அடுத்த குடியரசுத் தலைவர் யார்?
நீரஜா சௌத்ரி
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே அப் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வேலையை பிரதமர் தொடங்கி விடுவார்.
குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் முடிவடைவதற்கு 9 – 10 மாதங்கள் முன்னதாகவே அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு, அது ரகசியமாக வைக்கப்படும் காலம் ஒன்று இருந்தது. ஆனால் அந்தக் காலம் மலையேறி விட்டது.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கும் குறைவான அவகாசமே உள்ள நிலையில், ஜூலையில் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போவது யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
கூட்டணி ஆட்சியின் யுகத்தில் முடிவெடுப்பது பிரதமர் மட்டுமல்ல. இன்னும் பலருக்கும் இதில் பங்குண்டு. காங்கிரஸ் கட்சியே கூட வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என உறுதியாகக் கூற முடியாது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகள் போன்ற கட்சிகளின் ஆதரவும் காங்கிரஸýக்கு தேவை. பஞ்சாப், உத்தரகண்ட்டில் தோல்வியைத் தழுவினாலும் கூட இப்போதைக்கு போட்டியில் முந்துவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான்.
குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம்பெறும் 7-ல் ஒரு பங்கு வாக்காளர்களை முடிவு செய்வது உத்தரப் பிரதேசம்தான். எனவே உத்தரப் பிரதேச தேர்தல் நடைமுறைகள் முடிவடையும்வரை எல்லா விவகாரங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொருத்தவரையில், கூட்டணியைச் சேர்ந்தவர்களே அணி மாறி வாக்களித்து விடலாம் என்ற பயம், குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பான முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள பைரோன்சிங் ஷெகாவத்தை, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தால் போட்டியிடுவதில் அவருக்குத் தயக்கம் இருக்காது என்பது தெரிந்ததுதான்.
ஆனால் கருத்தொருமித்த வேட்பாளராக அவர் உருவாவதற்கான வாய்ப்புகள் மிகவும் மங்கலாகவே உள்ளன.
பாரதீய ஜனதாவைச் சேர்ந்த ஒருவரை ஆதரிக்கும் அளவுக்கு காங்கிரஸ் வளைந்து கொடுக்காது. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ளவர்களை அணி மாறி வாக்களிக்கச் செய்யும் அளவுக்கு ஷெகாவத்துக்கு தொடர்புகள் உள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி போன்றவை அவரை ஆதரிக்கக் கூடும் என்ற பேச்சும் அடிபடுகின்றன.
இந்தக் காரணங்களால்தான் அப்துல் கலாமுக்கு மீண்டும் ஒரு முறை குடியரசுத் தலைவராக வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பதில் கருத்தொற்றுமை எட்டப்படாவிட்டால் அது ஒவ்வொருவருக்கும் மானப் பிரச்சினை ஆகிவிடும். தன்னுடைய வேட்பாளர் தோற்கடிக்கப்படுவதை எந்த ஆளுங் கட்சியும் விரும்பாது. அத்தகைய ஆபத்தான முயற்சியில் இறங்கவும் துணியாது.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக தன்னை நிறுத்துவதில் கருத்தொற்றுமை எட்டப்பட்டால் மீண்டும் பதவியில் தொடருவது பற்றிய தன்னுடைய விருப்பத்தை தனிப்பட்ட (அதிகாரபூர்வமற்ற) உரையாடல்களில் தெரிவித்துவிட்டார் அப்துல் கலாம். வாஜபேயி, எல்.கே.அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சில வாரங்களுக்கு முன்னர் தன்னைச் சந்தித்தபோது அதைத் தெளிவாகவே கூறிவிட்டார் கலாம்.
அப்துல் கலாமை பாஜக ஆதரிக்கும் என்பதை ராஜ்நாத் சிங் கோடிட்டுக் காட்டி விட்டார். 2002-ல் குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாம் பெயரை முதன் முதலில் முன்மொழிந்த முலாயம் சிங்கும் அவரை ஆதரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக தொடருவதில் பிரதமருக்கும் கூட விருப்பம்தான் என கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் வட்டாரத்தில் அரசல் புரசலாக அடிபடுவதை நம்பலாம் என்றால், சோனியா காந்தியின் கருத்து வேறுவிதமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக சோனியா காந்தியின் முதல் தேர்வு சுஷில்குமார் ஷிண்டே. ஷெகாவத்தைப் போல் அல்லாமல், ஷிண்டே தாகூர் சாதியினரின் வாக்குகளைக் கவரக் கூடியவர். ஆனால் மற்ற கட்சிகளில் இருந்து தலித் வாக்குகளை அவரால் கவர முடியாமல் போகலாம்.
கலாம் வேண்டாம் என நினைப்பவர்கள் மத்தியில் “”இன்னொரு கலாமை” கண்டறியும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இன்போசிஸ் நாராயணமூர்த்தி (ஏற்கெனவே இவரது பெயர் அடிபட்டது), எம்.எஸ். சுவாமிநாதன், நோபல் பரிசு பெற்ற அமர்த்திய சென் போன்றோர் “”இன்னொரு சாத்தியமான கலாம்”கள். இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள அமர்த்திய சென்னுக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால் பாஜக-வின் கருத்து வேறுவிதமாக இருக்கும்.
அரசியல் சார்ந்தவர்கள் பட்டியலில், காங்கிரஸில் கரண்சிங் இருக்கிறார். இவருக்கு பரவலாக தொடர்புகள் உள்ளதுடன், “இந்து-சார்பு’ முகம் கொண்டவரும் கூட. மக்களவைத் தலைவராக உள்ள சோம்நாத் சட்டர்ஜி போன்றவர்களை குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தும்போது, முலாயம் போன்றவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிப்பது கடினம். ஆனால் சட்டர்ஜியை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்துவதற்கு இடதுசாரி மற்றும் காங்கிரஸýக்குள்ளேயே தடை இருக்கிறது. பாஜகவும் ஏற்றுக்கொள்ளாது. இது போட்டிக்கு வழிவகுப்பதுடன் அணி மாறி வாக்களிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி விடும்.
இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்கக் கூடிய இரண்டு சூழ்நிலைகள் உண்டு. ஒன்று, பாஜக ஆதரவுடன் மாயாவதி ஆட்சி அமைக்கும் சூழல். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 3 முக்கிய அணிகளை -பகுஜன் சமாஜ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி மற்றும் சமாஜவாதி கட்சி ஆகிய 3 கட்சிகளை -ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிர்வரிசையில் நிறுத்திவிடும். மற்றொன்று, உத்தரப் பிரதேசத்தில் எந்த 2 கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைக்க முடியாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் சூழ்நிலை.
2002-ல் நடந்ததுபோல், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்காமலேயே பேரவைக்கு உயிர்கொடுப்பது ஒத்திவைக்கப்பட்டால், ஜூலையில் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அந்த எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியுமா? இது அவ்வளவாக தெளிவில்லாத “மங்கலான பகுதி’ எனக் கூறப்படுகிறது.
அரசியல் அவநம்பிக்கையாளர்கள் இத்தகைய சூழ்நிலையை முன்னிறுத்தி விளையாட நினைக்கலாம். ஆனால் அரசியல் நிர்பந்தங்கள் அப்படித் தூண்டினாலும் கூட நல்ல நோக்கம் வெற்றி பெறும் என நம்பலாம்.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவராக பதவி வகிக்கப் போகிறவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் நிலையில் இருப்பது உ.பி. தேர்தல் முடிவுகள்தான். இப்போதைக்கு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதை நோக்கியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் விருப்பத்துக்கு குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதை நோக்கியும் அரசியல் சூழ்நிலை சென்று கொண்டிருக்கிறது.
தமிழில்: ப.ரகுமான்.