போர் நிறுத்தத்தில் இருந்து இலங்கை அரசு விலகியிருப்பதால் உதவி வழங்கும் நாடுகள் வருத்தம்
இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொண்டிருப்பதற்கு இலங்கைக்கு உதவி வழங்கும் டோக்கியோ மாநாட்டின் இணைத்தலைமை நாடுகள் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளன. அத்தோடு இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழியில் தீர்வினை ஒருபோதும் காணமுடியாது என்றும் அவை தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் ஜப்பான் போன்ற நான்கு நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையொன்றில், பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக் காண்பதற்கு தமது முழு ஆதரவினையும் வழங்கதயாராக இருப்பதாகவும், நோர்வேயின் அனுசரணைப்பணி தொடரப்படவும் தமது ஆதரவினை வெளியிட்டுள்ளன.
நின்றுநிலைக்கக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டமொன்றினை பூர்த்திசெய்யும்படி இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள இணைத்தலைமை நாடுகள், சகலதரப்பினரும் சிவிலியன்களைப் பாதுகாப்பது தொடர்பாக சர்வதேச சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் தெரிவித்திருக்கின்றன.
இணைத்தலைமை நாடுகளின் சார்பில் இலங்கைக்கான நோர்வே தூதரகம் வெளியிட்டுள்ள இந்தக் கூட்டறிக்கையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரும் மனிதாபிமான தொண்டு நிறுவனங்களின் உதவிப்பணிகள் தேவைப்பட்ட மக்களைச் சென்றடைவதற்கு அனுமதிக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே நல்லது – இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்
![]() |
![]() |
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே ஏண்டனி |
இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண்பதைவிட, அரசியல் தீர்வு காண்பதே அந்த நாட்டுக்கு நல்லது என்றும் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. ஏண்டனி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
சனிக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது, செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், இலங்கை அரசுக்கு இந்தியா உதவுமா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, “நமது அணுகுமுறை அடிப்படையானது. இலங்கை தனி இறையாண்மை கொண்ட, அண்டை நாடு என்ற முறையில் அந்த நாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறோம். அந்த நாட்டில் நடைபெறும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான அனைத்து உரிமைகளும் அந்நாட்டு அரசுக்கு உண்டு. ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண்பதைவிட, அரசியல் தீர்வு காண்பதே அந்த நாட்டுக்கு நல்லது’’ என்றார் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஏண்டனி.
இதனிடையே, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரணாப் முகர்ஜி, “இலங்கைப் படைகளுக்கும் எல்டிடிஇ பயங்கரவாதிகளுக்கும் இடையிலான சண்டை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பயங்கரவாதத்தைப் பொருத்தவரை, அதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. எந்த ஒரு நாடு பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலும், அந்த நாட்டின் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு’’ என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
“அதே நேரத்தில், தமிழ் சிறுபான்மையினரின் நியாயமான கோரிக்கைகளை, அந்த நாட்டின் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நிறைவேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது’’ என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் உட்கட்சி பூசல்
![]() |
![]() |
அமைச்சர் அமீர் அலி |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமது கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டமொன்று அமைச்சரொருவரின் பின்னணியில் குழப்பப்பட்டதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
இக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ள அக்கட்சியின் அரசியல் உயர் பீட உறுப்பினரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூட்டத்தை குழப்பிய குழுவினரால தமது வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றார்.
அரசாங்கம் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டு ஜனநாயக விரோதப் போக்கை கடைப் பிடிப்பதாகவும் குறிப்பிடும் அவர், இது தொடர்பாக பொலிசிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
தன்னை தொடர்புபடுத்தி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினால் தெரிவிக்கப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார் அமைச்சர் அமீர் அலி.