முன் மாதிரி: காடர்… மலசர்… நேச்சுரலிஸ்ட்!
வி. கிருஷ்ணமூர்த்தி
எங்கு, என்ன புதிய திட்டம் என்றாலும், முதன் முதலில் அடிபடுவது அங்கு பல ஆண்டுகளாக வசித்து வரும் மண்ணின் மைந்தர்கள்தாம். அங்கு வசிப்பவர்களை வெளியேற்றுவது நமது நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வாடிக்கை. ஆனால் இதிலிருந்து மாறுபட்டு செயல்பட்டிருக்கிறது பரம்பிக்குளம் விலங்குகள் சரணாலயம்.
இந்த மாற்றத்தின் பின்னணி என்ன?
வன விலங்கு சரணாலயங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்களில் அவர்களுக்கு அந்தப் பகுதிகளைப் பற்றிய தகவல்களைச் சொல்ல வழிகாட்டிகள் இருப்பார்கள். ஆனால், தமிழக எல்லையில், கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் வனப்பகுதியில் பார்வையாளர்களுக்கு வழிகாட்ட அப்படி தனிப்பட்ட “கைடுகள்’ கிடையவே கிடையாது.
இங்குவரும் பார்வையாளர்களுக்கு வன வளம், விலங்குகள், பறவைகள், பூச்சியினங்கள் பற்றியெல்லாம் சொல்ல இந்தப் பகுதியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடியின இளைஞர்களை “நேச்சுரலிஸ்ட்’ என்ற பெயரில் வனத்துறையினர் பணியமர்த்தி உள்ளனர் என்பதுதான் இங்கே சிறப்பு. அவர்கள்தான் அங்கு கெய்டு, வழிகாட்டி எல்லாம்.
இந்தச் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நண்பர்களாய், வழிகாட்டியாய், தகவல் களஞ்சியமாய் இந்த “நேச்சுரலிஸ்ட்’கள் ஆற்றிவரும் பணிகள் அடடா…உண்மையிலேயே பாராட்டுக்குரியவை. பறவைகள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் பெயர்களை வேறுமொழி கலப்பில்லாமல், துல்லியமாக உச்சரித்து விளக்கும் இவர்களில் பலர் மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காதவர்கள் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலையில் ஒரு பகுதியாக அமைந்துள்ளதுதான் இந்தப் பரம்பிக்குளம் வனப்பகுதி. இங்கு காடர், மலசர், மடுவர், மலமலசர் ஆகிய 4 பழங்குடி பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர். 300 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் முன்னோர்கள் வாழ்ந்த குகைகள் எல்லாம் இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இவர்கள் தவிர, தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக 1950-ம் ஆண்டுகளில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் அணை கட்டும் பணிகளுக்காகத் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்து வேலைக்காக வந்த குறிப்பிட்ட பிரிவு மக்களும் இங்கு குடியேறினர்.
பரம்பிக்குளம் ஆழியாறு அணைத் திட்டம், இங்கு தண்ணீரின் போக்கை மனிதனின் வசதிகளுக்காகத் தடம் மாற்றியது. அதுமட்டுமா, இந்தப் பகுதி பழங்குடியினரின் வாழ்க்கைப் பாதையையும் வேறு நாகரிகமான முறையில் மாற்றியமைத்து விட்டதே.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளுடன் பாதுகாப்புக்கு உடன் செல்லும் உதவியாளர்களாக இந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்களை வனத்துறையினர் நியமித்தனர். இது இங்கு நிகழ்ந்த ஒரு திருப்பம்.
அங்கு வனத்துறை அதிகாரியாகப் பணி புரிந்த நெல்சன் என்பவர் பறவையியல் அறிஞர் சலிம் அலி எழுதிய புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பெயர்களைத் துல்லியமாக உச்சரிக்க இவர்களுக்குப் பயிற்சி அளித்தார். இதனால் பறவைகள், விலங்குகளின் அத்தனை ஆங்கிலப் பெயர்களும் இவர்கள் நாவில் துள்ளி விளையாடுகின்றன.
இந்நிலையில் இங்கு வனப்பாதுகாவலராக வந்த சஞ்சயன் குமார் என்பவர் இவர்களுக்கு முறையான ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். இங்கு வரும் பார்வையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ஒரு தொகுப்பு நிதியாக உருவாக்கியுள்ளார்.
பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தச் சூழலியல் மேம்பாட்டு கவுன்சில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பழங்குடியினரும் உறுப்பினர்கள்.
இங்கு பள்ளியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள பழங்குடியினர் அனைவருக்கும் தாய்மொழி தமிழ். ஆனால் கல்வி கற்பிக்கப்படுவதோ மலையாளத்தில். அது ஒன்றுதான் வேதனை!
இவர்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள பழக்கங்களின்படி சில கிலோ மீட்டர்கள் தொலைவில் வரும் விலங்குகளைக் கூட வாசனை மூலம் அறிந்து கொள்கிறார்கள். பறவைகளை பார்க்காமலேயே அதன் குரல் ஓசையை வைத்தே இன்ன பறவையென்று இவர்களால் சொல்ல முடியும்.
“”வன வளப் பாதுகாப்பில் இவர்களுக்கு இணை இவர்களேதான்” என்கிறார் “நேச்சர் டிரஸ்ட்’ அமைப்பின் திருநாரணன்.
இங்குள்ள பழங்குடியினரின் பாரம்பரிய இசையையும், நினைவு சின்னங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றையும் பார்வையாளர்களுக்கு விளக்கும் வகையிலான திட்டங்களும் வனத்துறையினரால் உருவாக்கப்பட்டுள்ளன.
மண்ணின் மைந்தர்களான பழங்குடியினரை வெளியேற்றாமல் அவர்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் பரம்பிக்குளம் வன விலங்கு சரணாலயத்தை மட்டுமல்ல, நாட்டின் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் சிறப்பாக நிறைவேற்றலாம் என்பதற்கு இந்தத் திட்டமே ஒரு பெரிய சிறந்த உதாரணம்.