சென்னை மாநகராட்சி: வரி உயர்வு இல்லாத உபரி பட்ஜெட்
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த வரி விதிப்பு, நிதி நிலைக்குழு தலைவர் ராதா சம்பந்தம்.
சென்னை, மார்ச் 13: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட எந்த வரி உயர்வும் இல்லாத 2007-08ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மாமன்ற கூட்டத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இதனை வரி விதிப்பு மற்றும் நிலைக்குழுத் தலைவர் ராதா சம்பந்தம் தாக்கல் செய்தார். இதன்படி புதிய வரிகள் இல்லை. பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு பட்ஜெட்டில் ரூ. 2.67 கோடி உபரி நிதியாக காட்டப்பட்டுள்ளது.
சென்னையில் 15 இடங்களில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும், மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகளை மேம்படுத்த ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மேயர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் வரும் நிதி ஆண்டில் மேற்கொள்ள உள்ள புதிய திட்டங்கள் குறித்து அவர் பேசியது: வரும் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கையில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை, தற்போது நடைமுறையில் உள்ள சொத்து வரி உள்பட எந்த வரி விகிதங்களும் உயர்த்தப்படவில்லை.
2007-08ம் நிதி ஆண்டில் சென்னை மாநகராட்சியின் மொத்த வருவாய் 702.03 கோடியாக இருக்கும். செலவு 699.36 கோடியாக இருக்கும்.
புதிய திட்டங்கள்: சென்னை மாநகராட்சியில் அனைத்து குடிசைப் பகுதிகளிலும் உள்ள 296 கிலோ மீட்டர் சாலைகள் ரூ. 90 கோடியில் சிமென்ட் சாலைகளாக மேம்படுத்தப்படும். மக்கள் வசதிக்காக பஸ் நிறுத்தங்களில் உலகத் தரம் வாய்ந்த, அதிநவீன நிழற்குடைகள் அமைக்கப்படும். முதல்கட்டமாக, 350 நிறுத்தங்களில் இத்தகைய நவீன நிழற்குடைகள் அமைக்கப்படும்.
எஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள்: சென்னையில் பெருகிவரும் பாதசாரிகள் போக்குவரத்தை கருத்தில் கொண்டு தேவையான இடங்களில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். முதல்கட்டமாக, 15 இடங்களில் இத்தகைய நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். அதிநவீன நிழற்குடை, நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் கட்டுதல், இயக்குதல், ஒப்படைத்தல் முறையில் (பி.ஓ.டி.) தனியார் மூலம் மேற்கொள்ளப்படும்.
சாலைகள் மேம்பாடு: மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பேருந்து சாலைகள் ரூ. 20 கோடியில் மேம்படுத்தப்படும். முக்கிய சாலை சந்திப்புகளில் அடிக்கடி பழுதடைவதைத் தவிர்க்க ரூ. 4 கோடியில் மாஸ்டிக் ஆஸ்பால்ட் கான்கிரீட் அமைக்கப்படும்.
அனைத்து உட்புறச் சாலைகளும் ரூ. 73 கோடியில் தார் சாலைகளாக மேம்படுத்தப்படும்.
புதிய மேம்பாலங்கள்: சென்னை எழும்பூர் ஆன்டர்சன் பாலம் அருகில் எத்திராஜ் சாலை- கிரீம்ஸ் சாலையையும் இணைக்கும் வகையில் கூவத்தின் குறுக்கே பாலம் கட்டப்படும்.
வில்லிவாக்கம் ரயில்வே கேட் பகுதியில் வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு அருகில் எல்.சி. 1 ரயில்வே கேட் பகுதியில் புதிய மேம்பாலம் விரைவில் அமைக்கப்படும்.
வேளச்சேரி, அரும்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும்.
அங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு இணைப்பு: 1,146 அங்கன்வாடி மையங்களிலும் உள்ள சமையலறைகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
அனைத்து வார்டுகளிலும் ஆரம்ப சுகாதார மையம்: சென்னையில் தற்போது 115 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. நடப்பு நிதி ஆண்டில் மேலும் 40 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குழந்தை பிறந்த 24 மணி நேரத்துக்குள் மருத்துவமனைகளிலேயே பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டம் நடத்த ஒவ்வொரு மண்டலத்திலும் தனியான கட்டடம் கட்டித்தரப்படும்.
மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேரும் மாணவர்களில் முதல் 25 பேருக்கு ஆண்டுக்கு தலா ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
கலை, அறிவியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை அவர்களின் படிப்பு முடியும் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். மாநகராட்சி பள்ளி மாணவர்களில் இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தனியார் மருத்துவ மனைகளில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.
முதியோர், ஊனமுற்றோர் எளிதில் பயன்படுத்தும் வகையில் 15 இடங்களில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். மாநகராட்சி தாய்சேய் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் செலவில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதிகள் அமைக்கப்படும் என்றார் மேயர்.