சேவை வரி சுமை
அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய அரசு பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் சேவை வரியை மேலும் பல சேவைகளுக்கு விரிவுபடுத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் இப்போது 12 சதவீதமாக உள்ள சேவை வரியை 14 சதவீதமாக உயர்த்தவும் அவர் உத்தேசித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பொருள்களை உற்பத்தி செய்தால் அவற்றின் மீது மத்திய கலால் தீர்வை விதிப்பது நமது நாட்டில் மிக நீண்ட காலமாக இருந்து வரும் நடைமுறையாகும். சேவைகள் மீது வரி விதிக்கப்படாமல் இருந்தது. 1994-ம் ஆண்டில் இப்போதைய பிரதமர் மன் மோகன் சிங், நிதி அமைச்சராக இருந்தபோது சேவை வரி முதல் முறையாக தொலைபேசி உள்பட மூன்று சேவைகள் மீது விதிக்கப்பட்டது. பின்னர் இந்த வரியானது படிப்படியாக பல்வேறு சேவைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
அதே சமயத்தில் ஆரம்பத்தில் 5 சதவீதமாக இருந்த இந்த வரி, படிப்படியாக உயர்த்தப்பட்டு, இப்போது 12 சதவீத அளவில் உள்ளது. கல்வி வரியையும் சேர்த்தால் இது 12.24 சதவீத அளவில் இருக்கிறது.
தொலைபேசிக் கட்டணம் மீது விதிக்கப்படுகிற சேவை வரி மூலம் மட்டும் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. நாட்டில் செல்போன் வைத்திருப்போரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆகவே இதன் மூலம் இயல்பாக மத்திய அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் பல சேவைகள் மூலமும் மத்திய அரசுக்கு வரி விகிதத்தை உயர்த்தாமலேயே கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது. உதாரணமாக சேவை வரி மூலம் 1994-95-ம் ஆண்டில் கிடைத்த வருமானம் ரூ.410 கோடி. இந்த வருமானம் 2004-05-ம் நிதியாண்டில் ரூ.14 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. 2006-07-ம் ஆண்டில் ரூ.34 ஆயிரம் கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எந்த வரியானாலும் இறுதியில் அதைச் செலுத்துபவர்கள் சாதாரண மக்களே. சேவை வரி வருமானத்தை ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்த மத்திய நிதி அமைச்சர் விரும்புவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இன்று கிராமப்புறங்களிலும் எளிய மக்கள் செல்போன் வைத்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் சேவை வரியாக மத்திய அரசுக்கு செலுத்தும் தொகை ஏராளம். அவர்கள் மீது மேலும் வரிச்சுமையை ஏற்றுவது சரியல்ல. எனவே, சேவை வரி விகிதத்தை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைப்பதே பொருத்தமாக இருக்கும்.
அடுத்த மாத பட்ஜெட்டில் வழக்கறிஞர்கள், டாக்டர்கள் ஆகியோர் மீதும் சேவை வரி விதிக்கப்படலாம் என்று குறிப்புகள் காட்டுகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு, அந்த யோசனை கைவிடப்பட்டாலும் வியப்பில்லை. கடந்த காலத்தில் இப்படிப்பட்ட எதிர்ப்பு காரணமாக சேவை வரி திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது உண்டு. ஒன்றுபட்டு நின்று எதிர்ப்புத் தெரிவிக்க, அமைப்புகளை பெற்றிராதவர்கள் எளிய மக்கள்தான். ஆகையால்தான் அவர்கள் மீது மேலும் மேலும் வரிச்சுமை ஏற்றப்படுகிறது.
மத்திய அரசுக்கு சேவை வரி ஒரு காமதேனுபோல விளங்குவதைக் கண்ட மாநில அரசுகள், அந்த வரியை விதிக்க தங்களுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றன. இக்கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஒருபுறம் சேவை வரி உயர்த்தப்படும் அதே நேரத்தில் மறுபுறம் தொழில்துறையினருக்கு மேலும் வரிச்சலுகைகள் வழங்கப்படுகிற நிலையைத்தான் நாம் கண்டு வருகிறோம்.