கே.பி.கே. நற்பணி மன்றத்தை ஸ்டாலின் பெயரில் மாற்றக் கூடாது- கருணாநிதி அறிவுரை
சென்னை, நவ. 7: மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.கந்தசாமி பெயரில் உள்ள நற்பணி மன்றத்தை ஸ்டாலின் பெயருக்கு மாற்றக் கூடாது என்று மதிமுகவிலிருந்து விலகி வந்தவர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
மதிமுகவைச் சேர்ந்த 1500 பேர் திமுக தலைவர் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தனர். அப்போது கருணாநிதி பேசியதாவது:
பல மன்றங்கள், இன்றைய தினம் வேறு பெயர்களில் திமுக சார்புடைய முன்னணி வீரர்களின் பெயர்களில் மாற்றப்பட்டுள்ளன. அதிலே என்னுடைய கண்ணுக்கு தென்பட்ட மன்றத்தைப் பற்றி இங்கே சொல்ல விரும்புகிறேன். ஒரு நற்பணி மன்றத்தை தளபதி ஸ்டாலின் மன்றம் என்று மாற்றியிருக்கிறீர்கள். அது உங்கள் விருப்பம். அந்த வரிசையில் இன்னொரு மன்றத்தை, கே.பி.கே. நினைவு நற்பணி மன்றத்தை, ஸ்டாலின் மன்றம் என்று மாற்றி இருக்கிறீர்கள். அது தேவையில்லாத ஒன்று, கூடாத ஒன்று. ஏனென்றால் கே.பி.கே. திமுகவிலேயே இறுதி நாள் வரை இருந்து சில சகுனிகள் அவரை மனமாற்றம் செய்ததின் காரணமாக கடைசி வரையில் மனக்குழப்பத்தில் இருந்தாரே தவிர, திமுகவுக்கு எதிர் வரிசையில் நிற்கிற அந்த நிலையை அவர் கடைப்பிடிக்கவில்லை. மறைந்த அந்தப் பெரியவரின் நினைவைப் போற்றுகிற வகையில் கே.பி.கே. நினைவு நற்பணி மன்றம் என்ற பெயரை தயவு செய்து மாற்றியமைக்க வேண்டாம் என்று கருணாநிதி கூறினார்.
தென் சென்னை மாவட்ட மதிமுக தொண்டர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ராஜி, மாணவர் அணி அமைப்பாளர் பி. பிச்சையப்பன் உள்பட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.