அரச தொலைக்காட்சி நிறுவனத்தினுள் கலகம் விளைவித்த அமைச்சர் தாக்கப்பட்டார்
இலங்கை அரசாங்கத்தின் தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் இன்று உள்நுழைந்து கலகம் விளைவித்த அமைச்சர் மேர்வின் சில்வா மீதும் அவரது குழுவின் மீதும் அந்த நிறுவனத்தின் ஊடகவியலாளர்களும், ஊழியர்களும் மேற்கொண்ட தாக்குதலில் அமைச்சர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தின்போது அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர் ஒருவரும் தாக்கப்பட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்ட இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், அந்த அமைப்பின் செய்திப்பணிப்பாளர் டி.எம்.ஜீ. சந்திரசேகர என்பவரை அமைச்சரின் குழுவினர் தாக்கியதாகவும், அதன்பின்னர் அமைச்சர் மேர்வின் சில்வா நிறுவனத்தலைவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஆத்திரமடைந்த நிறுவன ஊட்கவியலாளர்களும், பணியாளர்களும் அந்த அறையினுள் பணயக் கைதியாக பூட்டி வைத்திருந்ததாகவும் தெரிவித்தது.
அத்துடன் அவர்கள் அமைச்சரும் அவரது குழுவினரும் மன்னிப்புக் கோரினால் மாத்திரமே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் நிபந்தனை விதித்ததாகவும் தெரிவித்தது.
இவ்வாறு நிலைமை மோசமடைந்துவரும்வேளை, கலகம் அடக்கும் துருப்பினரும், இராணுவத்தினரும் தொலைக்காட்சி நிறுவனத்தினுள் உள்நுழைந்து சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் அமைச்சரை விடுவித்தனர். இவரை விடுவித்துக்கொண்டு செல்லும்போதே பணியாளர்கள் சூழ்ந்து தாக்கியதாகவும் அதன் போது அவர் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து இலங்கை ஜனாதிபதி விசேட விசாரணையொன்றுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
விடுதலைப்புலிகளின் தாக்குதலில் தினமுரசு பத்திரிகை விநியோகித்தவர்கள் பலி
![]() |
![]() |
சம்பவத்தில் கொல்லப்பட்ட சிறுவனின் சடலத்தின் முன்பாக கதறியழும் உறவினர்கள் |
இலங்கையின் வடக்கே வவுனியாவின் புறநகரப்பகுதியாகிய குருமண்காடு கடைவீதிச் சந்தியில் இன்று பிற்பகல் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அதாவது ஈபிடிபி அமைப்பின் உறுப்பினர்கள் மூவரும், இடையிலகப்பட்ட ஒரு சிறுவனும் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், வாகன சாரதி, ஈபிடிபி அமைப்பின் மேலும் 3 உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 8 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
பொதுமக்களில் ஒருவர் மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவன் என்றும், ஒருவர் கட்டிடத் திணைக்கள ஊழியர் என்றும் இன்னுமொருவர் தனியார் அஞ்சல் முகவர் நிலையத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமுரசு பத்திரிகையின் விற்பனைக்காகச் சென்ற ஈபிடிபி அமைப்பினரின் வேன் ஒன்றை இலக்கு வைத்து, சைக்கிளில் பொருத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடியைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன், இறந்தவர்களின் சடலங்களையும், காயமடைந்தவர்களையும் வவுனியா வைத்தியசாலையில் பார்வையிட்டு சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தார்.
ஈபிடிபி கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர், கொல்லப்பட்ட தமது அமைப்பினரின் சடலங்களை நீதிபதிக்கு அடையாளம் காட்டினார். இறந்த சிறுவன் வவுனியா மகாவித்தியாலய மாணவன் என அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.
மர்வின் சில்வா விவகாரம்: பொலிஸ் விசாரணைகள் மீது நீதிமன்றம் அதிருப்தி
இலங்கை அமைச்சர் மர்வின் சில்வா அவர்களால், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தியாளர் ஒருவர் வியாழன்று தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பற்றிய பொலிஸ் புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து இலங்கை நீதிமன்றம் ஒன்று அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இலங்கை எங்கிலும் உள்ள மக்களால் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்க்கப்பட்டது என்பதால், அது குறித்து பொலிஸார் மிகவும் கரிசனையுடன் செயற்பட வேண்டும் என்று கொழும்பு குற்றவியல் நீதிபதி மக்கி முகமட் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் ஒருவரை மாத்திரமே பொலிஸார் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர்.
ஆனால், இப்படியான ஒரு பெரிய சம்பவம் நடைபெற்ற நிலையில், ஏன் ஒருவர் மாத்திரம் இவ்வாறு பொலிஸாரால், கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று கேள்வியெழுப்பிய நீதிபதி, பொலிஸாரின் இது குறித்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்காது என்றும் கூறிவிட்டார்.
நடந்த சம்பவம் குறித்து பொலிஸ் அளிக்கும் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றால், நீதிமன்றத்தின் மீது பொதுமக்கள் கல் வீசுவார்கள் என்று நீதிமன்றத்தில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிபதி, அனைத்து சந்தேக நபர்களையும் பொலிஸார் கைதுசெய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின்போது செய்தியாளர்களை அமைச்சர் துஷ்பிரயோகம் செய்ததாகவும், எச்சரித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதனையடுத்து செய்தியாளர்களால் சில மணிநேரம் அமைச்சர் அங்கு பிடித்து பணயமாக வைக்கப்பட்டிருந்தார்.
இவை குறித்த தகவல்கள் வியாழனன்று ரூபவாஹினி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பட்டன.
ஆயினும், இந்தத் தொலைக்காட்சி நாடாக்கள் சி.ஐ.டி. பொலிஸாரால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதால், இந்த விடயத்தில் தாம் பலிக்கடாக்கள் ஆக்கப்படலாம் என்று கூறி செய்தியாளர்கள், இன்று ரூபவாஹினி நிறுவனத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட இலங்கை மோதல்கள் குறித்து முரண்பட்ட தகவல்கள்
![]() |
![]() |
யாழ்ப்பாணம், மன்னர் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் வியாழனன்றும் வெள்ளியன்றும் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்ததாக இருதரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
ஆயினும், இழப்புகள் குறித்து இருதரப்பின் தகவல்களும் முரண்படுகின்றன.
குறிப்பாக முகமாலை, குறிசுட்டகுளம், பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய இடங்களில் கடும் சண்டை நடைபெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
அதேவேளை கிளாலி பகுதியில் நேற்றைய மோதலில் கொல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று செஞ்சிலுவைச் சங்கத்தினரின் ஊடாக விடுதலைப்புலிகளால் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கடற்சமரில் கொல்லப்பட்ட மேலும் ஒரு சிப்பாயின் சடலத்தையும் இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
திருகோணமலையில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தோருக்கு உணவு உதவி
![]() |
![]() |
திருகோணமலையில் வெள்ளம் – பழைய படம் |
திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பிரதேசத்தின் வெருகல் ஆறு பெருக்கெடுத்ததால் அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்த மக்கள்
கடந்த நான்கு தினங்களாக உணவுப் பற்றாக்குறையால்
தவித்துவந்தனர்.
இந்த நூற்று எழுபத்து ஏழு குடும்பங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை,
மாவட்ட அரச அதிபர் சில்வா விடுத்த பணிப்புரையின் பேரில், ஈச்சிலம்பற்று பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினூடாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மூன்று தினங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பண்டங்களான அரிசி பருப்பு கோதுமை மாவு என்பன வழங்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பல நோக்கக் கூட்டுறவுச் சங்க தலைவர் சுப்பிரமணியம் அரசரெட்ணம்
தெரிவித்திருக்கின்றார்.
இதன் பிரகாரம் மூன்று தினங்களுக்குப் போதுமான அளவில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தலா நூற்று ஐம்பது ரூபா பெறுமதியான உணவுப் பண்டங்களும், பத்து வயதுக்கு மேற்பட்டோருக்கு இருநூற்றுப் பத்து ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பண்டங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
தற்போது வெள்ளம் படிப்படியாக வடிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.