ரசிகர் மன்றங்கள் மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைத்துப் பண்டிகை தினத்திலும் அன்னதானம்: த்ரிஷா
சென்னை, செப்.21: என்னுடைய ரசிகர்கள் மன்றங்கள் மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைத்துப் பண்டிகை தினங்களிலும் அன்னதானம், ரத்த தானம், நற்பணிகள் செய்யப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, த்ரிஷா நடித்த “ஸ்டாலின்‘ என்ற தெலுங்கு படம் இந்தியா முழுவதும் புதன்கிழமை வெளியானது.
இந்த படத்துக்காக துவரை இல்லாத அளவு அதிக பிரிண்ட்டுகள் தயாரிக்கப்பட்டு படம் திரையிடப்பட்டுள்ளது.
சென்னையில் சத்யம், மாயாஜால், கேசினோ உள்ளிட்ட சில திரையரங்குகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இதையொட்டி த்ரிஷா ரசிகர் மன்றத்தினர் கேசினோ திரையரங்கில் கொடிகள், தோரணங்கள், விளம்பரப் பதாகைகள் போன்றவற்றை வைத்திருந்தனர்.
அதோடு அடையாறு புற்றுநோய்க் கழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சிறார்களுக்கு அன்னதானம் வழங்கினர். த்ரிஷா நடித்த எந்த மொழிப் படம் வந்தாலும் அன்னதானம், ரத்ததானம் வழங்கும் காரியங்கள் தொடரும் என்று ரசிகர் மன்றத்தினர் கூறினர்.
தமிழகம் முழுவதும் ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.
இதுதொடர்பாக த்ரிஷாவைத் தொடர்புகொண்ட போது அவர், மகேஷ்பாபுவுடன் நடிக்கும் “சைனி குடு‘ என்ற தெலுங்குப் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்தார். ரசிகர் மன்ற செயல்பாடுகள் குறித்து கேட்ட போது த்ரிஷா கூறியது:
ரசிகர் மன்றங்கள் மூலம் நற்பணிகள் செய்வது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. “கட்-அவுட்’ வைப்பது, பாலபிஷேகம் செய்வது போன்றவற்றை நான் அனுமதிப்பதில்லை.
ஆதரவற்றவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யும்போது கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது.
இனி வரும் நாள்களில் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் அனைத்து பண்டிகை தினங்களிலும், முக்கிய தினங்களிலும் ரசிகர் மன்றங்கள் மூலம் அன்னதானம், ரத்த தானம், நற்பணிகள் போன்றவற்றை செய்யவுள்ளோம் என்றார் த்ரிஷா.