நடிகர் தனுஷ் மீது அவதூறு வழக்கு: படஅதிபர் கேயார் அறிவிப்பு
சென்னை, மார்ச். 19-
நடிகர் தனுஷ்-மீராஜாஸ்மின் நடித்துள்ள படம் `பரட்டை என்கிற அழகுசுந்தரம்’ கேயார் தயாரித்துள்ளார். இப்படத்தை அடுத்த மாதம் வெளியிட ஏற்பாடுகள் நடந்தது.
இந்த நிலையில் தனுசுக்கும் கேயாருக்கும் இடையே சம்பள பிரச்சினை தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பள பாக்கி ரூ.85 லட்சத்தை வாங்கித் தருமாறு நடிகர் சங்கத்தில் தனுஷ் புகார் செய்துள்ளார். இந்த கடிதம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனுசையும் கேயாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுபற்றி தயாரிப்பாளர் கேயாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கன்னடத்தில் வெற்றி பெற்ற `ஜோகி’ என்ற படத்தின் தமிழ் உரிமையை ரூ.1 கோடி கொடுத்து வாங்கினேன். பெரிய நடிகர்கள் இதில் நடிக்க ஆசைப்பட்டனர். நான் தனுசை ஒப்பந்தம் செய்தேன். அவர் நடித்த `புதுப்பேட்டை’, `அது ஒரு கனாக்காலம்’ படங்கள் தோல்வி அடைந்தன.ஆனாலும் வாக்கு கொடுத்து விட்டதால் தனுசை வைத்து படத்தை எடுத்தேன். அவருக்கு ஒரு கோடி சம்பளம் பேசப்பட்டது. இதில் 12 லட்சம் ரூபாய் தான் பாக்கி உள்ளது. 85 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்து இருப்பது வியப்பளிக்கிறது. எங்கள் இருவர் இடையே மோதலை ஏற்படுத்தும் சூழ்ச்சி இது.
எங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டு அந்த தேதியில் `திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தில் நடித்தார். இதனால் ரிலீஸ் தேதி தள்ளிபோனது. பைனான்சியருக்கு கொடுக்க வேண்டிய வட்டியும் ஏறியது.
இந்த பிரச்சினை தொடர்பாக தேவைப்பட்டால் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடருவேன்.
இவ்வாறு கேயார் கூறினார்.