சேவை: ஏழைப் பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி
ந. ஜீவா
முன்பைக் காட்டிலும் பெண்கள் படிப்பது அதிகமாகியிருக்கிறது. மாணவர்களைவிட மாணவிகள் அதிக மார்க்குகள் குவித்து எவரெஸ்ட்டில் கொடிகளை ஒவ்வோராண்டும் நட்டு வருகிறார்கள். என்றாலும் இந்தக் காலத்திலும் பெண் பிள்ளைகள் ஒரு பத்தாவது படித்தால் போதும் என்று நினைக்கக் கூடிய பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிளஸ் டூ படித்த பின்னால் படிப்பில் கரைகடந்த ஆர்வம் இருந்தும் படிக்க வசதியில்லாத பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் படித்த அந்தக் குறைந்தபட்ச பத்தாவது, பிளஸ் டூ படிப்புகளும் கூட பயனில்லாமற் வீணாகப் போய்விடுகிறது.
இப்படிப்பட்ட பெண்கள் வேலைக்குப் போகும்விதமாக அவர்களுக்கு ஹோம் நர்சிங் பயிற்சி, கார், ஆட்டோ டிரைவிங், கணினிப் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி எல்லாம் இலவசமாகக் கற்றுத் தருகிறார்கள்; முடிந்தால் வேலையும் வாங்கித் தருகிறார்கள் சென்னை அண்ணாநகர் ANEW (Association for Non-traditional Employment for Women) என்கிற அமைப்பினர். அந்த அமைப்பைச் சேர்ந்த அனு சந்திரனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்…
யாருக்குப் பயிற்சி கொடுக்கிறீர்கள்?
நாங்கள் வேலைவாய்ப்பிற்கான இலவசப் பயிற்சி கொடுப்பது மிகவும் கஷ்டப்படும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குத்தான். பெண் குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். ஆனால் அவர்களால் பத்தாவதையோ, பிளஸ் டூ வையோ தாண்ட முடியாத அளவுக்குக் குடும்பநிலை இருக்கும். பிளஸ் டூ படித்துவிட்டு எந்த வேலைக்கும் போக முடியாமல் இருக்கும் பெண்களுக்கு நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம். பயிற்சியின் பின் 95 சதவீதம் பேருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்துவிடுகிறோம். இதனால் அந்தப் பெண்களின் வீட்டுக்கு ஒரு வருமானம் வருகிறது. நாளைக்கு திருமணம் என்று வருகிற போது அந்தப் பணம் அவர்களுக்கு உதவுகிறது.
ஹோம் நர்சிங் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி?
நாங்கள் ஹோம் நர்சிங் பயிற்சியை நான்கரை மாதத்தில் கற்றுத் தருகிறோம். முதல் இரண்டு மாதங்கள் தியரி கிளாஸ், அதன்பின் இரண்டரை மாதங்கள் சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் போன்ற நிறுவனங்களில் பிராக்டிகல் பயிற்சி கொடுக்கிறோம். பயிற்சி முடிந்தவுடன் அவர்களுக்கு வேலை கிடைத்துவிடும். நிறைய வீடுகளில் முதியவர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்துக் கொள்ள வீட்டிலுள்ளவர்களால் முடியாது. வீட்டிலுள்ள எல்லாரும் வேலைக்குப் போகிறவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் அவர்களை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணவும் முடியாது. ஆஸ்பத்திரியில் அவர்களைப் பார்த்துக் கொள்ளணுமே. அதுபோல சிறுகுழந்தைகளை வைத்திருப்பவர்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பார்கள். வேலைக்குப் போகிற நேரங்களில் சிறுகுழந்தைகளைப் பார்த்துக் கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களிடம் எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். மாதம் குறைந்தபட்சம் ரூ.3700 சம்பளம் கிடைக்கிறது. இப்படித் தேவையுள்ளவர்கள் அவர்களின் தேவையைக் குறிப்பிட்டு எங்களுக்கு போன் செய்தால் அதைக் குறித்துவைத்துக் கொண்டு அவர்கள் தேவைக்குப் பொருத்தமானவர்களை வேலைக்கு அனுப்புகிறோம்.
ஆட்டோ டிரைவிங், கார் டிரைவிங் பயிற்சிகளைப் பற்றிச் சொல்லுங்களேன்?
பெண்களுக்கு ஆட்டோ டிரைவிங், கார் டிரைவிங் பயிற்சி கொடுக்கிறோம். கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு லைசென்ஸýம் எடுத்துக் கொடுக்கிறோம். கார் டிரைவிங் ஐதப மூலமாகக் கற்றுத் தருகிறோம். ஒன்றரை மாதம் டிரெயினிங்கிற்குப் பிறகு எங்களிடம் உள்ள மாருதி, அம்பாசிடர் கார்களில் மேலும் 3 மாதங்கள் டிரெயினிங் எடுத்துக் கொள்கிறார்கள். எங்களிடம் பயிற்சி எடுத்த பெண்கள் சென்னை விமானநிலையத்தில் அங்கு வருகிற பயணிகளை உரிய இடத்தில் கொண்டு விடும் பணிகளைச் செய்கிறார்கள். பெரிய ஹோட்டல்களில், தனிப்பட்டவர்களுடைய வீடுகளில் கார் டிரைவராக வேலை செய்கிறார்கள்.
ஆட்டோ டிரைவிங் கற்றுக் கொண்ட பெண்கள் பெரிய பெரிய பள்ளிகளில் ஆட்டோ ஓட்டுகிறார்கள். பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஏற்றிச் செல்வதுதான் அவர்களுடைய வேலை. கார் டிரைவிங் பயிற்சி, ஆட்டோ டிரைவிங் பயிற்சி எடுத்தவர்கள் எல்லாருக்கும் நாங்களே வேலை வாங்கிக் கொடுத்துவிடுவோம்.
கம்ப்யூட்டரில் என்ன கற்றுக் கொடுக்கிறீர்கள்?
இப்போது கம்ப்யூட்டர் யுகமாகிவிட்டது. எனவே பிளஸ் டூ படித்த பெண்களுக்கு கம்ப்யூட்டரில் டிடிபி கற்றுக் கொடுக்கிறோம். டிசிஏ படிப்பும் உண்டு. கம்ப்யூட்டர் படிக்க வருகிறவர்களுக்கு ஆங்கிலம் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக நாங்கள் ஒரு டெஸ்ட்டும் வைக்கிறோம். இவர்களுக்கு இந்தப் பயிற்சி கொடுக்க ஒரு மாணவிக்கு சுமார் ரூ.3500 ஆகிறது.
கம்ப்யூட்டர் பயிற்சி இருந்தால் மட்டும் போதாது, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதும் இக்காலத்தில் அவசியம். இதற்கென புகழ்பெற்ற வீட்டா நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியரைக் கொண்டு வகுப்புகள் எடுக்கிறோம்.
பயிற்சி கொடுத்த பின் வேலைக்குப் போகிறவர்களிடம் பணம் எதுவும் வாங்குவீர்களா?
நாங்கள் கார் டிரைவிங் இலவசமாக கற்றுக் கொடுத்தாலும் லைசென்ஸ் வாங்க செலவாகும் 2000 ரூபாயை வேலை கிடைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும். பலர் கரெக்டாகத் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.
இலவசமாகப் பயிற்சி தந்தால் பலர் பொய் சொல்லி வருவார்களே, அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?
நாங்கள் இலவசமாக வேலைவாய்ப்புப் பயிற்சிகள் கொடுக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு சில வசதியானவர்களும் கூட வந்துவிடுவார்கள். ஆனால் நாங்கள் நாலைந்து பேர் உட்கார்ந்து இன்டர்வியூ பண்ணுவோம். அதில் நாங்கள் கேட்கிற கேள்விகளுக்கு அவர்கள் சொல்லும் பதிலிலேயே அவர்கள் ஏழையா? பணக்காரரா? என்பது தெரிந்துவிடும்.
கார்ப்பரேஷன் ஸ்கூலில் படித்தவரா? தனியார் பள்ளியில் படித்தவரா? என்பதிலேயே அவர்களுடைய வருமானநிலை தெரிந்து விடும். குடும்பத்தில் எவ்வளவு பேர்? வருமானம் எவ்வளவு? போன்ற கேள்விகளில் உண்மை தெரிந்துவிடும். அதை வைத்துத்தான் நாங்கள் பயிற்சி கொடுப்பதற்கான மாணவிகளைத் தேர்வு செய்கிறோம்.
பயிற்சிகளை எல்லாம் இலவசமாகக் கற்றுக் கொடுக்கிறீர்களே? செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
எங்களுக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்து வருகிறவர் தமிழ்நாடு ஃபெüண்டேஷனைச் சேர்ந்த சந்திரசேகர். அதுபோல நிறைய நல்ல மனம் படைத்தவர்கள் ஏராளமான நன்கொடை தருவதால்தான் எங்களால் இந்த சமுதாய சேவையைச் செய்ய முடிகிறது.