வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத்தை மும்மூர்த்தியாக்கிய போஸ்டருக்கு எதிர்ப்பு
ஜோத்பூர் (ராஜஸ்தான்), மே 27: முன்னாள் பிரதமர் வாஜ்பாய், துணை பிரதமர் எல்.கே. அத்வானி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரை இந்து கடவுள்களாக, மும்மூர்த்திகளாக சித்திரித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிக்கு பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
ராஜஸ்தானில் பாஜக ஆட்சிப்பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஏப்ரல் 15-ம் தேதி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் பிரம்மாவாக வாஜ்பாய், விஷ்ணுவாக அத்வானி, சிவனாக ராஜ்நாத் சிங்கையும் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவை இந்து கடவுள் அன்னபூரணியாகவும் சித்திரித்திருந்தனர்.
“ஜெய் அன்னபூர்ணி மகாராணி வசுந்தரா’
“ஜெய் அன்னபூர்ணி மகாராணி வசுந்தரா’ என்று சுவரொட்டிக்கு தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.
மாநில மூத்த கேபினட் அமைச்சர் எல்.என். தவேயை குபேரனாகவும், மற்றொரு கேபினட் அமைச்சர் எச்.எஸ். குமாரியாவை இந்திரனாகவும், மற்ற அமைச்சர்களை தேவர்களாகவும், எம்எல்ஏக்கள், எம்.பி.க்களை பக்தர்களாகவும் சித்திரித்திருந்தனர்.
இந்த சுவரொட்டிகளை பாஜக தொண்டர் ஒருவரும் உள்ளூர் பூஜாரியும் தயாரித்தனர். ஜோத்பூர் பாஜக எம்எல்ஏ சூர்யகாந்த வியாஸ் மற்றும் பாஜக தலைவர்கள் இந்த சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர். இவர்கள் அனைவர் மீதும், இந்த சுவரொட்டிகளை அச்சடித்த அச்சக உரிமையாளர் மீதும் ஜஸ்வந்த் சிங்கின் மனைவி சீதள கன்வர் புகார் கொடுத்துள்ளார்.
“”அரசியல்வாதிகளை தெய்வங்களாக சித்திரித்து ஒட்டியுள்ள சுவரொட்டிகளால் மத உணர்வுகள் புண்படுகின்றன. ஆகவே புகாருக்குரிய அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“”புகாரை பெற்றுள்ளோம். ஆனால் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். கோதாரா இப்புகார் குறித்து பரிசீலித்து வருகிறார். அவருடைய பரிந்துரையின் பேரில் புகாரை பதிவு செய்வதா இல்லையா என்று முடிவு செய்யப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் எச்.எஸ். குமாரியா தெரிவித்தார். ஒரு மாதத்துக்கு முன் காங்கிரஸ் தொண்டர் ஒருவரும் இத்தகைய புகாரை கொடுத்துள்ளார். அதன்மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.