அமெரிக்க-இந்தியருக்கு “விடுதலை உணர்வு விருது’
சிலிக்கான்வேலி, ஜூலை 2: அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியதற்கான பங்களிப்பை பாராட்டி அமெரிக்க-இந்திய பேராசிரியருக்கு இந்தாண்டுக்கான சிறந்த விருது வழங்கப்படவுள்ளது.
விருதை பெறப்போகும் பேராசிரியர் ரமேஷ் கங்குலி(72), வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணித மற்றும் இசைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ரமேஷ் கங்குலி பெங்களூரில் பிறந்து, மும்பையில் வளர்ந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தில் இளம்கலை பட்டம் பெற்றார். 1957-ம் ஆண்டு உதவித் தொகையை பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தில் சேர்ந்தார்.
முதுகலை பட்டத்தை வெற்றிகரமாக முடித்த அவர், பின்னர் அமெரிக்காவின் மசாசூசெட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பைத் தொடங்கினார். 1961-ம் ஆண்டு “பிஎச்டி’ பட்டத்தை பெற்றார். இதையடுத்து வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
விடுதலை உணர்வை ஏற்படுத்தினார்:
வாஷிங்டனில் பேராசிரியர் பணியைத் தொடங்கியதுமே அமெரிக்காவின் சீட்டேல் பகுதியில் வாழும் இந்தியர்கள் மத்தியில் ரமேஷ் கங்குலி விடுதலை உணர்வை ஏற்படுத்தினார். அவரது இந்தப் பங்களிப்பை பாராட்டித்தான் அவருக்கு தற்போது சிறந்த விருது வழங்கப்படவுள்ளது.
விருது வழங்கும் நிகழ்ச்சி ஜூலை 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் ரமேஷ் கங்குலி தவிர்த்து, புதிதாக அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ள இந்தியர்களும் பாராட்டி கெüரவிக்கப்படுவார்கள். ரமேஷ் கங்குலி 1971-ம் ஆண்டே அமெரிக்க குடியுரிமையை பெற்றுவிட்டார்.
இந்நிலையில் ரமேஷ் கங்குலி கூறும்போது, “தெற்காசியர்களின் கலாசாரத்தை பிறர் அறிந்து கொள்ள இசை ஒரு முக்கியமான ஊடகமாக அமைந்துள்ளது என்று நான் நினைக்கிறேன். எங்குசென்றாலும் இசைக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இசையின் மூலம் மக்கள் தங்களது கலாசாரத்தை மட்டுமல்லாது உணர்வுகளையும் எளிமையாக பகிர்ந்து கொள்ள முடிகிறது என்ற ரமேஷ், 19-ம் வயதில் ரயில் விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்தாலும், தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தால் இன்று சிறந்த சாதனையாளராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.