கண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்
த.நா. மதிவாணன்
“”ஆழ்கடல் சென்று மீன்பிடிப்போம்; நாளும் உழைத்து நாமும் முன்னேறி, நமது நாடும் வளம்பெற பாடுபடுவோம்” எனத் தன் ஆசைக் கணவருக்கு அன்புமொழி கூறி கடலுக்கு மீன்பிடிக்க இன்முகத்துடன் வழியனுப்புவது வழக்கமான காட்சி.
ஆனால் இன்று…! “”எப்பம்மா அப்பா வருவாருன்னு” கேள்வி கேட்டுத் துளைக்கும் தன் மூன்று பிள்ளைகளுக்கும் கண்ணீரை மட்டும் பதிலாகச் சொல்லி இனித் தன் வாழ்வு செல்லும் வழியறியாது தவிக்கும் தமிழக மீனவப் பெண்ணின் வேதனை சொல்லி மாளாது.
முருங்கைவாடி கிராமத்தில் வசித்து வந்த ராமு என்ற மீனவர் இலங்கைக் கடற்படையால் சுடப்பட்டு மாண்டு போக அவரது மனைவி முத்துலட்சுமி, நான்கு குழந்தைகளுடன் ஓலைக்குடிசையில் ஒட்டிய வயிறுடன் எதிர்காலத்தை எண்ணிக் கலங்கி காலம்கழிக்கும் வேதனைச் சம்பவம்.
நாகையில் அக்கரைப்பேட்டை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு. இது ஏதோ நிகழ்வு அல்ல. நித்தம் நடக்கும் கண்டனத்துக்குரிய சம்பவங்கள்.
இதுவரை சுமார் 112 மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுடப்பட்டு மாண்டு போயுள்ளனர். பலர் காயமுற்றுள்ளனர். இத்தகைய சூழலில் எப்படி மகிழ்வோடு மீன்பிடிக்கச் செல்ல இயலும்? எப்படி மீனவப் பெண்கள் தங்கள் கணவன்மார்களை தைரியமாக வழியனுப்பிட முடியும்?
வான் பொய்த்துப் போனாலும், வருகின்ற நீர் வராது போனாலும், விவசாயம் குறைந்து போனாலும், வற்றாது வளம் கொழிக்கும் கடல் வளம் கண்டு நாட்டின் ஏற்றத்திற்கு கடலை உழுபவன்தான் மீனவன்.
“”மீனவர்களின் உழைப்பு சிந்திடும் வியர்வைத் துளிகளால் கடல் நீர் உப்பானது” இது கவிதையல்ல. மீனவனின் உழைப்பின் சிறப்பு.
இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய மீனவன் நாட்டின் பொருளாதார ஏற்றத்திற்கும் அன்னியச் செலாவணியின் அதிக வருவாய்க்கும் ஓய்வின்றி நித்தமும் உழைக்கும் உழைப்பாளி.
இத்தாலி, நார்வே, சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளில் உள்ள மீனவர்கள் செல்வச் செழிப்பில் மேலோங்கி உள்ளனர்.
ஆனால் நம் நாட்டில் மீனவர்களின் நிலை என்ன? அரை வயிற்றுக் கஞ்சிக்கும் அவதி! கடலுக்குச் சென்றால் மீண்டும் கரைக்குத் திரும்புவோமா என்ற அச்சம்.
ரூ. 2500 கோடிக்கு மேல் அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிற மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும். கரையில் வீழ்ந்த மீன் தத்தளிப்பதுபோல் கண்ணீரில் தத்தளிக்கின்றனர் மீனவர்கள்.
தமிழகத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் வசிக்கும் சுமார் 65 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தொழில் மட்டுமே.
தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்கையில் அவ்வப்போது இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது சாதாரண நிகழ்வாகிப் போய்விட்டது வேதனைக்குரியது.
இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் பின்னர் அதைப்பற்றி மறந்துபோவதும் இயல்பாகிவிட்டது.
பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணம் தருவதால் மட்டும் அவர்களின் இன்னல்கள் தீரப் போவதில்லை. மீனவர்கள் இனியும் பாதிக்காதவண்ணம் காக்கப்பட வேண்டியது அரசின் பொறுப்பு.
படிப்பறிவில்லா பாட்டாளி மீனவர்கள் உழைப்பைத் தவிர வேறொன்றுமறியா ஏழை மக்கள். இவர்கள் கடல் எல்லையைத் தாண்டி அன்னிய நாட்டுக்குள் செல்வதால் சுடப்பட்டார்கள் என்பது ஏற்புடையதா? நடுக்கடலில் கண்ணுக்குத் தெரிகிற வகையில் எல்லைக்கோடு ஏதுமுள்ளதா? வழி தவறி வந்தாலும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை எச்சரித்து அனுப்பிவிட வேண்டும் அல்லவா? அல்லது அவர்களை எச்சரித்து இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைக்கலாம் அல்லவா?
இவ்வாறு மனிதாபிமான முறையில் செயல்படுவதை விட்டுவிட்டு, கடல் எல்லையை அறியாமல் தாண்டி வரும் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்ல எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை. இதை இலங்கைக் கடற்படையினருக்கு உணர்த்த வேண்டியது இந்திய அரசின் முக்கியக் கடமை.
இந்திய அரசு கடலோரக் காவல் படைக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழிக்கிறது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் கொடூர நிகழ்வுகளின்போது நமது கடலோரக் காவல் படை எங்கே போனது?
பன்முறை இந்நிகழ்வுகள் நடந்தேறிய போதும், ஒருமுறைகூட நம் கடலோரக் காவல்படையினர் கண்களில் இச்சம்பவங்கள் படாதது வியப்பூட்டுகிறது. கடலோர மீனவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடலோரக் காவல்படை தங்கள் கடமையைச் செய்யாமல் எங்கே போனது?
கிழக்கே வங்கக் கடல், மேற்கே அரபிக் கடல், தெற்கே இந்துமாப் பெருங்கடல் என முக்கடலாலும் நமது நாடு சூழப்பட்டுள்ளது. ஓர் உயரிய குன்றின் மீது நின்று பார்த்தால் மூன்று கடல்களும் தனித்தனியாகத் தெரிகிறதா? ஏதேனும் தனித்தனி எல்லைக்கோடுகள்தான் உள்ளனவா? இவையாவும் நம் மூதாதையர்கள் வைத்த பெயர்கள். இதுதான் கடல்எல்லை என்பதை திட்டவட்டமாக மீனவர்கள் அறிந்துகொள்ள வழியேதும் செய்யப்பட்டதா? இல்லையென்றுதான் கூற வேண்டும். எனவே, மனித உள்ளங்கள் எண்ணிப் பார்க்க வேண்டிய மனிதாபிமான விஷயம் இது.
பல நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் இறந்தும் உலகில் மிகச் சிறப்பிடம் பெற்ற நமது இந்தியக் கடற்படை ஒருமுறைகூட இலங்கைக் கடற்படையினருக்கு எச்சரிக்கை விடுக்காதது மீனவர்கள் நெஞ்சில் நீங்காத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?
ஒரு ராணுவ அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே அந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காகத்தான்.
அதைவிடுத்து இலங்கை நட்புநாடு எனக் கூறிக்கொண்டு இந்திய அரசு தமிழக மீனவர்கள் விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொண்டு வருகிறது.
இலங்கைக் கடற்படை மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த அவலநிலைக்கு ஓரளவு முடிவு ஏற்பட்டிருக்கும்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவிடம் இந்தியா புகார் தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசிடமிருந்து இழப்பீடு பெற்று மீனவர்களுக்குத் தரவேண்டும்
நித்தம் கடல் காற்றை மூச்சாய் வாங்கி, உப்பு நீரால் வாழ்க்கை நடத்தி, நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்த அயராது உழைத்துவரும் மீனவர்களின் வாழ்வு விடிவும் இன்றி முடிவும் இன்றி வினாக்குறியாகவே இருக்க வேண்டுமா? அவர்களின் துயரத்துக்கு விடிவுகாலம் ஏற்படுவது எப்போது?
(கட்டுரையாளர்: நிர்வாகத் தலைவர், தமிழக மீனவர் இளைஞர் அணி).
மீனவர்களை மீட்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கூறுகிறது
 |
 |
தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக திமுக பேரணி-ஆவணப்படம் |
தமிழகத்திலிருந்து காணாமல் போன இந்த மீனவர்களை மீட்க இந்தியாவின் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தை ஆளும் திமுக கூறியுள்ளது.
இந்தச் சம்பவம் இந்திய எல்லையைக் கடந்து சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்றதால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சட்டபூர்வமான அதிகாரம் கிடையாது என திமுகவின் அதிகாரபூர்வ பேச்சாளர் இளங்கோவன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மத்திய அரசை வற்புறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோருவதுதான் தமிழக அரசு தற்போதைய நிலையில் செய்யக் கூடியது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்திய அரசால் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மீனவர்கள் தற்போது இலங்கையில் இருப்பதால், இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசி அவர்களை மீட்க ஆவன செய்யுமாறு இந்திய அரசு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
ஜோர்டான் நாட்டு கப்பலில் இருந்த சரக்குகளை விடுதலைப் புலிகள் அப்புறப்படுத்திவிட்டனர் என அந்த கப்பல் நிறுவனம் கூறுகிறது
 |
 |
சரக்குகள் அகற்றப்படுவதை காட்டும் படம் |
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவுப் பகுதியில் வைத்து ஜோர்டான் நாட்டு சரக்கு கப்பலான ஃபாரா கால நிலை கோளாறு காரணமாக சிக்கிக் கொண்டது.
ஜோர்டான் நாட்டுக் கப்பலில் இருந்த சரக்குகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக அந்தச் சரக்குக் கப்பலுக்கு உரிமையாளரான சலாம் சர்வதேச போக்குவரத்து மற்றும் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் சையத் சுலைமான் கூறியுள்ளார்.
அந்தக் கப்பலில் இருந்து எடுத்துச் செல்லக் கூடிய அரிசி, விளக்குகள், ஜெனரேட்டர்கள் போன்றவை எடுத்துச் செல்லப்பட்டு விட்டன என்றும் கப்பல் சுத்தமாக துடைத்தெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இச்சம்பவத்திற்கு விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யார் மீதும் பழி போட தனக்குத் தெரியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.
கப்பலை மீட்பதற்காக ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக தொடர்பு கொண்டதாகவும், காப்புறுதி நிறுவனங்கள், மதிப்பீடு செய்பவர்கள் போன்றோரை பாதுகாப்பாக அங்கு அனுப்ப வழியினை ஏற்படுத்திக் கொடுக்க இலங்கை அதிகாரிகள் முயற்சிகள் எடுத்த போதிலும், அது நடைபெற இயலாமல் போயிற்று என்றும் தங்களுடைய முயற்சிகள் தோல்வியடைந்தன எனவும் சையது சுலைமான் தெரிவித்தார்.
தமது கப்பலை மீட்பது தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்த தங்களுக்கு அனுமதி, அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், இந்தச் சம்பவம் ஒரு கடற்கொள்ளை என்பது தனது கருத்து மட்டுமல்ல, நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.