பாலசிங்கம் மறைவு ஏற்படுத்தும் கவலைகள்
பா. கிருஷ்ணன்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர், சித்தாந்தவாதி என்று போற்றப்பட்ட ஆன்டன் பாலசிங்கம் மறைவு இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் சமாதான முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்துமோ என்ற கவலை தோன்றியுள்ளது.
ஆன்டன் ஸ்தானிஸ்லாஸ் பாலசிங்கம் தொடக்கத்தில் “வீரகேசரி’ நாளேட்டில் பணிபுரிந்தவர். அதன் பின் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
அவரது பின்னணியே புதுமையானது. பாலசிங்கத்தின் தந்தை இலங்கை கிழக்குப் பகுதியையும் தாய் வடக்குப் பகுதியையும் சேர்ந்தவர்கள். தந்தை ஹிந்து. தாய் கிறிஸ்தவர். சிங்கள இனவாதத்தை எதிர்க்கும் புலிகள் அமைப்பைச் சேர்ந்த அவருக்கு புத்தரின் தத்துவங்கள் மீதும் ஈடுபாடு உண்டு. பாலசிங்கத்தின் தாத்தா கோயில் குருக்களாக இருந்தவர் என்பது இன்னொரு சுவையான தகவல்.
வீரகேசரியில் பணியாற்றிய பாலசிங்கம் சிறிது காலத்தில் அந்தப் பத்திரிகையின் வெளிநாட்டுச் செய்திப் பகுதிகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இது உலகளாவிய தகவல்கள் மீது அவருக்கு ஏற்கெனவே இருந்த தாகத்தை அதிகரிக்கச் செய்தது.
அதன் பிறகு, கொழும்பில் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது, யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால், மனைவி நோய் வாய்ப்பட்டதால், அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக பிரிட்டன் செல்ல நேர்ந்தது. முதல் மனைவி சில ஆண்டுகளில் நோய் முற்றி பிரிட்டனில் இறந்தார். அங்கே ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்த அடேல் ஆனி என்ற ஆஸ்திரேலிய பெண்ணின் நட்பு, காதலாக மாறி, பின்னர் திருமணமாக மலர்ந்தது.
பாலசிங்கத்தைப் போலவே அடேலும் அறிவுஜீவி. இருவரும் யாழ்ப்பாணம் திரும்பியபோது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காகப் பாடுபட்டனர். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தபோதெல்லாம் முக்கியப் பங்கை ஆற்றி வந்தவர் பாலசிங்கம்.
இலங்கை இனப் பிரச்சினையில் போராளிகளுக்கு முதல் முறையாக அங்கீகாரம் கிடைத்தது 1985-ல் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில்தான். அதில் ஈழப் போராளிக் குழுக்கள் முன்வைத்த கோரிக்கைகள் தனித் தமிழீழக் கோரிக்கைக்கு மாற்றாக அமைந்தன.
1) தமிழரைத் தேசிய இனமாக அங்கீகரித்தல்;2) இலங்கையில் தமிழர்களுக்குத் தனிநிலப் பகுதியை அங்கீகரித்தல்;
3) தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தல்;
4) மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் குடியுரிமை, அடிப்படை உரிமைகள் வழங்குதல்.
சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் பலர் வரவேற்ற இக்கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாததால், பேச்சுவார்த்தை முறிந்தது.
இதன் பிறகு, பாலசிங்கம் இந்தியாவிலிருந்து வெளியேறும்படி அரசு உத்தரவிட்டது. அவருடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத் (டெலோ) தலைவர் சத்தியேந்திரா, ஈழத் தமிழர் பாதுகாப்புக் கழக அமைப்பாளர் எஸ்.சி. சந்திரஹாசன் ஆகியோரையும் வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டது.
ஆனால், இதற்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தன. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி தலைமையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்திய போராட்டத்தை அடுத்து, மத்திய அரசு மூன்று தலைவர்களுக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவை விலக்கிக் கொண்டது.
திம்பு பேச்சுவார்த்தை தொடங்கி, இந்திய இலங்கை உடன்பாடு, இலங்கை அதிபர் பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தை, நார்வே முயற்சியில் அமைந்த பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் பாலசிங்கத்தின் பங்களிப்பு மிகப் பெரியது. இலங்கை அதிபராக இருந்த பிரேமதாசாவுடன், புலிகள் 1990-ல் நடத்திய பேச்சுவார்த்தைக்கும் முக்கியக் காரணம் பாலசிங்கம்தான். அவருடன் பிரிட்டிஷ் தூதரகத்தில் பணியாற்றியவர்தான் பிரேமதாசா. தனது பழைய நட்பைப் பேச்சுவார்த்தைக்காகப் பயன்படுத்தினார் பாலசிங்கம்.
1980-ம் ஆண்டுகளில் சென்னையில் விடுதலைப் புலிகளின் வயர்லெஸ் சாதனங்களைத் தமிழக போலீஸôர் கைப்பற்றியபோது, இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது குவிந்த அனைத்து மாநிலப் பத்திரிகையாளர்களிடம் பிரபாகரன் பேசியதை மொழிபெயர்த்தவர் பாலசிங்கம்.
அதன் பிறகு, 1987-ம் ஆண்டு இந்திய -இலங்கை உடன்பாடு ஏற்பட்ட வரையில் சென்னை இந்திரா நகரில் செயல்பட்டு வந்த புலிகளின் அலுவலகத்தில் தினந்தோறும் நிருபர்களிடம் பேசிக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார் பாலசிங்கம்.
ஒரு முறை பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகையாளர்களைக் கடல் வழியாகத் தனது இயக்கத்தினர் மூலம் அழைத்துச் சென்று இலங்கைத் தமிழர் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களை நேரடியாகப் பார்த்து, செய்தி சேகரிக்கச் செய்தவர் பாலசிங்கம். அந்த பிரான்ஸ் நிருபர்கள் சென்னை திரும்பியதும் சென்னையில் சில பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளிக்கவும் ஏற்பாடு செய்தார் அவர்.
1987-ம் ஆண்டு ராஜீவ் காந்திக்கும் ஜெயவர்த்தனவுக்கும் இடையில் இந்திய -இலங்கை உடன்பாடு உருவாகும் தருணத்தில், மிகக் கவனமாக நிருபர்களிடம் பேசியவர் பாலசிங்கம்.
“”பத்திரிகையாளராக இருந்திருக்கிறேன். பத்திரிகைகளின் போக்கு, அணுகுமுறை அவர்களது செய்தித் தேவை குறித்து நன்றாக அறிவேன். அதே சமயம் தமிழ் மக்களின் துயரத்தை எப்படி பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கவேண்டும் என்பதும் தெரியும்” என்று ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.
1987-ம் ஆண்டு இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடும் சூழல் கனிந்து வரும் சமயத்தில், இந்திய அரசுடன் தொடர்பு கொண்டவர்களில் பாலசிங்கம் குறிப்பிடத் தக்கவர். ராஜீவ் காந்தியை பிரபாகரன் தில்லியில் சந்தித்தபோது இருவருக்கும் இடையே பாலமாக இருந்தவர் பாலசிங்கம். அந்தத் தருணத்தில், சென்னையில் இருந்தபோது, பாலசிங்கத்திடம் ஒரு முறை நிருபர்கள் “”தமிழீழத்தைப் பெற்றுத் தரவேண்டும் என்று வலியுறுத்துவீர்களா?” என்று கேட்டனர்.
“”ஈழத் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் எந்தத் தீர்வுமே ஏற்கத் தக்கது. இதுதான் வேண்டும் என்று இப்போது வலியுறுத்த மாட்டோம்” என்றார் அவர்.
2002-ம் ஆண்டில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு, இரு தரப்பினருக்கும் நேரடிப் பேச்சுவார்த்தை தொடங்கத் திட்டமிடப்பட்டது.
பாலசிங்கத்தின் உடல்நிலையைக் கருதி, இந்தியாவில் தங்கி அவர் சிகிச்சை பெற்றபடி பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்ற யோசனை தெரிவிக்கப்பட்டது.
“”பாலசிங்கத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாம்” என்று அப்போதைய பிரதமர் வாஜபேயி கருத்துத் தெரிவித்தார்.
ஆனால், இந்த யோசனை கடைசியில் ஏற்கப்படவில்லை. இதையடுத்து, தாய்லாந்து, நார்வே, ஜப்பான் ஆகிய நாடுகளில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
அந்தப் பேச்சுவார்த்தைகளில் ஒரு முறை “”தனித் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுகிறோம்” என்று முதன் முறையாக அறிவித்தார் பாலசிங்கம். இதையே பின்னர் நவம்பரில் மாவீரர் தினத்தில் வே. பிரபாகரன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
போராளிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்திரிக்கப்பட்டு வரும் விடுதலைப் புலிகளுக்கு “பாலசிங்கத்தின் மறைவினால், நல்ல வழிகாட்டி, சித்தாந்தவாதியை இழந்துவிட்டோம்’ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
புலிகளை அரசியல் தீர்வுக்கு இட்டுச் செல்லவும், அரசியல் ஆலோசனை கூறி, வழிப்படுத்தவும் மூத்த தலைவர் இப்போது இல்லாததால், புலிகள் எத்தகைய செயலில் ஈடுபடுவார்களோ என்ற கவலை சிலருக்கு ஏற்படும். அரசியல் ராஜதந்திரத்தைக் கையாள புலிகள் தரப்பில் முக்கியமானவர் இல்லையே என்ற கவலையை இப்போதைய வெற்றிடம் இலங்கை அரசுக்கும் ஏற்படுத்தும்.