நடிகர் கமல்ஹாசனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
புதுதில்லி,நவ. 23: வருமான வரிச் சலுகை தொடர்பான வழக்கில் நடிகர் கமல்ஹாசனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கமல்ஹாசன், அர்ஜுன், கவுதமி நடித்த குருதிப்புனல் திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை கமல்ஹாசன் வழங்கினார். ஒரு சரக்கை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் வருமான வரியில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் 80 எச்சிசி பிரிவின்படி இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ரூ.54.50 லட்சம் வருமான வரிச் சலுகைக் கேட்டார் கமல்ஹாசன்.
திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை மட்டும்தான் குறிப்பிட்ட கமல்ஹாசன் வழங்கியுள்ளார். இது சரக்கு ஏற்றுமதி ஆகாது. திரைப்படத்தின் உரிமை என்பது சரக்கு அல்ல. எனவே வரிச்சலுகை வழங்க முடியாது என்று வருமான வரித்துறை கூறியது. இதை எதிர்த்து கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார்.
வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும், சென்னை உயர் நீதிமன்றமும் இவ்வழக்கில் கமல்ஹாசனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கின. இதை எதிர்த்து வருமான வரித்துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அசோக் பான் தலைமையிலான பெஞ்ச், பதில் அளிக்குமாறு கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.