அண்ணா 1967- ஆண்டு முதல்வராகப் பதவியேற்றவுடன் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். அந்தச் சுற்றுப்பயணத்தின்போது பாளையங்கோட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார்.
அப்போது ஒரு முதிய பெண்மணி முதல்வரைப் பார்க்க வந்திருக்கிறார். காவல்துறை அதிகாரிகள் முதல்வரைப் பார்க்கவிடாமல் அந்தப் பெண்மணியை விரட்டினார்கள். இதை அந்த மாளிகையில் இருந்த முதல்வர் சன்னல் வழியாகப் பார்த்துவிட்டார். உடனே அந்தப் பெண்மணியை அழைத்து வருமாறு காவலர்களிடம் கூறினார். வந்தவரிடம், “”என்ன விவரம். எதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்தப் பெண்மணி, “”சுதந்திரப் போராட்டத்தில் வீர மரணமடைந்த வாஞ்சிநாதரின் மனைவிதான் நான். தியாகிகளுக்கு வழங்கும் ஓய்வு ஊதியம் ஐம்பது ரூபாய்தான் எனக்கும் வழங்குகிறது அரசு. தயவு செய்து இதை உயர்த்தித் தரவேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.
இதைக் கேட்ட அண்ணா கண்ணீர்விட்டதுடன், வாஞ்சிநாதரின் மனைவியின் ஓய்வு ஊதியம் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியாகிகளின் ஓய்வு ஊதியத்தையும் உயர்த்திக் கொடுத்தார்.