வேளாண்மையும் “பெருந்தொழிலாக’ வேண்டிய நேரம்!
என். விட்டல்
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “”ரிலையன்ஸ்”, தகவல் தொடர்புத் துறையில் ஜாம்பவானாக உருவெடுத்துவரும் சுநீல் மித்தலின் “ஏர்-டெல்’ போன்ற நிறுவனங்கள் இப்போது வேளாண்மைத் துறையில் பெரும் அக்கறை எடுத்துவருகின்றன.
மிகப் பிரம்மாண்டமான அளவில் உற்பத்தி, விநியோகம், விற்பனை என்ற தங்களுடைய தொழில்துறை வெற்றி உத்தியை, வேளாண்மைத்துறையிலும் புகுத்த முயல்கின்றன.
“மனிதர்கள் காலில் போட்டுக்கொள்ளும் செருப்புகளும் பூட்ஸ்களும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன; வேளாண்துறையில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை மண்டிகளிலும், வெயிலும் தூசும் நிரம்பிய சந்தைகளிலும், வீதிகளிலும் கோணியைப் பரப்பி விற்கப்படுகின்றன’ என்று ஆமதாபாதில் இந்திய நிர்வாகவியல் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கவலையோடு குறிப்பிட்டிருந்தார்.
மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மூலம், பெருநகரங்களில் உள்ள அங்காடி வளாகங்களில் வேளாண் விளைபொருள்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, “”பேக்” செய்யப்பட்டு, எடை, தரம், விலை குறியீடுகளுடன் விற்கப்படுமானால் லாலு சுட்டிக்காட்டிய முரண்பாடு மறைந்துவிடும். இது மட்டும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறினால், இந்திய வேளாண்மைத்துறையில் “”மூன்றாவது புரட்சி” ஏற்பட்டுவிடும்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது கைக்கும் வாய்க்கும் எட்டுகிற நிலைமையில்தான் நமது உணவு தானிய உற்பத்தி இருந்தது. உணவு தானியத் தேவையில் தன்னிறைவு பெற்றவர்களாகக் கூட இல்லை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட “”பசுமைப் புரட்சி”யின் விளைவாக நிலைமை தலைகீழாக மாறியது. அதில் பங்கேற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் போன்றவர்கள் “”இரண்டாவது பசுமைப் புரட்சி” இப்போது அவசியம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
வறுமைக் கோட்டுக்குக்கீழே வாழும் ஏழைகளுக்காக இப்போது மீண்டும் கோதுமை, அரிசி போன்றவற்றை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கிறோம்.
கிராமப்புறங்களில் ஏற்பட்ட இரண்டாவது புரட்சி, பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக நம்மை இடம் பெறச் செய்த “”வெண்மைப் புரட்சி”யாகும். அமுல் நிறுவனத்தின் தந்தையும் தலைசிறந்த நிர்வாகியுமான டாக்டர் வர்கீஸ் குரியனும், சிறந்த காந்தியவாதியும் கைதேர்ந்த கூட்டுறவு இயக்க நிபுணருமான டாக்டர் திரிபுவன்தாஸ் படேலும் இந்தப்புரட்சிக்கு முழுமுதல் காரணகர்த்தாக்கள். குஜராத்தில் மட்டும் எல்லா மாநிலங்களிலுமே பால் பண்ணைகள் பெருக இவர்களின் நடவடிக்கைகள் முன்னோடியாகத் திகழ்ந்தன.
பசுமைப்புரட்சி காலத்தில் உரிய நேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருள்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்தது. பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. வீரிய விதைகள் விநியோகிக்கப்பட்டன.
விவசாயிகள் சாகுபடி செய்யும் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது, சந்தையில் அந்த விலைக்குக் குறைவாக விற்கும் நிலைமை ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் திட்டத்தை இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலம் அமல்படுத்தியது, நெல், கோதுமை, சர்க்கரை போன்றவற்றை போதிய அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்ள கிடங்கு வசதிகளும், அவற்றுக்கு ரயில் பாதை இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.
இப்போது இந்திய வேளாண்மை பற்றிப் பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதுதான். பருத்தி சாகுபடியில் இறங்கியவர்களும், அதிக பொருள் செலவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வயலுக்கு அடித்தவர்களும்தான் அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதைத் தடுக்க, முதலில் விவசாயிகளை அழைத்து அவர்களின் மனத்தளர்ச்சி, விரக்தி மனப்பான்மை நீங்க, நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேச வேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து மிகுந்த நம்பிக்கையோடு இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளும், அதிக விலைக்கு வாங்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளும் பலன் தராமல் பருவமழை பொய்த்ததால் கடன் சுமை அதிகரித்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அப்படி இறக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ஒரு லட்ச ரூபாயை உதவித்தொகையாகத் தருகிறது.
வறுமை தாளாமல் விவசாயக் கூலிகள் தவிக்கும்போது அவர்களுக்கு அரசின் உதவி உரிய முறையில் கிடைக்காமல் போவதால், நக்சல்களின் நெருப்புப் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு நக்சல்களாக மாறுகின்றனர்.
தற்கொலைக்கு அடுத்தபடியாக இந்திய வேளாண்மையை மிகவும் பாதிக்கும் அம்சம் உற்பத்தித் திறன் ஆகும். நம்மைவிடக் குறைந்த சாகுபடி பரப்பைக் கொண்டுள்ள சீனா, நம்மைவிட அதிக அளவு தானிய விளைச்சலைத் தருகிறது.
நிலத்திலிருந்து விளைவது குறைவாக இருப்பது ஒருபகுதி என்றால், விளைந்த தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையும் அறுவடை செய்து எடுத்து வரும்போது சேதாரப்படுத்துவதன் மூலம் 10 சதவீத உற்பத்தியை வீணாக்குகிறோம்.
எல்லா பருவகாலத்திலும் பூச்சி அரிக்காமல், பறவைகள், எலிகள் பாழ்படுத்தாமல் தானியங்களையும் இதர விளைபொருள்களையும் சேமித்து வைக்க கலன்கள், குதிர்கள், கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமல் 40 சதவீதம் வரை வேளாண் சாகுபடி வீணாகிறது.
ஓராண்டு சாகுபடி பற்றாக்குறையாக இருப்பதும் அடுத்த ஆண்டு உபரியாவதும் தொடர்கிறது. பற்றாக்குறையின்போது பணமே கிடைக்காமல் ஏழ்மையில் மூழ்க நேரிடுகிறது என்றால், உபரியின்போது கொள்முதல் விலை சரிந்து, போட்ட அசலைக்கூட எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 60 சதவீத பங்கைப் பிடிக்கின்றனர்.
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தில் நேரடியாக ஈடுபட்டு, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீத அளவுக்கு மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.
இந் நிலையில் பெரிய தொழில்நிறுவனங்கள் இத் தொழிலில் ஈடுபட்டால் நிலங்களை வளப்படுத்துவது, பாசன வசதி அளிப்பது ஆகியவை விரிவான அளவில் நடைபெறும். அடுத்து தரமான விதைகள், விலைகுறைந்த இயற்கை உரங்கள், நவீன சாகுபடி உத்தி ஆகியவற்றைப் பின்பற்ற முடியும்.
திசு வளர்ப்பு மூலம் செடிகளையும் கொடிகளையும் வளர்ப்பது, ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்துவது என்று வேளாண்மையில் லாப நோக்குடன் புதியவை புகுத்தப்படும். அடுத்தபடியாக விளைபொருள்களைச் சேதம் இன்றி அறுவடை செய்வதும் கிடங்குகளுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் கொண்டு செல்வது சாத்தியம்.
இடைத்தரகர் இன்றி, உற்பத்தியாளருக்கும் கணிசமான தொகை கிடைக்கும் நுகர்வோருக்கும் கட்டுப்படியாகும் விலையில் பண்டங்கள் கிடைக்கும். கூட்டுறவுத்துறை வலுப்பெறும். உற்பத்தி, விநியோகம், விற்பனை போன்றவை விவசாயிகளுக்குச் சாதகமாக மாறும்.
அதன் பிறகு தொழில் நிறுவனங்களின் தலையீட்டால் ஏற்படும் மூன்றாவது வேளாண்மைப் புரட்சியானது “”விவசாயியைச் சார்ந்த வேளாண்மை” என்ற நிலைமையை மாற்றி, “”வேளாண்-வர்த்தகம் சார்ந்த வேளாண் தொழில்” என்ற நிலைமைக்குக் கொண்டு செல்லும்.
(கட்டுரையாளர்: முன்னாள் ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு ஆணையர்.)
——————————————————————————————-
காலச்சுழலில் கழனியும் உழவரும்
![]() |
![]() |
தமிழக விவசாயி காசி |
இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அறுபது விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் விவசாயத்தையும் அதனைச் சார்ந்த தொழில்களையும் சார்ந்தே வாழ்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும் இப்போது பற்றாக்குறையைப் போக்க உணவு இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில், தமிழகத்தில் மாறிவரும் விவசாயச்சூழல் மற்றும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பலவிதமான பிரச்சனைகள் குறித்து அன்பரசன் தயாரித்து வழங்கும் சிறப்புத் தொடர்.
———————————————————————————-
ரிலையன்ஸ் கடைகளுக்கு நிபந்தனை விதிக்க ராமதாஸ் யோசனை
சென்னை, ஜூலை 7: சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்களை விற்கக் கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட போன்ற பன்நாட்டு நிறுவனங்களும் சில்லறை வணிகத்தில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றன. நகரங்கள் தோறும் கடைகளைத் திறந்து வைத்துள்ளன.
இதனால் பாரம்பரியமிக்க சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களும், சில்லறை வணிகக் கடைகளால் வேலை வாய்ப்பு பெற்று வரும் பல லட்சம் தொழிலாளர்களும் நடுத் தெருவுக்கு வரும் ஆபத்து உருவாகி வருகிறது.
இந்த ஆபத்தான நிலைமையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் சென்னை போன்ற நகரங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தாராள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் இந்த கடைகளால் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பல லட்சம் பேர் வேலை இழக்கும் ஆபத்து ஏற்படப் போகிறது.
கேரளத்தில் அனுமதி இல்லை: இந்நிலையில் பக்கத்து மாநிலமான கேரளத்தில் ரிலையன்ஸ் கடைகளுக்கு இனிமேல் அனுமதி வழங்குவது இல்லை என்றும் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அவற்றை ரத்து செய்வது என்றும் அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்று மிகக் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.
கேரளத்தைப் போன்று தமிழகத்திலும் ரிலையன்ஸ் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். இனிமேல் அனுமதி வழங்கக் கூடாது என்று உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கு ஆணையிட வேண்டும். அல்லது மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனையைப் போன்று உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்ற நிபந்தனையாவது விதிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
———————————————————————————————————————————–
உதட்டளவு அக்கறை கூடாது…!
“விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு’ என்று தனது சுதந்திர தின உரையில் பிரதமர் வலியுறுத்தி இருப்பதும், விவசாயிகளுக்குப் பல சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள்.
உலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கல் போன்ற கோஷங்களுடன் இன்றைய பிரதமர், நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவுக்கு ஒரு புதிய பொருளாதாரத் திட்டத்தை வகுத்ததுமுதல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ விவசாயிகளும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களும்தான்.
கடந்த 15 ஆண்டுகளில் விவசாயம் மிகக் குறைந்த ஊக்கத்தையும், வளர்ச்சியையும்தான் காண நேர்ந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. கிராமப்புறங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை, நமது பொருளாதாரப் பத்திரிகைகளும் புதிய பொருளாதாரத் திட்ட விற்பனையாளர்களும் உருவாக்க முற்பட்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், விவசாயமும், விவசாயிகளும் இதுவரை சந்தித்திராத ஒரு சோதனையான கட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான்.
சமீபத்தில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமிஷன் ஒன்றின் அறிக்கையின்படி, கடனால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. ஆந்திரத்தில் 82 சதவிகிதம், தமிழகத்தில் 75 சதவிகிதம், பஞ்சாபில் 65 சதவிகிதம் விவசாயிகள், விவசாயத்திற்காக வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தவிக்கின்றனர் என்கிறது இந்த அறிக்கை. சராசரியாக, இந்திய விவசாயி ஒவ்வொருவரின் கடன் சுமையும் ஏறத்தாழ ரூ. 25,985 என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இப்படிக் கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் விவசாயிகளில் பலரும், தனியாரிடம் கடன் வாங்கியவர்களாக இருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
லாபகரமாக இல்லாவிட்டால், ஏன் விவசாயம் செய்ய வேண்டும்? அந்த விளைநிலங்களைப் “ப்ளாட்’ போட்டு வீடு கட்டவோ, தொழிற்சாலை அமைக்கவோ பயன்படுத்திவிட்டு, நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாமே? இப்படியொரு யோசனையை முன்வைக்கிறார்கள், புதிய பொருளாதாரக் கொள்கையின் விற்பனைப் பிரதிநிதிகள்.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விவசாயிகளுக்கு ஏகப்பட்ட மானியங்களை அந்த அரசுகள் வழங்குகின்றன. தங்களது தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கின்றன. நச்சுப் புகையால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை, இந்தியா போன்ற நாடுகளில் நிறுவ ஊக்குவிப்பதும், அவர்களது தேவைக்கான உணவுப் பொருள்களைத் தாங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதும் இந்த நாடுகளின் நோக்கம் என்று நாம் கூறவில்லை. ஆனால், அந்த நாடுகள் விவசாயத்துக்கு அளிக்கும் ஊக்கத்திற்கு என்ன காரணம் என்று யோசிக்கச் சொல்கிறோம்.
நமது விவசாயிகளுக்குத் தரும் விலையைவிட அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யும் போக்கு சமீபகாலமாகக் காணப்படுகிறது. வேண்டுமென்றே இந்திய விவசாயிகளை விவசாயத்தைப் புறக்கணிக்கச் செய்யும் முயற்சி நடைபெறுகிறதோ என்கிற சந்தேகம்கூட எழுகிறது. அது ஆபத்தை விலைகொடுத்து வாங்கும் செயல்.
ஒரு தேசத்தின் பாதுகாப்பு என்பது எல்லைகளைக் காக்கும் ராணுவத்திடம் மட்டும் இல்லை. தனது நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் தன்னிறைவிலும் இருக்கிறது. அடுத்த வேளைக் கஞ்சிக்கு அயல்நாட்டுக் கப்பலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுமானால், அதைவிட பலவீனமான நாடு எதுவும் இருக்க முடியாது. இதை எழுபதுகளிலேயே புரிந்து கொண்டிருந்ததால்தான், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி “பசுமைப்புரட்சி’ என்கிற கோஷத்துடன் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வழி வகுத்தார்.
இந்திரா காந்தியின் மருமகள் தயவால் பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங்கின், விவசாயிகள் மீதான அக்கறை உதட்டளவில் நின்றுவிடாமல் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று நம்புவோம். விவசாயம் சார்ந்த பொருளாதாரமாகத் தொடர்வதுதான் இந்தியாவின் வருங்காலத்துக்கு நன்மை பயக்கும்!
——————————————————————————————————————
இது புதுசு: நலம், நலமறிய ஆவல்!
வயதிலும் இளைமையாய் ஜொலிக்க வேண்டும் என்பது மக்களின் ஆசையாக இருக்கிறது. ஆனால் உலர்ந்த தலைமுடியைப் பராமரிப்பது எப்படி?, எண்ணெய் பிசுக்கான முகத்தைச் சரி செய்வது எப்படி?, சத்தான உணவு எது?…. என்பது போன்ற பல்வேறு தகவல்களையும் ஒரே இடத்தில் பெறுவது எப்படி என்ற கவலையும் கூடவே தொற்றிக் கொள்கிறது.
மக்களின் எந்தத் தேவையையும் உடனுக்குடன் தெரிந்து கொண்டு அதைப் பணமாக்கத் தெரிந்திருப்பதுதான் பிசினஸýக்கு அழகு. இதற்கு உதாரணமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் மக்களின் இந்த ஆசையையும் பூர்த்தி செய்ய களமிறங்கியிருக்கிறது. ரிலையன்ஸ் வெல்னஸ் என்ற பெயரில் “ஆரோக்கிய வணிக’த்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
பரீட்சார்த்தமாக முதலில் ஆரம்பித்திருக்கும் இடம் ஹைதராபாத். விரைவில் பெங்களூர், சென்னை, மும்பை நகரங்களில் துவங்க இருக்கிறார்கள்.
இது குறித்து ரிலையன்ஸ் வெல்னஸ் நிர்வாக இயக்குநர் நினு கண்ணாவிடம் பேசினோம்.
“”மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஆனால் ஆரோக்கியம் என்பது ஆரோக்கிய உணவு, ஆரோக்கியம் குறித்த மருந்துகள், அது குறித்த புத்தகங்கள்- சி.டி.கள், உடற்பயிற்சி கருவிகள், யோகா பயிற்சி என பலதுறைச் சம்பந்தமுடையதாக இருக்கிறது. அதை ஒருங்கிணைப்பதற்குத்தான் இந்தத் திட்டம்” என்றார்.
இந்தியா முழுதும் 51 நகரங்களில் இப்படி 1200 நிலையங்களை ஆரம்பிக்க இருக்கிறார்கள். 1500 சதுர அடியில் இருந்து 3,500 சதுர அடி பரப்பில் இது அமையும். காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இயங்கும் இந் நிலையத்தில் இலவசமாக ஆரோக்கியம் குறித்த ஆலோசனை வழங்குவதற்கான மருத்துவர் ஒருவரும், கண் பரிசோதனை செய்வதற்கான மருத்துவரும் இருப்பார்கள். “”தோல் பொலிவு, தலைமுடி பராமரிப்பு, உயரம்- உடல் எடைக்கான விகிதம், சர்க்கரை அளவு போன்றவற்றுக்கான டிப்ஸ் தருவது மட்டும்தான் இந் நிலையத்தில் மருத்துவர் இருப்பதற்கான பிரதான நோக்கம். இது கிளினிக் போலவோ, அல்லது மருந்து கடை போலவோ நோயாளிகளைக் குணப்படுத்தும் இடமாக இல்லாமல், நோய் வராமல் தடுப்பதற்கான ஆரோக்கிய கூடமாகச் செயல்படும். இதற்காக மாதந்தோறும் ஹெல்த் புரோக்ராம்கள் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.
அதே போல இங்கு பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் உடல்நிலை குறித்த தகவல்களையும் வெப்சைட்டில் தனிப்பக்கம் ஏற்படுத்திப் பதிவு செய்து வைத்திருப்போம். அதற்கான குறிப்பு அட்டை ஒன்றையும் அவர்களுக்கு வழங்குவோம். திடீர் விபத்து நேரங்களில் அவரைப் பரிசோதிக்கும் மருத்துவர், இந்தக் குறிப்பு அட்டை மட்டும் இருந்தால் அவருடைய ரத்த வகை என்ன, எந்த மாதிரியான அலர்ஜி உள்ளவர், முகவரி என்ன போன்ற தகவல்களை அந்த வெப்சைட்டில் சுலபமாகப் பெறமுடியும்” என்கிறார் நினு கண்ணா.
ரிலையன்ஸ் ஃப்ரஸ்ஸýக்கு சில இடங்களில் எதிர்ப்பு ஏற்பட்டது போல இதற்கு எதிர்ப்புகள் ஏற்பட்டதா? என்றோம். சிரித்துக் கொண்டே சொன்னார்.
“”இந்த நிமிடம் வரை எங்கள் நிலையம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது” .