இந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஓ.பி. நய்யார் காலமானார்
மும்பை, ஜன. 29: இந்தி திரைப்பட முதுபெரும் இசையமைப்பாளர் ஓம்கார் பிரசாத் நய்யார்(81) மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
1926-ல் லாகூரில் அவர் பிறந்த இவர், 1949-ல் “கனீஸ்’ படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் துவக்கி, 1954-ல் வெளியான “ஆர் பார்’ படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார்.
நய்யார் மறைந்த செய்தி கேட்ட இந்தி திரையுலக முக்கியப் பிரமுகர்கள் அவரது இல்லத்தில் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தி பட பிரபல இசையமைப்பாளர் ஓ.பி.நய்யார் மரணம்
மும்பை, ஜன.29-
இந்தி திரையுலகின் பிரபல இசைமைப்பாளராக கொடி கட்டி பறந்தவர் ஓ.பி.நய்யார்.
கடந்த 1949-ல் வெளியான `கனீஷ்’ என்ற இந்தி படம் மூலம் இவர் பிரபலமானார். அதன்பிறகு இவருக்கு ஏறுமுகம்தான். ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் இந்தி திரையுலகை தன் இசையால் கட்டி வைத்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தினரை விட்டு பிரிந்த இவர், மும்பையை தானேவில் வசித்து வந்தார். இவருக்கு 81 வயதாகிறது.
நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் வீட்டில் இருந்த குளியலறைக்கு சென்றார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் டாக்டருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் டாக்டர் விரைந்து வந்து ஓ.பி.நய்யாரை பரிசோதனை செய்தார். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.
ஓ.பி. நய்யாரின் திடீர் மறைவு மும்பை திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகர், நடிகைகள், பட அதிபர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் விரைந்து சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த ஓ.பி.நய்யார் துணிச்சலானவர். எப்போதும் வெள்ளை உடையில்தான் காணப்படுவார். அவரது காலத்தில் ஒரு அரசர் போல இருந்தார் என்று பிரபல இயக்குனர் மகேஷ் பட் கூறினார்.
நடிகையும், சென்சார் போர்டு தலைவருமான சர்மிளா தாகூர் கூறும்போது, “ஓ.பி.நய்யாரின் பாடல்கள் இருக்கும் வரை, அவரது நினைவுகள் நம்முடன் இருக்கும். இசை வரலாற்றில் அவரது பெயர் நீண்ட நாள் நீடித்து இருக்கும்” என்று தெரிவித்தார்.
மறைந்த இசையமைப்பாளர் ஓ.பி. நய்யாரின் முழுப்பெயர் ஓம்கார் பிரசாத் நய்யார். கடந்த 1926-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி லாகூரில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தார். சிறு வயது முதலே இசையமைப்பில் ஈடுபட்டு வந்த இவர், பின்னர் திரைப்படத்துறையில் நுழைந்தார்.
1949-ல் வெளியான `கனீஷ்’ என்ற இந்தி திரைப்படம் இவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. இதன்மூலம் ஏராளமான படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிட்டியது.
1954-ம் ஆண்டு குரு தத் இயக்கிய `ஆர் பார்’ என்ற படத்துக்கு இசையமைத்தார். அப்படம் அமோக வெற்றி பெற்றது. அதன்பிறகு குரு தத்- ஓ.பி. நய்யார் ஜோடி, வெற்றி கூட்டணி ஆனது. குரு தத் இயக்கிய ‘மிஸ்டர் அன்ட் மிசஸ் 55’, ‘சி.ஐ.டி.’ ஆகிய புகழ்பெற்ற படங்களுக்கு ஓ.பி.நய்யாரே இசையமைத்தார். அவ்வப்போது இந்தி தவிர்த்த பிற வடஇந்திய மொழிப் படங்களுக்கும் இசையமைத்தார்.
`நயா தவுர்’, `ஏக் முசாபிர் ஏக் ஹசினா’, `காஷ்மீர் கி கலி’ ஆகிய இந்திப் படங்கள் இவரது இசையில் வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களில் சில. இந்தப் படங்கள் 1970-களில் வெளி வந்தன. அதன்பிறகு சிறிது காலம் இந்தி திரையுலகில் இருந்து விலகி இருந்தார். பின்னர் 1990-ல் `அந்தாஸ் அப்னா அப்னா’ என்ற படத்துக்கு இசையமைத்தார். சமீபத்தில் `ச ரி க மா’ என்ற டி.வி. நிகழ்ச்சிக்கு இசையமைத்தார்.
புகழ்பெற்ற பின்னணி பாடகர்களான ஆஷா போஸ்லே, முகமது ரபி, கீதா தத் ஆகியோர் ஓ.பி. நய்யாரின் இசையில் பாடி உள்ளனர். எனினும் லதா மங்கேஷ்கருடன் இணைந்து பணியாற்றவில்லை.
ஓ.பி.நய்யாரின் இசையமைப்பில் பஞ்சாபி இசையின் சாயல் அதிகமாக இடம்பெறும். இவரது இசையில் வெளியான `ஜ×ம்கா ஹிரா ரே’, `புகர்தா சாலா கூன் மேன்’, `கஹின் பே நிகாஹென் கன்ஹி பே நிசானா’ (சி.ஐ.டி), `மாங் கி சாத் தும்ஹாரா’ (நயா தவுர்) ஆகிய பாடல்கள் சாகா வரம் பெற்றவை.
இவர் `நீராஜனம்’ என்ற தெலுங்கு படம் உள்பட தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.