பொழிச்சலூர் பொதுக் கூட்டத்தில் மேதா பட்கர் இன்று பங்கேற்கிறார்
சென்னை, அக். 9: சென்னை விமான நிலைய விரிவாக்கப் பிரச்சினையால் பாதிக்கப்படும் பகுதியான பொழிச்சலூரில் திங்கள்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நர்மதா அனை திட்ட எதிர்ப்பு குழுத் தலைவி மேதாபட்கர் பங்கேற்கிறார்.
சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக இங்குள்ள பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, இங்குள்ள விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் மக்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் தில்லி சென்று மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக மூத்தத் தலைவர்கள் பலரையும் சந்தித்து மனு அளித்தனர்.
இதேபோல சென்னையிலும், மாவட்டத் தலைநகரான காஞ்சிபுரத்திலும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
போராட்டத்துக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் வாழ்வுரிமை தன்னார்வ அமைப்புகளிடம் ஆதரவு கோரினர். இவர்களின் கோரிக்கையை ஏற்று நர்மதா அனை திட்ட எதிர்ப்பு குழுத்தலைவி மேதா பட்கர் பொழிச்சலூருக்கு திங்கள்கிழமை வருகிறார்.
பொழிச்சலூர் பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் இக்கூட்டத்தை நடத்துகின்றனர்.
=========================================================
சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல் பகுதி நிலங்களை அரசு கையகப்படுத்தாது: முதல்வர்
சென்னை, மார்ச் 12: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள நிலங்களை அரசு கையகப்படுத்தாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
விமான நிலைய விரிவாக்கப் பிரச்சினையில் அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டி பேசிய பிறகுதான் இறுதி முடிவு முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தைப் பற்றி விவாதித்து எந்த முடிவுக்கும் தமிழக அரசு இன்னும் வரவில்லை. ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும், விமான நிலைய விரிவாக்கத்தின் காரணமாக அதிக அளவில் குடிசைவாசிகள் வாழக்கூடிய இந்த பகுதிகளில் உள்ள நிலங்களை அரசு கையகப்படுத்தாது.
எந்த ஒரு விரிவாக்கத் திட்டமானாலும், மேம்பாட்டுத் திட்டமானாலும் அதனால் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்காத வகையில்தான் இடங்கள் தேர்வு செய்யப்படும்.
விதிகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை: விதிகளை மீறி செல்வந்தர்கள் கட்டிய கட்டடமாயிருந்தாலும் நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது. அதேபோல ஏழைகள் வாழும் வீடுகளை அகற்ற இந்த அரசு முன்வராது. இதில் யாருக்கும் எந்தவிதமான அச்சமும் தேவையில்லை.