஜோசப் என்றால் யார் என்று கேட்கும்படிதான் நிலைமை இருக்கிறது.
ஜோசப் பரவலாக அறியப்படாததற்கு விடுதலைக்கு முன்பே மறைந்துவிட்டதுதான் காரணமாக இருக்குமா?
அப்படித் தோன்றவில்லை. பாரதி, சத்தியமூர்த்தி, வ.உ.சி. போன்றவர்கள்கூட சுதந்திரத்துக்கு முன்பு இறந்தவர்கள்தானே? ஜார்ஜ் ஜோசப் சிறுபான்மைச் சமூகத்தில் பிறந்ததும் அரசியல் வாரிசோ, குடும்ப வாரிசோ தொடர்ந்து அவரைப் பற்றிச் சமூகத்தில் பேச்சலைகளை உருவாக்காததும் காரணங்களாக இருக்கலாம். ஆனால் சரியாக மனசாட்சிப்படி செயல்பட்டால் காலம் கடந்தாவது அறிவுலகத்திலாவது நினைக்கப்படுவார்கள் என்பது ஓர் உண்மை.
தன் நிலைப்பாடுகளைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டிருந்தார் ஜோசப்… காந்திக்கு நெருக்கமாக இருந்து பின்பு அவருடன் முரண்பட்டு நீதிக்கட்சியில் இணைந்து செயல்பட்டு மீண்டும் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்த மாற்றங்கள் அவருடைய செல்வாக்கைக் குறைத்திருக்குமா?
இருக்கலாம். கருத்துகளை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தவர் என்றொரு கருத்து உண்டு. அதைப் பற்றி வ.ரா. இப்படிச் சொல்கிறார்: “”மைல் கல்லும் மதியீனனும்தான் மாறாம இருப்பாங்க”.
ஜோசப் அறிவாளி. காந்தி கருத்தை மாற்றிக் கொள்ளவில்லையா? கலப்பு மணத்துக்கு முதலில் காந்தி ஒப்புக் கொள்ளவில்லையே. சுதேசா- கிருபளானி கலப்பு மணத்துக்கு உடனே வா ஒப்புக் கொண்டார் காந்தி?
“மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிப்பார்கள் கம்யூனிஸ்டுகள்’ என்ற புகழ் பெற்ற பத்திரிகை வாசகத்தை கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக எழுதின மாஜினி பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறவில்லையா? மாறுவது, முரண்படுவது அறிவுக்கு இயல்பு. ஜோசப்பின் முரண்பாடுகளைத் தவறென்று சொல்ல முடியாது.
அப்படி மாறுவதற்கு அவருக்குப் போதுமான காரணங்கள் இருந்தனவா?
காந்தி, நேரு ஆகியோருடன் நெருக்கமாக இருந்த ஒருவர், அவர்கள் படுவேகமாக அரசியல் களத்தில் செல்வாக்குடன் வளர்ந்து வருவதைக் கண்டும் ஜோசப் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அதில் அவருடைய சுயநலம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அது அப்போதைய அரசியல், சமூக சூழ்நிலையைப் பொறுத்தே அமைந்திருந்தது. சில நேரங்களில் அறிவுப் பூர்வமாகவும் சில நேரங்களில் உணர்ச்சிபூர்வமாகவும் அவர் முடிவெடுத்திருக்கிறார்.
குற்றப் பரம்பரையினர் என்று ஆங்கிலேய ஆட்சியில் சட்டத்தின் பிடியில் சிக்கித் தவித்தவர்களுக்கு ஜோசப் பாடுபட்டது குறித்து?
குற்றப் பரம்பரையினருக்கு ஜோசப் அனுசரணையாகச் செயல்பட்டது பற்றி இந்த நூலில் மிகக் குறைவான தகவல்களே தந்திருக்கிறேன். அவர் மறைந்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் மதுரையில் இருக்கும் அவருடைய கல்லறையில் நினைவு தினத்தன்று குறிப்பிட்ட பிரிவினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதிலிருந்தே அவர்களுக்கு ஜோசப் எந்த அளவுக்குப் பாடுபட்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.