நடிகர் கமல் நடிக்கும் “தசாவதாரம்’ படத்துக்கு தடை கோரி போலீஸில் மனு
சென்னை, செப். 13: நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் “தசாவதாரம்’ படம் எடுப்பதை தடை செய்யக் கோரி போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் லத்திகா சரணிடம், உதவி இயக்குநர் செந்தில்குமார் கொடுத்துள்ள புகார் விவரம்:
சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் “தனுஷ்’ என்ற படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார். அச்சமயத்தில் படம் திடீரென கைவிடப்பட்டது. அப்போது, 10 முக்கிய கதாபாத்திரம் கொண்ட ஒரு கதை எழுதினார். இந்தக் கதையில் நடிக்க நடிகர் கமல் தான் சரியானவர் என்று நினைத்து அவரது அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த முரளி, கதையை வாங்கிப் படித்துவிட்டு, அதன் பிரதியை வாங்கி வைத்துக் கொண்டார். இதற்கிடையில், ஒரு நாள் முரளி போனில் செந்தில்குமாரை அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். இதற்கிடையில், செந்தில்குமாரை உதவி இயக்குநராக நியமிக்கும்படி கமல் கூறினாராம்.
ஆகஸ்ட் 18-ம் தேதி, “தசாவதாரம்’ படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதுதொடர்பாக முரளியிடம் விளக்கம் கேட்டுள்ளார் செந்தில்குமார். அப்போது உன்னிடம் யார் போனில் பேசியது? என்று கூறிய முரளி, இனிமேல் அலுவலகத்துக்கு வரக்கூடாது என்று கூறினாராம்.
எனவே, இரு தரப்பையும் அழைத்து பேசி நியாயம் வழங்க வேண்டும். அதுவரை “தசாவதாரம்’ படம் எடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.