Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Anlaysis’ Category

Uttar Pradesh Elections – Anlaysis: Neeraja Chowdhry on Rahul Gandhi Politics

Posted by Snapjudge மேல் மார்ச் 26, 2007

சர்ச்சைக்கு வித்திட்ட ராகுல் காந்தியின் பிரசாரம்!

நீரஜா செüத்ரி

“”இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் பாபர் மசூதியை இடிக்கவிட்டிருக்க மாட்டார்கள்” என்று ராகுல் காந்தி பேசியதை நியாயப்படுத்தவும், விளக்கம் அளிக்கவும் காங்கிரஸ் தலைவர்கள் எந்தெந்த வகையிலோ முயல்கின்றனர்; ஆனால் தனிப்பட்ட முறையில் பேசும்போது தருமசங்கடத்தில் நெளிகின்றனர்.

உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள ராகுல் காந்தி, எதிர்க்கட்சியினரைத் தாக்குவதாக நினைத்து சொந்தக் கட்சிக்காரர்களையே தாக்கிவிட்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பி.வி. நரசிம்மராவ்தான் பிரதமராக இருந்தார். உத்தரப் பிரதேச அரசைக் கலைக்கவும் தேவைப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில், மத்திய அமைச்சரவை என்று பல்வேறு அமைப்புகளும் அவருக்கு முழு அதிகாரத்தை அளித்திருந்த நிலையிலும் மசூதி இடிக்கப்பட்டதைத் தடுக்க அவரால் முடியவில்லை.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்திருந்தால் மசூதியை இடிக்கவிட்டிருக்க மாட்டார் என்பது உண்மையே. ஆனால், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலைகளை வைக்க, கதவுகளின் பூட்டைத் திறக்க உத்தரவிட்டதும் அவரே; ஷா பானு வழக்கில் அவருடைய கணவரே ஜீவனாம்சம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், அதை செல்லாததாக்க ஒரு மசோதா கொண்டுவந்ததும் அவரே. இவ்விரு செயல்களும் மக்களை மத அடிப்படையில் அணி திரள வைத்தன. மூடப்பட்ட இந்த அத்தியாயங்களை மீண்டும் மறுவாசிப்பு செய்யவே ராகுல் காந்தியின் கருத்து உதவியிருக்கிறது. இந்நிலையில், ராகுலின் இக்கருத்து பாரதீய ஜனதாவுக்குத்தான் அரசியல் லாபத்தை அள்ளித்தரும். பாபர் மசூதி இடிப்பு என்ற விவகாரம் ஹிந்துக்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் “”நடந்து முடிந்துபோன” ஒரு விஷயம்தான்.

அவ்வப்போது, “”ராமருக்குக் கோயில் கட்டுவோம்” என்று அரற்றிக் கொண்டிருந்தாலும், அயோத்தி விவகாரம் இனி தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படாது என்பதை சங்கப் பரிவாரங்கள் உணர்ந்திருக்கின்றன. எனவேதான் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு என்று பிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன.

மத ரீதியாக மக்களைத் திரட்டும் பிரச்சினைகளைப் பேசினால் அதனால் பலன் அடைவது பாரதீய ஜனதாவும் சமாஜவாதி கட்சியும்தான். ஹிந்துத்துவா கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்தும் பாஜக கூட இப்போது, நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு இன்னும் தண்டனையை நிறைவேற்றாதது குறித்தும், அரசின் நிதி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசியது குறித்தும்தான் கண்டனம் தெரிவித்து வருகிறது.

ராகுல் காந்தியின் கருத்தால் முஸ்லிம்கள், காங்கிரஸýக்கு மீண்டும் ஆதரவு தருகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, முஸ்லிம்களின் வோட்டு சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக தளம், ஜன மோர்ச்சா என்று ஐந்து வெவ்வேறு கட்சிகளுக்குப் பிரிந்து போகும்.

அதே சமயம், மேல் சாதியினரின் வாக்குகள் பாஜகவுக்கு குவியும். சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவும், உத்தரகண்ட் பேரவைத் தேர்தல் முடிவும், மேல் சாதியினர் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டதையே உணர்த்துகின்றன.

இந்த நாட்டை ஆள்வதற்குத் தகுதி உள்ள குடும்பம் “”நேரு-காந்தி” குடும்பம்தான் என்பதையே ராகுலின் பேச்சு வலியுறுத்துகிறது. குடும்ப ஆட்சி என்றாலே எழும் கண்டனக் குரல்கள் இப்போது அடங்கி வருகின்றன. இப்போது இதுதான் நடைமுறை என்றாகி வருகிறது.

இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் 500 குடும்பங்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் நிலைமை ஏற்பட்டுவிடலாம். இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 4-வது இடம்தான் கிடைக்கும் என்று பேசப்படும் நேரத்தில், ராகுலின் கருத்து காரணமாக காரசாரமான விவாதங்கள் தொடங்கிவிட்டன. ராகுல் பேசியது சரியே என்று காங்கிரஸ் தொண்டர்கள் வீறாப்போடு எதிர்வாதம் செய்கின்றனர். சாரமற்று, விறுவிறுப்பற்று இருந்த தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. அந்த வகையில் ராகுலின் பேச்சு வரவேற்கத்தக்கதே.

ராகுல் காந்தி வளர்ந்துவரும் இளம் தலைவர்; இளைய சமுதாயத்தின் பிரதிநிதி. அந்த வயது மக்களின் கனவுகளை, ஆசைகளை, நியாயங்களை பிரதிபலிக்கும் கருத்துகளை அவர் எடுத்துவைக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிப்பு பிரச்சினை செத்துவிட்டது. நரசிம்மராவும் மறைந்துவிட்டார். நடந்த சம்பவத்துக்கு சோனியா காந்தியும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். முஸ்லிம்களை ஈர்க்கவும், நம்பிக்கை ஊட்டவும் வேறு வழிகள் உள்ளன. வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்க, தான் மேற்கொள்ளவிருக்கும் உத்திகளை, லட்சியங்களை ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் முன் நிறுத்த வேண்டும்.

தமிழில்: சாரி.

=========================================================
உ.பி. தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சியில் அதிக அளவில் கிரிமினல்கள் போட்டி

லக்னெü, ஏப். 11: உத்தரப்பிரதேச மாநில பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் அதிக குற்றப்பின்னணி கொண்டவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் கொடுத்த தகவல்களை உத்தரப்பிரதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆராய்ந்தது.

அதன்படி

  1. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் (33.33%) அதிக குற்றப்பின்னணி கொண்டவர்களாக உள்ளனர்.
  2. பாஜகவினர் (27.03%) 2-ம் இடத்திலும்,
  3. சமாஜவாதி கட்சியினர் (26.5%) 3-ம் இடத்திலும்,
  4. காங்கிரஸ் கட்சியினர் (20.17%) 4-ம் இடத்திலும்,
  5. ராஷ்டிரீய லோக்தளம் கட்சியினர் (18.31%) 5-ம் இடத்திலும் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல

  1. சமாஜவாதி கட்சியினரில் அதிகம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
  2. இரண்டாம் இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினரும்,
  3. பாஜக,
  4. காங்கிரஸ் ஆகிய கட்சியினர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு (PAN Number) நிரந்தர கணக்கு எண் இல்லை.

=========================================================

Dinamani – May 8

மாயாவதிக்கு உ.பி. மேல்சாதியினர் ஆதரவு!

நீரஜா சௌத்ரி

கடந்த வாரம் அலாகாபாதில் மாயாவதி பேசிய தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது பிற்பகல் மணி 3. வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. அருகில் “”2 பேர்” நின்றுகொண்டு மேடையையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வெயிலோ, மழையோ -சகோதரி மாயாவதியைப் பார்க்க தலித்துகள் காத்திருப்பதில் வியப்பு ஏதும் இல்லை; ஆனால் “”அந்த இருவரும்” தலித்துகள் அல்ல, வைசிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், வியாபாரிகள். முலாயமின் “”அடியாள் அரசு” முடிவுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்தவர்கள்.

பொதுக்கூட்டங்களுக்கு வருகிறவர்கள் எல்லோரும் அந்த கட்சிக்கே வாக்களித்துவிடமாட்டார்கள் என்பது நாம் அனுபவத்தில் அறிந்த பாடம். ஆனால் பொதுக்கூட்டத்துக்கு வரும் கூட்டம், தலைவர்களின் செல்வாக்கை எடைபோட உதவுகிறது. மாயாவதியின் பொதுக்கூட்டத்துக்கு வருகிறவர்கள், அவர் பேச்சின் முக்கியப் பகுதியில் கைதட்டவும், ஆரவாரம் செய்யவும் தவறுவதே இல்லை.

ராகுல் காந்தியின் பிரசாரத்தின்போது அவருடைய வாகனத்துக்கு இணையாக துடிப்போடு ஓடிவரும் இளைஞர்களைப் பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு ஊட்டப்பட்டுவிட்டது என்று புரிகிறது.

அலாகாபாதில் நடந்த அத்வானியின் பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்களிடையே பெரிய பரபரப்போ, உற்சாகமோ இல்லை. ஆனால் வந்தவர்கள் அனைவரும் பாஜகவுக்கே வாக்களிக்கத் தீர்மானித்துவிட்டவர்கள் என்பதில் சந்தேகமே வரவில்லை.

மாயாவதியின் பொதுக்கூட்டத்துக்கு வந்த 2 வைசியர்களும், உத்தரப்பிரதேசத்தில் மேல் சாதியினரிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றத்தை உணர்த்துகின்றனர். 2007 உ.பி. சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வித்தியாசமாகவே இருக்கப் போகிறது. முஸ்லிம்கள் தங்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அல்லது தங்களுடைய சமூகத்துக்கு இணக்கமானவர்கள் யார் என்று பார்த்து வாக்களிப்பார்கள். உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள் இம்முறை அந்த வகையில்தான் வாக்களித்து வருகின்றனர்.

தங்கள் கட்சி சார்பில் பிராமணர்கள் போட்டியிடாத தொகுதிகளில்தான் மாயாவதி கட்சியின் பிராமண வேட்பாளர்களுக்கு பிராமணர்கள் வாக்களிப்பார்கள் என்று பாஜக நம்புகிறது. மாயாவதி 86 பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறார். எனவே கடைசி 2 சுற்று வாக்குப்பதிவில் அவருடைய கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று முந்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிக இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியாக அவருடைய கட்சி வரும் வாய்ப்பும் இருக்கிறது.

மாயாவதி கட்சிக்கு 150 இடங்களுக்கு மேல் கிடைத்து, காங்கிரஸ் கட்சிக்கும் 40 இடங்கள் வரை கிடைத்தால், சுயேச்சைகள் ஆதரவுடன் மாயாவதி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

இவ்விரு கட்சிகளைத் தவிர பிற கட்சிகளின் கூட்டணி அரசுக்கு வாய்ப்பே கிடையாது. அதிக இடங்களில் வென்ற 2-வது கட்சியாக பாஜக வரும் என்பதால், பாஜக-பகுஜன் சமாஜ் கூட்டணி அரசும் சாத்தியம்தான்! இரு கட்சிகளும் ஏற்கெனவே இருமுறை கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன. ஆனால், பாஜக தொண்டர்கள் மாயாவதியுடன் கூட்டணியே கூடாது என்று இப்போது பலமாக எதிர்ப்பதால் இம் முறை அப்படியொரு வாய்ப்பே கிடையாது என்று திட்டவட்டமாக மறுக்கின்றனர் கட்சித் தலைவர்கள்.

உத்தரப் பிரதேசமும் பிகார் வழியிலேயே செல்வதாக பாஜக தலைவர்கள் கருதுகின்றனர். யாருமே ஆட்சி அமைக்க முடியாமல் மீண்டும் பேரவைக்குத் தேர்தல் நடந்தால், அதிக இடங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சியாக வரும் வாய்ப்பு தங்களுக்கே அதிகம் என்று அவர்கள் கணக்கு போடுகின்றனர். எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவருவதை பலமாக எதிர்த்தாலும், உள்ளூர அதை வரவேற்பார்கள் என்று தெரிகிறது. இந்தத் தேர்தலில் 2 தவறுகளைச் செய்துவிட்டதாக பாஜக தலைமை கருதுகிறது. முலாயம் சிங் அரசைத் தீவிரமாக எதிர்க்காதது முதல் தவறு. பிகாரில் நிதீஷ்குமார் அமைத்த சாதிக் கூட்டணியைப் போல, உத்தரப்பிரதேசத்தில் அமைக்காமல் போனது இரண்டாவது தவறு என்று அவர்கள் கருதுகின்றனர்.

ஆட்சி அமைக்க சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுதான் தேவை என்ற நிலை மாயாவதிக்கு ஏற்பட்டால், காங்கிரஸ் கட்சி ஆதரவு தரக்கூடும். அதே சமயம், குடியரசுத் தலைவர் ஆட்சிதான் ஒரே வழி என்றாலும் காங்கிரஸýக்கு மகிழ்ச்சிதான். ஏன் என்றால் பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அதற்கு 4-வது இடம்தான். குடியரசுத் தலைவர் ஆட்சி என்றாலோ, தில்லியில் உள்ள மத்திய அரசின் மூலம் உத்தரப்பிரதேசத்தை மறைமுகமாக ஆளலாம்.

மாயாவதி ஆட்சி அமைப்பதாக இருந்தால் அதை உடனடியாக, மின்னல் வேகத்தில் செய்வதையே காங்கிரஸ் விரும்பும். நேரம் கடத்திக் கொண்டே இருந்தால், பதவி ஆசை காட்டி பிற கட்சியினர் முதலில் காங்கிரûஸத்தான் உடைப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுபவபூர்வமாகவே தெரியும்.

தமிழில்: சாரி.

Posted in Anlaysis, Assets, BJP, BSP, Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Disclosure, EC, election commission, Elections, Evasion, Income, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Islam, IT, Muslim, Narasimha, Narasimha Rao, Narasimma Rao, Narasmiha Rao, Neeraja, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Pan, Politics, Polls, PVN, Rahul, Rahul Gandhi, Sonia, Tax, UP, Uttar Pradesh | 7 Comments »

Uttar Pradesh Elections – Anlaysis: BSP, BJP, Congress, SP

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

உ.பி. மாநிலத் தேர்தல்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. எனினும் இம் மாநிலத்தில் கட்சிகளிடையே பெரிய கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு பிரதானக் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரியாகக் கருதுவதே இதற்குக் காரணம். மிஞ்சிப் போனால் இக் கட்சிகள் மாநில அளவிலான சிறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம்.

பாஜக இந்த வகையில் ஏற்கெனவே நடவடிக்கையில் ஈடுபட்டு அப்னா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்னா தளம் என்பது அடிப்படையில் “குர்மிக்கள்’ எனப்படும் பிரிவினரின் கட்சியாகும். மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் இப் பிரிவினர் பெருவாரியாக உள்ளனர். வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த சிறு கட்சியுடனும் பாஜக தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பினரின் கட்சி என்ற முத்திரையைத் தாங்கிய பாஜக, இந்த ஏற்பாடுகள் மூலம் பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று கருதுகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 88 இடங்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது.

மற்றொரு அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ், உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அக் கட்சி அதே மூச்சில் தொகுதி உடன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஒருவேளை வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ஜனமோர்ச்சாவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அஜீத் சிங்கின் கட்சி, லாலு கட்சி ஆகியவற்றுடனும் இவ்விதம் தொகுதி உடன்பாடு காணப்படலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 25 இடங்களை அதாவது மொத்த இடங்களில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே பெற்றது. இந்தத் தடவை காங்கிரஸýக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்ல முடியாது.

இப்போது ஆளும் கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இம் மாநிலத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்குகின்றன. இந்த இரு கட்சிகளுமே ஒன்றையொன்று பரமவைரிகளாகக் கருதுகின்றன. யாதவ் சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்ற முலாயம் சிங் அண்மைக்காலமாக மற்ற பல சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் முனைப்புக் காட்டி வந்துள்ளார். மாநிலத்தில் “வாட்’ வரித் திட்டம் அமலாக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக முலாயம் சிங் கட்சியின் தோழமைக் கட்சியாக விளங்கி வந்த மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முலாயம் சிங்குக்கு எதிரான எந்தக் கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.

மாயாவதியின் கட்சியானது தலித்துகளின் கட்சி என்று அறியப்பட்டதாகும். ஆனால் அண்மைக் காலமாக மாயாவதி தமது கட்சியானது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். உயர் வகுப்பினர் பலரைத் தமது கட்சியில் சேர்த்துக் கொண்ட அவர், இப்போதைய தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் தமது கட்சி சார்பில் உயர் வகுப்பினரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது அவரது நோக்கமாகும்.

உ.பி. மாநிலம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் நிலையான ஆட்சி நிலவியதாகச் சொல்ல முடியாது. 2002 தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. இப்போதைய தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிவுகள் மே மாத இரண்டாவது வாரத்தில்தான் தெரிய வரும்.

===========================================================
உ.பி.யில் மாயாவதி போட்டியில்லை; மேல் சாதியினருக்கு அதிக தொகுதிகள்

லக்னெü, மார்ச் 14: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேல் சாதியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடையே மாயாவதி கூறியது:

உ.பி.யில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.

நான் போட்டியிட்டால் சுற்றிலும் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நான் இப்போது போட்டியிடப் போவதில்லை. கட்சி வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு உறுப்பினர் எனக்காக விட்டுக்கொடுப்பார். பின்னர் இடைத்தேர்தல் மூலம் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.

அவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின்படி

  • 139 தொகுதிகள் மேல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்
  • 86 தொகுதிகள் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  • 110 தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினருக்கும்,
  • 93 தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும்,
  • 61 முஸ்லிம்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது இறுதி செய்யப்பட்ட பட்டியலாகும். அதே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்காது. எங்கள் கட்சி பெரும்பான்மை பலம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.

முலாயம் சிங் போட்டியிடுவார் என கருதப்படும் குன்னார் தொகுதியில் முகம்மது ஆரிப் என்பவரை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

================================================

உ.பி.யில் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு அலசப்படுகிறது: தேர்தல் கமிஷன் சிறப்பு நடவடிக்கை

புது தில்லி, ஏப். 2: உத்தரப் பிரதேசத்தின் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு தொகுக்கப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கள்ள வாக்கு போடச் சொல்வது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுப்பது, வாக்குச் சாவடிக்குள் புகுந்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களையும், தேர்தல் அலுவலர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி இஷ்டப்படி கள்ள வாக்குப் போடுவது என்று அனைத்துவித தேர்தல் முறைகேடுகளையும் தொகுதி வாரியாக பட்டியலிட்டுத் தருமாறு மத்திய தலைமை தேர்தல் ஆணையும் உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் இப்போது முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. இக் கட்சி பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே தோழமைக் கட்சியாக இல்லை.

இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தியே தீருவது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துவிட்டதையே இந்தப்புதிய நடவடிக்கை தெரிவிக்கிறது.

403 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி வாரியாக பல தகவல்களைத் திரட்டுமாறு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

பணம்-பொருள் கொடுத்து வாக்கு சேகரிக்கப்படும் வாக்குச் சாவடிகள், பிற மத, சாதிக்காரர்களை அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுக்கும் வாக்குச் சாவடிகள், தேர்தல் அதிகாரிகளையும் வாக்குச் சாவடி முகவர்களையும் மிரட்டிவிட்டு தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் வாக்குச் சாவடிகள் என்று முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அடையாளம்காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சராசரி வாக்குப்பதிவைவிட 15% அதிகம் வாக்குகள் பதிவாகும் தொகுதிகள், சராசரியை விட 15% குறைவாக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அடையாளம் காணவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வழக்கமான தேர்தல் நடைமுறைகளைவிட இவையெல்லாம் புதுமையாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில்கூட முறைகேட்டை அனுமதிக்காமல் தடுப்பது என்ற உறுதி தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்கத்தான் இதையெல்லாம் தேர்தல் கமிஷனால் சாதிக்க முடிந்ததா என்று தெரிந்து கொள்ளமுடியும். இப்போதைக்கு இது ஆரம்பம்தான்.

தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மத்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக மிகப் பெரும் பொறுப்புகளை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.

=================================================================
ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி: முலாயம் சிங் தேர்தல் வாக்குறுதி

எட்டா, ஏப். 3: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மைன்புரி, பெரோஸôபாத், எட்டா ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணிகளில் பங்கேற்று முலாயம் சிங் பேசியதாவது:

சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து நிற்கின்றன.

சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்ட மேற்படிப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

அதிகாரிகளை கூண்டோடு மாற்றியதுதான் லக்னெü, கான்பூர் வன்முறைக்கு காரணம்: தேர்தல் ஆணையம், மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கூண்டோடு இடமாற்றம் செய்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அந்தந்தப் பகுதிகளின் நிலவரமே இன்னும் தெரியவில்லை.

லக்னெüவிலும், கான்பூரிலும் முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கு இடையிலான வன்முறையை அதிகாரிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.

முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய வேண்டும் என்றார் முலாயம் சிங்.
=================================================================
அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கீடு: உ.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி

லக்னெü, ஏப். 3: உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும்; பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் 50% பதவிகள் பெண்களுக்கே தரப்படும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பெண்கள், முதியோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நல திட்டங்களை கட்சி அறிவித்துள்ளது.

சட்டம், ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும், விலைவாசி உயராமல் கண்காணிக்கப்படும், பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் நடமாடமுடியாதபடி “பொடா’வுக்கு இணையான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்படும், வங்கதேசத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஊடுருவியவர்கள் கண்டுபிடித்து அகற்றப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

கட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாநிலத் தலைவர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

“கிரிமினல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு முறிக்கப்படும். மாநிலத்தில் “சிமி’, “ஐஎஸ்ஐ’ ஆகியவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.

பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.30,000 வளர்ச்சிப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். 21 வயதுவரை அப் பெண்குழந்தையின் படிப்புச் செலவுக்கு அதிலிருந்து பணம் எடுத்துதரப்படும்.

அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கப்படும்.

விதவையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.

மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.

அரசு இடங்களில் உள்ள வீட்டு மனை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

சுகன்யா விவாஹ யோஜனா, கன்யாதான் யோஜனா போன்ற திருமண திட்டங்கள் தொடரும்.

அங்கன்வாடி (பெண்) ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்படும்.

வேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி அளிக்கப்படும்.

இளைஞர் நலனுக்காக தனி கமிஷன் ஏற்படுத்தப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பெண்கள் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

முதியோருக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சலுகைக் கட்டணத்தில் அவர்கள் பயணம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம். எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் கட்டித்தரப்படும்.

விலைவாசியைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர், கள்ளச் சந்தையில் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக முறை வலுப்படுத்தப்படும்.

பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், வந்தே மாதரம் ஆகியவை கட்டாயமாக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

பாஜக வெற்றி பெற்றால் கல்யாண் சிங் முதல்வர் பதவியை ஏற்பார் என்று இரு தலைவர்களும் நிருபர்களிடம் அறிவித்தனர்.

=================================================================

Posted in abuse, Alliances, Allocation, Amar Singh, Amitabh, Anlaysis, Apna Dal, Apna Dhal, Assembly, Ayodhya, Backgrounder, BJP, booth capturing, Boothcapturing, Brahmins, BSP, candidates, Caste, Chief Minister, CM, Communist, Congress, Corruption, CPI, EC, Elections, Electorate, Employment, FC, Females, Filmfare, History, Janata Dal, Jats, Jobs, Kalyan, Kalyan Singh, Kanshiram, Lucknow, Manifesto, Marxist, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MLA, Mulayam, Mulayam Singh Yadav, Muslim, Natwar, OBC, Opinion, Party, pension, Perspectives, Polls, Religion/Politics, Reservation, Samajvadi, Samajwadi, SC, School, seats, Sonia, SP, ST, Surya Namaskar, Tiwari, UP, Uttar Pradesh, Vajpayee, Vande Mataram, Vandhe Mataram, Varanasi, VAT, voters, Votes, VP Singh, Women, Yadav, Yoga, Yogasana, Youth | Leave a Comment »