காந்தி ஜயந்தி தினத்தில் மது விருந்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் செல்ஜா
சண்டீகர், அக். 5: காந்தி ஜயந்தி தினத்தில் மது சப்ளை செய்யப்பட்ட திருமண விருந்தில் பங்கேற்றார் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா. இதன்மூலம் சட்டத்தை மீறியதற்கு தார்மிகப் பொறுப்பேற்று அவர் தமது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லோக தளம் கட்சியின் ஹரியாணா மாநிலத் தலைவர் அசோக் அரோரா கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்பாலா அருகே உள்ள மலை வாசஸ்தலத்தில் வெளிப்படையாக நடந்த திருமண விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்றது சட்டவிரோதமானது எனவும் அரோரா குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் இச்செயல் தேசப்பிதா மகாத்மா காந்திக்கு அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்ஜாவுக்கு பதவியில் நீடிக்க உரிமையில்லை என்று சண்டீகரில் நிருபர்களிடம் புதன்கிழமை பேசிய அரோரா கூறினார்.
இதேபோல் ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் ஆலோசகர்களில் ஒருவரும் அதே தினத்தில் தமது வீட்டில் மது விருந்து அளித்துள்ளார் என்றார் அரோரா.