Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Antonia Maino’ Category

How CBI let Quattrocchi slip away – Thamizhan Express

Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007

தொடர்ந்து கோட்டை விடும் சி.பி.ஐ..!

“போஃபர்ஸ் ஊழலின் கதாநாயகன்’ என்று கூறப்படும் குவத்ரோச்சி, கடந்த 20 வருடங்களாக போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து வருகிறார். “இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவருக்கும், காங்கிரஸ் தலைவியாக இருக்கும் சோனியா குடும்பத்திற்கும் இடையில் உள்ள நல்லுறவே இதற்குக் காரணம்’ என்று எதிர்க்கட்சிகள் தினமும் “திக் திக்’ அறிக்கைகளை வெளியிடுகின்றன.

1987ல் ஸ்வீடன் நாட்டு ரேடியோ, “போஃபர்ஸ் விவகாரத்தில் இந்திய ஏஜெண்ட்டுகளுக்கு கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று அறிவித்ததில் இருந்தே குவத்ரோச்சியும், போஃபர்ஸýம் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் இருக்கின்றன. 1990ஆம் ஆண்டு, ஜனவரி 22ஆம் தேதி போஃபர்ஸ் ஊழல் வழக்கில் “முதல் தகவல் அறிக்கை தாக்கல்’ செய்யப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் உள்ள 12 செக்ஷன்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கையில் குவத்ரோச்சியின் பெயர் இல்லை! பிறகு இந்த ஊழல் விவகாரம் குறித்த டாக்குமென்டுகளை வாங்குவதற்கு சி.பி.ஐ., ஸ்வீடன் நாட்டு நீதிமன்றங்களில் பெரும் போராட்டத்தை நடத்தியது.

கடைசியில் ஜோகிந்தர் சிங் சி.பி.ஐ.யின் டைரக்டராக இருந்தபோது அந்த டாக்குமென்டுகள் எல்லாம் கிடைத்தன. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, ஏழு வருடத்திற்குப் பிறகே (21.1.1997) இந்த டாக்குமென்டுகளை சி.பி.ஐ.யால் வாங்க முடிந்தது.

அப்படிக் கிடைத்த டாக்குமென்டுகளில் 1987ஆம் ஆண்டு, நவம்பர் 4ஆம் தேதி போஃபர்ஸ் கம்பெனியின் தலைவராக இருந்த மார்ட்டின் ஆர்ட்போவிடம் ஸ்வீடன் போலீஸ் கைப்பற்றிய டைரி முக்கியமானது.

அதில்தான் முதன்முதலில் குவத்ரோச்சியின் பெயர் ஆதாரபூர்வமாக, அதாவது “க்யூ’ (ண) என்ற எழுத்தின் வடிவத்தில் இடம்பெற்றிருந்தது. அத்துடன் ஏறக்குறைய 49 சாட்சிகளை விசாரித்திருந்த சி.பி.ஐ., “குவத்ரோச்சி ஊழல் செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியுள்ளார்’ என்ற முடிவுக்கு வந்தது.

இதன் அடிப் படையில்தான் குவத்ரோச்சியும், “போஃபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றவாளி’ என்று 1999ல் சேர்க்கப்பட்டார். ஆக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததில் இருந்து ஒன்பது வருடங்கள் கழித்தே குவத்ரோச்சி குற்றவாளி என்று சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதுவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடைபெற்ற போதுதான் இந்த முடிவுக்கு வந்தது சி.பி.ஐ. ஆனால் எஃப்.ஐ.ஆர். போட்டதில் இருந்து ஏறக்குறைய மூன்று வருடங்கள் இந்தியாவில்தான் குவத்ரோச்சியும், அவரது மனைவியும் இருந்தார்கள்.

ஸ்விஸ் நீதிமன்றத்தில் டாக்குமென்டுகள் கேட்டு சி.பி.ஐ. வழக்குத் தொடர அந்த நேரத்தில், “என் வங்கிக் கணக்குகள் சம்பந்தப்பட்ட தகவல்களைக் கொடுக்கக் கூடாது’ என்று திடீரென்று அப்பீல் செய்தார் குவத்ரோச்சி.

அதைச் செய்துவிட்டு இரவோடு இரவாக இந்தியாவை விட்டு எஸ்கேப் ஆன குவத்ரோச்சியை இதுவரை பிடிக்க முடியவில்லை. டெல்லி நீதிமன்றம் குவத்ரோச்சியை அரெஸ்ட் செய்ய வாரண்ட் பிறப்பித்துவிட்டது. மலேஷியாவில் ஒரு முறை குவத்ரோச்சி மாட்டிக் கொண்டார்.

ஆனால் இந்தியாவிற்கும், மலேஷியாவிற்கும் “எக்ஸ்டிரடிஷன் ட்ரீட்டி’ இல்லை என்பதை சுட்டிக்காட்டி, குவத்ரோச்சியைத் தர மறுத்தது அந்நாட்டு நீதிமன்றம். இதனால் மலேஷியாவிலும் கோட்டைவிட்டது சி.பி.ஐ. இந்நிலையில் தன் மீது போடப்பட்ட “அரெஸ்ட் வாரண்ட்டை’ எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார் குவத்ரோச்சி.

ஆனால், “நீங்கள் இங்கு வந்து ஸ்பெஷல் ஜட்ஜ் முன்பு ஆஜர் ஆகுங்கள்’ என்று ஒரு தேதியை ஃபிக்ஸ் பண்ணி உத்திரவிட்டது நீதிமன்றம். ஆனால் நம் நாட்டின் உச்சநீதிமன்றத்தையும் மதித்து இங்கு வரவில்லை இந்த போ ஃபர்ஸ் குற்றவாளி.

இதற்கிடையில் தற்போது அர்ஜெண்டினாவில் அரெஸ்ட் செய்யப்பட்ட குவத்ரோச்சியையும் இந்தியா கொண்டு வர முடியாமல் கோட்டை விட்டிருக்கும் சி.பி.ஐ., ஒரு கமிஷன் ப்ரோக்கர் என்ற ஸ்தானத்தில் இருக்கும் குவத்ரோச்சியை கடந்த 20 வருடங்களாகப் பிடித்து இந்திய நாட்டின் சட்டத்தின் முன்பு நிறுத்த முடியாமல் தவிக்கிறது.

இதைப் பார்க்கும்போது அரசியல்வாதிகள் அல்லது ஆட்சியில் இருப்பவர்களின் ஆதரவு இல்லாமல் இது நடக்குமா என்ற கேள்வி எழுகிறது. “நாட்டின் ப்ரீமியர் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்ஸி’ என்று சொல்லப் படும் சி.பி.ஐ. ஒரேயொரு குற்றவாளியைக் கைது செய்ய 20 வருடங்கள் அலைகிறது என்றால் “நம்மூர் ஜனநாயகத்திற்கு’ ஒரு சபாஷ் போட வேண்டியதுதான்!

வர்மா

—————————————————————————————

நிர்பந்தத்தினால் உருவான “பாரத’ விசுவாசம்!

எஸ். குருமூர்த்தி

“”இப்போது என்னுடைய விசுவாசம் பெரிய குடும்பத்துக்குச் சொந்தம்; ஆம், பாரதம் எனது நாடு; எனது மக்கள், என்னைத் தங்களில் ஒருத்தியாக பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார்கள்”.

ஹாலந்து நாட்டின் டில்பர்க் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி உரை நிகழ்த்தியபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மனம் நெகிழ்ந்து கூறியவை இவை.

“”நேரு-இந்திரா” குடும்பம் என்றாலே இந்திய மக்களுக்கு தனி பாசம். அதிலும் “”வெளிநாட்டவர்” என்றால் தனி மரியாதை வேறு. எனவேதான், இத்தாலியில் பிறந்த அந்தோனியா மைனோ என்ற இளம் பெண்ணை, “”சோனியா” என்ற நாமகரணத்துக்குப் பிறகு இந் நாட்டின் “”முதல் குடும்பத்து” மருமகளாக எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.

வேறு எந்த நாட்டைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும் -அது சோனியா பிறந்த இத்தாலியாகவே இருந்தாலும் -நாட்டை ஆளும் குடும்பத்தில் “”வெளிநாட்டவர்” எப்படி நுழையலாம் என்று கேள்வி கேட்டு ஆட்சேபித்திருப்பார்கள்.

ஆம், சோனியா சொன்னது உண்மைதான்; சோனியா யார் என்ற பூர்வோத்திரமே தெரியாமல் -அதைத் தெரிந்து கொள்வது அவசியம் என்ற எண்ணமே இல்லாமல் -அவரை மனதார வரவேற்றார்கள் நம் மக்கள். அப்படி தாராள மனம் படைத்த இந்தியர்களுக்கு அவர் காட்டிய விசுவாசம் எப்படிப்பட்டது?

1968-லிருந்தே இந்தப் புராணம் தொடங்குகிறது. இன்றைக்கு இச் செய்தித்தாளைப் படிக்கும் உங்களில் பெரும்பாலானவர்கள் அப்போது தாயின் மடியில் பச்சைக் குழந்தைகளாக இருந்திருப்பீர்கள்!

இந்திய மக்களின் அன்புக்கும், விசுவாசத்துக்கும் ஏகபோக குத்தகைதாரர்களான “”முதல் குடும்பத்தில்” மூத்த மருமகளாக அடியெடுத்து வைத்திருந்தாலும், இந்த நாட்டின் “”குடிமகளாக” தன்னைப் பதிவு செய்துகொள்ளக்கூடாது என்பதில் 16 ஆண்டுகள் உறுதியாக இருந்தவர்தான் சோனியா.

ராஜீவ் காந்தியைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் எத்தனை உறுதியாக இருந்தாரோ, அத்தனை உறுதியாக இருந்தார் இந்தியாவின் குடிமகளாக ஆகிவிடக்கூடாது என்பதிலும்! இத்தாலியக் குடியுரிமையை விட்டுவிட்டு இந்தியக் குடியுரிமை பெறுவதைத் தாழ்வாக நினைத்ததால்தானே இந்த உத்தி!

“”நேரு-இந்திரா” குடும்பத்தின் மருமகளாகிவிட்ட மகிழ்ச்சியிலோ, இந்தியர்கள் காட்டிய மிதமிஞ்சிய பாசத்தில் திக்குமுக்காடியோ, இந்தியக் குடிமகளாகப் பதிவு செய்துகொள்ளும் “”சாதாரணமான” விஷயத்தை அவர் மறந்துவிடவில்லை!

திருமணம் ஆன நாள் முதலே அவர் தன்னை இந்தியராகப் பதிவு செய்து கொள்ள விரும்பவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல, 16 ஆண்டுகள் அவர் விரும்பவில்லை.

இது ஏதோ ஒருமுறை முடிவு எடுத்து மறந்துவிட்ட விஷயமல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்பத்திரும்ப இதே முடிவை – இந்தியக் குடியுரிமை பெறக்கூடாது என்கிற முடிவை – எடுத்திருக்கிறார் சோனியா!

இந்தியர் அல்லாத ஒருவர் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை விண்ணப்பித்து, தன்னை வெளிநாட்டவர் என்பதைத் தொடர்ந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இந்தியாவிலேயே தொடர்ந்து வசிப்பது, பிரதமரின் குடும்பத்தில் மருமகளாகவே இருப்பது என்பதையெல்லாம் தீர்மானித்த சோனியா காந்தி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி கோரி விண்ணப்பித்து வந்தார்.

முதலில் 1968-லும் பிறகு 1973-லும், பிறகு 1978-லும் கடைசியாக 1983-லும் இத்தாலியக் குடியுரிமையுடன் நம் நாட்டில் “”விருந்தாளி”யாக இருப்பதற்கு அனுமதி கேட்டுப் பெற்று வந்தார் சோனியா. சுலபமாக பாரத நாட்டுக் குடியுரிமைப் பெற்றிருக்கலாமே. எனக்கு அது வேண்டாம் என்கிற எண்ணம்தானே அவரை விருந்தாளியாக்கியது! ஆனால் 1983-ல் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, 1984 ஏப்ரல் 30-ல் அதைப் பெற்றார்.

இந்தியர்களின் பெருந்தன்மையை ஏற்று இந்தியக் குடிமகளாக வேண்டும் என்ற முடிவை, 16 ஆண்டு காலத்துக்குப் பிறகு சோனியா காந்தி ஏன் திடீரென எடுத்தார்? இந்திய அரசியலைப் பின்பற்றுகிறவர்களுக்கு இது எளிதில் புரிந்திருக்கும்.

1980-ல் நடந்த விமான விபத்தில் சஞ்சய் காந்தி இறந்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜீவ் காந்தி நியமனம் பெற்றார். 1985 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசில் பிரதமருக்கு அடுத்த இடம் ராஜீவ் காந்திக்குத்தான் என்ற நிலைமை உருவானது.

வெளிநாட்டு குடியுரிமை பெற்றவரின் கணவர் இந்திய அரசில் அமைச்சராவதா என்ற சர்ச்சை மூண்டுவிட்டால் என்னாவது என்ற கவலையில், இந்தியக் குடியுரிமையை ஏற்றார் சோனியா காந்தி.

இந்தியாவின் மீது சோனியாவுக்கு இருந்த அன்போ, வந்தாரை வரவேற்கும் இந்திய நாட்டவரின் பரந்தமனத்தின் மீது ஏற்பட்ட பாசமோ அவரை இந்த முடிவை எடுக்கவைக்கவில்லை. “”ஆட்சி அதிகார” கட்டிலில் தனது கணவர் ஏறப்போகிறார், அவர் மூலம் தனக்கும் அந்த “”அதிகாரம்” கிட்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் இந்தியக் குடியுரிமையைப் பெற அவர் முன்வந்தார்.

இருந்தாலும் ஆம்ஸ்டர்டாம் நகர மக்களிடையே பொது நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார், அதிகாரத்தின் மீது தனக்கு எப்போதும் ஆர்வம் இல்லை என்று!

இந்தியராகக் குடியுரிமை பெறுவதையே விரும்பாமல் 16 ஆண்டுகள் தள்ளிப்போட்டேன் என்று அவர் அந்தக் கூட்டத்தில் பேசவில்லை.

இந்தியக் குடிமகளாக மனுச் செய்தபோதுகூட எனது பெயரை “”அந்தோனியா மைனோ காந்தி” என்றும் “”சோனியா” என்பது புனைபெயர் என்றும் எழுதினேன்; இன்றுவரை அந்தோனியா மைனோ என்கிற பெயரைக்கூட நான் மாற்றிக் கொள்ளவில்லை என்று அவர் இனி எங்கும் சொல்லப் போவதும் இல்லை!

இத்தாலிய தேசிய சட்டப்படி ராகுல் காந்தியும், பிரியங்கா வதேராவும் (இத்தாலிய தாய்க்குப் பிறந்ததால்) இத்தாலிய குடிமக்கள்தான் என்பதையும், அது அழிக்க முடியாமல் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதையும் அவர் எப்போதும் எவரிடத்திலும் சொல்லமாட்டார்.

இந்த உண்மைகளைப் பேசுபவராக இருந்தால், டில்பர்க் பல்கலைக்கழகத்தில் அப்படி தனது விசுவாசம் குறித்து அவர் பேசியிருக்கவே மாட்டார். அவர் என்ன பேசினாரோ அதுதான் “”பதிவு செய்யப்பட்ட உண்மை”; ஆனால் அவர் எதைப் பேசாமல் மறைத்தாரோ அதுதான் “”அப்பட்டமான உண்மை”!

இதிலிருந்து அறியப்படுவது, சோனியா காந்திக்கு இந்தியா மீது விசுவாசம் -16 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகே வந்தது! அதுவும் கட்டாயத்தினால் – விருப்பப்பட்டு அல்ல!

Posted in abuse, Affiliations, Airforce, Antonia, Antonia Maino, Argentina, Arms, Army, Banks, BJP, Bofors, Bombs, Bribery, Bribes, CBI, Central Bureau of Investigation, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corruption, Deals, defence, Defense, Express, extradition, Fairfax, Gurumoorthi, Gurumoorthy, Gurumurthi, Gurumurthy, Holland, Indira, Indra, Italy, Judge, Justice, kickbacks, Law, Maino, Maintenance, Meino, Military, Money, Nationality, Navy, Nehru, nexus, Order, Politics, Power, prosecutor, Quatrocchi, Quatrochi, Quattrocchi, Quattrochi, Rajeev, Rajeev Gandhi, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Rao, Rich, SC, Sonia, Sweden, Tanks, Weapons | 1 Comment »