ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இடுப்புத் தண்டுவடத்தை வலுப்படுத்த…
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
எனது மகளுக்கு 41 வயது ஆகிறது. 5 ஆண்டுகளுக்கு முன் வயலில் நெல் நாற்று கத்தைகளைக் கலைத்துப் போடும்போது பின்புறம் இடுப்பில் தண்டுவடத்திற்கு அருகில் ஒரு நரம்புப் பகுதியில் “கட்’ ஆகிவிட்டது. அலோபதி வைத்தியம் பார்த்து சரியாகவில்லை. ஆழியார் வேதாத்திரி மகரிஷி வைத்தியப் பிரிவில் சில மூலிகைத் தைலம் கொடுத்து தேய்க்கச் சொன்னார்கள். தைலப்பசை இடுப்பில் இருக்கும்போது வலி இல்லை. தைலம் தடவாமல் விட்டுவிட்டால் வலி வந்து விடுகிறது. இதற்கு ஆயுர்வேதத்தில் என்ன மருந்து இருக்கிறது?
முதுகுத் தண்டுவட எலும்புப் பகுதியில் ஓர் எலும்பு அடுத்த எலும்புடன் உராயாமலிருக்கவும், வேகமான நடை, வண்டிப் பயணம், குதித்தல் போன்ற செய்கைகளில் ஏற்படும் அதிர்வலைகளைச் சமாளித்து ஒரு குஷன் போல செயல்படும் வில்லைகள் இருக்கின்றன. உங்கள் மகள் அதிக நேரம் குனிந்து கொண்டு வேலை செய்யும்போது, இந்த வில்லைகளில் அழுத்தம் அதிகரித்திருக்கக் கூடும். அது மாதிரியான நிலையில் பதட்டத்துடன் திடீரென்று திரும்புவது, இடுப்பில் ஏற்படும் வலியால் தடாலென்று தரையில் அமர்வது, குளிர்ந்த தண்ணீரை அதிக அளவில் குடிப்பது; “சில்’ என்று இருக்கும் தண்ணீரில் நிற்பது போன்ற செய்கைகளினால் நீங்கள் கூறும் நரம்பு பிய்த்துக் கொண்ட நிலை ஏற்படலாம். “பதறாத காரியம் சிதறாது’ என்பார்கள். வீட்டில் காலிங்பெல் அடித்தவுடன், விருட்டென்று தலையைத் திரும்பிப் பார்ப்பதன் விளைவாக கழுத்து எலும்பின் வில்லை இடம் பிசகி, கடும் வலியை ஏற்படுத்துவதைப் போல தங்கள் மகளுக்கும் வில்லைப் பகுதி இடுப்பில் பிசகி இருப்பதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளன.
மூலிகைத் தைலத்தின் தேய்ப்பால் வலி குறைவதாகக் கூறியுள்ளீர்கள். தேய்க்கவில்லையென்றால் வலி கூடுகிறது. எலும்புகளின் உராய்வைத் தைலப்பசை தடுப்பதை இது காட்டுகிறது. வில்லை செய்ய வேண்டிய வேலையைத் தைலப்பசை செய்கிறது. வில்லை நிரந்தரமாகச் செய்ய வேண்டிய வேலையைத் தைலப்பசை தற்காலிகமாகச் செய்கிறது. வில்லை தன் இருப்பிடத்திற்குத் திரும்பி, தான் இழந்த ஊட்டத்தைப் பெற்று மறுபடியும் எலும்புகளைத் தாங்கி நிறுத்தும் சக்தியைப் பெற பசும்பாலில் வேக வைத்த பூண்டு உதவும். 50 கிராம் தோல் உரித்த சுத்தமான பூண்டு எடுத்து லேசாக நசுக்கி 400 மிலி பசும்பாலுடன் சேர்க்கவும். ஒரு லிட்டர் 600 மில்லி லிட்டர் தண்ணீர் கலந்து அடுப்பில் ஏற்றி, 400 மிலி அதாவது பால் மீதம் ஆகும்வரை கொதிக்கவிட்டு வடிகட்டவும். இந்தப் பாலை, வெதுவெதுப்பாக காலை மாலை வெறும் வயிற்றில் 200 மில்லி லிட்டர் சாப்பிடவும். இதில் தான்வந்திரம் 101 எனும், நெய் மருந்தை 10 சொட்டு கலந்து சாப்பிட மிகவும் நல்லது.
வில்லைகளுக்கு ஏற்படும் ஊட்டத் தடையை மாற்றி போஷாக்கை ஏற்படுத்தும் இம்மருந்தைத் தொடர்ந்து 21 நாள்கள் முதல் 48 நாள்கள் வரை சாப்பிடலாம்.
பாதிக்கப்பட்டுள்ள இடுப்பு தண்டுவடப் பகுதியில் மூலிகைத் தைலத்தைத் தேய்ப்பதைவிட ஊற வைப்பதே நல்லது. ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய முறிவெண்ணெய்யுடன் சிறிது தான்வந்திரம் தைலத்தைக் கலந்து இரும்புக் கரண்டியில் சூடாக்கி, சிட்டிகை உப்பு, எண்ணெய்யில் கரைத்த பிறகு பஞ்சில் முக்கி வலி உள்ள இடத்தில் போடவும், சுமார் ஒரு மணிநேரம் ஊறிய பிறகு வேறு ஒரு துணியால் துடைக்கவும். காலை இரவு இருவேளை உணவிற்கு முன்பாக இதுபோலச் செய்யவும்.
ஆஸனவாய் வழியாகச் செலுத்தப்படும் மூலிகைத் தைலமும், கஷாயமும் குடல்காற்றை அடக்கி இடுப்பு எலும்பு மற்றும் வில்லைகளுக்கு வலிவூட்டும் சிகிச்சை முறைகளாகும். இப்படி வாய்வழியாகவும், ஆஸனவாய் வழியாகவும், தோல் வழியாகவும் முதுகு தண்டுவடத்தை பலமாக்கி, வில்லைகளை நேராக்கி, வலியிலிருந்து விடுபடலாம்.
ஆயுர்வேத மருந்துகளில் சஹசராதி கஷாயம், மஹாராஸ்னாதி கஷாயம், க்ஷீரபலா 101 போன்ற மருந்துகள் சாப்பிட நல்லதாகும்.
மூலிகை இலைகளால் ஒத்தடம் கொடுத்தல், பாலில் வேகவைத்த நவர அரிசியினால் தேய்த்து விடுதல், உணவில் பருப்புப் பண்டங்களைக் குறைத்தல், பளுவான பொருட்களைத் தூக்காதிருத்தல், குனிந்த நிலையில் வேலை செய்யாதிருத்தல் போன்றவற்றின் மூலமாகவும் இடுப்புத் தண்டுவடத்தை வலுபடுத்தலாம்.