Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Afghanisthan’ Category

Iran to India Natural Gas Pipeline vs Indo-US Nuclear Accord: Ka Ragunathan

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

அணுசக்தி உடன்பாடா, அமைதிக் குழாய் திட்டமா?

க. ரகுநாதன்

இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அரசும், ஆட்சியா-ஒப்பந்தமா என்று இடதுசாரிகள் கேட்டால், ஆட்சிதான் முக்கியம் என்று இறங்கி வருவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

இந்தக் களேபரத்தில் முக்கியமான இன்னொரு திட்டத்தைப் பற்றி யாரும் விவாதிப்பதில்லை. அது ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா (ஐபிஐ) எரிவாயுக் குழாய் பாதைத் திட்டம். ரூ.28,000 கோடியிலான இத் திட்டம் அமைதிக் குழாய் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

2007-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் (ஐபிசிசி) தலைவரான ஆர்.கே.பச்செüரி, ஈரானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி ஷாம்ஸ் அர்டேகனி ஆகியோர் 1989-ம் ஆண்டு இத் திட்டத்தை வரைந்தனர். பின்னர் பல்வேறு பேச்சுகளைக் கடந்து 2005-ம் ஆண்டு இத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் போடுவது என முடிவானது.

ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியா வரை மொத்தம் 2,670 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் பதித்து 2012-ல் இருந்து எரிவாயு வழங்குவதே இத் திட்டம்.

பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், திட்டம் துவங்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை. எரிவாயுவின் விலையைத் தீர்மானிப்பதில் இந்தியா-ஈரான் இடையே தொடர்ந்து வரும் இழுபறி நிலையே இதற்குக் காரணம் என்று மத்திய அரசு கூறியது.

இதனால் ஓரிரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா பங்கேற்கவில்லை. மார்ச் மாத கடைசியில் நடைபெறும் பேச்சுவார்த்தையே இறுதியானது; அதில் இந்தியா விலகுவதாகக் கூறினால் சீனா உதவியுடன் நிறைவேற்றுவோம் என ஈரானும் பாகிஸ்தானும் கூறியுள்ளன. ரஷியாவின் காஸ்ப்ரோம் நிறுவனமும் விருப்பம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வற்புறுத்தலால் இந்தியா தேவையற்ற காலதாமதம் செய்வதாகவும் அந்நாடுகள் கூறுகின்றன.

ஈரான், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா இடையிலான அரசியல் உறவுகளே இத்திட்டம் தாமதமாவதற்குக் காரணம்.

அணு ஆயுதம் தயாரிக்கும் நோக்கில் யுரேனியம் செறிவூட்டும் பணியில் உள்ளதாக அமெரிக்காவுக்கு ஈரான் மீது கோபம். தீயசக்திகளின் அச்சாணி எனக் கூறி போர் தொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதால் ஈரானுக்கு அமெரிக்கா மீது எரிச்சல்.

தன்னைச் சுற்றிலும் இராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகள் உள்ளதால் தன்னைக் காத்துக் கொள்ள சீனா, ரஷியா, இந்தியாவுடனான நட்பு உதவும் என்பது ஈரானின் எண்ணம்.

2025-ல் இந்தியாவுக்கு தற்போதைய தேவையைப் போல 4 மடங்கு எரிசக்தி தேவை. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எங்கிருந்தாவது எரிவாயு கிடைத்தால் போதும் என்பது இந்தியாவின் நிலை.

இத் திட்டத்தை நிறைவேற்றினால் கிடைக்கும் பணத்தை அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் பயன்படுத்தும். அதனால் முக்கிய நாடான இந்தியா, இதில் பங்கேற்கக் கூடாது என்பது அமெரிக்காவின் எச்சரிக்கை.

பாகிஸ்தான் பழங்குடியினத் தீவிரவாதிகளால் குழாய் பாதைக்கு ஆபத்து எனக் கூறியது அமெரிக்கா. அதற்குப் பதில் துர்க்மேனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வழியிலான குழாய் பாதைத் திட்டத்தை ஆதரித்தது. ஆனால் அல்-காய்தா தலைமையிடம் ஆப்கனில் உள்ளதை வசதியாக மறந்துவிட்டது!.

இந் நிலையில் எரிசக்தி தேவையை நிறைவேற்ற 2005-ல் இந்தியாவுக்கு அமெரிக்கா கூறியதே “123′ ஒப்பந்தம்.

இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் உடன்பாட்டை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு அணுசக்தி உடன்பாட்டை இறுதி செய்யாவிட்டால் உலக அளவில் இந்தியாவின் நம்பகத்தன்மை கெடும் என அமெரிக்கா கூறுகிறது.

அமெரிக்காவின் நெருக்குதலுக்குப் பயந்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி கூட்டத்தில் ஈரான் மீதான நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவளித்தது.

இதையடுத்து, கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி ஈரான் ஒரு மில்லியன் யூனிட் எரிவாயுவுக்கு 7.2 அமெரிக்க டாலர் கேட்டது. இந்தியா 4.2 டாலர் மட்டுமே தரமுடியும் என்றது. பின்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் 4.93 டாலர் தருவதாக முடிவானது.

எப்படியும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தால் அதிகம் பயனடைவது இந்தியாதான். இதனால் பாகிஸ்தானில் இருந்து எரிவாயு கொண்டு செல்ல ஆகும் கட்டணத்தை முடிந்தவரை இந்தியாவிடம் இருந்து அதிகமாகக் கறந்துவிடுவது என்பது பாகிஸ்தானின் ஆசை. இதனாலும் இழுபறி நீடிக்கிறது.

ஆனால் திட்டத்தைக் கைவிடவில்லை. இழுபறிக்குக் காரணம் வணிக ரீதியிலான பிரச்னையே தவிர அமெரிக்க நிர்பந்தம் அல்ல என பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அணுசக்தி உடன்பாட்டையும் அமைதிக் குழாய் திட்டத்தையும் ஒன்றாக நிறைவேற்ற முடியாது என உறுதியாகத் தெரிவித்துவிட்டது அமெரிக்கா.

இந்தியா இல்லாவிட்டால் இன்னொரு நாடு என்ற நிலைக்கு ஈரானும், பாகிஸ்தானும் வந்துள்ளன. சீனா இத் திட்டத்தில் இணையத் தயாராக உள்ளது. ஆனால், இது குறித்து எந்தத் தகவலும் இல்லை என மத்திய அரசு கூறுகிறது.

அணுசக்தி உடன்பாடு இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்கும் எதிரானது என இடதுசாரிகளும், எதிர்க் கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன. ஆனால், ஈரானுடனான அமைதிக் குழாய் திட்டம் தாமதம் ஆவது ஏன் என்று குறைந்தபட்ச கேள்விகள் கூட எழுப்புவதில்லை என்பதுதான் புதிராகவே உள்ளது.

Posted in Accord, Afghan, Afghanistan, Afghanisthan, Al Qaida, Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, America, Atomic, China, Diesel, Electricity, energy, Gas, Gulf, India, Indo-US, Iran, Natural, Nuclear, oil, Pakistan, Persia, Petrol, Petroleum, pipeline, Power, Ragunathan, Resources, Russia, US, USA, USSR | Leave a Comment »

Myanmar (Burma) Violence and India External Affairs – TJS George

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2007

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

ஏனிந்த மௌனமம்மா..?

காந்தியக் கொள்கை விஷயத்தில் நாம் ஆஷாடபூதித்தனத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறோம். காந்திஜியின் சொந்த மாநிலமான குஜராத்தே வன்முறைக் களமாகத் திகழ்ந்து அவரைச் சிறுமைப்படுத்துவதில் வியப்பு ஏதும் இல்லை.

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் அகிம்சை குறித்துத் தேனொழுகப் பேசிய சோனியா காந்தி, இந்தியாவிலோ, மியான்மரிலோ ஏற்பட்டுவரும் ரத்தக்களரி குறித்து வாய் திறவாமல் இருந்ததிலும் வியப்பு ஏதும் இல்லை.

உலகின் எந்தப் பகுதியிலாவது நடந்த வன்முறை அல்லது அடக்குமுறை ஆட்சி மீது இந்திய அரசு கண்டனக் குரல் எழுப்பி நாம் கடைசியாக கேட்ட சந்தர்ப்பம் எது என்று நினைவுகூரமுடியுமா?

அநியாயத்தைத் தட்டிக்கேட்காமல் அமைதி காத்தால் அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைக்கும் என்றால், அந்த அமைதிக்கு அர்த்தம் இருக்கிறது; அப்படியாவது நமக்கு எந்த ஆதாயமாவது கிடைத்திருக்கிறதா?

இப்படிப்பட்ட விவகாரங்களைக் கையாள்வதில் சீனாதான் சமர்த்து. நம்முடைய அந்தமான் தீவின் வடக்கு முனைக்கு அருகில் கல்லெறி தூரத்தில், மியான்மரின் கிரேட் கோகோ தீவில் கடற்படை தளத்தை சீனா நிறுவியுள்ளது.

பாகிஸ்தானில் மலைப்பகுதியில் நெடுஞ்சாலைகளையும், ஆழ்கடலில் கடற்படை தளத்தையும் அமைத்துக்கொண்டு ராணுவரீதியாகத் தன்னை பலப்படுத்திக்கொண்டுள்ளது சீனா.

சர்வதேச அரங்கில், ராஜீயரீதியாக தான் விதைக்கும் ஒவ்வொரு விதைக்கும் ஈடாக, 10 பழங்களைப் பறித்துக் கொள்கிறது சீனா.

வங்கதேசத்துக்காக நமது முப்படைகளைத் திரட்டிச் சென்று போரிட்டு விடுதலை வாங்கித் தந்தோம், பதிலுக்கு நமது எல்லையில் புதிய எதிரியை இப்போது சம்பாதித்துள்ளோம். போதாதக்குறைக்கு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வேறு தலையில் கட்டிக்கொண்டு அழுகிறோம்.

வங்கதேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்ததற்காக நம்மை மிரட்ட தனது விமானந்தாங்கிக் கப்பலை இந்துமகா சமுத்திரத்துக்கு அனுப்பினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன்.

இராக்கைவிட மியான்மரில் இயற்கை வளம் அதிகம் என்கிறார்கள், இது இன்னமும் அமெரிக்காவின் துணை அதிபர் டிக் சினீயின் கண்ணில் படவில்லை என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது; இல்லை ஒருவேளை பட்டுவிட்டதா?

ராணுவத் தலைமை ஆட்சியாளர் தாண் ஷ்வேயின் மாப்பிள்ளை தேசா, சாதாரணமானவராக இருந்து குபேரனாகிவிட்டார் என்கிறார்கள்.

நாட்டின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம், ராணுவக் கொள்முதல் எல்லாமே அவரைச்சுற்றித்தான் இருக்கும் என்பது புரிகிறது. அவருக்கென்று சொந்தமாகவே ஒரு விமானம் கூட இருக்கிறதாம்.

சர்வதேச அமைப்பின் பொருளாதாரத் தடை இருக்கிறதோ இல்லையோ, ஹால்பர்ட்டன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மியான்மரில் ஜனநாயகம் மலர காலூன்ற இது நல்ல நேரம். (ஹால்பர்ட்டன் என்பது எண்ணெய்த் துரப்பணத் துறையில் அனுபவம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனம்).

நான் சொல்வது கற்பனையோ அதீதமோ அல்ல; எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத விதத்தில் அமெரிக்காவின் கரங்கள் கண்ணுக்குத் தெரியாமல் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கின்றன என்பது சமீபகாலத்தில் சி.ஐ.ஏ.வின் ரகசியங்கள் அம்பலமானபோது தெரியவந்துள்ளது.

1988-ல் லாக்கெர்பி விமான விபத்து நினைவில் இருக்கிறதா? அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான்! இறுதியில் ஒரு லிபியர்தான் அந்த விபத்தின் பின்னணியில் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

மால்டாவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்தான் அந்த சாட்சியத்தையும் அளித்தார். அவருக்கு அமெரிக்க அரசு 20 லட்சம் டாலர்களைப் பரிசாகத் தந்தது. லிபியர் இப்போது கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்.

1980-களின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்டு அந்நாளைய சோவியத் யூனியன் திண்டாடியது நினைவுக்கு வருகிறதா? அமெரிக்க, பிரெஞ்சு உளவுப்படையினர்தான் அதற்குக் காரணம்.

ஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகள் மீள முடியாமல் சிக்கிக்கொண்டால், சோவியத் யூனியனே சிதறுண்டுவிடும் என்று பிரெஞ்சு உளவுப்பிரிவினர் தகவல் அளித்தனர். உடனே அதற்கான ஏற்பாடுகளில் அதிபர் ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிரமாக இறங்கியது.

சோவியத் துருப்புகளை ஹெராயின் என்ற போதை மருந்துக்கு அடிமையாக்குவதும் பிரெஞ்சு உளவுத்துறை வகுத்துக் கொடுத்த திட்டம்தான் என்று “”காவ் பாய்ஸ்” என்ற நூலின் ஆசிரியர் பி. ராமன் தெரிவிக்கிறார்.

சோவியத் யூனியனுக்கு எதிராகப் போராட ஜிகாதிகளுக்கும் தனி ஊக்குவிப்பு தரப்பட்டது. உலகெங்கிலுமிருந்தும் ஜிகாதிகள் அணி திரண்டு ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து சோவியத் துருப்புகளுக்கு எதிராக சண்டையிட்டு அவர்களைப் படுதோல்வி அடையவைத்தனர்.

அமெரிக்கா பணமும் ஆயுதமும் கொடுத்து அப்படி ஊக்குவித்த ஜிகாதிகளில் ஒருவர்தான் ஒசாமா பின் லேடன்.

காலப்போக்கில் எதிர்பார்த்தபடியே சோவியத் யூனியன் சிதறுண்டு போனது.

அதே சமயம் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியும் கலகலத்துக்கொண்டிருக்கிறது. “அமெரிக்கர்களே இஸ்லாத்துக்கு மாறிவிடுங்கள்’ என்று கேட்கும் அளவுக்கு வெற்றிக்களிப்பில் மிதக்கிறார் பின் லேடன்.

மியான்மரில் நடக்கும் கலவரங்களின் பின்னணியிலும் அமெரிக்கா இருந்தால் ஆச்சரியப்படாதீர்கள்; பாகிஸ்தானிலும் தில்லியிலும் நடப்பனவற்றின் பின்னணியில் எந்த அளவுக்கு அமெரிக்காவின் கை இருக்கிறதோ அந்த அளவுக்கு மியான்மரிலும் இருக்கும்.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

Posted in Affairs, Afghan, Afghanisthan, Arms, Bangladesh, Burma, Bush, Cartel, China, Cocaine, Democracy, Diesel, Drugs, energy, External, Foreign, Gandhi, Gas, George, Govt, Gujarat, GWB, Heroin, Imports, India, International, Iraq, Laden, Libya, Malta, Myanmar, Oppression, Osama, Pakistan, Petrol, Politics, Spokesperson, Violence, Voice, Wars, World | Leave a Comment »

Use of minors in wars & extremist forces – Worldwide Analysis & Report

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

போர்முனைக் “கேடயங்கள்’!

எஸ். ராஜாராம்

இலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 லட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் தெரிவிக்கிறது.

  • புரூண்டி,
  • காங்கோ,
  • ருவாண்டா,
  • லைபீரியா,
  • சோமாலியா,
  • சூடான்,
  • உகாண்டா

உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. “18 வயது நிரம்பும்வரை போர்முனைக்கு சிறுவர்களை அனுப்புவதில்லை’ என இந்த ஆயுதக் குழுக்கள் தெரிவித்தாலும் அது நம்பும்படியாக இல்லை.
உகாண்டாவை சேர்ந்த மக்கள் பாதுகாப்புப் படை என்ற ஆயுதக் குழு, 13 வயது நிரம்பிய சிறுவர்களைக்கூட அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் படையில் சேர்த்துக் கொள்கிறது. லத்தீன் அமெரிக்காவில் சுமார் 11 ஆயிரம் சிறுவர்கள் இரண்டு கெரில்லா படைகளில் உள்ளனர்.

ஆசியாவை பொருத்தவரை

  • இலங்கை,
  • ஆப்கானிஸ்தான்,
  • மியான்மர்,
  • இந்தியா,
  • இந்தோனேஷியா,
  • லாவோஸ்,
  • பிலிப்பின்ஸ்,
  • நேபாளம்

உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படையில் சேர்க்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக அனுப்பப்பட்ட 15 வயது சிறுவனை அரசுப் படையினர் பிடித்தனர். அந்தச் சிறுவன் மனித வெடிகுண்டு எனத் தெரியவந்ததும் அதிபர் ஹமீத் கர்சாய் பேரதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், பொது மன்னிப்பு அளித்து அந்தச் சிறுவனை அவனது தந்தையிடம் ஒப்படைத்தார். பாகிஸ்தானின் வரிஜிஸ்தான் பகுதியில் மதரஸôவுக்கு படிக்கச் சென்ற அந்தச் சிறுவனை தலிபான்கள் மனித வெடிகுண்டாக அனுப்பியிருந்தது பின்னர் தெரியவந்தது.

“”சிறுவர்களைப் படையில் சேர்ப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன” என்கிறார் குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி.

கடந்த ஜூன் 15-ம் தேதி கூட்டுப் படைக்கு எதிரான தலிபான்களின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கட்டடங்களும், பள்ளிக் குழந்தைகளும் தீவிரவாதிகளின் இலக்காகிவருவது கவலை அளிக்கும் விஷயம். மனித கேடயமாக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.

18 வயதுக்கு குறைவான சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் வகையில் ஐ.நா. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுவர்களுக்கு கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் யுனிசெப் உறுதிபூண்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா படையினருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த மே 11-ம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்தது. சிறுவர்களைப் படையில் சேர்க்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே படையில் சேர்த்த சிறுவர்களை அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

சூடான் நாட்டில் இயங்கும் சூடான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்புக்கும், யுனிசெஃப்புக்கும் இடையே ஜூன் 11-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தனது படையில் உள்ள சிறுவர்களை விடுவிக்க சூடான் விடுதலைப் படை அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை யுனிசெஃப் வரவேற்றுள்ளது. எத்தனைச் சிறுவர்கள் விடுவிக்கப்படுவர் என உறுதியாகத் தெரியாவிட்டாலும், சுமார் 7000 சிறுவர்களை சூடான் விடுதலைப் படை விடுவிக்கும் எனத் தெரிகிறது.

ஆயுதக் குழுக்கள் ஒருபுறம் சிறுவர்களைச் சேர்ப்பது இருக்க பல நாடுகளில் அரசுகளே 18 வயது நிரம்பாத சிறுவர்களைப் படைகளில் சேர்க்கின்றன. 2004-ம் ஆண்டில் மியான்மர் அரசுப் படைகள் 12-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தன. இங்கிலாந்தில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இதுபோல அமெரிக்காவில் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், அவர்கள் 18 வயது நிரம்பும்வரை சண்டையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்தில் ராணுவச் சேவை கட்டாயம் என்பதால், மாணவப் பருவத்திலேயே சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுகின்றனர்.

மொத்தத்தில் ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் எல்லாம் சிறுவர்கள் கடத்தப்படுவதும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்படுவதும் வேதனை தரும் விஷயம். பள்ளி செல்ல வேண்டிய வயதில் சிறுவர்களை ஆயுதம்தாங்கி சண்டையிட அனுப்பும் தீவிரவாதக் குழுக்களை ஐ.நா. இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஐ.நா.வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்: ஏற்கெனவே தீவிரவாதக் குழுக்களில் இருக்கும் சிறுவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Posted in 18, abuse, Afghan, Afghanistan, Afghanisthan, africa, Age, AK-47, AK47, Ammunitions, Analysis, Arms, Backgrounder, Burma, Burundi, Child, Children, clash, Clashes, Colombo, Congo, Cyanide, Darfur, Data, Delhi, Dinamani, Extremism, Fights, Force, Guerilla, Hamid, Hindu, India, Indonesia, IPKF, Islam, kalashnikov, Karzai, Kids, Laos, Latin America, Leninist, Liberia, LTTE, Marxists, Minors, Moslem, Muslim, Mynamar, Nepal, Op-Ed, Opinion, Pakistan, Phillipines, Prabakharan, Prabhakaran, Protect, Protection, Report, rights, Rwanda, Somalia, Sri lanka, Srilanka, Statistics, Stats, Statz, Sudan, Suicide, Teen, Teenage, Terrorism, Terrorists, Thinamani, Uganda, UN, Underage, UNICEF, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War, Warlords, Weapons, Worldwide, Zaire | 1 Comment »

KV Ramaraj – Requirement for Association of Asian Nations

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 6, 2007

தேவை ஆசிய ஒன்றியம்

கே.வீ. ராமராஜ்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) உச்சி மாநாடு புதுதில்லியில் வரும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இத் தருணத்தில் ஆசிய ஒருமைப்பாடு குறித்தும் பிராந்திய ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்வது அவசியமாகும்.

இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 1967-ல் “ஆசியான்’ அமைப்பை உருவாக்கின. பின்னர் புருனை, கம்போடியா, வியத்நாம், மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகள் உறுப்பினராயின. தற்போது இவ்வமைப்புடன் சீனா தடையில்லா வணிக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 2007 ஜூலை மாதத்துக்குள் ஆசியான் நாடுகளுடன் இத்தகைய ஒப்பந்தத்தை செய்து கொள்ள இந்தியா முயற்சி செய்து வருகிறது.

இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்கக் கடல் நாடுகள் அமைப்பில் தடையில்லா வணிக ஒப்பந்தத்தை அடுத்த உச்சி மாநாட்டில் இறுதி செய்வதென ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள் ஆகியவை இணைந்து 1985-ல் தொடங்கிய “சார்க்’ அமைப்பிலும் இந் நாடுகளிடையே தடையற்ற வணிகம் குறித்த திட்டம், நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு நடந்த கொரிய போர் (1950 – 53), வியத்நாம் பிரச்சினை, இந்தியா – சீனா போர், இந்தியா – பாகிஸ்தான் போர்கள் போன்ற கசப்பான அனுபவங்களை மறந்து நட்புறவை மேற்கொள்ளவே தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகள் விரும்புகின்றன.

இருப்பினும் காஷ்மீர்ப் பிரச்சினை, வடகொரிய அணு ஆயுதத் திட்டம், இலங்கை உள்நாட்டுப் போர் போன்றவை இப் பிராந்தியத்தில் அமைதியின் தடைக்கற்களாக உள்ளன. மேற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பெரும்பாலானவை அரேபிய கூட்டமைப்பு, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு போன்றவற்றில் இடம் பெற்றுள்ளன.

பாலஸ்தீன விவகாரம், இராக் பிரச்சினை, ஈரானின் அணு ஆயுத விவகாரம், ஆப்கான் பிரச்சினை போன்றவை இப் பிராந்தியத்தில் பதற்றத்தை தொடர்ந்து நிலவச் செய்கின்றன.

சர்வதேச அரசியலில் பிராந்திய உணர்வு மற்றும் பிராந்திய அமைப்புகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை பிராந்திய அமைப்புகள் உருவானதை அதன் சாசனத்தின் வாயிலாகவே வரவேற்கிறது. ஐ.நா. சாசனத்தின் 33, 52, 53, 57 ஆகிய கோட்பாடுகள் பிராந்திய அமைப்புகள் பற்றி தெரிவித்துள்ளது.

“ஆசியான்’, “சார்க்’ அமைப்புகள் ஒரே பிராந்தியத்தில் தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளிடையே கூட்டுறவுக்காக ஏற்பட்ட உடன்பாடாகும். ஆனால் 1954-ல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட தென்கிழக்காசிய உடன்படிக்கை அமைப்பும் (சீட்டோ) 1956-ல் பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட மத்திய கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பும் (சென்டோ) மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து செய்த ராணுவக் கூட்டுகளாகும்.

1949-ல் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) அமெரிக்காவின் தலைமையில் உருவானதன் தொடர்ச்சியாக ஆசியாவில் மேலை நாடுகள் தமது செல்வாக்கை அதிகரிக்க “சென்டோ’, “சீட்டோ’ அமைப்புகளை உருவாக்கின. “சீட்டோ’ ராணுவக் கூட்டில் சேர அழைப்பு வந்தபோது இந்தியா மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப் போரில் ஒன்றுக்கொன்று எதிராகப் போரிட்ட நாடுகள் கூட ஐரோப்பாவில் போரில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவை அகற்ற ஒருங்கிணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கின.

பிராந்திய ஒற்றுமைக்காக, தற்போது இவ்வமைப்பு தடைற்ற வர்த்தகம், ஒரே நாணயம் போன்ற பல அம்சங்களுடன் வளர்ச்சி பெற்றுள்ளது.

ஆசிய நாடுகளில் நிலவிய அன்னிய ஆட்சிகள் காரணமாக ஆசியக் கண்டம் சீரழிவுக்குள்ளாகி இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசிய நாடுகளான இந்தியா, மியான்மர், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் ஆங்கில ஆதிக்கமும் வியத்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் பிரெஞ்சு ஆதிக்கமும் இந்தோனேசியா, சுமத்ரா, ஜாவா, போர்னியா மற்றும் கிழக்கத்திய தீவுகளில் டச்சு ஆதிக்கமும் இருந்தது.

இந்நாடுகள் சுதந்திரம் அடைந்து பின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஆதிக்க சக்திகளாக விளங்கிய மேலைநாடுகளுடன் பொருளாதார, ராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டன. இதன் காரணமாக ஆசிய நாடுகளின் விவகாரங்களில் மீண்டும் மேலைநாடுகளின் தலையீடு நீடித்தது.

1991-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு துருவநிலை மாறியது. உலகில் பன்முகத் துருவநிலை ஏற்பட ஆசிய நாடுகள் அனைத்தும் ஒரு கூட்டுப் பிராந்திய அமைப்பை ஏற்படுத்துவது அவசியமாகிவிட்டது. இதன் மூலம் ஆசியாவில் ஒற்றுமையை உருவாக்க இயலும். மேலும் சர்வதேச அமைதிக்கான சிறந்த பங்களிப்பையும் ஏற்படுத்த இயலும்.

பயங்கரவாத ஒழிப்பு, எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுமூலம் தீர்வு, போக்குவரத்து மேம்பாடு ஆகியவற்றுக்கு இவ்வமைப்பு பெரிதும் உதவும்.

உலகில் சக்திச் சமநிலை தழைக்கவும் ஐ.நா. சபை ஆக்கபூர்வமாகச் செயல்படவும் ஆசிய ஒருமைப்பாடு பயனுள்ளதாக இருக்கும். சார்க் மாநாட்டுக்கு அழைக்க பாகிஸ்தான் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஐரோப்பிய நாடுகள் பகைமைகளை மறந்து ஒருங்கிணைந்தது குறித்து பேசியதையும் ஆசியான் மாநாட்டில் வான் பயணம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதையும் இவ்விடத்தில் நினைவுகூறலாம்.

ஆசிய நாடுகளின் உறவுகள் பற்றி விவாதிக்க ஆசிய மாநாடு 1947-ல் தில்லியில் கூட்டப்பட்டது. இந்தோனேசியாவில் டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தை அகற்ற 1948-ல் ஆசிய மாநாட்டை இந்தியா கூட்டியது.

1954-ல் ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளின் “பாண்டுங்’ மாநாட்டில் இந்தியா காலனியாதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து 1961-ல் அணிசாரா இயக்கம் தொடங்க இந்தியா முக்கியப் பங்காற்றியது.

சர்வதேச அமைதி, அணிசாரா கொள்கை, பிற நாட்டு விவகாரங்களில் தலையிடாமை ஆகிய முக்கிய அம்சங்களை வெளியுறவுக் கொள்கையாக இந்தியா பின்பற்றி வருகிறது. எனவே ஆசிய அமைப்பை உருவாக்க வேண்டிய தருணம் இந்தியாவுக்கு வந்துவிட்டது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இதற்கான செயல்வடிவம் பற்றி சிந்தனையாளர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும், அதன் அடிப்படையில் ஆசிய மாநாட்டைக் கூட்டி ஆசிய அமைப்பு ஒன்றைத் தொடங்க இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இக் கருத்தை “சார்க்’, “ஆசியான்’ ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள நாடுகளிடம் இந்தியா எடுத்துரைக்க வேண்டும்.

உலக ஒற்றுமைக்காக ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியா கோரிவருகிறது. இதே ரீதியில் ஆசியாவிலும் அமைதியை நிலைநாட்ட ஆசிய ஒன்றியத்தை உருவாக்க பாடுபட வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.

(கட்டுரையாளர்: ஓசூர் நகர வழக்கறிஞர்).

Dinamani Editorial (Feb 12, 2006)

“சார்க்’ கூட்டமைப்பு

“சார்க்’ பிராந்திய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் இந்தியாவுக்குக் கிடையாது; பரஸ்பர வளர்ச்சிக்கான ஒத்துழைப்பையே இந்தியா விரும்புகிறது என்று வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜி தெளிவுபடுத்தியுள்ளார்.

தில்லியில் “சார்க்’ நாடுகளின் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் பேசுகையில் அவர் இவ்விதம் கூறினார்.

இந்தியா இதற்கு முன்னர் பல தடவை இவ்விதம் கூறியுள்ளது. இப்போது மீண்டும் அதைக் கூறுவதற்குக் காரணம் உள்ளது. “சார்க்’ அமைப்பின் புதிய உறுப்பினராக 2005-ம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால் இந்த அமைப்பில் 8 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இவற்றில் இந்தியா ஒன்றுதான் மக்கள்தொகையிலும் பரப்பளவிலும் பெரியதாகும். மாலத்தீவு, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய இதர நாடுகள் சிறியவையே. ஆகவே அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்த முற்படலாம் என்ற அச்சம் இயல்பாக எழக்கூடியதே.

இந்த அச்சத்தைப் போக்க இந்தியா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உறுதி அளிக்க வேண்டியுள்ளது. நடைமுறையில் “சார்க்’ அமைப்பின் இதர நாடுகளுக்கு இந்தியா பல விஷயங்களில் விட்டுக்கொடுத்துள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

“சார்க்’ அமைப்புடன் ஒப்பிட்டால் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய “ஏசியான்’ கூட்டமைப்பில் இப்படிப்பட்ட அவநம்பிக்கை அம்சம் கிடையாது. இக் கூட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவில், பெரிய நாடு என எதுவும் இல்லை. அக் கூட்டமைப்பானது பிற நாடுகள் மெச்சத்தக்க அளவில் ஒத்துழைத்து முன்னேற்றம் கண்டுள்ளது.

25-க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவை பொருளாதாரத் துறையில் மட்டுமன்றி அரசியல்ரீதியிலும் ஒரே அமைப்பாக இணைவதில் ஈடுபட்டுள்ளன. ரஷியா தலைமையிலான பல மத்திய ஆசிய நாடுகள் இதேபோல கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஒத்துழைத்து வருகின்றன.

ஆனால் 1985-ல் தொடங்கப்பட்ட “சார்க்’ அமைப்பு 21 ஆண்டுகள் ஆகியும் மிக மெதுவான முன்னேற்றமே கண்டுள்ளது. இதற்கு இந்தியா – பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் விவகாரம் முக்கியக் காரணம் என்று சொல்ல முடியும். ஆனால் இது ஒன்றுதான் காரணம் என்று கூற இயலாது.

பாகிஸ்தானிலும் சரி, வங்கதேசத்திலும் சரி; தங்களது பிரச்சினைகளுக்கெல்லாம் இந்தியாவே காரணம் என்று கூறி பூச்சாண்டி காட்டும் அரசியல் சக்திகள் உள்ளன. அண்மைக்காலம்வரை பாகிஸ்தானின் கல்வி அமைப்புகளில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரம் இடம்பெற்றிருந்தது. தவிர, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் இன்னமும் இயங்கி வருகின்றன.

“சார்க்’ அமைப்பின் முக்கிய நோக்கம் இந்த நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்துக்கு வழி செய்வதாகும். படிப்படியாக காப்பு வரிகளைக் குறைப்பது என்று டாக்காவில் 1993-ல் நடந்த “சார்க்’ மாநாட்டில் திட்டமிடப்பட்டபோதிலும் அதற்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதற்கான வழியில் உருப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“சார்க்’ அமைப்பின் 14-வது உச்சி மாநாடு இந்த ஆண்டு ஏப்ரலில் தில்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிலாவது பொருளாதார ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படுமா என்பது தெரியவில்லை.

காஷ்மீர் விவகாரத்தில் ஒருவகை உடன்பாடு ஏற்படாதவரையில் “சார்க்’ கூட்டமைப்பு முன்னேற பாகிஸ்தான் இடம்கொடுக்காது என்பது நிச்சயம்.

இதற்கிடையே இந்த அமைப்பில் சீனாவை முழு உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதில் பாகிஸ்தானும் வங்கதேசமும் முனைப்புக் காட்டி வருகின்றன. ஆனால் “சார்க்’ கூட்டமைப்பில் இன்னும் முழு அளவில் ஒத்துழைப்பு ஏற்படாத நிலையில் சீனாவைச் சேர்த்துக் கொள்வதை இந்தியா விரும்பவில்லை.

2010-க்குள் ரூ.92 ஆயிரம் கோடி வர்த்தகம்: சார்க் நாடுகள் திட்டம்

மும்பை, பிப். 20: சார்க் நாடுகளுக்கிடையே 2010-ம் ஆண்டுக்குள் 92 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்ய மும்பையில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த சார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான 13 அம்ச கொள்கை சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்தனர்.

சார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரண்டு நாள் மாநாடு மும்பையில் சனிக்கிழமை தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 சார்க் நாடுகள், உலக வங்கி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். வர்த்தகம் செய்வதற்கான செலவைக் குறைப்பதன் மூலம் 92 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை எட்ட முடியும் என இம் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. சார்க் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், தடையில்லா வான்வெளிப் பகுதியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது.

இது தவிர, எரிசக்தி, மின்னணு ஊடகங்கள், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தவேண்டும் என இம்மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.

==============================================================
பேசிப் பயனில்லை

தெற்காசிய பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தபின்னும் குறிப்பிடத்தக்க எந்தப் பெரிய சாதனைகளையும் நிகழ்த்த முடியாமல் போனதற்கு முதல் காரணம், இதில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் பல விஷயங்களில் முரண்படுவதுதான்.

அந்த நிலைமை 14-வது மாநாட்டிலும் தொடர்கிறது.

“”கருத்து வேறுபாடுகளைச் சமாளிப்பதிலேயே நமது ஆற்றல் செலவாகிவிடுகிறது. “சார்க்’ அமைப்பின் லட்சியத்தைப் பின்தங்கச் செய்கிறது” என்று சொல்லும் பாகிஸ்தான் பிரதமர் செüகத் அஜீஸ், “காஷ்மீர்’ என்ற வார்த்தையைக் குறிப்பிடாமல், “இப் பிராந்தியத்தில் ஒத்துழைப்புக்குத் தடையாக இருக்கும் நம்பிக்கை வறட்சித் தடைகள் நீக்கப்பட வேண்டும், கருத்துவேறுபாடுகளைப் பேசித் தீர்க்க வேண்டும்’ என்கிறார்.

கடந்த மாநாட்டில் (2005-ல்) உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான், இம் மாநாட்டில் முதல்முறையாகப் பங்கேற்பதால், ஒருவேளை, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே நிலவும் எல்லைப் பிரச்சினையையும் சூசகமாகச் சேர்த்தே பேசியிருப்பாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

இந்த எல்லைப் பிரச்சினை காரணமாக, “சார்க்’ நாடுகள் அமைப்பில் ஆப்கானிஸ்தான் இடம்பெறுவதை பாகிஸ்தான் எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை.

இந்த மாநாட்டின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜியை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கசூரி சந்தித்துப் பேசினாலும், காஷ்மீர் பற்றி பேசவில்லை. வழக்கம்போல சுமுகமான, சங்கடம் தராத விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள்.

மாநாட்டில்கூட, நிறைய விஷயங்கள் குறித்து பேசப்படுகிறதே தவிர, நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாக அவை இல்லை. “முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களின் நெருக்கடியில் “சார்க்’ நாடுகள் உள்ளன. முதல் நடவடிக்கையாக “சார்க்’ நாடுகளின் தலைநகரங்களை நேரடி விமானப் போக்குவரத்தால் இணைப்போம். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், நோயாளிகளுக்கான விசா வழங்குவதில் “சார்க்’ நாடுகள் ஒன்றுபோல நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியிருப்பது இந்த அமைப்பு எவ்வளவு நிதானமாகச் செயல்படுகிறது என்பதற்குச் சான்று.

ஐரோப்பிய ஒன்றியம்போல “சார்க்’ நாடுகளை ஓர் ஒன்றியமாக்கி, பொதுநாணயம் (காமன் கரன்சி) உருவாக்க வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலையும் தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பயங்கரவாதத்தையும் குறிப்பிட்டுள்ள இலங்கை, இது குறித்து “சார்க்’ நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று கூறியபோதிலும், யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை.

“சார்க்’ அமைப்பு ஏற்பட்டதன் அடிப்படை நோக்கமே தடையற்ற வர்த்தகத்தை இந்நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொள்வதுதான். ஆனால் அந்த நோக்கம்கூட இன்றளவிலும் முழுமையடையவில்லை.

“சார்க்’ நாடுகள் தங்களுக்குள் பொருள்களின் வரி, விலையைக் குறைக்க “தெற்காசிய தடையற்ற வர்த்தக உடன்படிக்கை’யில் கையெழுத்திட்டன. தடையற்ற வர்த்தக மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன. 2006 ஜூலையில் நடைமுறைக்கு வந்திருக்கவேண்டிய இந்த உடன்படிக்கையின்படி 2007-ம் ஆண்டில் இந்நாடுகளுக்கு இடையே அனைத்து ஏற்றுமதி, இறக்குமதி சுங்க வரியில் 20 சதவீதம் குறைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் மறுப்புத் தெரிவித்ததால் இது நடைமுறைக்கு வரவில்லை. இதற்கு அரசியல் சூழ்நிலைகளே காரணம்.

வர்த்தகத்தைவிட முக்கியமாக தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் ஒத்துழைப்புக்கான தேவை இந்நாடுகளுக்கு இருக்கிறது.

உறுதியான எந்த முடிவும் காணப்படாமல், இந்த மாநாடும் வழக்கம்போல கூடி, பேசிக் கலைவதாகவே அமைந்துள்ளது.
==============================================================

Posted in Afghanistan, Afghanisthan, Asean, Asia, Asian Union, Association, AU, Bangaladesh, Bargaining, Bhutan, Burma, China, Cooperation, Country, Defense, Economy, EU, Expenditure, External Affairs, Finance, Govt, India, Indonesia, Kashmir, Madives, Malaysia, Myanmar, Nations, NATO, Nepal, Pakistan, Phillipines, Power, Region, Rhetoric, SAARC, Singapore, South Asia, Sri lanka, Super power, Superpower, Talks, Terrorism, Thailand, Tibet, UN, Waste | 2 Comments »

China – Police Raid on Suspected Terrorist Camp Results in 19 Dead

Posted by Snapjudge மேல் ஜனவரி 8, 2007

18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக சீனப் பொலிஸார் கூறுகின்றனர்

ஜிங்ஷியாங்கைக் குறிக்கும் வரைபடம்
ஜிங்ஷியாங்கைக் குறிக்கும் வரைபடம்

சீனாவில் மேற்குப்புற தன்னாட்சி அந்தஸ்து கொண்ட ஜிங்ஷியாங் மாகாணத்தில் தீவிரவாதிகளின் முகாம் என்று அதிகாரிகளால் கூறப்படும் ஒரு முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தாங்கள் பதினெட்டு பேரைக் கொன்றதாகவும், பதினேழு பேரைக் கைது செய்திருப்பதாகவும், சீனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லைக்கருகே உள்ள இந்தத் தொலைதூர மேற்குப் பிரதேசத்தில், வெள்ளிக்கிழமையன்று இந்த சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றதாக பிராந்தியப் பாதுகாப்பிற்கான இயக்குனர் சோங் ஹோங்லி தெரிவித்தார்.

இந்த முகாமை கிழக்கு துர்கெஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வந்ததாக ஹொங் லி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஷிங்ஷியாங் மாகாணம் சீனாவில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என இந்த அமைப்பு கோரி வருகிறது.

முகாம் மீதான தாக்குதலில் சில சந்தேக நபர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற காரணத்தினால் இந்தப் பகுதியில் பொலிஸார் தேடுதல் வேட்டையினை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சோதனையில் ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டிருக்கிறார்.

Posted in Afghanisthan, China, East Turkestan Islamic Movement, ETIM, explosives, guns, hand grenades, Hasan Mahsum, Hotan, India, Islamic Terrorists, Kashmir, Pakistan, Pamirs Plateau, POK, Terrorism, Turkistan, United nations, Urumqi, Xinjiang, Xinjiang Uygur Autonomous Region | Leave a Comment »

Study: Cluster Bombs Overwhelmingly Kill, Maim Civilians

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

கொத்துக் குண்டுகளால் அதிகமான பாதிப்பு பொதுமக்களுக்கே

அபாயகரமான கொத்துக் குண்டு
அபாயகரமான கொத்துக் குண்டு ஒன்று

கொத்துக் குண்டுகளால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண பொதுமக்களே , அதில் மூன்றில் ஒரு பங்கினர் சிறார்கள் என்று ஹண்டிகேப் இண்டர்னேஷனல் என்ற பிரச்சாரம் செய்யும் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

24 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்த அமைப்பு, பரந்த ஒரு பகுதியில் குண்டுகளை தூவும் இந்த ஆயுதம் 11,000க்கும் மேற்பட்ட மக்களை கொன்றோ அல்லது ஊனப்படுத்தியோ இருப்பதாக கண்டறிந்திருக்கிறது.

ஆனால், ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் வியட்நாம் போன்ற இடங்களிலிருந்து முழுமையான தகவல்கள் கிடைக்காததால், இந்த புள்ளிவிவரம் உண்மையில் இன்னும் பத்துமடங்காக அதிகரிக்கக்கூடும் என்று அது கூறுகிறது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வெடிக்காத குட்டிக் குண்டுகளை கவனக்குறைவாக நடந்துகொண்டு வெடிக்கச்செய்த சிறுவர்கள் என்று
கூறப்படுகிறது.

Posted in Afghanisthan, China, cluster bombs, Fatal Footprint, Handicap International, Hezbollah, Iraq, Israel, Lebanon, Russia, USA, War | Leave a Comment »

Pakistan & Pervez Musharraf’s Strategy in using Terrorism as Bargain Pawn

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006

முஷாரபின் மிரட்டல்

பாகிஸ்தான் அரசின் உதவியும் ஐ.எஸ்.ஐ. எனப்படும் பாகிஸ்தானிய உளவு அமைப்பின் உதவியும் இல்லாவிட்டால் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் “மேற்கத்திய நாடுகள் மண்டியிட வேண்டியிருக்கும்’ என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் வழியில் பிரிட்டனில் அவர் ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்கு நாடுகளுக்கு முஷாரப் விடுத்துள்ள எச்சரிக்கையை மிரட்டல் என்றும் வர்ணிக்க முடியும். சோவியத் யூனியனுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகள் வெற்றி பெற்றதற்கு பாகிஸ்தான் அளித்த உதவி காரணம் என்றும் அந்தவகையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் கடன்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன்களுக்கு எதிரான போரில் சோவியத் யூனியன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சோவியத் யூனியன் உடைந்தது. இதைத்தான் முஷாரப் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்குப் பயிற்சி அளித்து ஆயுதங்களையும் அளித்தது மேற்கத்திய நாடுகளே என்ற வரலாற்று உண்மையை முஷாரப் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் பின்னர் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி ஏற்பட்டதற்கு பாகிஸ்தானே காரணம் என்பதை அவர் எடுத்துக் கூறவில்லை. முஷாரபின் பேச்சில் நிறைய அர்த்தம் இருக்கிறது.

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகளின் லகான் பாகிஸ்தான் கையில்தான் இருக்கிறது. பாகிஸ்தான் நினைத்தால் அவர்களை ஏவி விட முடியும் என்ற மிரட்டல் அவரது பேச்சில் தொனிக்கிறது. ஐ.எஸ்.ஐ. அமைப்பைக் கலைத்துவிட வேண்டும் என்றெல்லாம் பாகிஸ்தானை நிர்பந்திக்கக் கூடாது என்றும் மேற்கத்திய நாடுகளுக்கு முஷாரப் மறைமுகமாக எடுத்துக் கூறியுள்ளதாகவும் கருதலாம்.

மும்பை ரயில்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்குத் தொடர்பு உள்ளது என்ற உண்மை தெரிய வந்துள்ள பின்னணியில் முஷாரப் இவ்வாறு கூறியுள்ளார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

பாகிஸ்தானுக்குக் கடன்பட்டுள்ள மேற்கத்திய நாடுகள் எவ்விதம் பாகிஸ்தானுக்குக் கைம்மாறு செய்ய வேண்டும் என்பதை முஷாரப் மேற்கண்ட பேட்டியில் கூறியுள்ளார். காஷ்மீர்ப் பிரச்சினையைத் தீர்க்க மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவ வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

காஷ்மீர் விஷயத்தில் இந்தியா மீது நிர்பந்தம் செலுத்த பாகிஸ்தானில் பயிற்றுவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் அவ்வப்போது இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்தப் பயங்கரவாதிகளைத் தயார்படுத்தும் அமைப்புகளை பாகிஸ்தான் தடை செய்ய முற்படவில்லை.

தவிர, பாகிஸ்தான் அரசு அண்மையில் வடமேற்கு எல்லைப்புறத்தில் உள்ள மலைஜாதி தலைவர்களுடன் ஓர் உடன்பாட்டைச் செய்து கொண்டுள்ளது. இதன்படி அப் பகுதியில் புகலிடம் தேடியுள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க முற்பட மாட்டோம் என்று உறுதிமொழி அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிய தலிபான் தலைவர்களும் அல்-காய்தா தலைவர்களும் அப் பகுதியில்தான் ஒளிந்திருப்பதாக நம்பப்படுகிறது.

பாகிஸ்தான் அதிபரின் பேச்சுகள், பாகிஸ்தான் அரசின் செயல்கள் ஆகியவற்றிலிருந்து பயங்கரவாதிகள் குறித்து பாகிஸ்தானின் போக்கு பற்றிய ஒரு சித்திரம் தெரிகிறது. இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்க முற்படாது.

மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தவரையில் முக்கியமாகத் தேடப்படும் பயங்கரவாதிகளைப் பிடித்துக் கொடுக்க பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்கும். ஆனால் தங்கள் மண்ணில் வளரும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க பாகிஸ்தான் முற்படாது. ஏனெனில் மேற்கத்திய நாடுகள் மீது பாகிஸ்தானுக்கு இருக்கிற பிடி போய்விடும். இப்படியான நிலையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்கும் என்று இந்திய அரசு எதிர்பார்ப்பது சரியானதாகத் தோன்றவில்லை.

Posted in Afghanisthan, Al Quaeda, Dinamani, ISI, Op-Ed, Pakistan, Pervez Musharraf, Taleban, Tamil, Terrorism, USA | Leave a Comment »

Musharaff Accepts Al-Quaeda Operates from Pakistan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

ஆப்கானிஸ்தானுக்கு முஷாரப் அறிவுரை

பாகிஸ்தான் அதிபர் முஷாரப்
பாகிஸ்தான் அதிபர் முஷாரப்

ஆப்கானிஸ்தான் தான் சந்தித்துவரும் தீவிரவாதப் பிரச்சனைக்கு தனது நாட்டின் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கோரியுள்ளார்.

தனது ஆப்கான் பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, காபூலில் பேசிய அவர், அல்கொய்தாவினரும், தலிபான் போராளிகளும் பாகிஸ்தானுக்குள் இருந்து இயங்குவதை ஒப்புக் கொண்டார்.

ஆனால் அவர்களுக்கு பாகிஸ்தான் அரசிடமிருந்தோ, பாதுகாப்பு அமைப்புக்களிடமிருந்தோ உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை எனவும் முஷாரப் தெரிவித்தார்.

புதன்கிழமை தங்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயும், பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பும் தங்கள் நாடுகளுக்கு இடையேயான எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்க உறுதி மேற்கொண்டனர்.

Posted in Afghanisthan, Al Quaeda, Bin laden, Border Patrol, Hamid Karzai, Musharaff, Osama, Pakistan, Relations, Suspect, Taleban, Tamil, Terrorism | Leave a Comment »