மேலும் 3 ஐ.டி. பூங்காக்கள்: முதல்வர் அறிவிப்பு
சென்னை, மே 9: தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரூ. 1,400 கோடியில் தமிழகத்தில்
- சென்னை தரமணி,
- ஸ்ரீபெரும்புதூர்,
- அம்பத்தூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காங்கள் அமைக்கப்படுகின்றன.
இதுபற்றிய தகவல்களைப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்தபோது முதல்வர் கருணாநிதி அறிவித்தார். விவரம்:
மூன்றாவது டைடல் பூங்கா: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காகச் சென்னை தரமணியில் மூன்றாவது டைடல் பூங்கா ரூ. 800 கோடியில் அமைக்கப்படும்.
ஏற்கெனவே அறிவித்தபடி, தரமணியில் 2-வது டைடல் பூங்கா அமைக்கும் பணி நடந்துவருகிறது. தற்போது சர்வதேச கருத்தரங்கு மையம், தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்சார் சேவைகளுக்கான 3-வது டைடல் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
தரமணியில் 25 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான ஏற்றுமதி மையமாக இது செயல்படும். 21 லட்சம் சதுர அடி பரப்பில், தனியாருடன் கூட்டு முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் 12 ஆயிரம் மென்பொருள் வல்லுநர்களுக்கு வேலை கிடைக்கும்.
சென்னை கோட்டூரில் தமிழ் இணைய பல்கலைக்கழகத்துக்கு 2 ஏக்கரில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.
தரமணி டைசல் உயிரியல் பூங்கா, ரூ. 250 கோடியில் விரிவுபடுத்தப்படும். இதனால் கூடுதலாக 2 ஆயிரம் உயிரியல் தொழில்நுட்ப -மருந்துத் துறை விஞ்ஞானிகளுக்கு வேலை கிடைக்கும்.
- காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர்,
- பெரும்பாக்கத்தில் 213 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பவியல் நகர் அமையும்.
- கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 33 ஏக்கரிலும்
- சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் 100 ஏக்கரிலும்
- திருச்சி மாவட்டம், நவல்பட்டு கிராமத்தில் 50 ஏக்கரிலும்
- மதுரையில் வடபழஞ்சி, கிண்ணிமங்கலத்தில் 50 ஏக்கரிலும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் அமையும்.
- நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 100 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். மேலும் 400 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகம் நிறுவப்படும்.
தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம்: தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடத்திட்ட மேம்பாடு, பயிற்றுநர் உருவாக்கம், கல்விசார் சாதனங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக மாணவர் பொதுத் திறன் பயிற்சியளிக்கும் பொருட்டும் தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம் நிறுவப்படும்.
ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 500 கோடி பூங்கா: சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் ரூ. 500 கோடியில் உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (பயோ ஐ.டி. பார்க்) அமைக்கப்படும்.
இந்திய மென்பொருள் தொழில் பூங்கா, சிங்கப்பூரில் உள்ள அசெண்டாஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இந்தப் பூங்காவை 100 ஏக்கரில் அமைக்கும்.
இத்திட்டத்துக்கான முதலீட்டில் 11 சதவீதம் பங்கேற்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவிலேயே முதன்முதலாக அமைகிறது என்ற சிறப்பை இந்த உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பெறும். இதனால் 8000 பேருக்கு வேலை கிடைக்கும்.
ரூ. 80 கோடியில் அம்பத்தூர் பூங்கா: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்குச் சொந்தமான காலியிடத்தில் 4 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ. 80 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.
காகித நிறுவனத்தால் அமைக்கப்படும் இந்த பூங்காவின் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்” என்றார் கருணாநிதி.
———————————————————————————–
புதிய ஜமீன்தார்கள்!
கல்கி – Kalki 10.06.2007 (தலையங்கம்)
நந்தி கிராமில் டாடா நிறுவனத்துக்கு விவசாய நிலங்களை ஒதுக்கித் தந்து, பலத்த எதிர்ப்புக்கு உள்ளாயிற்று மேற்கு வங்க அரசு. கலவரம், உயிர்ச் சேதம் என்று பிரச்னை வளர்ந்து, கடைசியில் திட்டம் ரத்தாயிற்று.
உ.பி.யில் அதே விதமான நில ஒதுக்கீட்டை ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக முலாயம்சிங் அரசு செய்திருந்தது. மாயாவதி ஆட்சிக்கு வந்ததும் அதை ரத்து செய்துவிட்டு, “தொழிலதிபர்கள் வேண்டுமானால் சந்தை விலைக்கு நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளட்டும்; அரசு கையகப்படுத்தி சலுகை விலையில் அவர்களிடம் விற்காது” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.
ஆனால், தமிழ்நாட்டில் விஷயம் நேர்மாறாக இருக்கிறது.
இராணிப்பேட்டையில் இரண்டு கொரிய நிறுவனங்களுக்கு ஆற்காடு வீராசாமி நூறு ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக வாக்களித்திருக்கிறார். இதற்காக அரசு மக்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தும்! காஞ்சிபுரம் அருகே ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ, ஒரு துபாய் நிறுவனம் ஒன்று, 350 ஏக்கர் நிலம் வாங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது!
ஐம்பதாயிரம் பேருக்கு இந்த மண்டலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்கிறார்கள். ஆனால், அதற்கு 350 ஏக்கர் நிலம் என்பது மிக மிக அதிகம். ஐ.டி. சார்ந்த தொழிலகங்கள் ஐம்பது ஏக்கர் நிலத்தில் மட்டுமே அமைக்கப்படும் என்றும் மீதி நிலம் வாழிடம், பள்ளி, ஷாப்பிங் மால் போன்றவற்றுக்கு என்றும் விவாரிக்கிறார்கள்!
பெரிய தொழிலதிபர்கள் சலுகை விலையில் அரசிடமிருந்து நிலம் பெறும் ஏற்பாட்டை இரு தரப்பினரும் துஷ்பிரயோகம் செய்வது வழக்கமாகிவிட்டது. அதிகார வர்க்கம் இலஞ்ச – ஊழலில் ஈடுபடுகிறது. தொழிலதிபர்களோ, தேவைக்கதிகமான நிலத்தை வாங்கிக்கொண்டு, பிற்காலத்தில் அதன் விலை உயரும்போது, லாபம் சம்பாதிக்கிறார்கள். நிலத்தின் விலை கட்டுக்கடங்காமல் உயரவும் இவர்கள் காரணமாகிறார்கள். இது ஏழைகளையும் சராசாரி மக்களையும்தான் வதைக்கிறது.
‘உணவு உற்பத்தி, விவசாயப் பெருக்கம் நோக்கி அரசின் திட்டப் பணிகள் திசை திரும்ப வேண்டும்’ என்று தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், தமிழகத்தில் என்ன செய்கிறார்…? விவசாயம் சார்ந்த பகுதியில், அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தொழில்நுட்ப நிறுவனம் கிளை பரப்ப வழி செய்து, பொருளாதார ஏற்றத்தாழ்வுக்குப் பலமான அஸ்திவாரம் அமைக்கிறார்.
ஒரு குடிசை அமைத்துக்கொள்ளக்கூட நிலமின்றி அவதிப்படும் இலட்சக்கணக்கானோர் வாழும் நாடு இது. இங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலம் பொதுமக்களின் சொத்து. அதைக் கண்ணை மூடிக்கொண்டு உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழிலதிபர்களுக்கு வாரி வழங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! தனியார் நிலமாயினும் பெரிய தொழிலதிபர்கள் 300 ஏக்கர் 500 ஏக்கர் என்று தேவைக்கு அதிகமாக வாங்கி, வளைத்துப் போட அனுமதிப்பது பெரும் அநீதி!
பெரிய தொழிலதிபர்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஏராளமான வேறு பல சலுகைகளையும் பெறுகிறார்கள். மொத்தத்தில், விவசாய ஜமீன்தாரி முறையையும் பெரிய மிராசுதாரர்களையும் ஒழிக்கப் போராடி சட்டமும் இயற்றிய நமது ஆட்சியாளர்கள், இன்றைக்குப் புதிய சலுகைகள் மூலம் நவீன ஜமீன்தாரி தொழிலதிபர்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!