ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கழிவுகளை அகற்றும் அத்தி!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771
சத்தியமங்கலத்துக்கு அருகிலுள்ள கடம்பூர். அங்குள்ள மலைத் தொடரில் உள்ள எங்கள் தோட்டத்தில் “சிம்லா அத்தி’ என்னும் பெரிய அத்தி மரம் உள்ளது. அது வருடம் முழுவதும் பழங்களைக் கொடுத்துக் கொண்டுள்ளது. இந்தப் பழங்களை எவ்வாறு சத்துக் குறையாமல் பதப்படுத்துவது, அத்திப் பழத்தின் மருத்துவக் குணங்கள் என்ன? என்பதைப் பற்றிக் கூறவும்.
உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப் பழமும் ஒன்று. நம்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுபவை அத்தியும் பேயத்தியுமாகும். நீங்கள் குறிப்பிடும் சிம்லா அத்தி சீமை அத்தி வகையைச் சார்ந்ததாக இருக்கலாம்.
இந்தியாவில் சீமை அத்தி, பூனா, பல்லாரி, அனந்தபூர் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. எனவே வெளிநாடு, இந்திய காடுகள், தோட்டங்கள், மலைகள் என உற்பத்தியாகும் இடங்களைக் கொண்டும், வெண்மை, சிவப்பு, கறுப்பு என நிறங்களைக் கொண்டும் சீமை அத்தி பல ரகமாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றுள் வெண்மை, சிவப்பு ஆகிய இனத்தவை பெரும்பாலும் பழமாக உண்பதற்கும், கறுப்பு நிறத்தது மருந்துகளுக்கும், போதைதரும் பானங்கள் செய்வதற்கும் உபயோகிக்கப்படுகிறது. உற்பத்தியாகும் இடத்தில் பச்சையாக உபயோகப்படினும் கடைகளில் உலர்ந்த பழங்களே நமக்குக் கிடைக்கின்றன.
இவற்றை விசேஷ முறைப்படி இறக்கியோ அல்லது தானாகப் பழுத்து உதிரும் வரை காத்திருந்து சேமித்தோ பதம் செய்கின்றனர். தானாகப் பழுத்து உதிரும் நிலையில் இவை முக்கால் பங்கு உலர்ந்தே இருக்கும். இவ்விதம் சேமித்த பழங்களைத் தட்டுகளில் நெருக்கமில்லாமல் பரப்பி சிறிது கந்தகப் புகை காட்டிப் பின்னர் வெய்யிலில் சில நாட்கள் உலர்த்தி, அழுத்தி சப்பையாகச் செய்து நடுவே துளையிட்டு நாரில் கோர்த்து வெளியிடங்களுக்கு அனுப்புவதால் நீண்ட நாட்கள் கெடாமலிருக்கும். அவற்றின் மிருதுத் தன்மையையும் சுவையையும் பரிமளிக்கச் செய்ய உப்புக் கலவையில் நனைத்துப் பதப்படுத்திக் கட்டி வெளியிடங்களுக்கு அனுப்பலாம். இக் கனிகளுள் சிறிய வண்டுகள் இருக்க வாய்ப்புள்ளதால் கவனத்துடன் உபயோகிக்க வேண்டும். இவை அனைத்தும் சற்றேறக் குறைய ஒரே குணங்கள் கொண்டவையெனினும் பேயத்தியைக் காட்டிலும் அத்தியும், அத்தியைக் காட்டிலும் சீமையத்தியும் தரத்திலும் குணத்திலும் சிறந்தவை.
இவற்றின் இனிப்புச் சுவையும் குளிர்ச்சி தரும் தன்மையும் துவர்ப்புச் சுவையும் காரணமாக உடலிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் திரவங்களை ஓரளவு தடுத்து நிறுத்துகிறது. அதிகமான வயிற்றுப்போக்கு, பெண்களுக்குத் தோன்றும் அளவுக்கு மீறிய மாதவிடாய் போக்கு, வாய், மூக்கு மற்றும் வியர்வை நாளங்கள் வழியே ரத்தமாக வெளியேறும் ரத்தபித்த நோய் , ரத்த மூலம் ஆகியவை குணமடைகின்றன. மேலும் புண் சுத்தமாவதற்கும் விரைவில் ஆறுவதற்கும் இதன் துவர்ப்புச் சுவை உதவுகிறது.
இனிப்புச் சுவை, குளிர்ச்சித்தன்மை, நெய்ப்புத்தன்மை ஆகியவை செயல்படுவதால் மனதிற்கு ஒரு தெளிவையும் உடலுக்குப் புஷ்டியையும் ஏற்படுத்துவதுடன் மலச்சிக்கலையும் அகற்றுகிறது. பித்தத்தின் சகஜ நிலை மாற்றத்தால் தோன்றும் மயக்கம், உடல் எரிச்சல் , தண்ணீர் தாகம், சோர்வு முதலியவையும் குணமடைகின்றன. உதடு, நாக்கு, வாய் இவற்றில் உண்டாகும் புண்ணும் வெடிப்பும் குணமடைகின்றன.
கபம் மூச்சுக் குழாய்களின் உள்ளே படிந்து இருமல், மூச்சுத் திணறல் முதலியவற்றை உண்டாக்குகின்றது. அந்த நிலைகளில் அத்திப் பழங்களை உபயோகிப்பதால் கபத்தின் அடைப்பு விடுவதுடன் இருமலும் குறைகிறது. கபமும் எளிதில் கோழையாக வெளியேறுகிறது.
இக்கனிகளில் பல உலோகச் சத்துகளுடன் இரும்புச் சத்தும் இருப்பதால் இவை ரத்தத்தை அதிகரிக்கவும், ரத்தத்தின் தரக் குறைவால் உண்டாகும் பாண்டு, காமாலை, வீக்கம் ஆகிய நிலைகளிலும் ரத்தத்தின் மற்ற கோளாறுகளால் உண்டாகும் அரிப்பு, சொரி, குஷ்டம் போன்ற தோலைப் பற்றிய வியாதிகளிலும் உபயோகிக்கச் சிறந்தது.
அத்திப் பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறு சுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. ஆகையால் ஈரல், குலைக்கட்டி கண்ட குழந்தைகளும் இக்கனிகளை உட்கொள்ளலாம். சிறுநீர்க் கல்லடைப்பு தடங்கலை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது.
ஆங்காங்கு இறுகிய கழிவுப் பொருள்களைப் பக்குவப்படுத்தி இளக்கி வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது. சிறுநீரில் சர்க்கரை உள்ளவர்கள் கூட இக்கனியை உபயோகித்துக் குணம் பெறலாம். இக்கனிகளை அரைத்துக் கட்டிகளின் மேல் பழுப்பதற்காகப் பூசுவதுமுண்டு.
உபயோகிக்கும்விதம்:
1.பழங்களைப் பிரித்துத் தேனிலும் பொடித்த கற்கண்டிலும் துவைத்து உட்கொள்ளலாம்.
2.பிரித்த பழத்தினுள் பொடித்த கற்கண்டுத் தூளைச் செலுத்தி இரவு பனியில் வைத்திருந்து காலையில் உண்டுவர உடல் சூடு தணியும்.
3.அத்திப் பழம், பாதாம்பரும்பு, அக்ரோட் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரப் பருப்பு, பூனைக்காலி விதைப் பருப்பு, ஆப்பிள் விதை, ஏலக்காய், கல்கண்டு இவற்றைச் சம எடையாகப் பொடித்து, பசுவின் நெய்யில் கலந்து அத்துடன் சிறிது குங்குமப் பூ சேர்த்து, ஒரு வாரம் ஊறிய பின்னர் தினம் 10 – 15 மி.லி. வீதம் காலையில் உட்கொள்வதால் பலம், புஷ்டி ஏற்படும். ஆண்மை பெருகும்.