விஜய் நடிக்கும் “அழகிய தமிழ் மகன்’ படப்பிடிப்புக்குத் தடை
சென்னை, ஜூன் 5: விஜய் நடிக்கும் “அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கிராண்ட் கிரியேஷன்ஸ் உரிமையாளர் முகமது பரூக் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிமணி இத்தடையை விதித்தார்.
இத்திரைப்படத்தின் கதையை எழுதும் ஜீவா, ஏற்கெனவே இதே கதையை வைத்து என்னுடன் படம் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். எனது செலவில் கதையை உருவாக்கிய ஜீவா, வேறு நிறுவனத்துக்காக அதே கதையை “அழகிய தமிழ் மகன்’ என்ற பெயரில் படமாக்குவது சட்ட விரோதம் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் முகமது பரூக்.
“இப்பிரச்சினை குறித்து திரைப்பட வர்த்தக சபையில் நான் புகார் கூறினேன். இதையடுத்து இக்கதைக்காக ரூ.5 லட்சம் தருவதாக தயாரிப்பாளர் அப்பச்சன், கதை ஆசிரியர் ஜீவா ஆகியோர் ஒப்புக் கொண்டனர். முதலில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்த அவர்கள், மீதி 4 லட்சம் ரூபாயைத் தரவில்லை. அவர்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் அவர் மேலும் கூறியிருந்தார்.
நீதிபதி பி. ஜோதிமணி இவ்வழக்கை விசாரித்தார். “அழகிய தமிழ் மகன்’ படப்பிடிப்புக்கு இடைக்காலத் தடை விதித்தார். இவ்வழக்கில் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் ஏ.சிதம்பரம் ஆஜரானார்.