Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Akademy’ Category

Sahitya Akademi Award for Neela Padmanabhan: Indian Writing & Literature

Posted by Snapjudge மேல் திசெம்பர் 27, 2007

நீல பத்மநாபனுக்கு சாகித்ய அகாதெமி விருது

தமிழின் தலைசிறந்த நாவலாசிரி யர்களில் ஒருவரான நீல பத்மநாபன் இந்த ஆண் டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.

“இலையுதிர் காலம்’ என்ற நாவலுக்காக இந்த விருது தரப்படுகிறது. இது முதியோர் பிரச்னை பற் றிய நாவல்.

“தலைமுறைகள்’, “பள்ளிகொண்டபுரம்’ என்ற அவருடைய நாவல்களும் ரசிகர்களால் மிகவும் விரும்பிப்படிக்கப்படுபவை.

50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், செப்புப்பட்டயம் ஆகியவை விருதுடன் வழங்கப்படும். விருது வழங் கும் நிகழ்ச்சி தில்லியில் பிப்ரவரி 2-ம் தேதி நடை பெறும்.

இந்த ஆண்டு 23 படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மொழியிலும் நல்ல தேர்ச்சி உள்ள 3 பேர் கொண்ட நடுவர் குழு வால் பரிசுக்குரிய நூல்கள் தேர்வு செய்யப்பட் டன. அவ்விதம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலுக்கு சாகித்ய அகாதெமி தலைவர் பேரா சிரியர் கோபிசந்த் நரங் தலைமையிலான நிர்வா கக் குழு தில்லியில் புதன்கிழமை ஒப்புதல் அளித் தது.

நாவல்கள்: விருதுபெறும் நாவலாசிரியர்கள்-

 • புரபி பர்முதோல் (அசாமி),
 • அமர்காந்த் (ஹிந்தி),
 • குமாரி வீரபத்ரப்பா (கன்னடம்),
 • தேவிதாஸ் கடம் (கொங்கணி),
 • ஏ. சேதுமாதவன் (மலையாளம்),
 • பி.எம். மைஸ்னாம்பா (மணிப்புரி),
 • நீல பத்மநாபன் (தமிழ்).

கவிதைகள்:

 • சமரேந் திர சென்குப்தா (வங் காளி),
 • கியான்சந்த் பகோச் (டோக்ரி),
 • ராஜேந்திர சுக்லா (குஜராத்தி),
 • தீபக் மிஸ்ரா (ஒரியா),
 • ஜஸ்வந்த் தீத் (பஞ்சாபி),
 • ஹரிதத் சர்மா (சம்ஸ்கிருதம்).

சிறுகதைகள்:

 • ஜனில் குமார் பிரம்மா (போடோ),
 • ரத்தன்லால் சாந்த் (காஷ்மீரி),
 • பிரதீப் பிகாரி (மைதிலி).

நாடகங்கள்:

 • லட்சு மண் ஸ்ரீமால் (நேபாளி),
 • கேர்வால் சரண் (சந்தாலி),
 • வாசுதேவ் நிர்மல் (சிந்தி).

விமர் சன நூல்களுக்காக

 • குந்தன் மல் (ராஜஸ் தானி),
 • வஹாப் அஷ்ரஃபி (உருது) ஆகியோர் சாகித்ய அகாதெமி விருது பெறுகின்றனர்.

சரிதை நூலுக்காக ஜி.எம். பவார் (மராட்டி) விருது பெறுகிறார்.
சுயசரிதை நூலுக்காக கடியாரம் ராமகிருஷ்ண சர்மா (தெலுங்கு) விருது பெறுகிறார்.


தாமதமான அங்கீகாரம்

திருப்பூர் கிருஷ்ணன்


தமிழில் முதல் வரிசைப் படைப்பாளிகள் என்று பட்டியலிடப்படும் சுமார் 10 பேரில், இவ்வாண்டு சாகித்ய அகாதெமி பரிசுபெறும் நீல பத்மநாபனும் ஒருவர். இந்தப் பரிசு மிகக் காலதாமதமாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் கால தாமதமாகவேனும் வழங்கப்பட்டதில் ஆழ்ந்த இலக்கிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.

சாகித்ய அகாதெமி பரிசு எப்போதுமே சர்ச்சைகளைத் தோற்றுவிக்கக் கூடியதுதான். ஒருமுறை ஓர் எழுத்தாளருக்கு இப்பரிசு வழங்கப்பட்டபோது, “இந்த முறை சாகித்ய அகாதெமி, எழுத்தாளர் அல்லாத ஒருவருக்குப் பரிசு கொடுத்துவிட்டது’ என்று சக எழுத்தாளர் ஒருவர் கோமல் சுவாமிநாதனின் சுபமங்களாவில் அபிப்ராயம் தெரிவித்திருந்தார்!

ஆழ்ந்த இலக்கியம், ஜனரஞ்சக இலக்கியம், பொதுவுடைமை இலக்கியம் என்றெல்லாம் தற்கால இலக்கியம் பலப்பல பிரிவுகளாக இயங்குகிறது. ஜனரஞ்சக இலக்கியப் போக்கைச் சார்ந்தவர்களுக்கு அங்கீகாரம் கிட்டும்போது ஆழ்ந்த இலக்கியவாதிகளால் அதை ஏற்க முடிவதில்லை. சிலரால், தங்கள் திரைத்துறைப் புகழ், அரசியல் செல்வாக்கு போன்ற பிற உபாயங்களை மேற்கொண்டு இதுபோன்ற உயரிய விருதுகளை வாங்கிவிட முடிகிற சூழலும் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் தகுதியை மட்டுமே தங்கள் பரிந்துரையாய்க் கொண்டு, வேறு எந்தச் செல்வாக்கும் இல்லாமல் அமைதியாக எழுத்துப் பணி புரியும் சிலரும் தமிழில் இருக்கத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதுபோன்ற அங்கீகாரம் கிட்டுவது அபூர்வம். இந்த முறை அத்தகைய அபூர்வம் நிகழ்ந்துள்ளது.

குழு சாராத நடுநிலைவாதிகள் நீல பத்மநாபனுக்கு அகாதெமி பரிசு தரப்பட்டிருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். அதோடு எல்லாக் குழுவைச் சார்ந்தவர்களும் மனமார மதிக்கும் எழுத்தாக நீல பத்மநாபனின் எழுத்து இருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

இப்போதெல்லாம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துத் தகுதியை வளர்த்துக் கொள்வதைவிடவும், தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் தந்திர உபாயங்களைக் கற்றுத் தேர்வதிலேயே காலமெல்லாம் செலவழிக்கிறார்கள்.

மாபெரும் முன்னோடிச் சாதனையாளர்களை அவர்கள் எதுவுமே சாதிக்கவில்லை என்று விமர்சனம் செய்து அதன்மூலம் பலரது பார்வை தங்கள் மேல் விழச்செய்வது, சமகால எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் மட்டம் தட்டி தான் ஒருவனே எழுதத் தெரிந்தவன் என்று தானே சொல்லிக்கொள்வது, அல்லது தன்னைச் சார்ந்தவர்களை விட்டுச் சொல்லச் செய்வது, தனக்கென ஒரு சிற்றிதழ் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு தானே தனது கொள்கைப் பரப்புச் செயலாளராகச் செயல்படுவது, தன்னைச் சார்ந்தவர் அல்லாதவர்களுக்கு அந்த வட்டத்தில் இடம் கொடாமல் எச்சரிக்கையாக இருந்து தன் நலம் மற்றும் தன் குழுநலம் பேணுவது என எழுத்துலக அரசியல் இன்னும் எத்தனையோ.

இவை எதிலும் சிக்காமல், இவை அனைத்தையும் மீறி அமைதியாக இயங்கும் சிலரில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நீல பத்மநாபன் ஒருவர்.

தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம், உறவுகள், தேரோடும் வீதியிலே, கூண்டினுள் பட்சிகள் என்றெல்லாம் தெளிந்த நீரோடை போல நல்லிலக்கியம் படைத்தவர். இன்றும் படைத்துக் கொண்டிருப்பவர். நாவல்துறைச் சாதனையாளராகவே அறியப்பட்டாலும் பல மணிமணியான சிறுகதைகளையும் எழுதியவர். பல நல்ல கவிதைகளையும் எழுதியிருப்பவர். மொழிபெயர்ப்பாளரும்கூட. தற்கால மலையாள இலக்கியம் என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.

“நானே என்னுடைய ஈவிரக்கமற்ற விமர்சகன். என் நிறைகளை விட என் குறைகளே எனக்குத் தெரிகின்றன’ என்று தன்னைப் பற்றி கம்பீரமாக அறிவித்துக் கொண்டவர். தமிழில் சாதனை படைத்து அண்மையில் மறைந்த எழுத்தாளர் நகுலனின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர்.

பொதுவாகவே முதியவர்களைச் சித்திரப்படுத்துவதில் கைதேர்ந்தவர். தம் இளம் வயதிலேயே கூனாங்கண்ணிப் பாட்டா, உண்ணாமலை ஆச்சி போன்ற வயோதிகப் பாத்திரங்களை மிக அழகாக வார்த்தவர்.

இப்போது தமக்கே முதிய வயது ஏற்பட்டிருக்கும் சூழலில் முதியோர் பிரச்னைகளை இன்னும் அதிகப் பரிவோடும் நேர்த்தியோடும் எழுதுகிறார். தற்போது சாகித்ய அகாதெமி பரிசு பெற்றுள்ள இலையுதிர்காலம் நாவலும் கூட முதியோர் வாழ்வு பற்றி யதார்த்தத்திலிருந்து இம்மியளவும் பிசகாமல் உள்ளது உள்ளபடிப் பேசுவது தான். சிறிதும் பெரிதுமான அவரது 19 நாவல்களுக்குப் பிறகு அவரது இருபதாம் நாவல் இது.

அவரது பள்ளிகொண்டபுரம் திருவனந்தபுரத்தைக் களனாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு. அந்த நாவலை ரஷிய மொழியில் மொழிபெயர்த்தார் பைச்சினா என்ற ரஷியப் பெண்மணி. அந்தத் தாக்கத்தால் நீல பத்மநாபனையும் திருவனந்தபுரத்தையும் பத்மநாபசுவாமி கோயிலையும் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு அவர் ஒருமுறை திருவனந்தபுரம் வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நீல பத்மநாபனது எழுத்தின் பாதிப்பு அத்தகையது.

தமிழில் எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப் படங்கள் மிகக் குறைவே. இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், மா. அரங்கநாதன், லா.ச.ரா, நகுலன் போன்ற ஒருசிலரைப் பற்றி மட்டுமே குறும்படங்கள் வந்துள்ளன. அத்தகைய படங்களில் குறிப்பிடத்தக்கது வ. கௌதமன் இயக்கி வெளிவந்துள்ள நீல பத்மநாபனைப் பற்றிய படம்.

பத்து சிறந்த இந்திய நாவல்களில் ஒன்று நீல பத்மநாபனின் தலைமுறைகள் என்பது விமர்சகர் க.நா.சு.வின் கருத்து. பதினொன்றாவது சிறந்த இந்திய நாவலாக இப்போது சாகித்ய அகாதெமி பரிசு பெற்றிருக்கும் நீல பத்மநாபனின் இலையுதிர் காலத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Posted in Academi, Academy, Akademi, Akademy, Authors, Awards, Literature, Padhmanabhan, Padmanaban, Padmanabhan, Pathmanaban, Pathmanabhan, Prizes, Sahithya, Sahitya, Writers, Writing | 1 Comment »