கட்சியிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் ஏற்க மாட்டோம்: ஜெயலலிதா
சென்னை, டிச. 1: கட்சியிலிருந்து வெளியேறியவர்களை மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமை கூறினார்.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மகன் திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:
மணமக்கள் உருவாக்கி இருக்கும் இந்தக் கூட்டணியின் மூலம் மணமகன் தன்னுடைய குடும்பப் பொறுப்பில் மணமகளுக்கு உரிய பங்கைத் தர வேண்டும். கட்டாயம் அவர் தருவார் என்று நம்புகிறேன். மணமகள், “நான் என்ன சாமியார் மடமா நடத்துகிறேன்?’ என்று கேட்கும் விதமாக மணமகன் நடந்துகொள்ள மாட்டார் என்று எண்ணுகிறேன்.
நம்முடைய இடத்தை நம்மிடம் இருந்து யாரும் பறித்துவிட முடியாது; களவாடி விடவும் முடியாது. ஏனென்றால் பொன்னான எதிர்காலம் நமக்குச் சொந்தமானது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் சிலர் வெற்றி பெற்றிருக்கிறார்களே என்று கருதலாம். அது வெற்றி அல்ல; பொய்யான தோற்றம். ஜனநாயகத்தின் படுதோல்வியாகும். மக்கள் நம் மீதுதான் முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
தேர்தலில் கட்சிக்கு செயற்கையான, தாற்காலிகமான பின்னடைவு ஏற்பட்டதால் சில வேடந்தாங்கல் பறவைகள் வழக்கம் போல் இடம் மாறி வேறு திசை நோக்கிப் பறந்துள்ளன. எப்போதும் போல் அவர்கள் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். இதே வேடந்தாங்கல் பறவைகள் 1996-ல் தேர்தலில் தோல்வி ஏற்பட்டபோது இதைப் போலவே தப்புக் கணக்குப் போட்டன. “இந்த அம்மாவின் கதை முடிந்தது; அதிமுகவுக்கு எதிர்காலமே இல்லை’ என்று தப்புக் கணக்குப் போட்டு, வேறு எங்கேயோ பறந்து சென்றுவிட்டன.
அந்தத் துரோகத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றி பெற்றோம். அப்போது அமைந்த மத்திய அரசில் இடத்தைப் பிடித்தோம்.
அப்போதே நம்மை விட்டுப் பறந்து போயிருந்த வேடந்தாங்கல் பறவைகள் பல திரும்பி வந்தன. தாய்ப் பறவையைப் போல் அவர்களை மன்னித்து மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டேன்.
பின்னர் 2001-ல் மீண்டும் என் தலைமையில் ஆட்சி அமைந்தது. இன்னும் பல வேடந்தாங்கல் பறவைகள் அப்போது திரும்பி வந்து, தங்களை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பித்தன. மறுபடியும் அவர்களைக் கட்சியில் இணைத்துக்கொண்டேன்.
ஆனால், தற்போது 2006-ல் பின்னடைவைச் சந்தித்ததும் மீண்டும் அதே வேடந்தாங்கல் பறவைகள் சில தங்கள் புத்தியைக் காட்டி, கூட்டைவிட்டு வேறு இடம் தேடி பறந்து போயுள்ளன. அவர்கள் திருந்தவில்லை; வழக்கம் போல் தப்புக் கணக்குப் போடுகிறார்கள்.
காலம் மாறும். மீண்டும் அதிமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும். தேசிய அளவிலும் மத்திய அரசில் கட்சி பெரும் பங்கு வகிக்கும்.
அப்போது இந்த வேடந்தாங்கல் பறவைகள் திரும்பி வந்தால், மறுபடியும் மன்னிக்க மாட்டோம்; மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார் ஜெயலலிதா.