வேலியே பயிரை மேயும் நிலை!
ந. ராமசுப்ரமணியன்
உலக வெம்மையின் மூல காரணம் எனக் கருதப்படும் நச்சு வாயுவான கார்பன் வெளியீட்டினால் உலகம் பல்வேறு துயரங்களை எதிர்கொள்ளும் என ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுமம் அச்சம் அடைந்தது.
எனவே 1988-ல் ஒரு சிறப்பு அமைப்பை ஏற்படுத்தியது. இதில் பல்வேறு நாடுகளும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி, 1997ம் ஆண்டு ஜப்பான் நாட்டு கியோட்டோ நகரில் ஓர் அரசியல் உடன்பாட்டை தயார் செய்தன.
அதன்படி 1990ஆம் ஆண்டு உலக கார்பன் வெளியேற்ற அளவிலிருந்து 5.2 சதவீதம் கார்பன் அளவை 2008ம் ஆண்டிலிருந்து 2012 வரை குறைக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த உடன்பாட்டில் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கையெழுத்திடவில்லை. 140 நாடுகள் கையெழுத்திட்டு, இந்த ஒப்பந்தம் 2005 பிப்ரவரி 16ம் தேதி அமலுக்கு வந்தது. தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் சீனா, இந்தியா போன்ற நாடுகள் அப்போது பொருளாதார, தொழில் வளர்ச்சியில் மந்த நிலையில் இருந்ததால், கார்பன் அளவு குறைப்புப் பொறுப்பு குறித்து கருத்தில் கொள்ளப்படவில்லை.
ஆக, கார்பன் வெளியீட்டைக் குறைக்க, உலக வெம்மையைத் தணிக்க உலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் புனிதக் கோயிலாக கியோட்டோ நகரம் கருதப்படுகிறது.
சமீபத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றிய சில முக்கிய ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் மிக முக்கிய அறிக்கை 2007 பிப்ரவரியில் ஐ.நா. சபையின் அரசுகளுக்கிடையேயான சீதோஷ்ண மாறுதல் பற்றிய குழு சமர்ப்பித்தது ஆகும்.
இந்த அறிக்கையின் சாராம்சங்களைப் பார்ப்போம்
ஐரோப்பாவில் தாங்க முடியாத அளவுக்கு கோடை வெம்மை அதிகரிக்கும். இந்தோனேஷியாவின் 2000க்கும் மேற்பட்ட தீவுகள் 2030க்குள் மறையும். இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தென் பகுதிகள் தாழ்வான பகுதியாக இருப்பதாலும், நீண்ட கடற்கரை அமைந்ததாலும் பெருமளவு பாதிக்கப்படும். 2050ல் உலகப் பொருளாதாரம் 0.5 முதல் 1 சதவீதம் வரை பாதிக்கப்படும்.
2500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளால், 130 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆறு ஆண்டு காலத்தில் தயார் செய்யப்பட்ட இந்த ஆய்வறிக்கை, 1990ம் ஆண்டிலிருந்து தயாரிக்கப்பட்ட நான்காவது உலக வெம்மை பற்றிய அறிக்கையாகும்.
இதைப்போல் மற்றோர் ஆய்வறிக்கை பிரிட்டனின் உலக முன்னேற்றத் துறையால் தயாரித்து வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் வற்றாத ஜீவநதிகள் எனப்படும் கங்கை, யமுனை, சிந்து, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் இன்னும் 40 ஆண்டு காலத்தில் வற்றிவிடும்.
உலக வெம்மையின் காரணமாக இமயமலைப் பனிக்கட்டிகள் அதிக அளவில் உருக ஆரம்பித்துவிட்டன. 1962ம் ஆண்டு 2077 சதுர கிலோமீட்டர் அளவிலிருந்து உறைந்த பனிக்கட்டிகள் சுமார் 21 சதவீதம் உருகி தற்போது 1628 சதுர கிலோமீட்டர் அளவு எனக் குறைந்துவிட்டது.
இதன் மற்றொரு விளைவாக 50 கோடி மக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்பது போன்ற மிகவும் கவலை தரக்கூடிய செய்திகள் வெளியாகியுள்ளன.
சுருக்கமாகச் சொல்வதென்றால், கியோட்டோ ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, தனி மனிதர்களுக்கும், உலக நாடுகளுக்கும் உலக வெம்மையைக் குறைப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் தொழில் வளர்ச்சி 1973ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தற்போது மும்மடங்காகிவிட்டது. இதன் காரணமாக, ஜப்பான் நாட்டில், 1990ம் ஆண்டு இருந்த கார்பன் வெளியீட்டு அளவைவிட தற்போதைய கார்பன் வெளியீடு 14 சதவீதம் அதிகரித்துவிட்டது என்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும்.
உலகில் கார்பன் வெளியீடு குறைப்பு விவகாரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வழிகாட்டியான ஜப்பான் நாடும், கியோட்டோ போன்ற நகரங்களும் தங்களது போதனையை தாங்களே நடைமுறைப்படுத்த இயலவில்லை. கார்பன் வெளியீடு அதிகமாகி உலக வெம்மை அதிகரித்துவிட்டது. இந்நிலையில் வேலியே பயிரை மேயும் நிலை வந்துவிட்டதோ?
“”கியோட்டோ நகரமே! நீயுமா?” என்ற கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.
(கட்டுரையாளர்: நிறுவனர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, மண்ணிவாக்கம், சென்னை).
===================================================
நீர்வளம் காப்போம்!
ஆ. மோகனகிருஷ்ணன்
இன்று உலக நீர்வள நாள்.
ஆண்டில் சில நாள்களைச் சிறப்பாகக் கொண்டாடும் முறை நம்நாட்டிலும் உலக அளவில் அன்னிய நாடுகளிலும் இருந்து வருகிறது.
இதில் மார்ச் மாதம் 22-ஆம் நாளை உலக நீர்வள நாள் என்றும் ஏப்ரல் 22ஆம் நாளை உலக பூமி நாளென்றும் குறிப்பிட்டு வருகிறோம்.
நீரின்றி மண்ணில் தோற்றம் இல்லை. மண்ணின்றி நீருக்குப் பயனில்லை. மண்ணும் நீரும் இணைந்தே செயல்படும். இரண்டுமே நமக்கு இயற்கையாகக் கிடைத்துள்ள அரிய சொத்துகள். காப்பாற்றப்பட வேண்டியவை. வீணாக்கக்கூடாதவை. வழிபட வேண்டியவை.
சூரியனின் வெப்பத்தினால் நீர் ஆவியாகி, மேல்நோக்கிச் சென்று மழையாகப் பொழிந்து மண்ணை வளமாக்குகிறது. அதில் ஒரு பகுதி மண்ணில் ஊடுருவி கீழ்நோக்கிச் செல்ல, மற்றது ஓடைகளிலும் ஆறுகளிலும் பாய்ந்து பயன்படுத்தியது போக மிஞ்சியது கடலில் சங்கமம் ஆகிறது. இதைத்தான் “நீரின் சுழற்சி’ எனக் கொள்கிறோம். இச் சுழற்சி எங்கும் எப்போதும் இடையறாது நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
புவியில் வாழும் எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாத நீரைப் பெறுவதற்கு ஒரே ஆதாரம், பெய்யும் மழைதான். அந்த மழையும் காலத்திலும் இடத்திலும் மாறி வருவதால், மழையினால் பெருகும் நீர்வளமும் வேறுபட்டே காணப்படும். பூமியின் மேற்பரப்பில் நிகழும் நீரோட்டமும் நிலத்தடியில் நகரும் நீரும் மழையைப் பொறுத்தே அமையும்.
இன்றைய நிலையில் உலக அளவில் கண்டம் வாரியாக நீர்வளத்தைத் தோராயமாகக் கணக்கிட்டால், ஆண்டொன்றிற்கு ஐரோப்பிய கண்டத்தில் 3,210 பில்லியன் கனமீட்டரென்றும், ஆசிய கண்டத்தில் 14,410 பில்லியன் கனமீட்டரென்றும், ஆப்பிரிக்க கண்டத்தில் 4,570, வடஅமெரிக்காவில் 8,200, தென் அமெரிக்காவில் 11,760, கடலில் ஆங்காங்கே பரவியுள்ள சில தீவுகளிலெல்லாம் சேர்த்தால் 2,388 என்றும் ஆக மொத்தம் 44,538 பில்லியன் கனமீட்டரென்று கொள்ளலாம்.
இதைப் பார்த்தோமானால், ஆசிய கண்டத்தில்தான் மிக அதிகமான நீர்வளம் இருப்பதை அறிகிறோம். ஆனால் ஆசியாவின் மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 59 சதவீதம். நபரொன்றுக்குக் கணக்கிட்டால் ஆண்டில் கிடைப்பது 4,745 கனமீட்டர் என்றாகும். அடுத்தபடி நீர்வளம் மிகுந்த கண்டம் தென் அமெரிக்கா.
ஆண்டில் ஒரு நபருக்குத் தேவையான நீர் அளவு 1,700 கன மீட்டர் ஆகும். அந்த அளவு நீர் கிடைத்தால் வாழ்க்கை வளமுடன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு நாட்டில் 1000 கனமீட்டர் தான் பெறமுடியுமென்றால் அந்த நாடு நீர்வளம் குன்றிய நாடென்றே கொள்ள வேண்டுமென்றும், 1000 கனமீட்டருக்கும் குறைந்தால் அந்நாட்டில் நீர்ப்பற்றாக்குறையோடு பஞ்சம் ஏற்படும் நிலை உண்டாகுமென்றும் உலகளவில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் நீர்வளம் அதற்கீடான பல நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து திருப்திகரமாகவே உள்ளது எனலாம். நாட்டின் நிலப்பரப்பு உலக நிலப்பரப்பின் 2.45 சதவீதம், நீர்வளம் சுமார் 4 சதவீதம். ஆனால் மக்கள்தொகையோ 16 சதவீதம். எனவே, பெருகிவரும் மக்கள்தொகையை முடிந்தவரை கட்டுப்படுத்தி, கிடைக்கும் நீர்வளத்தை மாசுபடாமல் காத்து, வீணாக்காமல், மக்கள் பயனுள்ள வகையில் உபயோகிக்க வழிவகை செய்ய வேண்டும்.
இதில் யாருக்குப் பொறுப்பு என்று தேடாமல் எல்லோருக்கும் பொறுப்புண்டு என்பதை உணர வேண்டும். நீர்வளத்தை ஒருங்கிணைத்து மேலாண்மை செய்யும் செயல்பாடுகளில் அனைவரும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். இந்த நீர்வள நன்னாளில் இதற்கான உறுதியை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நீர்ப்பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்து வருவதை நாம் அறிவோம். தமிழ்நாட்டின் நிலப்பரப்பு இந்திய நாட்டின் பரப்பில் 4 சதவீதம். ஆனால் மக்கள்தொகையோ 7 சதவீதம். நீர்வளம் 2.4 சதவீதம்தான். 2001-ல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நீர்வளம் ஒரு நபருக்கு ஆண்டிற்கு 575 கனமீட்டரே. இதனால்தான் நீர்வளம் மிகுந்த அண்டை மாநிலங்களை அணுகி நீரைப் பெறும் கட்டாயத்தில் நாம் உள்ளோம். பெற்று வந்த நீரைப் பறிபோகாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
பின் சந்ததியாரும் நலமாக வாழ, நாம் நீர் உபயோகத்தைக் கட்டுப்படுத்தி, கிடைக்கும் நீரை வீணாக்காமல், ஒவ்வொரு துளியும் நற்பயனைத் தர ஆவன செய்ய வேண்டுமென்று உலக அளவில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் அமைப்பு, வளர்ந்து வரும் மக்கள்தொகையையும் குறைந்து வரும் நீர் வளத்தையும் கருத்தில் கொண்டு, 1977-ல் முதன்முறையாக தானே முன்வந்து ஒரு பெரிய கருத்தரங்கை நடத்தியது.
அதன் விளைவாக “”சர்வதேச குடிநீர் மற்றும் துப்புரவு” செயல்திட்டம் கடைப்பிடிக்கப்பட்டு, பல நாடுகளில் அதற்கான பணிகளை மேற்கொள்ள நிதி உதவியும் தந்தது. அச்சமயம் இந்திய நாடும் சிறிது பயன்பெற்றது.
இதைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டில் “”நீரும் சுற்றுப்புறச் சூழலும் மனித வளர்ச்சியும்” என்ற தலைப்பில் விவாதிக்க ரியோடி ஜெனிரோ நகரில் ஒரு மாபெரும் சர்வதேச மாநாட்டைக் கூட்டி, அதில் சில கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவும் அதில் பங்கேற்றது. இவை யாவும் இயற்கையில் நமக்குக் கிடைக்கும் நீரினைச் சிறந்த முறையில் மேலாண்மை செய்ய வலியுறுத்தின. அதன் விளைவே ஐக்கிய நாடுகள் குழுமம் நிறுவிய “”உலக நீர்வளக் கூட்டாண்மை” தோற்றுவித்த, “”ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்மை”.
மண்ணுக்கும் மழைக்கும் இணைப்பு உள்ளதால்தான் இப்புவியில் உயிர்கள் தோன்றி, வளர்ந்து, மடிகின்றன. நீரின் பயன்பாடு பல வகை. குடிக்க சுத்தமான நீர், குளிக்க, துப்புரவுக்காக, மற்ற உபயோகத்திற்காக நீர், உணவு உற்பத்திக்காக பாசன நீர், தொழிற்சாலைகளில் உபயோகம், நீர்மின் நிலையங்களில் உபயோகம். இப்படி பல உபயோகங்கள்.
ஆனால் அத்தனை உபயோகங்களுக்கும் தேவையான நீர் போதுமானதாக கிடைக்காத நிலை நேரலாம். நீரை ஆள்பவர்களும் மேலாண்மை செய்ய கடமைப்பட்டவர்களும் பல நிறுவனங்களாகவோ, பல அரசுத் துறைகளாகவோ இருக்கலாம். ஆயினும் அவர்கள் செயல்பாடுகள் அனைத்தும் பயனீட்டார்களின் நலனைக் கருதி அவர்களின் முழு ஒத்துழைப்புடன் அமைய வேண்டும்.
நீரும் நிலமும் இதர வாழ்வாதாரங்களும் ஒன்றோடு ஒன்று சார்ந்து வளர்வதை ஊக்குவிக்கும் ஒரு செயல்முறையே ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை எனலாம்.
இதற்கு அடிப்படையாக நீரைப் பங்கிடுவோரிடமும், நீரைப் பயன்படுத்துவோரிடமும், முரண்பாடுகளின்றி ஒத்துழைப்பு வளர வேண்டும். இதை வளர்க்கும் பொறுப்பு நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு என உலக நீர்வள நாளான இந்நன்னாளில் நாம் யாவரும் உணருவோமாக.
(கட்டுரையாளர்: நீர்வள ஆலோசகர்- தமிழக அரசு).